” பாட்டி, பாட்டி, எனக்கு போரடிக்குது. கதை சொல்லறயா? ” என்று கேட்டுக் கொண்டே கண்மணி, தனது சித்ராப் பாட்டியின் மடியில் தலை வைத்துப் படுத்தாள்.

” என்ன, என் செல்லக் கண்ணுக்கு இன்னைக்கு விளையாட யாரும் கிடைக்கலைலையா? ” என்றாள் சித்ரா. சித்ராவின் மகள் தேவியின் ஒரே குழந்தை தான் கண்மணி. வீட்டில் எல்லோருக்கும் பயங்கரச் செல்லம். ஐந்து வயது அழகு தேவதை அவள்.

” விளையாட யாரும் வரலை இன்னைக்கு. பக்கத்து வீட்டுச் சின்னா ஊருக்குப் போயிருக்கான். எதுத்த வீட்டு மோகனாவுக்குக் காய்ச்சல் பாட்டி. நான் மட்டும் என்ன பண்ணுவேன்? நீ தான் புதுசு புதுசாக் கதை சொல்லுவே? யாராவது தமிழ்க் கவிஞர் எழுதின பாட்டு சொல்லித் தருவே? திருக்குறள், நாலடியார் பத்தியெல்லாம் சொன்னயே? இப்போ வேற ஏதாவது பத்திப் புதுசாச் சொல்லறயா? “

” சொல்லறேனே? ஔவையார்னு ஒரு தமிழ்ப் புலவர் இருந்தாங்க. தமிழ் மூதாட்டி, தமிழ்ப் பாட்டி அப்படின்னெல்லாம் அவங்களை எல்லாரும் செல்லமாக் கூப்பிடுவாங்க. அவங்க குழந்தைகளுக்காக நிறைய அறிவுரைகள் சொல்லி ருக்காங்க. ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் எல்லாமே அவங்க எழுதினது தான்.  அவங்க எழுதின ஆத்திச்சூடியில முதல் வரி தான்

    அறம் செய விரும்பு.

அதாவது நம்மால முடிஞ்ச வரை ஏதாவது நல்ல காரியம், தான தர்மம் செய்யணும். அதுவும் முழு மனசோட சந்தோஷமாகச் செய்யணும். ஏனோ தானோன்னு செய்யக் கூடாது. நான் சொல்லற கதையை கவனிச்சுக் கேளு. உனக்கு அதோட அர்த்தம் நல்லாப் புரிஞ்சுடும். சரியா? ” என்று பாட்டி சொல்ல, அந்தக் குட்டிப் பெண்ணும் கதை கேட்கத் தயாரானாள்.

   1.அறம் செய விரும்பு

      ஒரே ஒரு ஊரில உன்னை மாதிரி ஒரு குட்டிப் பொண்ணு இருந்தாளாம். அவ பேரு முல்லை. அவங்க அப்பா, அம்மாவுக்குச் செல்லப் பொண்ணு அவ. சமத்தா இருப்பா. பெரியவங்களுக்கு மரியாதை தருவா. மத்தவங்க கஷ்டத்தைப் புரிஞ்சு நடப்பா.

ஒரு தடவை அவளோட சேந்து விளையாடற பசங்க எல்லாரும் புதுசு புதுசா பொம்மை விளையாடக் கொண்டு வந்தாங்க.

” எல்லாரும் புது பொம்மை வச்சிருக்கீங்களே? எங்க வாங்கினீங்க? “

” நம்ம ஊரில ஒரு புது பொம்மைக் கடை வந்திருக்கு தெரியுமா? அங்கே விதவிதமா நிறைய பொம்மைகள் விலைக்கு வச்சிருக்காங்க. உனக்குத் தெரியாதா? நீயும் உங்க அம்மா கிட்ட சொல்லிப் புதுசு வாங்கிக்கோ முல்லை” என்று ஒரு தோழி சொல்ல, முல்லையும் அவளோட அம்மா கிட்ட அன்னைக்கே போய்க் கேட்டா.

” முல்லை, உன் கிட்டத் தான் நிறைய பொம்மை இருக்கு இல்லையா? அதை வச்சு விளையாடு. மத்தவங்க கிட்ட இருக்கறதைப் பாத்துத் தேவையில்லாம வாங்கிச் சேக்கக் கூடாது. இந்த மாசம் தாத்தாவுக்குப் புதுக் கண்ணாடி வாங்கணும். அப்புறம் பாட்டியோட செருப்பு பிஞ்சிருக்கு. வாங்கணும். அந்தச் செலவெல்லாம் இருக்கு இல்லையா? ” என்று முல்லையின் அம்மா சொல்லி விட்டார்.

முல்லைக்கு ஏமாற்றமாக இருந்தாலும், ‘ அம்மா சொல்லறது சரி தான். இனிமேல் நானே காசு சேமிச்சு வக்க ஆரம்பிக்கப் போறேன். அதிலேயே பொம்மை வாங்கிக்கலாம்” என்று அன்னைக்கே முடிவெடுத்தா.

முல்லையோட வீட்டுப் பெரியவர்களும், அவ வீட்டுக்கு வர விருந்தாளிகளும் சில சமயம் அவளுக்குப் பணம் தருவதுண்டு. அதே போல, தீபாவளி, பொங்கல் இந்த மாதிரிப் பண்டிகைகள் வரும் போது பெரியவங்களை அன்றைய தினம் வணங்கினா அவளுக்குப் பணம் தருவாங்க. அந்தப் பணத்தை எல்லாம் முல்லை, ஒரு மண் உண்டியலில போட்டு சேமிச்சு வச்சா.

சில மாசங்கள் கழிச்சு அந்தப் பணத்தை எடுத்து எண்ணிப் பாத்தா முல்லை. ஓரளவு கணிசமாப் பணம் சேந்திருந்தது. அன்னைக்கு சாயந்திரமே அப்பா, அம்மா கூட மார்க்கெட்டுக்கு பொம்மை வாங்கக் கிளம்பிட்டா முல்லை. மனசில ஒரே பெருமை. சந்தோஷமா அம்மா கையைப் பிடிச்சுட்டு நடந்து போனா.

போற வழியில் ஒரு இடத்தில் கூட்டமா இருந்தது. முல்லையோட அப்பா கஷ்டப்பட்டுக் கூட்டத்தை விலக்கிப் பார்த்தார். ஒரு நடுத்தர  வயசுப் பெண் அங்கே மயங்கிக் கீழே கிடந்தாங்க. ஒரு சின்னப் பையன் அவங்க பக்கத்தில் நின்னு அழுதுகிட்டு இருந்தான்.

“என்ன ஆச்சு?” என்று முல்லையின் அப்பா அங்கே நின்னுக்கிட்டு இருந்தவங்க கிட்டக் கேட்டார். “இவங்க இங்கே பக்கத்தில் ஒரு கட்டிடத்தில் கூலி வேலை செய்யறவங்க. இந்தப் பையன் மட்டும் தான் இவங்க கூட இருப்பான். கட்டிடம் முடிஞ்சதால இப்போ இவங்களுக்கு வேலை போச்சு. கையில் காசில்லை. பசி மயக்கமா, உடம்பு சரியில்லையான்னு தெரியலை” என்று ஒருத்தர் சொல்ல, முல்லையின் அப்பா, அந்தப் பெண்ணை ஒரு ஆட்டோவில் ஏற்றி அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போனார். முல்லையின் அம்மா, அந்தப் பையனையும், முல்லையையும் தன் கூடவே கூட்டிக்கிட்டுப் பின்னாலேயே வந்தாங்க.

நல்ல வேளையாக அந்தப் பெண்ணுக்கு அதிக பிரச்சினை எதுவும் இல்லை. சரியாகச் சாப்பிடாததால உடம்பு பலவீனமா இருந்திருக்கு. அதுனால தான் மயங்கிக் கிடந்திருக்காங்க. முல்லையோட அப்பா, அந்தப் பெண்ணுக்கு மருந்தும், சாப்பாடும் வாங்கித் தந்து அவங்க வீட்டுல கொண்டு போய் விட்டார். அந்தப் பெண் நன்றியோடு கை கூப்பினா.

முல்லை அப்போ திடீர்னு, தன் கையில பொம்மை வாங்க வச்சிருந்த பணத்தை அவர்களுக்குக் கொடுத்துட்டா. அந்தப் பெண் மனசு நெகிழ்ந்து போனா. முல்லையின் அம்மா, அப்பாவுக்கு முல்லையைப் பாத்துப் பெருமையா இருந்துச்சு.

வீட்டுக்கு வந்ததும், ” அம்மா முல்லை, நீ பொம்மை வாங்கன்னு சேத்து வச்ச பணத்தை அந்தம்மா கிட்ட இப்படிக் கொடுத்துட்டயே? மனசு வருத்தமா இல்லையா ” ன்னு முல்லையோட அப்பா அவ கிட்டக் கேட்டார்.

” என் கிட்ட நிறைய பொம்மை இருக்குப்பா. எனக்கு வேணும்னா அப்புறமாக் கூட நீங்க வாங்கித் தருவீங்க. அவங்க கிட்ட சாப்பாடு வாங்கறதுக்குக் கூடப் பணம் இல்லையே? அந்தப் பணம் அவங்களுக்குத் தானே அதிகமாத் தேவை? ” என்று சொல்லி விட்டாள்.

முல்லையின் பெற்றோர் அவளோட நல்ல செயலை நெனைச்சு நெனைச்சு ரொம்ப சந்தோஷப்பட்டாங்க.

 சித்ராப் பாட்டி தனது கதையை முடித்தார். கண்மணிக்கும் ஆத்திச்சூடியின் பொருள் நன்றாகப் புரிந்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments