ஒரு கிராமத்தில் வசித்து வந்த நண்பர்களான நல்ல புத்தி, கெட்ட புத்தி இருவரும் வேலை தேடி நகரத்துக்குச் சென்றனர்.

சில நாட்கள் கழித்துத் திரும்புகையில் நல்ல புத்தி ஆயிரம் பொற்காசுகள் சம்பாதித்திருந்தான். கெட்ட புத்திக்கு வருமானம் ஒன்றும் கிட்டவில்லை.

இருந்தாலும் நல்ல புத்தி தனது நல்ல மனத்தால் இருவரும் அதைப் பகிர்ந்து ஆளுக்கு ஐந்நூறு பொற்காசுகள் எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லக் கெட்ட புத்தி

சந்தோஷமாக அந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டான்.

காட்டின் வழியே சென்று ஊருக்குள் நுழைவதற்கு முன்னர் கெட்ட புத்தி,

” பொற்காசுகளை ஒரு மரத்தின் அடியில் குழி தோண்டிப் புதைத்து விட்டுச் செல்லலாம். வீட்டில் வைத்துப் பாதுகாப்பது கடினம். சில நாட்கள் கழித்து வந்து தோண்டி எடுத்துக் கொள்ளலாம்.”

என்று சொல்ல நல்ல புத்தியும் அவன் சொன்னதற்கு சரியென்று சொல்ல, ஒரு மரத்தின் அடியில் பொற்காசுகளைக் குழி தோண்டிப் புதைத்து விட்டுச் சென்றனர்.

அடுத்த நாள் இரவே கெட்ட புத்தி தனியாக

வந்து அந்தப் பொற்காசுகளைத் தோண்டி எடுத்துக் கொண்டு விட்டான்.

pesum maram
படம்: அப்புசிவா

சில நாட்கள் கழித்து இருவருமாகக் கலந்து பேசித் தங்களது பொற்காசுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று வந்து மரத்தின் அடியில் தோண்டினர். பொற்காசுகளைக்

காணாமல் நல்ல புத்தி அதிர்ச்சி அடைந்தான்.

கெட்ட புத்தி முந்திக் கொண்டு நல்ல புத்தியைக் குற்றம் சாற்றினான்.

” பொற்காசுகளை எனக்குத் தெரியாமல் நீயே எடுத்துக் கொண்டு விட்டாய்.”

“இல்லை. இல்லை. நான் எடுக்கவில்லை. நீ தான் எடுத்துக் கொண்டிருக்கிறாய். நாம் இருவர்  மட்டுமே  இந்த இடம் பற்றி அறிவோம்.”

என்று நல்ல புத்தி திரும்பிச் சொல்ல இருவருக்கும் பெரிய வாக்குவாதமும் சண்டையும் தொடர்ந்தது.ஊரில் இருந்த நீதிமன்றம் ஒன்றில் தங்களது வழக்கைக் கொண்டு சென்றனர்.

வழக்கை விசாரித்தவர்,

” நீங்கள் இருவர் சொல்வதில் யாரை நான் நம்புவது? இந்த வழக்கில் சாட்சி ஏதாவது இருக்கிறதா? “

என்று கேட்டதும் கெட்ட புத்தி பதில் சொன்னான்.

“சாட்சி இருக்கிறது. அந்த மரம் தான் சாட்சி. நாளை ஊரார் முன்னிலையில் மரத்தை விசாரிக்கலாம்.”

என்று சொல்லவும் இருவரும் அங்கிருந்து சென்றனர்.

கெட்ட புத்தி வீட்டிற்குச் சென்று தனது தந்தையிடம் மரத்தில் இருந்த பெரிய பொந்தில் ஒளிந்து கொண்டு மரமே பேசுவது போலப் பொய் சாட்சி சொல்லச் சொல்லி வேண்டினான்.

“இந்த மாதிரிப் பொய் சாட்சி சொல்லிப் பிறரை ஏமாற்றுவது தவறு. நமக்கு அழிவே உண்டாகும்.”

என்று அவரும் புத்திமதி சொல்லிப் பார்த்தார் தனது மகனுக்கு. கெட்ட புத்தி தன்னுடைய தந்தையின் அறிவுரையைக்

கேட்பதாக இல்லை. அன்று இரவே அவரைக் கூட்டிச் சென்று மரப்பொந்தில் ஒளித்து வைத்தான்.

அடுத்த நாள் காலையில் மரத்தின் அருகே அனைவரும் கூடினர்.வழக்கை விசாரித்தவர் மரத்தைப் பார்த்துக் கேட்டார்.

“மரமே! மரமே! பதில் சொல்வாயா?பொற்காசுகளை எடுத்துக் கொண்டது யார்? ஏமாற்றுவது யார்?”

என்று கேட்க மரத்தின் பொந்தில் ஒளிந்திருந்த கெட்ட புத்தியின் தந்தை குரலை மாற்றிக் கொண்டு மரமே பேசுவது போல் பேசினார்.

” பொற்காசுகளைத் திருடிச் சென்றது நல்ல புத்தி தான்.”

மரமே பேசி சாட்சி சொன்னதில் எல்லோருமே வியந்தனர்.

நல்ல புத்தி இதில் ஏதோ சூது இருக்கிறது என்று கோபம் கொண்டு மரத்திற்குத் தீ வைத்து விடப் பொந்தில் இருந்த கெட்ட புத்தியின் தந்தை அலறிக் கொண்டு வெளியே விழுந்தார். தீயில் கருகி இறந்தும் போனார்.

உண்மையைப் புரிந்து கொண்ட ஊர்க் காரர்கள் இந்த வழக்கைப் பற்றி அரசனிடம் சென்று முறையிட அரசன் கெட்ட புத்தியைச்

சிறையில் அடைத்துக் கடும் தண்டனை வழங்கினான்.

ஆயிரம் பொற்காசுகளைக் கெட்ட புத்தியின் இல்லத்தில் இருந்து பறிமுதல் செய்து நல்ல  புத்தியிடம் வழங்கினார். நல்ல புத்தியும் அதன் பின்னர் தான் ஈட்டிய பொருளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தான்.

பொய்யினால் கிடைக்கும் வெற்றி நிரந்தரமானது அல்ல.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments