நந்தினியும் சரசாவும் வாட்ஸ் ஆப்பில் :
நந்தினி : சேகர் வந்துட்டானா ?
சரசா: இல்ல ! இப்பல்லாம் நிறைய நேரம் படிக்க வைக்கிறாங்கன்னு நேத்திக்கே சொன்னான்.
நந்தினி : நம்பிடாதீங்க ! நேத்து நா அவசரமா வெளியே போகணும், அதனால, ராஜுவையும் அழச்சுச்சுட்டுப் போயிடலாம்ன்னு பாத்தேன். அங்க போயி பாத்தா, ஹிந்தி டீச்சர் வீட்டு வாசலில பெரிய கேங்கா விளையாடிகிட்டு இருக்காங்க!
சரசா: அப்ப நா இன்னிக்குப் போய் பாக்குறேன்.
நந்தினி : போய் பாருங்க ! நாளைக்கு காலைலே, பசங்கள விட்டுட்டு போயிடாதிங்க, நேராப் பேசுவோம். நா முன்னாடி வந்தா வெயிட் பண்ணறேன்.
சரசா: ஷ்யூர் !
*** *** ***
வாணி வித்யாஷ்ரம் வாசலில் நந்தினி சரசாவுக்காகக் காத்திருந்தாள். அவள் மகன் ராஜுவும் சரசாவின் மகன் சேகர், மகள் செல்வி மூவரும் அந்தப் பள்ளி மாணவர்கள். பெற்றோர்களாகத் தான் அறிமுகம் ஆனார்கள் அன்னையர் இருவரும். இப்போது அணுக்கமான தோழிகள் ஆகிவிட்டார்கள்.
தினமும் பள்ளி முடிந்தபின், பிள்ளைகள் தங்கள் நேரத்தை நல்லபடியாகப் பயன்படுத்த, அதே பகுதியில் இருந்த ஹிந்தி ஆசிரியை ஒருவரிடம் ஹிந்தி கற்றுக் கொள்ள அனுப்புகின்றனர். விடுமுறை நாட்களில் கூட எல்லோருமாகச் சேர்ந்து பீச், கோவில், சினிமா, பார்க் என லிஸ்ட் போட்டு ஒன்றாகச் சென்று வருவார்கள்.
அதோ சரசா…
“சாரி, ரொம்ப நேரம் காக்க வச்சுட்டனா?”
“இல்லப்பா, சரி, நம்ம பசங்க தினமும் இந்த ஹிந்தி க்ளாஸ் முடிஞ்சு லேட்டா வராங்க !”
“ஆமாம், நேத்திக்கி நா போகும் போதும் விளையாடிக்கிட்டு தான் இருந்தாங்க.”
“பாருங்களேன், ஏதோ அந்தத் தெரு கொஞ்சம் உள்ளடங்கி இருக்கு. அவ்வளவா வெஹிக்கிள்ஸ் வராது. ரொம்ப ரிஸ்க் இல்ல”
“அது சரி நந்தினி, எதுக்கு நம்மகிட்ட நெறய நேரம் படிக்க வைக்கிறாங்கன்னு ஒரு பொய்யச் சொல்லுறாங்க நம்ம பசங்க “
“அதுல ஒரு திரில்லு… நாம திட்டுவோம்… சீக்கிரம் வான்னு சொல்லுவோம்”
”இனிமே, க்ளாஸ் முடிஞ்சதும் ஒரு மெசேஜ் போடுங்கன்னு, ஹிந்தி மேம் கிட்ட சொல்லிட்டேன்”
இருவரும் பேசிக்கொண்டே நடந்து, பக்கத்தில் கறிகாய் கடையில் தேவையான காய்களை வாங்கினார்கள்.
“சரசா, நம்ம வீடுகளுக்குப் பக்கத்தில அந்த ராஜன் தெருவில கோவிலுக்குப் பக்கத்தில கொஞ்சம் இடம் இருக்கு, பாத்து இருக்கீங்களா?”
“ஆமா, ஒரே புல்லும் பூண்டுமா இருக்கும். முள் செடியும் குப்பையுமா”
”நாம ஏன் அந்த இடத்தை சுத்தம் பண்ணி, பசங்க விளையாட இடம் பண்ணக் கூடாது?”
“நல்ல ஐடியா, நந்தினி, யாரோட இடமோ ?”
“கேக்கலாம், விசாரிக்கலாம்”
சிறிது நேர வாட்ஸாப் விசாரிப்புகளிலேயே அந்த இடம் கோவிலுக்குச் சொந்தம் என்பதைக் கண்டு பிடித்து விட்டார்கள்.
அந்தப் பகுதியில் இருந்த பூங்காவில் இளம் பாலகருக்கான விளையாட்டுக் கட்டமைப்பும், பெரியவர்களுக்கான நடைமேடையும் தான் இருந்தன. சற்றே வளர்ந்த பிள்ளைகள் ஓடிப்பிடித்து விளையாட, இறகுப்பந்து, பூப்பந்து விளையாட பாதுகாப்பான இடம் கிடையாது.
நந்தினியும் சரசாவும் இன்னும் சில பெற்றோர்களையும் சேர்த்துக் கொண்டு, முள்ளுக்காடாக இருந்த இடத்தை மைதானமாக்கும் முயற்சிகளில் இறங்கினார்கள்.
கோவில் ட்ரஸ்டியிடம் பேசி, சம்மதம் வாங்கினார்கள்.
ஜேசிபி இயந்திரம் மற்றும் பணியாளர்கள் கடுமையான வேலைகளைச் செய்தாலும், சின்ன உதவிகள், பணிகள், உணவு உபசரிப்பு போன்ற பணிகளுக்கு ஆள் தேவை.
ராஜுவும் சேகரும் கேப்டன்களாக, அவர்கள் தலைமையில் ஒரு சிறார் பட்டாளமே களத்தில் இறங்கியது.
முன்னாள் உடற்பயிற்சி ஆசிரியர் வசந்தகுமாரும் விசிலுடன் வந்து விடுவார்.
“ஷூ இல்லாம உள்ள வராத, க்ளவுஸ் போடு ”
“அந்த சாக்கை தூக்கிப் பிடி, வெட்டின புல்ல மண்வெட்டியால கூடையில வாரி எடுத்து, சாக்கில போடு”
வசந்தகுமாரின் குரலும், விசில் உத்தரவும், மாணவ மணிகளின் உற்சாகப் பணி நேர்த்தியும் மேலும் சில தன்னார்வலர்களை ஈர்த்தது.
மண் மற்றும் மணல் போட்டு சமதளமாக்க பண உதவி கிடைத்தது.
மீண்டும் சேகர், ராஜூ தலைமையில் சிறுவர் பட்டாளம். கூடவே, நந்தினி, சரசா தலைமையில் பெற்றோர்கள் ! கைகளில் சாக்குப்பைகள், பக்கெட்டுகள் மற்றும் பாண்டுகள் ! செமையான ஈவ்னிங் ட்ரில் தான் !
என்னவொரு சந்தோஷம் பிள்ளைகளின் முகங்களில் ! பெரியவர்களுக்கும் பெருமை !
அந்த ஈவ்னிங் ட்ரில், உடலுக்கு மட்டுமல்ல ! மனதுக்கும் தான் !
சமூக அக்கறையுடன் செய்யப்படும் காரியங்களுக்கு நிதி உதவியும் உழைப்புதவியும் நிச்சயம் உண்டு என்பதை உணர்த்தும் செமையான ட்ரில் !
கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர் திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.
ஆங்கில இலக்கியம் மற்றும் கல்வியியலில் முதுகலைப்பட்டம் பெற்ற கமலா முரளி,சென்னை, பெரம்பூர்,விவேகானந்தா பள்ளியில் சில வருடங்கள் பணியாற்றிய பின், கேந்திரிய வித்யாலயா சங்கதனில் ஆங்கில ஆசிரியையாகப் பணியேற்றார். சென்னை, மேக்ஸ்முல்லர்பவன், ஜெர்மன் கல்வியகம், கேந்திரிய வித்யாலயாவுடன் இணைந்து அளித்த திட்டத்தின் கீழ் ஜெர்மன் மொழி பயின்று, ஜெர்மனி, மேன்ஹெய்ம் நகரில் ஜெர்மன் பயின்றார்.கேந்திரிய வித்யாலயாவின் தேசிய அளவிலான “சீர்மிகு ஆசிரியர்” விருதினை 2009 ஆண்டு பெற்றார்.
தமிழில் ஆர்வமும், தேர்ச்சியும் பெற்றுள்ள கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி, மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ் நமது உரத்த சிந்தனை, சொல்வனம் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. அவரது “மங்கை எனும் மந்திர தீபம்” (“எ லேடி வித் த மேஜிக் லேம்ப்”)எனும் மொழிபெயர்ப்பு நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
சென்னை, மூத்த குடிமக்கள் மன்றம், கலைமகள் பத்திரிக்கையுடன் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதையும் பரிசு பெற்றது. கலைமகள் வெளியுட்டுள்ள சிறப்பு பதிப்பில் “யதார்த்த வாழ்வு” எனும் அச்சிறுகதை இடம் பெற்றுள்ளது.
குவிகம் மின்னிதழ் நடத்திய “குவிகம் குறும்புதினம் 2023-24” போட்டியில் எனது குறும்புதினம் தேர்வு செய்யப்பட்டு, குவிகம் குறும்புதினம் இதழில் வெளிவந்துள்ளது.
இவர் எழுதிய, “இந்துமதி கல்யாணம் எப்போ ?” என்ற சிறுகதைத் தொகுப்பு சமீபத்தில் வெளிவந்துள்ளது.