முன்னொரு காலத்தில் ஒரு கிராமத்தில் ஒரு செருப்பு வியாபாரியும், அவனுடைய மனைவியும் வசித்து வந்தார்கள். பக்கத்து நகரத்தில் இருந்து தோல் வாங்கிக் கொண்டு வந்து செருப்புகளைத் தானே தயாரித்து விற்று வந்தான். ஒரு சமயத்தில் அவனுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு, ஏழ்மையில் தவித்தான். வயிற்றுக்கு  சரியான உணவு  கிடைக்கும் அளவு கூட வருமானம் கிடைக்கவில்லை.

ஒருநாள் மாலை நேரத்தில் கடையை மூடுவதற்கு முன்னால், கைவசம் தோல் எவ்வளவு இருக்கிறது என்று பார்த்தான். ஒரே ஒரு ஜோடி செருப்புகளைத் தயாரிக்கும் அளவு தான் அவனிடம் தோல் இருந்தது.

பெருமூச்சுடன் அந்தத் தோலை எடுத்து, செருப்பு தைப்பதற்காகத் துண்டுகளாக நறுக்கி அங்கிருந்த ஒரு மரப்பலகையின் மீது வைத்துவிட்டுக் கடையைப் பூட்டிக் கொண்டு கிளம்பினான். அடுத்த நாள் காலையில் நல்ல வெளிச்சமாக இருக்கும் போது செருப்பைத் தயார் செய்யலாம் என்று திட்டமிட்டிருந்தான்.

அன்று இரவு மனைவியிடம், ” ஒரே ஒரு ஜோடி செருப்புக்குத் தான் தோல் இருக்கிறது. அதுவும் விற்காவிட்டால் நமது நிலைமை மிகவும் மோசமாகி விடும் ” என்று புலம்பினான்.

” கவலைப்பட வேண்டாம். ஆண்டவன் கருணை காட்டினால் அந்த ஒரு ஜோடி செருப்புகளே நம்முடைய நல்வாழ்வுக்கு வழிவகுக்கும் ” என்று அவனுடைய மனைவி ஆறுதலாகப் பேசினாள்.

அடுத்த நாள் காலையில் கடையைத் திறந்தபோது அவனுக்காக ஒரு பெரிய ஆச்சரியம்  காத்துக் கொண்டிருந்தது.  உயர்ந்த ரகச் செருப்புகளின் புத்தம் புதிய ஜோடியொன்று மரப்பலகையில் வைக்கப்பட்டிருந்தது. நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கண்களைக் கவர்ந்தது அந்த ஜோடி. மகிழ்ச்சி அடைந்த வியாபாரி, செருப்புகளைத் தனது கடையில் விற்பனைக்காக எடுத்து வைத்தான்.

அவர்களுடைய கிராமத்தில் வசிக்கும் ஒரு வியாபாரி அன்று கடைக்கு வந்தான். புதிதாகத் திருமணமாகியிருந்த அந்தப் பணக்காரன் தன்னுடைய மனைவிக்காக அந்த ஜோடியை விலைக்கு வாங்கினான். மிகவும் அழகான ஜோடி என்று சொல்லி நிறையப் பணம் கொடுத்தான். சந்தோஷமான வியாபாரி அந்தப் பணத்தில் மீண்டும் தோல் வாங்கி, இரண்டு ஜோடி செருப்புகள் தயாரிக்கத் துண்டுகளாக வெட்டி வைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றான்.

அடுத்த நாளும் அதே தான் நடந்தது. இரண்டு ஜோடி நல்ல செருப்புகள். அவ்வளவு அழகான நுட்பமான வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அவைகளும் நல்ல விலைக்குப் போக, அடுத்த நாள் இன்னும் நிறையத் துண்டுகளை வெட்டி வைத்தான். தினமும் இது தொடர்ந்தது. இப்போது செருப்பு வியாபாரியின் ஏழ்மை நிலைமை ஓரளவு மாறிவிட்டது. அவன் கையில் பணம் புரள ஆரம்பித்தது. அவனுடைய செருப்புகளின் தரம் உயர்ந்து, விற்பனை அதிகரித்தது. அக்கம்பக்கத்து கிராமங்களிலும் அவனுடைய பெயரும், புகழும் பரவியது.

param 6
படம்: அப்புசிவா

” இவ்வளவு நாட்களாக நமக்கு உதவி செய்வது யாரென்று கண்டுபிடிக்க வேண்டும் ” என்று வியாபாரியும், அவனுடைய மனைவியும் ஒரு திட்டம் போட்டார்கள். அன்று இரவு செருப்புகளுக்காகத் தோலை வெட்டி வைத்துவிட்டுக் கடையிலேயே ஒளிந்து கொண்டார்கள். இரவில் திடீரென ஆரவாரம் கேட்க, அவர்கள் ஒளிந்திருந்த இடத்தில் இருந்து நடப்பதை வேடிக்கை பார்த்தார்கள் குட்டிக் குட்டி தேவதைகள். சித்திரக் குள்ளர்கள் போல மிகச் சிறிய உருவங்கள். தங்களுக்குள் பேசிச் சிரித்துக் கொண்டே வேலை செய்தார்கள். ஆடிப்பாடி மகிழ்வுடன் செருப்புகளைத் தைத்து முடித்து வைத்தார்கள். ஆனால் அவர்களுடைய ஆடைகள் அனைத்தும் கிழிந்து போயிருந்தன. செருப்புகளும் பிய்ந்து தொங்கின. அதைப் பார்த்த வியாபாரியும், அவனுடைய மனைவியும் மனம் வருந்தினார்கள்.

அடுத்த நாள் பகலில் வியாபாரி தன்னிடமிருந்த தோலை வைத்து அந்தக் குட்டி தேவதைகளுக்கு செருப்புகளைத் தயார் செய்தான். வியாபாரியின் மனைவி வீட்டில் இருந்த பட்டு, பருத்தி, வெல்வெட் துணிகளை வைத்து அழகழகான குட்டிக் குட்டி ஆடைகளைத் தயாரித்து வைத்தாள்.

அன்று இரவில் கடையைப் பூட்டும் போது செருப்பு தயாரிக்கும் தோலை வைக்காமல், தாங்கள் தயாரித்த ஆடைகளையும், செருப்புகளையும் வைத்துவிட்டு அங்கேயே ஒளிந்து கொண்டார்கள்.

அன்று இரவு அங்கே வந்த தேவதைகள் தங்களுக்காக வைக்கப்பட்டிருந்த உடைகளையும், செருப்புகளையும் பார்த்து மகிழ்ச்சியுடன் துள்ளின. அவற்றை அணிந்து கொண்டு ஆனந்த நாட்டியமாடின.

வியாபாரியும் மகிழ்ச்சி அடைந்தான்.

அதற்குப் பிறகு வியாபாரி, புதிய செருப்புகளுக்காகத் தோல் துண்டுகளைக் கடையில் வைக்கவில்லை. தன்னிடம் இருந்த செல்வத்தைக் கொண்டு மகிழ்வுடனும் மனநிறைவுடனும் வாழ்க்கை நடத்தினான். தனக்கு உதவி செய்த தேவதைகளுக்கு தினமும் மனதில் நன்றி கூறினான்.

இப்போது கூட திடீர், திடீரென சில சமயங்களில் புதிய செருப்புகளை அந்த தேவதைகள், கடையில் வைத்துவிட்டுத் தான் போகின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments