அன்றொரு நாள் அடர் மழை. பாட்டி தாத்தா அம்மா அப்பா நிலன் என அனைவரும் வீட்டில் இருந்தார்கள். மாலை நேரம் சூடான சிற்றுண்டி அருந்தியவாறு யாழினி நிலனைத் தேடினார். தாத்தா ஜன்னல் அருகில் மழையை ரசித்துக் கொண்டிருந்தார். கௌதமிற்கு அலுவலக வேலை வீட்டிலும் தொடர்ந்து கொண்டிருந்தது. பாட்டி நிலனின் அருகில் அமர்ந்து அவனது விளையாட்டைக் கண்டு ரசித்தவாறு உரையாடிக் கொண்டிருந்தார். யாழினி வாங்கிக் கொடுத்த பிறந்தநாள் பரிசு அது. அட்டைகளை அடுக்கி உயரமான கோபுரம் கட்ட வேண்டும். உயரம் அதிகமானால் அதற்குச் சமமான அளவில் வெற்றி கிட்டியதாக நிலன் மகிழ்ந்து உற்சாகமாக கையைத் தட்டி வாய்விட்டு சிரித்துக் கொண்டான். அதனைக் கண்டு பாட்டியும், அவ்வப்போது தாத்தாவும் ரசித்துக் கொண்டிருந்தார்கள். கௌதம் அலுவலக வேலையை சிறிது நேரம் நிறுத்திவிட்டு மழையை ரசிப்பதற்காக வீட்டு வாயில் கதவைத் திறந்தார். பலமாக வீசிய காற்றில் நிலன் அடுக்கி வைத்திருந்த அட்டைகள் அனைத்தும் பொலபொலவென உதிர்ந்து கோபுரம் சாய்ந்து தரையோடு தரையாக படுத்து விட்டது. நிலனின் சிரிப்பும் நின்று, முகம் ஏமாற்றம் கொண்டது. உடையாத கோபுரம் கட்ட வேண்டுமென்று யோசிக்க ஆரம்பித்து விட்டான். அவனது மனதில் எழுந்த முதல் கேள்வியாக..
நிலன்: அப்பா! காற்றடித்தாலும் சாயாத கோபுரம் கட்டுவது சாத்தியமா?
கௌதம்: நிலநடுக்கமே வந்தால் கூட சாயாத கோபுரம் கட்ட முடியும் நிலன். தஞ்சை பெரிய கோவில் கோபுரம் அமைக்கப்பட்டிருக்கும் விதத்தை தெரிந்து கொண்டால் உனக்கு உண்மை புரியும்.
நிலன்: அப்படியானால் அதைப் பற்றி எனக்கு சொல்லுங்கள் அப்பா.
கௌதம்: சரி சொல்கிறேன் நிலன்! பொதுமக்கள் வணங்குவதற்காக அனுமதிக்கும் பகுதியில் கோபுரத்தைப் பற்றி ஒன்றும் அறிந்து கொள்ள முடியாது. கோவிலின் உட்புறம் சன்னதிக்கு வலது பக்கத்தில் பக்கவாட்டில் படிக்கட்டுகள் இருக்கின்றன. அதில் ஏறிச் சென்று பார்ப்பதற்கு யாருக்கும் அனுமதி கிடையாது. அப்பகுதி தொல்லியல் துறையின் பாதுகாப்பில் இருக்கிறது.
நீ ஒரு வயது குழந்தையாக இருந்தபோது நாம் எல்லோரும் அங்கே குடும்பத்தோடு சென்று இருக்கிறோம். தொல்லியல் துறையில் பணிபுரியும் எனது நண்பர் அந்த கோபுரத்தைப் பற்றிய விளக்கமெல்லாம் அப்பொழுது கொடுத்தார். அதைப் பற்றி சொன்னால் புரிந்து கொள்ளும் வயது உனக்கு இப்பொழுது தான் இருக்கிறது. எல்லாவற்றையும் விளக்கமாக சொல்கிறேன்.
தமிழில் 216 எழுத்துகளின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து கோபுரத்தின் உயரத்தை 216 அடி வரை எழுப்பி கட்டியிருக்கிறார்கள். வலது பக்கம் அமைந்திருக்கும் படிக்கட்டு வழியாக மேலே ஏறி மாடிப்பகுதிக்கு வரும்பொழுது 40 அடி உயரத்தில் சன்னதியில் இருக்கும் சிவலிங்கத்தின் உச்சியை சுற்றிலும் ஒரு மாட்டு வண்டி செல்லும் அகலத்திற்கு பாதை அமைந்திருக்கிறது. அந்த பாதையில் நின்று குனிந்தவாறு அன்றைய காலத்தில் ராஜராஜச்சோழனும் அவரது துணைவியாரும் பூஜைக்கான பூக்களை சிவலிங்கத்தின் உச்சியின் மீது உதிர்த்து வணங்கி இருக்கிறார்கள். கோபுரத்தின் உச்சியை நோக்கி திறந்த பகுதியாக சிவலிங்கத்தின் தலைப்பகுதி இருந்திருக்கிறது. நாயக்கர் காலத்தில் பறவைகள் கோபுரத்தின் உட்புறமாக அமரும் வாய்ப்பில் அதன் எச்சம் சிவலிங்கத்தின் மீது விழுந்திருக்கலாம். அதனை தவிர்க்க நாற்பது அடி உயரத்தில் திறந்திருந்த மையப்பகுதியை காரைப் பூசி அடைத்திருக்கிறார்கள்.
40 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த பாதையின் அகலத்தில் வலது புற கடைசியிலிருந்து 13 அடி அகலத்தினால் ஆன சுவரானது கோபுரத்தின் மையப்பகுதியை நோக்கியவாறு இடது புறம் சாய்வாக மேலெழும்புகிறது. அதேபோல பாதையின் இடது பக்க கடைசியிலிருந்து வலது புறம் சாய்வாக 11 அடி அகல சுவர் மேலெழும்பிய பின், இரு சுவரும் சந்திக்கும் இடத்தில் ஒன்றாக இணைந்து 15 அடி அகலத்தில் ஒரே சுவராக வலது பக்கம் கோபுரத்தை நோக்கி சாய்வாக மேலெழும்புகிறது. இதே போல கோபுரத்தின் இடது பக்கமும் கோபுரம் அமைந்திருக்கும் திசையில் சாய்வாக அமைந்து ஒற்றைச் சுவராக மேல் எழும்புகிறது.
இவ்வாறு இருபுறமும் இரட்டைச் சுவர்கள் சந்திக்கும் இடத்திலிருந்து ஒற்றைச் சுவராக, இரு பக்கத்திற்கு ஒன்றாக மேலெழும்பி, கோபுரத்தின் முழு பாரத்தையும் இரு பக்கமும் இரு சுவர்களின் உச்சிகளானது மொத்த கோபுரத்தையும் தாங்கிக் கொள்கின்றன.
இன்னும் எளிமைப்படுத்தி சொல்ல வேண்டுமானால் ஆங்கில எழுத்து “A” வடிவம் கோபுரத்தின் அடி பாகத்தில் இரு பக்கமும் அமைந்து, “A” எழுத்தின் உச்சியில் ” / \ ” இவ்வாறான இரு சுவர்கள் முறையே இடது வலது புறத்தில் மேல் எழும்பி அதன் மீது கோபுரம் அமைக்கப்பட்டு இறுதியில் கோபுரக் கலசம் உயரத்தில் அமைந்து முடிவடைகிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கின்ற இந்த கோபுரத்தில் இருக்கும் கற்கள், ஒன்றுடன் ஒன்று பற்றிக் கொள்வதற்கு சிமெண்டோ சுண்ணாம்போ பயன்படுத்தப்படவில்லை. ஒரு கல்லில் துளையிட்டு மறு கல்லில் பந்து போன்ற அமைப்பை புடைப்பாக செதுக்கி ஒன்றுடன் ஒன்று பொருத்தி இருக்கிறார்கள். மொத்த உயரமான 216 அடியிலிருந்து பாதை அமைந்திருக்கும் உயரமான 40 அடியை கழித்து விட்டால், மீதமிருக்கும் 176 அடியானது கூம்பு வடிவ கோபுரத்தின் உயரமாகும்.
இயந்திரங்கள் இல்லாத ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கற்களை எந்த இடத்தில் அளந்தாலும் ஒரே அளவாகத் தான் இருக்கிறது. நமது தென்னிந்திய கட்டிடக்கலைக்கு மேன்மையான சான்றாக இந்த கோபுரம் அமைந்திருக்கிறது.
கோபுரத்தின் அடிப்பாகத்தைச் சுற்றிலும் சதுர வடிவிலான 108 கற்கள் அடுக்கப்பட்டு அதில் புடைப்பாக பரதநாட்டிய முத்திரையை நான்கு கைகளைக் கொண்ட சிவனின் உருவத்தைக் கொண்டு செதுக்கி இருக்கிறார்கள். 11 அடி நீளத்தில் உட்புறமாக நீண்டிருக்கும் இந்த செவ்வக வடிவக் கற்களானது உருவங்கள் செதுக்கப்படுவதற்கு முன்பே பதிக்கப்பட்டவை. 40 அடி உயரத்தில் கோபுரத்தைச் சுற்றி அமைந்திருக்கும் பாதையின் வழியாக சுற்றி வரும் போது காணும் உயரத்தில் இந்த சிற்பங்கள் அமைந்திருக்கின்றன.
108 கற்களில் 81 கற்கள் வரை தான் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. மற்றவை அப்படியே கரடு முரடாகக் காட்சியளிக்கின்றன. ராஜராஜச்சோழன் தனது மகன் ராஜேந்திர சோழனுக்கு முடிசூட்டி கங்கை கொண்ட சோழபுரத்தில் அரசாட்சி அமைத்த பிறகு, முடிவடையாத இந்த வேலைகள் இத்தோடு நிறுத்தப்பட்டிருக்கலாம். ராஜராஜச்சோழனும் இலங்கை மீது படையெடுக்கச் சென்ற பிறகு மீதமுள்ள சிற்பங்கள் செதுக்கப்படாமல் விடப்பட்டிருக்கலாம். மிகத் திறமையான சிற்பிகள் செதுக்கிய நடனச் சிற்பங்களில் சிலவற்றை மட்டும் உனக்குச் சொல்கிறேன்.
ஆடும் போதே வலது கால் விரலின் கட்டை விரலை பயன்படுத்தி நெற்றியில் திலகமிடும் 50 ஆவது நடனத்திற்கு நல்லாட்டத் திலகம் என்று பெயர். இது கற்பனையான சிற்பமல்ல. ஒரு நடனக் கலைஞர் என்ன செய்தாரோ அதைத்தான் சிற்பமாக வடித்திருக்கிறார்கள்.
கழுத்தை 180 டிகிரி பின்புறமாக திருப்பும் நிலை 61வது சிற்பத்தில் இருக்கிறது. நடனத்தில் எத்தகைய பயிற்சி இருந்தால் இதனைச் செய்ய முடியுமென்பது கற்பனை செய்து பார்த்தால் வியப்பளிக்கும்.
சிவனுக்கும் பார்வதிக்கும் போட்டி நடனமாக 65 ஆவது சிற்பத்தில் கற்பனை செய்து வடிவமைத்திருக்கிறார்கள். சபையில் இருவரும் ஆடிக்கொண்டிருக்கும் பொழுது, சிவனது காதில் அணிந்திருந்த குண்டலமானது கழண்டு கீழே விழுந்து விடுகிறதாம். அப்போது எவருக்கும் தெரியாமல் அந்த குண்டலத்தை சிவன் தனது கையால் தொடாமல் காலால் எடுத்து காதில் அணிகிறார். இதனை கண்டுவிட்ட பார்வதிதேவி இப்படியொரு நடனம் இருக்கிறதோவென நினைத்துக் கொண்டு தனது நடனத்தை நிறுத்தி விடுகிறார். இதன் பிறகு சிவனே வென்றவராகிறார் என்பது போன்ற காட்சியை இந்த சிற்பம் விளக்குகிறது. இவ்வாறான நடனக் கலைகள் நமக்கு வியப்பை அளிக்கின்றன.
உதட்டைப் பார்த்தாலே புன்சிரிப்புடன் இருக்கும் முகம் 76 ஆவது சிற்பத்தில் இருக்கிறது. 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட மோனலிசா ஓவியத்தை உலகறிந்திருக்கும் பொழுது, அதைவிட சிறப்பாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம்மிடம் இவ்வகைச் சிற்பம் இருந்திருக்கிறது என்பது பெருமைக்குரியது.
பெரிய கோபுரத்திற்கு அருகே இருக்கும் பொன் வேய்ந்த கோபுரம் அக்காலத்தில் பொன் தகடுகளால் போர்த்தப்பட்டு இருந்திருக்கிறது. இந்த கோபுரத்தில் கைலாய மலையை ஒத்தவாறு நடுவே மலை அமைந்து, சிவன் பார்வதி முருகன் வள்ளி தெய்வானை விநாயகர் பிரம்மா விஷ்ணு என அனைத்து தெய்வ உருவங்களோடு பூதகணங்களும் காட்சிக் கொடுக்கும்படி அமைக்கப்பட்டு தென் கைலாய மலையென்று இன்றும் மதிக்கப்படுகிறது. அன்றைய காலங்களில் சூரிய ஒளி தங்கத் தகடுகளின் மீது பட்டுத் தெறித்து கைலாய மலை போன்றே தகதகவென மின்னிக் கொண்டு இருந்திருக்கிறது. பிற்காலத்தில் படையெடுத்த மாலிக் கபூர் தங்கத் தகடுகளை கலைத்து தன் நாட்டிற்கு கடத்திச் சென்று விட்டார். அவை இருந்ததற்கான அடையாளம் மட்டுமே தற்பொழுது கல்வெட்டுகளில் எழுதப்பட்டிருக்கிறது.
இந்த சிறப்புகளை எல்லாம் அடிப்படையாகக் கொண்டு கட்டிடக்கலைக்கு மிகச்சிறந்த சான்றாக தஞ்சைப் பெரிய கோவில் கோபுரம் அமைந்திருக்கிறது. தென்னிந்திய சிற்பக் கலைக்கு மிகச் சிறந்த சான்றாக தாராசுரத்தில் அமைந்திருக்கும் ஐராவதேஸ்வரர் கோவிலைச் சொல்லலாம்.
இப்போது சொல் பார்க்கலாம்?! இவ்வளவு சிறப்பான நுணுக்கங்களுடன் நேர்த்தியாக கட்டிய இந்தக் கோபுரம் சாய்ந்து விடுமா நிலன்?
நிலன்: அப்பா! நான் விளையாடுவதற்காக பில்டிங் பிளாக்ஸ் வாங்கிக் கொடுத்தீர்கள் அல்லவா? அதில் அப்படித்தான் துளையும் புடைப்பும் ஒன்றோடு ஒன்று பொருந்துவது போல அமைந்திருக்கிறது. கற்களால் ஆன தஞ்சாவூர் கோபுரத்தைக் கட்டும் போதும் கற்களை ஒன்றோடு ஒன்று இவ்வாறு தான் பிணைத்து இருக்கிறார்கள் என்பது எனக்குப் புரிந்து விட்டது. பில்டிங் பிளாக்ஸ் வைத்து புயலே வீசினாலும் விழாத கோவிலை எழுப்பி உங்களிடம் காண்பிக்கிறேன்.
கௌதம் சிரித்துக் கொண்டார். இவ்வாறாக அவர்கள் யாவருக்கும் அன்றைய பொழுது அமைந்தது.