கென்யா நாட்டுப்புறக்கதை

ஒரு ஊரில் ஒரு நெருப்புக் கோழி இருந்தது. அது இரண்டு முட்டையிட்டு அடைகாத்தது. அந்த முட்டைகள் பொரிந்து, குஞ்சுகள் வெளிவந்தன.

ஒரு நாள் அம்மா கோழி, குஞ்சுகளுக்கு இரை தேட, வெளியே சென்றது. அது திரும்பி வந்த போது, குஞ்சுகளைக் காணோம். எங்கெல்லாமோ தேடிப் பார்த்தது. அவற்றைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

குஞ்சுகளின் கால் விரல் பதிந்து இருந்த இடத்தில், சிங்கத்தின் கால் தடம் தெரிந்தது. அதைப் பார்த்தவுடன், அம்மா கோழிக்குப் பதற்றமாகி விட்டது. 

அதற்குச் சிங்கத்தைத் தேடிச் செல்ல பயமாக இருந்தது. ஆனாலும் எப்படியாவது குஞ்சுகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தது.

அதனால் சிங்கத்தின் கால் தடம் வழியாகத் தொடர்ந்து சென்றது. அந்தப் பாதை காடு வழியாகச் சென்றது. முடிவில் ஒரு சிங்கத்தின் குகையில் கொண்டு விட்டது.

அங்கே ஒரு பெண் சிங்கம் நின்றது. அதனிடம் நெருப்புக் கோழியின் இரண்டு குஞ்சுகளும் இருந்தன.

“என் குஞ்சுகளை நீ வைச்சிக்கிட்டு, என்ன பண்றே? எங்கிட்ட திருப்பிக் கொடு” என்று அம்மா கோழி கத்தியது.

“என்னது? உன் குஞ்சுகளா? பார்த்தாலே தெரியலையா? இது ரெண்டும் என்னோட குட்டிங்க” என்று சிங்கம் கர்ஜித்தது.

“என்னது? உன் குட்டிகளா? ரெண்டும் நெருப்புக் கோழியோட குஞ்சுங்க. நான் நெருப்புக்கோழி. நீ சிங்கம்” என்றது கோழி.

“அப்படியா?” என்று உறுமியது சிங்கம்.

“ஆமாம்” என்றது கோழி.

“அப்படீன்னா நீ சொல்றதை ஒத்துக்கிற, ஒரு விலங்கைக் கூட்டி வா. உனக்குச் சவால் விடுறேன். எந்த விலங்காவது என் கண்ணை நேராப் பார்த்து, இதுங்க என் குட்டி இல்லேன்னு சொல்லட்டும். அப்ப உனக்குத் தாரேன்” என்றது. சொல்லிவிட்டு எழுந்து நின்று, பயங்கரமாகக் கர்ஜித்தது,

அம்மா கோழி எல்லா விலங்குகளிடமும் போய்த் தனக்கு நடந்த அநியாயத்தைச் சொன்னது. இதைப் பற்றிக் கேட்க, ஒரு கூட்டத்துக்கு வருமாறு, கூப்பிட்டது.

இதைக் கேட்ட கீரிப்பிள்ளை நீண்ட நேரம் யோசித்தது. அதற்கு ஒரு ஐடியா வந்தது. எறும்பு புற்றுக்கு அடியில், ஒரு குழி தோண்டுமாறு, அது கோழியிடம் சொன்னது. அதில் இருந்து வெளியேற, அடியில் ஒரு வழி வைக்குமாறும் சொன்னது.

கோழி கீரிப்பிள்ளை சொன்னதைச் செய்தது. பிறகு எறும்பு புற்றுக்குப் பக்கத்தில் ஒரு கூட்டம் கூட்டியது. சிங்கம் உட்பட, எல்லா விலங்குகளும் அங்கே வந்தன.

அவை சிங்கம் குஞ்சுகளைப் பிடித்து வைத்து இருப்பதைப் பார்த்தன. “இவை நெருப்புக் கோழியோட குஞ்சுகள்” என்று சிங்கத்தின் கண்ணைப் பார்த்துச் சொல்லுமாறு, கோழி வரிக்குதிரையிடம் கெஞ்சியது. பிறகு மானிடம் கேட்டது. இப்படியே வரிசையாக, ஒவ்வொரு விலங்கிடமும் கேட்டது.

ஆனால் எதுவுமே அதற்கு உதவ முன்வரவில்லை. எல்லாமே “இவை சிங்கத்தின் குட்டிகள்” என்று கீழே தரையைப் பார்த்துக் கொண்டு முணுமுணுத்தன. அடுத்துக் கீரிப்பிள்ளையின் முறை வந்தது.

“முடி இருக்கிற அம்மாவுக்கு, இறகு இருக்கிற குட்டிகளை எங்கேயாவது பார்த்து இருக்கீங்களா? சொல்றதை யோசிச்சிச் சொல்லுங்க. அம்மா சிங்கத்துக்கு முடி இருக்கு; இந்தக் குஞ்சுகளுக்கு இறகு இருக்கு; இது ரெண்டும், நெருப்புக்கோழியோட குஞ்சுங்க தான்” என்றது கீரிப்பிள்ளை.

உடனே சிங்கம் கீரிப்பிள்ளை மேல், பாய்வதற்குத் தயாரானது. ஆனால் அதற்குள் கீரிப்பிள்ளை எறும்புப் புற்றுக்கு அடியில் இருந்த குழியில் குதித்தது.  அதன் அடியில் இருந்த பாதை வழியாக வெளியேறி, வேறு பக்கம் ஓடிவிட்டது.

கீரிப் பிள்ளையைச் சிங்கம் துரத்த ஆரம்பித்தவுடன், இரண்டு குஞ்சுகளும் அம்மா கோழியிடம் ஓடி வந்துவிட்டன. எல்லா விலங்குகளும் முன் எச்சரிக்கையுடன், அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டன.

கீரிப்பிள்ளை குதித்த குழியில் இருந்து மேலே வரும் என்று சிங்கம் நினைத்தது.

அதனால் நீண்டநேரம் சிங்கம் அதன் வரவை எதிர்பார்த்து, அங்கேயே நின்று ஏமாந்தது.

What’s your Reaction?
+1
1
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments