“நான் அதிகமாப் பேசறேனா? நீங்க நிறுத்தச் சொன்னா, நிறுத்தறேன்” என்றாள் ஆனி.

“நீ விரும்புகிற வரைக்கும் பேசு; எனக்குப் பிரச்சினை இல்லை” என்றார் மாத்யூ.

“ரொம்ப மகிழ்ச்சி. உங்களுக்கும், எனக்கும் நல்லா ஒத்துப் போகும்னு தோணுது. ஒருத்தங்க பேச விரும்பும் போது, பேச விடுறது எவ்வளவு பெரிய நிம்மதி!  நான் பேசும் போது, பெரிய பெரிய வார்த்தைகளைப் பயன்படுத்துவேன். அதைக் கேட்டுட்டு, எல்லாரும் சிரிப்பாங்க. உங்க  கிட்ட பெரிய ஐடியா இருக்கும் போது, அதைச் சொல்ல பெரிய வார்த்தைகளைத் தானே, பயன்படுத்துவீங்க? இல்லையா?” என்றாள் ஆனி.

“நீ சொல்றது, உண்மை தான்” என்றார் மாத்யூ.

“கிரீன் கேபிள்ஸ் வீட்டுப் பக்கம், ஓடை எதுவும் இருக்கா? நான் அதை திருமதி ஸ்பென்சர் கிட்ட, கேட்க மறந்து விட்டேன்” என்றாள் ஆனி

“இருக்கு. வீட்டுக்கு கீழே, வலது பக்கம் இருக்கு.”

“ஒரு ஓடைக்கு அருகில் வசிக்க வேண்டும் என்பது, என் கனவுகள்ல ஒன்னு.  கனவு அடிக்கடி பலிக்காது. அது பலிச்சா, நல்லது தானே? ஆனா என்னால ரொம்ப மகிழ்ச்சியா இருக்க முடியவில்லை; இது என்ன நிறம் சொல்லுங்க?” என்று கேட்டுவிட்டுத் தன் சடையைத் தூக்கி, மாத்யூவிடம் காட்டினாள் ஆனி.

transalation story
படம்: அப்புசிவா

“சிவப்பு” என்றார் மாத்யூ.

அவள் ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டு, சடையைக் கீழே விட்டாள்.

“ஆமாம். இது சிவப்பு தான்.  நான் ஏன் ரொம்ப மகிழ்ச்சியா இல்லேன்னு இப்ப உங்களுக்குத் தெரியுதா? சிவப்பு முடி இருக்குற யாருமே, மகிழ்ச்சியா இருக்க முடியாது. அண்டங்காக்கா றெக்கை மாதிரி, என் முடி கருப்பா இருந்தா, எவ்வளவு நல்லா இருக்கும்?” என்றாள் ஆனி.

அதற்குப் பிறகு, ஆனி எதுவும் பேசாமல், மெளனமாகவே வந்தாள்.

அந்த மெளனத்தைக் கலைக்கும் விதமாக, “நீ ரொம்ப களைப்பா இருக்கிறேன்னு நினைக்கிறேன்; பசியும் வந்திருக்கும். வீட்டுக்குப் போக இன்னும் ஒரு மைல் தூரம் தான் இருக்கு” என்றார் மாத்யூ.

அவர்கள் வண்டி ஆப்பிள் மரங்கள் அடர்ந்து இருந்த பகுதியைக் கடந்து சென்றது. மரங்கள் முழுக்க, வெள்ளைப் பூக்கள், நிறைந்து இருந்தன.

“இந்த இடத்துக்குப் பெயர் என்ன?” என்று கேட்டாள் ஆனி.    

“அவென்யூ என்று சொல்வோம்” என்றார் மாத்யூ.

“அவென்யூ என்ற பெயர் பொருத்தமா இல்லை. நான் இதை ‘மகிழ்ச்சிக்கான வெள்ளை வழி’ என்று அழைப்பேன்; எனக்கு ஒரு இடத்தோட பேரோ, ஆளுங்களோட பேரோ பிடிக்கலேன்னா, நானே  பொருத்தமான பேராக யோசிச்சிப் புதுசா வைச்சிடுவேன். வீட்டுக்குப் போக இன்னும் ஒரு மைல் தூரம் தான், இருக்குதுன்னு நினைக்கும் போது, மகிழ்ச்சியா இருக்கு. எனக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதல், எனக்குன்னு ஒரு வீடு இருந்தது இல்ல. அதை நினைச்சா, மகிழ்ச்சியா இருக்கு” என்றாள் ஆனி.

பிறகு அவர்கள் ஒரு மலையைக் கடந்து சென்றார்கள். அதன் அடியில் ஒரு குளம் இருந்தது. தண்ணீர் பளபளவென்று மின்னியது.

“மிஸ்டர் பேரி என்பவரோட வீடு, இந்தக் குளத்துக்குப் பக்கத்தில் இருக்கு; அதனால இதை, ‘பேரி’ஸ் குளம்’ என்று சொல்வோம்” என்றார் மாத்யூ.

“பேரி’ஸ் குளம்?” என்று சொல்லிவிட்டு, மூக்கைச் சுருக்கினாள் ஆனி.

“ஹூகும். நான் இதைத் ‘தண்ணீர் மின்னும் ஏரி’ என்று அழைப்பேன்!” என்றாள் ஆனி.

“மிஸ்டர் பேரிக்கு, என் வயசுல, சின்னப் பொண்ணுங்க இருக்காங்களா?”

“அவருக்கு 11 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். அவள் பெயர் டயானா” என்றார் மாத்யூ.

“ஓ! என்ன ஒரு அழகான பெயர்” என்றாள் ஆனி.

“நாம இப்ப கிரீன் கேபிள்ஸ் வீட்டுக்கு அருகில், வந்து விட்டோம்” என்றார் மாத்யூ.

“நீங்க சொல்லாதீங்க. நானே வீட்டைக் கண்டுபிடிக்கிறேன்” என்றாள் ஆனி.

சுற்றிலும் பூக்கள் நிறைந்த மரங்கள் இருந்த வீட்டைக் காட்டி, “இந்த வீடு தானே?” என்று மாத்யூவிடம் கேட்டாள் ஆனி.

“திருமதி ஸ்பென்சர் இந்த வீட்டைப் பற்றி, ஏற்கெனவே உன்னிடம் சொல்லி இருக்கிறார். அதனால் நீ சரியாக யூகித்து விட்டாய்” என்றார் மாத்யூ.

“இல்லை. அவர் எதுவும் சொல்லவில்லை. வீடு எப்படி இருக்கும் என்பதைப் பற்றி, எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. ஆனால் இந்த வீட்டைப் பார்த்தவுடன், இது தான் நம் இல்லம் என்று என் உள்ளுணர்வு கூறியது. நான் கனவு காண்கிறேனோ என்று கூட நினைத்தேன். கனவா நனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள, இன்று என் கையில் பலமுறை கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். ஆனால் இது கனவு இல்லை; வீடு வந்தது உண்மை என்று தெரிந்தவுடன் தான், கிள்ளுவதை நிறுத்தினேன்” என்றாள் ஆனி.

மாத்யூவுக்குத் தர்மசங்கடமாக இருந்தது. ‘இந்தக் குட்டி பெண்ணிடம் இந்த வீடு உனக்கானது இல்லை என்று மரிலா தான் சொல்லப் போகிறார்; நல்லவேளையாக நான் இல்லை’ என்று நினைத்து நிம்மதி அடைந்தார்.  

பேரானந்தம் காரணமாக, அவள் கண்களில் மின்னிய ஒளி வெள்ளத்தைப் பார்த்தார் மாத்யூ. ஒரு அப்பாவி ஆட்டுக்குட்டியையோ, ஒரு கன்றுகுட்டியையோ அவர் கொன்ற போது, ஏற்பட்ட சங்கடமான எண்ணம் அப்போது தோன்றி, அவரைத் தொந்திரவு செய்தது.  

மாத்யூ வண்டியை நிறுத்தி, ஆனியைக் கீழே இறக்கிவிட்டார். அவளது பெட்டியைத் தூக்கிக் கொண்டு, அவரைப் பின் தொடர்ந்தாள் ஆனி.

மாத்யூ கதவைத் திறந்தவுடன், மரிலா எதிரே வந்தார். அழுக்கு உடையுடன், சிவப்பு முடியுடன் நின்ற, ஆனியைப் பார்த்துத் திகைத்து நின்றுவிட்டார்.

“மாத்யூ! இவள் யார்? பையன் எங்கே?” என்று கேட்டார் மரிலா.

“அங்கே பையன் யாரும் இல்லை. இந்தப் பொண்ணு தான், இருந்தாள்” என்றார் மாத்யூ.

“பையன் இல்லையா? பையன் இருந்திருக்க வேண்டுமே? நாம் திருமதி ஸ்பென்சர் கிட்ட, பையனை அழைச்சிட்டு வரத் தானே, சொல்லி இருந்தோம்?”

“அவங்க பையனை அழைத்து வரவில்லை. அவங்க தான், இந்தப் பெண்ணை அழைச்சிட்டு வந்து இருக்காங்க. நான் ஸ்டேஷன் மாஸ்டர் கிட்ட கேட்டேன். எப்படியோ  யார் மேல, தப்பு இருந்தாலும், இவளை அங்கேயே விட்டுவிட்டு வர முடியாது.  அதனால் நான் இவளை, வீட்டுக்கு அழைச்சிட்டு வர வேண்டியதாக ஆகி விட்டது.”

இருவருக்கும் நடந்த உரையாடலின் போது, ஆனி இருவரையும் மாறி மாறி மெளனமாகப் பார்த்தாள். அவர்கள் பேசியதைப் புரிந்து கொண்ட ஆனி, தன் கையில் இருந்த பெட்டியைக் கீழே போட்டாள்.

“உங்களுக்கு என்னைப் பிடிக்கலை; நான் பையனா இல்லாததால உங்களுக்கு என்னைப் பிடிக்கலை; நான் இதை எதிர்பார்த்து வந்து இருக்கணும். யாருக்கும் எப்பவுமே, என்னைப் பிடிக்காது. நான் என்ன செய்வேன்?” என்று சொல்லிவிட்டுச் சத்தம் போட்டு அழ ஆரம்பித்தாள் ஆனி.

மேசைக்குப் பக்கத்தில் இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து. கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு, தொடர்ந்து அழுதாள் ஆனி. மரிலாவும், மாத்யூவும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். என்ன சொல்வது என்று, இருவருக்கும் தெரியவில்லை.

“சரி. இதுக்காக நீ அழனும்னு, அவசியம் இல்ல” என்றார் மரிலா.

ஆனி சட்டென்று தலையைத் தூக்கி, “அவசியம் இருக்கு” என்றாள். கண்ணீரில் அவள் முகம் முழுக்க, நனைந்து இருந்தது. உதடுகள் நடுங்கின.

“நீங்க ஆதரவற்றோர் இல்லத்துல, இருந்து இருக்கணும்; ஒரு வீட்டுக்குப் போகிறோம்னு நினைச்சி வந்த இடத்துல, பையன் இல்லேங்கிற காரணத்துக்காக, வேணாம்னு சொன்னா, நீங்களும் அழுவீங்க! எனக்கு இது வரை நடந்ததுலேயே, இது தான் ரொம்ப துயரமான சம்பவம்” என்றாள் ஆனி.

“சரி. இதுக்கு மேலேயும் அழாதே. இன்னிக்கு ராத்திரி, உன்னை எங்கேயும் வெளியில் அனுப்ப மாட்டோம். இது சம்பந்தமாக, நாங்க மேற்கொண்டு விசாரிக்கிற வரைக்கும், எங்க கூட நீ தங்கலாம். உன் பேர் என்ன?” என்றார் மரிலா.

அவள் ஒரு நிமிடம் தயங்கினாள்.

“நீங்க என்னைக் கார்டிலியான்னு கூப்பிடுறீங்களா?” ஆவலுடன் கேட்டாள் ஆனி

“கார்டிலியாவா? இது உன்னோட பேரா?”

“இல்லை அது என் பேர் இல்ல. ஆனா கார்டிலியான்னு கூப்பிட்டா, எனக்கு ரொம்ப பிடிக்கும். அது ரொம்ப நல்ல பேரா இருக்கும்”

“நீ என்ன சொல்றேன்னு, எனக்குப் புரியல. கார்டிலியா உன் பேரு இல்லேன்னா, உன் உண்மையான பேரு என்ன?”

“ஆனி ஷெர்லி” என்றாள் ஆனி.

“திருமதி ஸ்பென்சர் கிட்ட, நாங்க பையனைத் தான் அனுப்பச் சொன்னோம். இந்தத் தவறு எப்படி நடந்துச்சி? அந்த இல்லத்துல பையன்களே இல்லியா?” மரிலா கேட்டார்.

“நிறைய பேரு இருக்காங்க. ஆனா திருமதி ஸ்பென்சர், நீங்க பதினொரு வயசுல, ஒரு பொண்ணு கேட்டதாச் சொன்னாங்க. அப்ப அந்த இல்லத்தோட தலைவி, என்னை அனுப்புறதாச் சொன்னாங்க. அதைக் கேட்டு விட்டு, நான் எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா? மகிழ்ச்சியில அந்த ராத்திரி முழுக்க, என்னால தூங்கவே முடியலை”.

ஆனி மரிலாவிடம் சொல்லிவிட்டு, மாத்யூ பக்கம் திரும்பினாள்.

“நீங்க ஏன் ஸ்டேஷன்லேயே என்கிட்ட சொல்லவில்லை? அங்கேயே ஏன் விட்டு விட்டு வர வில்லை? இந்த வீட்டுக்கு வர்ற வழியில, அந்த மின்னும் ஏரி, அந்த வெள்ளை வழி, அதெல்லாம் நான் பார்க்காம இருந்திருந்தா, எனக்கு இவ்வளவு கஷ்டமாக இருக்காது” என்றாள் ஆனி.

“திருமதி ஸ்பென்சர் உன்னோட வேற யாரையாவது, அழைச்சிட்டு வந்தாங்களா?” மரிலா கேட்டார்.

“அவங்க லில்லியை அழைச்சிட்டுப் போனாங்க. அவளுக்கு அஞ்சு வயசு. ரொம்ப அழகாக இருப்பாள். பிரெளன் கலர்ல முடி. அந்த மாதிரி, நான் அழகா இருந்திருந்தால், நீங்க என்னை இங்க வைச்சுப்பீங்களா?”

“”ஹூகூம். பண்ணையில வேலை செய்ய, மாத்யூவுக்கு பையன் தான் தேவை. ஒரு பொண்ணு, எங்களுக்கு உதவ முடியாது.”

அதற்குப் பிறகு மூவரும், இரவு உணவைச் சாப்பிட்டார்கள் ஆனால் ஆனியால் சரியாகச் சாப்பிட முடியவில்லை.

“நீ சரியாகச் சாப்பிடவில்லை” என்றார் மரிலா

“என்னால முடிய வில்லை. நான் ரொம்ப சோகத்துல இருக்கேன். துன்பத்துல இருக்கும் போது, உங்களால சாப்பிட முடியுமா?”

“நான் அந்த மாதிரி, சோகத்துல இருந்தது இல்ல. அதனால என்னால பதில் சொல்ல முடியவில்லை” என்றார் மரிலா.

பிறகு ஆனிக்குப் படுக்கை தயார் செய்து, தூங்க அனுப்பினார் மரிலா.

ஆனி படுக்கப் போன பிறகு, “நாளைக்கு ஸ்பென்சரைப் போய்ப் பார்க்க வேண்டும். இந்தப் பொண்ணை அந்த ஆதரவற்றோர் இல்லத்துக்கே திருப்பி அனுப்ப வேண்டும்” என்றார் மரிலா, மாத்யூவிடம்.

“இங்கே தங்க போறோம்னு, நினைச்சிட்டு வந்த சின்னப் பொண்ணைத் திருப்பி அனுப்புறது, ரொம்ப பாவம் மரிலா” என்றார் மாத்யூ.

மாத்யூவின் பதிலைக் கேட்டு, மரிலா திகைத்தார்.

“இவளை இங்கேயே வைத்துக் கொள்ளலாம் என்று சொல்றீங்களா? இவளால நமக்கு என்ன பயன் கிடைக்கப் போவுது?”

“நாம அவளுக்கு ஏதாவது, நல்லது செய்யலாம் அல்லவா?”

“இந்தக் குழந்தை உங்களை நல்லா மயக்கி விட்டாள்னு நினைக்கிறேன்.  அதனால தான், நீங்க இவளை இங்கேயே வைச்சிக்கலாம் என்று பிரியப்படுறீங்க”

“உண்மையிலேயே இவள் சுவாரசியமான குட்டிப் பொண்ணு மரிலா. ரயில்வே ஸ்டேஷன்லேர்ந்து, இவள் பேசிட்டு வந்ததை, நீ கேட்டிருக்கணும்” என்றார் மாத்யூ.

“இவள் வேகமாகப் பேசறாள். நிறையா பேசற வாயாடிக் குழந்தைகளை எனக்குப் பிடிக்காது. ஆதரவற்றோர் இல்லத்துல இருந்த பொண்ணு, என்க்கு வேணாம். அவ எங்கேர்ந்து வந்தாளோ, அங்கேயே அனுப்பிடணும்”

“எனக்கு உதவிக்கு ஒரு பிரெஞ்சு பையனை வைச்சுக்கிறேன். இவள் உனக்கு ஒரு கம்பெனியா இருக்கட்டும்”

“எனக்கு கம்பெனியே தேவையில்லை. நான் இவளை வைச்சுக்கப் போறது இல்லை”.

“நீ முடிவு பண்ணினால், சரி” என்று சொல்லிவிட்டு, மாத்யூ எழுந்து தூங்கச் சென்றார்.

வேலைகளை முடித்துவிட்டு, மரிலாவும் தூங்கச் சென்றார். மாடியில் கிழக்கு அறையில் படுத்து இருந்த ஆனி, அழுது கொண்டே தூங்கி விட்டாள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments