ஒரு காட்டில் ஒரு பொல்லாத நரி வசித்து வந்தது.எல்லா விலங்குகளையும் கேலி செய்து தொந்தரவு தந்து கொண்டே இருக்கும் வம்புக்கார நரி அது. அதனால் மற்ற விலங்குகள் நரியிடம் இருந்து ஒதுங்கியே வாழ்ந்தன .

அந்தக் காட்டிற்குப் புதிதாக நாரை ஒன்று வந்தது. நல்ல குணம் கொண்ட அந்த நாரை அனைவரிடமும் இனிமையாகப் பழகி வந்தது. நட்புடன் பழகிய அந்த நாரையை அனைத்து விலங்குகளுக்கும் பிடித்திருந்தது.

நாரையைப் பற்றிக் கேள்விப் பட்ட நரி ஒரு நாள் சென்று நாரையை சந்தித்தது.

” நண்பா.உன்னைப் பற்றி எல்லோரும் காட்டில் நல்ல படியாகப் பேசிக் கொள்கிறார்கள். என்னையும் உனது நண்பனாக ஏற்றுக் கொள்கிறாயா?” என்று தானாகவே போய்ப் பிரியமுடன் பேசியது .உடனே நாரையும் மகிழ்ச்சி அடைந்தது.

” நல்லது நண்பா.இன்று முதல் நீயும் என்னுடைய நண்பன்.” என்று ஏற்றுக் கொண்டது. உடனே நரியும் நாரையிடம் மிகவும் பவ்யமாகப் பேசியது.

” நண்பா. நாளை எனது வீட்டுக்கு நீ விருந்து உண்ண வருகிறாயா?” என்று அழைக்கவும் நாரையும் நரியின் அழைப்பை ஏற்றுக் கொண்டது.

மகிழ்ச்சியுடன் நரியின் குகைக்கு உணவு உண்ணச் சென்றது.நல்ல பசி நாரைக்கு. கமகமவென்ற பாயஸத்தின் மணம் வேறு பசியைத் தூண்டியது.

“வா நண்பா” என்று நாரையை வரவேற்ற நரி இரண்டு பேருக்கும் பாயஸத்தை இரண்டு அகலமான தட்டையான தட்டுக்களில் கொண்டு வந்தது.

nariyum naaraiyum
படம்: அப்புசிவா

அகன்ற வாயிருந்த பாத்திரத்தில் இருந்து பாயஸத்தை நாரையால் உறிஞ்சிக் குடிக்க முடியவில்லை. நரி தனது தட்டை வேகமாக முடித்து விட்டு நாரையின் தட்டில் இருந்த பாயஸத்தையும் நாக்கால் நக்கிக் குடித்து விட்டது.

சிரித்துக் கொண்டே நரி செய்த காரியத்தால் நாரைக்கு நரி தன்னை விருந்திற்கு அழைத்து வேண்டுமென்றே அவமானப் படுத்திய விஷயம் புரிந்தது. அந்த நரியைப் பற்றி மற்ற விலங்குகள் சொன்ன விஷயங்கள் அனைத்தும் உண்மை தானென்று நாரைக்குப் புரிந்தது.

நரிக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று மனதில் நினைத்த நாரை சிரித்துக் கொண்டே நரியிடம் பேசியது.

” என்னை விருந்திற்கு அழைத்ததற்கு மிக்க நன்றி நண்பா.நாளை எனது இல்லத்திற்கு நீ விருந்திற்கு வர வேண்டும்.” என்று அழைப்பு விடுத்துச் சென்றது.

நரி அடுத்த நாள் விருந்தை எதிர்பார்த்து நாரையின் வீட்டுக்குச் சென்றது. நாரையும் அவர்களுக்கான உணவை இரண்டு நீண்ட குறுகிய வாய்களை உடைய குடுவைகளில் கொண்டு வந்து கொடுத்து விட்டுத் தான் உணவை ருசிக்க ஆரம்பித்தது.தனது நீண்ட அலகைப் பாத்திரத்தின் வாயில் விட்டு உறிஞ்சி உண்ட நாரையைப் பார்த்துத் திகைத்துப் போனது.நரியின் தலை பாத்திரத்தின் குறுகிய வாயில் நுழையாததால் திண்டாடிப் போனது.

தனது தவறை உணர்ந்து நாரையிடம் மன்னிப்பு கேட்டு விட்டு அங்கிருந்து ஓடியது.அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் மற்ற விலங்குகளைத் தொந்தரவு செய்யாமல் வாலைச் சுருட்டிக் கொண்டு இருந்தது.

நாரையின் செயலால் காட்டின் மற்ற விலங்குகளும் நரியின் தொல்லையில் இருந்து தப்பி சந்தோஷமாக வாழ்ந்தன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments