ஒரு காட்டில் ஒரு வயதான அம்மாப் பன்றியும் அதனுடைய மூன்று குட்டிகளும் வசித்து வந்தார்கள். போனி, சோனி, மோனி என்று பெயர் வைத்திருந்தாள் அம்மா. மூன்று பேரும் அம்மாவுடன் சேர்ந்து சந்தோஷமாகத் தங்கள் வீட்டில் வசித்து வந்தார்கள். மூன்று பேரும் ஒற்றுமையாக விளையாடிக் கொண்டு அம்மா தரும் உணவைப் பகிர்ந்து உண்டு முடிந்தவரை அம்மாவிற்குத் தொல்லை தராமல் அமைதியாக வாழ்ந்து வந்தார்கள்.

3 pigs
படம்: அப்புசிவா

அம்மாவிற்கு வயது கூடிக்கொண்டே போனது. வீட்டிற்கு வெளியே போய் வேலை செய்து உணவைக் கொண்டு வர முடியவில்லை அதனால். நாளாக ஆக ஓய்ந்து போய்விட்டது. ஒரு தடவை கடுமையான புயல் வீசியது. புயலைக் தொடர்ந்து கனத்த மழை. அவர்களுடைய வீடு இடிந்து போய்விட்டது. வீட்டில் இருந்த சாம்ன்களும் மழையில் பாழாகிவிட்டன.

அம்மா வருத்தத்துடன் அழுதுகொண்டே இருந்தது. போனி, மோனி, சோனி மூன்று பேரையும் தன்னருகில் அழைத்தது.

“ குழந்தைகளா, இனிமேலும் அம்மாவால உழைச்சு உங்களைக் காப்பாத்த முடியாது. நம்ம வீடும் இடிஞ்சு போயிடுச்சு. சாமான்களும் எல்லாமே பாழாய்ப் போயிடுச்சு. சாப்பிட எதுவும் வீட்டில் இல்லை. சாப்பாடு விலைக்கு வாங்க என் கிட்டப் பணமும் இல்லை. அதுனால நீங்க மூணு பேரும் இனிமே வீட்டை விட்டுக் கெளம்புங்க. நீங்களே உழைச்சு சம்பாதிச்சு உங்க வாழ்க்கையை நீங்களே பாத்துக்குங்க. எனக்கும் வயசாயிடுச்சு. என்னால் இனிமேல் எதுவும் செய்ய முடியாது. நான் இனிமேல் ஓய்வெடுக்கப் போறேன் ” என்று சொல்லி அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பியது.

குழந்தைகளை வீட்டை விட்டு அனுப்ப அதற்கு மனமேயில்லை. இருந்தாலும் அதனுடைய நிலைமையும் பரிதாபமாக இருந்ததால் அதனிடமும் வேறு வழியில்லை.

வயதான காலத்தில் குழந்தைகளின் பொறுப்பும் அதற்கு அதிகப்படியான சுமையாக இருந்ததுதான் காரணம்.

போனி, சோனி, மோனி மூன்று பேரும் மூன்று திசைகளில் பிரிந்தார்கள்.

“ மூணு பேரும் தனித்தனியாப் போய் வீடு கட்டி வாழ்க்கையில் வெற்றி கெடச்சதுக்கு அப்புறமாத் திரும்பி ஒண்ணாச் சேந்துக்கலாம்” என்று முடிவு செய்தார்கள். மற்றவர் பற்றிய கவலையே இல்லாமல் தன்னிச்சையாக எது வேண்டாலும் முயற்சி செய்யலாம் என்று நினைத்தார்கள்.

முதலில் போனி, காட்டுப்பகுதியில் நடந்து போய்க் கொண்டிருந்தபோது ஒரு மனிதன் தலையில் வைக்கோற் கட்டு வைத்து சுமந்துகொண்டு போய்க் கொண்டிருந்தான்.

“ ஐயா, எனக்குக் கொஞ்சம் வைக்கோல் தரீங்களா? நான் இதை வச்சு வீடு கட்டிக்கறேனே? நீங்க செய்யற இந்த உதவியால எனக்கு ஒரு நல்ல வீடு கிடைக்கும். என் மனசுல இருக்கற நன்றி உணர்வோட நீங்க நல்லா இருக்க இறைவன் கிட்ட வேண்டிக்குவேன்” என்று அந்த மனிதனிடம் பணிவோடு வேண்டியது.

அந்த மனிதனுக்கு அந்தப் பன்றியைக் பார்த்து மனதில் இரக்கம் தோன்றியது. தன் வீட்டிற்குக் கூட்டிப் போய்க் கொஞ்ச நேரம் வேலை வாங்கிக்கொண்ட பின்னர் கொடுப்பதாகக் கூறித் தன்னோடு  அழைத்துப் போனான். அவனிடம் இருந்த வைக்கோலைத் தூக்கிக் கொண்டு நடப்பதும் அவனுக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது. ஏற்கனவே தள்ளாடித் தள்ளாடி நடந்து கொண்டிருந்தான் அவன். சோனி அவனுக்கு நிறைய வேலை செய்து கொடுத்தது.

“ உன்னைப் பாத்தா எனக்குப் பாவமா இருக்கு. இந்தா, எடுத்துக்கோ” என்று ஒரு பெரிய வைக்கோல் பொதியை போனியிடம் கொடுத்தான்  அவன்.

போனி, வைக்கோலை வைத்து அழகாக ஒரு வீடு கட்டி அதில் ஓரளவு சந்தோஷமாக வாழ ஆரம்பித்தது. அப்போது ஒருநாள் அந்தப்பக்கம் வந்த ஓநாய் ஒன்று, போனியையும், அந்த வைக்கோல் வீட்டையும் பார்த்தது. நல்ல பசியில் இருந்த ஓநாய், போனியைக் கொன்று தின்று பசியைத் தீர்த்துக்கொள்ளத் துடித்தது.

“ பன்றிக்குட்டியே, நானும் உன்னோட வீட்டில் வந்து உன் கூடவே தங்கட்டுமா? எனக்கு வீடே இல்லை. கதவைத் திறக்கறயா? ” என்று குரலில் இனிமையைக் கூட்டிக்கொண்டு பாசத்தோடு பேசியது. போனிக்கு அந்த ஓநாயின் கள்ளத்தனம் புரிந்தது.

“ இந்த வீட்டில் வேற யாருக்கும் இடமில்லை. நான் மட்டும் தான் தங்க முடியும்” என்று நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டது.

“ அப்படியா? என் பேச்சைக் கேக்காத உன்னை என்ன செய்யறேன் பாரு” என்று சொல்லி விட்டு பலமாக வாயைக் குவித்து ஊதியது. வைக்கோல் எல்லாம் பறந்துபோய் வீடே பாழானது. போனி, அங்கிருந்து தப்பித்து ஓடி எப்படியோ காட்டுக்குள் ஒளிந்து கொண்டது. தன் நிலையை எண்ணி வருந்தியது.

அடுத்ததாக மோனி காட்டுக்குள் போகும்போது அதுவும் ஒரு மனிதனைப் பார்த்தது. அவன் தலையில் தனது வீட்டின் எரிபொருளுக்காகச் சுள்ளிகளைத் தலையில் சுமந்து கொண்டு போய்க் கொண்டிருந்தான். மோனி அவனிடம் உதவி கேட்க முடிவு செய்தது.

“ ஐயா, உங்க கிட்ட இருக்கற குச்சிகளில கொஞ்சத்தை எனக்குத் தரங்களா? நான் வீடு கட்டிக்கறேன். இந்தக் காட்டில எனக்குப் பாதுகாப்பா இருக்கும் ” என்று கெஞ்சியது. அந்த மனிதனுக்கு என்னவோ அந்தப் பன்றிக்குட்டியைப் பார்த்ததும் பாவமாகத்  தெரிந்தது.

அதனிடம் கொஞ்ச நேரம் வேலை வாங்கிக் கொண்டான். பின்னர் தன்னுடைய சுமையும் கொஞ்சம் குறையும் என்று நினைத்துக் கொஞ்சம் சுள்ளிகளை மோனிக்குக் கொடுத்து விட்டுச் சென்றான். மோனி அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு அந்தக் குச்சிகளை வைத்துத் தன்னால் முடிந்த அளவு ஒரு சிறிய வசிக்குமிடத்தைக் கட்டிக் கொண்டது.

போனியைக் கொல்ல முயற்சி செய்து தோல்வியடைந்த அதே ஓநாய், மோனியின் வீட்டைப் பார்த்துவிட்டு அருகில் வந்தது.

ஓநாயைப் பார்த்து பயந்துபோன மோனி, கதவை இறுக்க மூடிக் கொண்டது.

“ பன்றிக்குட்டியே, நீ உள்ளே இருக்கண்ணு  எனக்குத் தெரியும். எனக்கும் உன் வீட்டில் இடம் தரயா? எனக்கு வீடே இல்லை. நான் உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன். கதவைத் கொஞ்சம் திறக்கறயா? “ என்று தேனொழுகப் பேசியது. மோனிக்கா தெரியாது ஓநாயின் தந்திரம்?

“ அதெல்லாம் இடம் தரமுடியாது. வேற இடத்துக்குப் போய் முயற்சி செஞ்சுக்கோ” என்று திட்டவட்டமாகக் கூறியது.

“ ஓ, உனக்கு இவ்வளவு தைரியமா? பன்றிக்குட்டிக்கே இவ்வளவு தைரியம் இருந்தா, ஓநாயான எனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்? இப்போ என்னோட தைரியத்தைப் பாரு” என்று சொல்லி, போனி கஷ்டப்பட்டுக் கட்டிய வீட்டைத் தன் கைகளால் பிய்த்துப் போட்டு. காலால் எட்டி உதைத்து உடைத்தது. ஒல்லியான அந்தக் குச்சிகளை ஓநாயால் எளிதாக நாசமாக்க முடிந்தது. மோனி, நிலைமையின் தீவிரத்தை  உணர்ந்து, தப்பித்தோம், பிழைத்தோம் என்று எப்படியோ ஓடி, ஓநாயிடமிருந்து தப்பி உயிர் பிழைத்தது. காட்டின் ஒரு மூலையில் வருத்தத்துடன் நாட்களைக் கழித்தது.

மூன்றாவதான சோனிக்கும் கிட்டத்தட்ட இதே போன்ற அனுபவம் தான் கிடைத்தது. காட்டுவழியில் போய்க் கொண்டிருந்த மனிதன் செங்கற்களைச் சுமந்துகொண்டு போய்க் கொண்டிருந்தான். சோனி, அவனிடம் கொஞ்சம் செங்கற்களைக் கேட்டுக் கெஞ்சியதில். அவனும் தன்னுடைய செங்கற்கள் வைக்கப்பட்டிருந்த செங்கற்களை ஓரிடத்தில் குவித்து வைத்திருந்தான். வேலை முடிந்து போனதால் அவற்றை வேறு இடத்திற்குக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றும் வேலையைச் செய்து கொண்டிருந்தான்.

சோனியும் அவனுக்கு நீண்ட நேரம் உதவி செய்தது. மகிழ்வுடன் நிறையச் செங்கற்களை சோனியிடம் மகிழ்ச்சியுடன் கொடுத்து விட்டான். சோனியும், அந்தச் செங்கற்களை வைத்துத் தனக்குச் சின்னதாக ஒரு வீடு கட்டிக் கொண்டது.

ஓநாய்க்கு எப்படியோ மூக்கு வியர்த்து விட்டது. சோனியின் வீட்டைக் கண்டுபிடித்து உள்ளே வர விரும்பியது.

“ கதவைத் திறந்து என்னை உள்ளே வர விடறயா? ” என்று கேட்டது. சோனி மறுத்து விட்டதால், ஓநாய்க்கு பயங்கரக் கோபம் வந்தது.

“ உன் வீட்டை நாசமாக்கறேன் பாரு” என்று சொல்லிவிட்டு பலமாக ஊதியது. வீடு ஒன்றும் ஆகவில்லை. பின்னர் கையால் உடைக்கப் பார்த்தது. காலால் எட்டி உதைத்துப் பார்த்தது. கையும், காலும் வலித்ததுதான் மிச்சம். வீடு ஒன்றுமே ஆகவில்லை.

“ இரு, நான் உன் வீட்டுப் புகைப்போக்கி வழியாக வீட்டுக்குள் வந்து உன்னைத் தண்டிக்கிறேன் பார்” என்று சொல்லிவிட்டுப் புகைப்போக்கி இருந்த பக்கம் ஏறியது.

“ வா, வா, எனக்கு எந்தக் கவலையும் இல்லை” என்று சொல்லிவிட்டு, சோனி ஏதோ வேலை செய்துகொண்டிருந்தது.

“ புகைப்போக்கி பக்கத்துல வந்துட்டேன். உள்ளே குதிச்சு இறங்கப் போறேன் “ என்றது ஓநாய்.

“ வா, வா, நான் உனக்காகவே காத்துட்டு இருக்கேன்” என்று அமைதியாக பதில் கூறியது சோனி.

புகைப்போக்கி வழியாக உள்ளே கொதித்த ஓநாய், நேரே வெந்நீரில் விழுந்தது.  புகைப் போக்கிக்கு நேர் கீழே அடுப்பில் வெந்நீர்ப் பானை வைத்து வெந்நீரைக் கொதிக்க வைத்திருந்தது சோனி. உடம்பெல்லாம் வெந்து போய், குய்யோ, முறையோ என்று கதறிக்கொண்டு பானையிலிருந்து எப்படியோ வெளியே வந்து ஓடியே போனது ஓநாய்.

அதன்பிறகு, சோனி சென்று தன் அம்மாவையும், போனி, மோனியையும் அழைத்து வந்தது. நான்கு பேரும் அந்த உறுதியான வீட்டில் ஒன்றாக வாழ்ந்ததோடு, சந்தோஷத்தையும் பகிர்ந்து கொண்டார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments