‘பயங்கர குளிரா இருக்கே.. பனி பெய்யுது’ நடுக்கமான குரலில் முனுமுனுத்தது சாசா.
சாசா யார் தெரியுமா?
சாசா ஒரு பூரான். நீளமா இருக்கும். நிறைய காலோட குடுகுடுனு ஓடுமே அது தான் பூரான். முன்னாடி மீசை வேற இருக்கும்.
எனக்கும் குளிருது. நல்லதா ஓர் இடம் கிடைச்சா போய் தூங்கலாம். மனுசங்க வீடு மாதிரி கதகதப்பா இருக்கனும் என்ற குரல் கேட்டது.
எங்கிருந்து குரல் வருது என சுற்றிலும் பார்த்தது சாசா.
மாமரத்தின் அடியில் இருந்து மண்ணைக் குடைந்து கொண்டு முதலில் கொடுக்கை நீட்டியது. பின் தலையை நீட்டி எட்டிப் பார்த்தது டிகு.
டிகு ஒரு நட்டுவாக்காலி. ஓ நட்டுவாக்காலின்னா தெரியாதில்ல? தேள் தெரியுமா தேள் அது தான். இது ஒரு கருந்தேள். செந்தேள் கூட இருக்கிறது.
மாமரத்து வேர்ல கதகதப்பா இல்லையா எனக் கேட்டது சாசா
அங்க தான் இன்னும் ஈரமா இருக்கே. ரொம்ப ரொம்ப குளிருது என்றது டிகு.
உன் உணர்விய (அதான் பூரணோட மீசை) வச்சு எங்க கதகதப்பான இடமிருக்குனு பாத்து சொல்லு என சாசாவிடம் சொன்னது டிகு.
நீ உன் கொடுக்க வச்சு எங்க போகலாம்னு சொல்லு என்றது சாசா
இப்படியே ரெண்டும் சண்டை போட்டுக் கொண்ட சத்தம் அந்த வீட்டு செல்லப்பிராணி சாக்கிக்கு கேட்டது.
சாக்கி ஒரு டஸ்சண்ட் இன நாய். நீளமாக வளரும் உயராமவே ஆகாது. சரியான புத்திசாலி.
சாசாவும் டிகுவும் அந்த வீட்டு மனிதர்களுக்கு ஏதேனும் தீங்கு செய்து விடுவார்கள் என அஞ்சியது சாக்கி.
எனவே இருவரையும் பார்த்து பயங்கரமாக குலைக்க ஆரம்பித்து விட்டது.
சாக்கியின் குரலைக் கேட்டதும் சாசாவும் டிகுவும் வேகவேகமாக ஓடின.
கதவிடுக்கில் புகுந்து காலணி வைக்கும் அலமாரியில் ஏறி ரியாவின் காலணிக்குள் சாசாவும் நிலாவின் காலணிக்குள் டிகுவும் ஏறிக் கொண்டன.
“ம்ம் நல்ல கதகதப்பா இருக்கு என்ன சுகமா இருக்கு” என்றது சாசா
“நல்ல வெம்மை. குளிருக்கு இதமா இருக்கு” என இன்னும் உள்ளே போய் ஒட்டிக் கொண்டது டிகு.
காலையில் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்கள் ரியாவும் நிலாவும்.
காலணியை நல்லா உதறிட்டு போடுங்க டா என குரல் கொடுத்தார் அப்பா.
சாக்கி வேறு குரைத்தது. அதை கட்டி வைத்திருந்தனர். நிலாவும் ரியாவும் பள்ளிக்குச் சென்ற பின் தான் சாக்கியை அவிழ்த்து விடுவார் அம்மா.
இல்லையென்றால் சாக்கியுடன் விளையாடிக் கொண்டே பள்ளிக்கு தாமதமாகி விடும்.
கட்டி வைத்திருந்தாலும் சாசாவும் டிகுவும் காலணிக்குள் இருப்பதால், சத்தமாக குரைத்து எச்சரிக்கை செய்தது சாக்கி.
ரியா தன் காலணியை தட்டினாள். கதகதப்பாக தூங்கிக் கொண்டிருந்த சாசா, பதறி விழித்தது. அதற்குள் குலுங்கி குலுங்கி காலணியில் இருந்து வெளியே விழுந்து விட்டது.
விழுந்த வேகத்தில் கால் துடைப்பானில் போய் ஒளிந்து கொண்டது.
நிலா அப்பா சொல்வதை கவனிக்கவில்லை. சாக்கி குரைப்பதற்கான காரணமும் புரியவில்லை.
பள்ளிக்கு நேரமாகி விட்டது. அவசரமாக
காலணிக்குள் காலை விட்டாள்.
நல்ல தூக்கத்தில் இருந்த டிகு பதறிப் போய் விட்டது. என்னவென்று அறியும் முன்பே தன் கொடுக்கால் நிலாவின் காலில் கொட்டிவிட்டது.
நிலா வலியில் அம்மா.. என கத்தி காலை எடுத்தாள். அதற்குள் டிகுவும் காலணியில் இருந்து இறங்கி மாமர வேருக்குள் பதுங்கிக் கொண்டது.
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நிலாவை ஏதோ கடித்திருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. சுற்றி சுற்றி தேடியும் சாசாவும் டிகுவும் சிக்கவே இல்லை.
மருத்துவரிடம் போய் காட்டிவிட்டு வந்த பின்னும் நிலா அழுது கொண்டே இருந்தாள். அப்படியே அழுது அழுது உறங்கி விட்டாள்.
சாக்கி இன்னமும் சாசாவையும் டிகுவையும் தேடிக் கொண்டிருக்கிறது. இரவில் சாக்கியை கட்டாமல் விட்டுவிட்டார் அப்பா.
சாக்கிக்கு பயந்து கொண்டு மரத்தடியிலேயே குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கின்றனர் சாசாவும் டிகுவும்
பொறியியல் பட்டதாரி, தற்சமயம் இல்லத்தரசி; இரு சிறார்களின் தாய்; இரண்டு அச்சு புத்தகங்கள் வெளியாகி இருக்கின்றன. என்னைச் சுற்றி நிகழும் சமூக நிகழ்வுகள் கதைகளாக உருப்பெருகின்றன. தொடர்ந்து வாசித்து எழுதி, என்னை நானே மேம்படுத்த முயன்று கொண்டிருக்கும் புதிய எழுத்தாளர் நான்.