முன்பு ஒரு காலத்தில், ஒரு கழுதை இருந்தது. அதற்கு வயதாகி விட்டதால், வேலை செய்ய முடியவில்லை. ‘இனிமேலும் அந்தக் கழுதையை வைத்திருப்பது வீண் செலவு’ என்று அதன் எஜமானர் நினைத்தார்.

எஜமானர் தன்னை ஒழித்துக் கட்டப் போகிறார் என்று கழுதைக்குத் தெரிந்து விட்டது. எனவே கழுதை, அந்த வீட்டிலிருந்து கிளம்பிவிட்டது. நகரத்துக்குச் செல்லும் சாலையில், அது நடக்கத் துவங்கியது. ‘நான் நகரத்துக்குப் போய், ஒரு இசைக் கலைஞனாக வாழ்வேன்’ என்று நினைத்தது.

கழுதை கொஞ்ச தூரம் நடந்தவுடன், சாலையில் ஒரு நாய் படுத்து இருந்ததைப் பார்த்தது. நீண்ட தூரம் ஓடி வந்ததைப் போல், அதற்கு மூச்சு வாங்கியது.

“ஏன் இப்பிடி உனக்கு மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்குது நண்பனே?” என்று கழுதை நாயிடம் கேட்டது.

“எனக்கு வயசாயிடுச்சி. நாளாக ஆக, பலவீனம் அதிகமாவுது. என்னோட முதலாளி என்னைக் கொல்லப் பார்த்தார். அதனால அங்கேர்ந்து ஓடி வந்துட்டேன். ஆனா இனிமே சாப்பாட்டுக்கு, என்ன பண்றதுன்னு தெரியலை” என்றது நாய்.

“கவலைப்படாதே! நான் பக்கத்து நகரத்துக்குப் போறேன்; அங்க போய் இசைக் கலைஞனா வாழப் போறேன்; எங்கூட வா; நீயும் இசைக் கலைஞனா, வேலை செய்யலாம்; நான் புல்லாங்குழல் வாசிக்கிறேன்; நீ மிருதங்கம் வாசி” என்றது கழுதை.

அதற்கு நாய் ஒத்துக் கொண்டது. இரண்டும் சேர்ந்து நடந்தன. அவை கொஞ்ச தூரம் தான் போயிருக்கும். அங்கே அழுது கொண்டு, ஒரு பூனை உட்கார்ந்து இருந்தது.

“ஏன் அழுவுற? உனக்கு என்ன பிரச்சினை?”என்று கழுதை கேட்டது.

four friends
படம்: அப்புசிவா

“என் உயிருக்கு ஆபத்து இருக்கும் போது, நான் எப்பிடி மகிழ்ச்சியா இருக்க முடியும்? எனக்கு வயசாயிடுச்சி. என் பல்லெல்லாம் ஆட்டம் கண்டுடுச்சி. இப்பல்லாம் சுண்டெலியைத் துரத்திப் பிடிக்கிறதை விட, அடுப்பு மேல படுத்துத் தூங்கத் தான் புடிச்சிருக்கு. எஜமானி அம்மா என்னைத் தண்ணிக்குள்ளே அமுக்கிக் கொல்லப் பார்த்தாங்க; அதனால அங்கேர்ந்து தப்பிச்சி ஓடி வந்துட்டேன்; ஆனா இப்ப, எங்க போறதுன்னு தெரியலை” என்றது பூனை.

“எங்க கூட வா. நகரத்துல போய், இராத்திரி நேரத்துல, நீ பாட்டுப் பாடலாம்” என்றது கழுதை.

பூனைக்கு அது நல்ல யோசனையாகத் தோன்றியது. எனவே கழுதையுடன் சேர்ந்து போக முடிவு செய்தது. மூன்றும் சேர்ந்து நடந்தன.

வழியில் ஒரு விவசாய பண்ணை வந்தது. அதன் வாசல் கதவில், ஒரு சேவல் உட்கார்ந்து இருந்தது. அது தன் சக்தி முழுவதையும் கூட்டிக் ‘கொக்கரக்கோ’ என்று சத்தமாகக் கூவியது.

“என் மண்டையைத் துளைச்சிக்கிட்டு, உன் கொக்கரக்கோ சத்தம், உள்ளே நுழையுது; உனக்கு என்ன பிரச்சினை?” என்று கழுதை கேட்டது.

“வர்ற ஞாயித்துக் கிழமை என்னை வளர்க்கிறவங்க வீட்டுக்கு, விருந்தாடி வர்றாங்களாம்; அவங்களுக்கு என்னைச் சூப் வைச்சிக் கொடுக்கப் போறாங்களாம்; அதுக்காக இன்னிக்குச் சாயந்திரம், என்னைக் கொல்லப் போறாங்க; அதனால தான், கடைசி தடவையா, என்னால முடிஞ்ச வரைக்கும் சத்தமாக் ‘கொக்கரக்கோ’ன்னு கூவினேன்” என்றது சேவல்.

“சிவப்புக் கொண்டை சேவலே! நீ எங்க கூட வந்துடுறது நல்லது; நாங்க பக்கத்து நகரத்துக்குப் போய்க்கிட்டு இருக்கோம்; இங்க இருந்து, சாகிறதை விட, அங்க போறது நல்லது தானே? உனக்கு நல்ல குரல் வளம் இருக்கு; நாம எல்லாரும் சேர்ந்து இசைக் கச்சேரி செஞ்சா, அது ரொம்ப நல்லா இருக்கும்” என்றது கழுதை.

கழுதையின் திட்டத்துக்குச் சேவல் ஒத்துக்கொண்டது. நாலும் சேர்ந்து நடந்தன. ஒரே நாளில் பக்கத்து நகரத்துக்குப் போய்ச் சேர முடியவில்லை. அதனால் அந்த இரவு, ஒரு காட்டில் தங்க முடிவு செய்தன.

ஒரு பெரிய மரத்துக்கு அடியில் கழுதையும், நாயும் படுத்துக் கொண்டன. பூனையும், சேவலும் ஒரு மரத்து மேல் ஏறி, அதன் கிளைகளில் உட்கார்ந்து கொண்டன.

சேவல் பாதுகாப்பாக இருக்க, உச்சிக் கிளையில் போய் உட்கார்ந்தது. அப்போது கொஞ்ச தூரத்தில் இருந்த ஒரு வீட்டில், வெளிச்சம் தெரிவதைச் சேவல் பார்த்தது. மற்ற விலங்குகளிடம், அச்செய்தியைச் சொன்னது.

“அப்படீன்னா நாம அங்க போறது நல்லது. இங்க படுக்கிறது, வசதியா இல்ல” என்றது கழுதை.

‘அங்கே சில எலும்புகளுடன், கொஞ்சம் கறியும் கிடைத்தால் நல்லாயிருக்கும்’ என்று நாய் நினைத்தது.
எனவே நான்கும் எழுந்து நடந்தன. அருகில் வர வர, விளக்கு வெளிச்சம் பிரகாசமாய்த் தெரிந்தது. அது ஒரு திருடர்களின் வீடு.

கழுதை சன்னல் பக்கம் சென்று, உள்ளே எட்டிப் பார்த்தது. “என்ன தெரியுது?” என்று சேவல் கேட்டது.

“ஒரு மேசை முழுக்க சாப்பிடறதுக்கும், குடிக்கிறதுக்கும் தேவையான உணவுப் பண்டம் இருக்கு. மேசையில திருடர்கள் உட்கார்ந்துக்கிட்டு ஜாலியா சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க; நாம அங்க இருந்தா, எவ்வளவு நல்லாயிருக்கும்?” என்றது கழுதை.

நான்கும் தலைகளை ஒன்றாகச் சேர்த்து வைத்து, ‘உள்ளே போய்த் திருடர்களுடன் சேர்ந்து சாப்பிடுவது எப்படி?’ என்று திட்டம் போட்டன.

“வாங்க நண்பர்களே! நாம எல்லாம், இசைக் கலைஞர்கள்; எல்லாம் சேர்ந்து, ராத்திரி சாப்பாட்டுக்குப் பாடுவோம்” என்றது கழுதை.

எல்லாம் ஒரே நேரத்தில் சேர்ந்து, கத்த ஆரம்பித்தன. கழுதை கத்தியது; நாய் ஊளையிட்டது; பூனை மியாவ், மியாவ் என்றது; சேவல் ‘கொக்கரக்கோ’ என்று கூவியது.

பிறகு எல்லாம் சேர்ந்து சன்னல் வழியே, அறைக்குள்ளே திடீரென்று குதித்தன. சன்னல் கண்ணாடி, பயங்கரமாக அதிர்ந்த சத்தம் கேட்டது.

‘பேய் வந்து விட்டது’ என்று திருடர்கள் பயந்து விட்டனர். வீட்டை விட்டு வெளியே வந்து, காட்டுக்குள் ஓடிவிட்டனர். அந்த நான்கும், மேசையில் உட்கார்ந்து, எல்லாவற்றையும் தின்று முடித்தன.
பிறகு அவை தூங்குவதற்கு வசதியான இடமாகத் தேடின. வெளி முற்றத்தில் கொஞ்சம் வைக்கோல் இருந்தது. அதன் மேல் கழுதை படுத்தது.

நாய் பின் கதவோரம் படுத்தது. பூனை அடுப்பின் மேல் படுத்தது. அடுப்பின் சாம்பல் வெதுவெதுப்பான சூட்டில் இருந்தது. சேவல் வீட்டின் உச்சியில் இருந்த உத்தரத்தில் உட்கார்ந்தது.

நீண்ட தூரம் நடந்தமையால், எல்லாமே மிகவும் களைப்பாக இருந்தன. விளக்கை அணைத்து விட்டு, உடனே தூங்கிவிட்டன.

நள்ளிரவுக்குப் பின்னர், தங்கள் வீட்டில் விளக்கு எரியவில்லை என்பதைத் திருடர்கள் தூரத்தில் இருந்து பார்த்தனர்.

“நாம இந்த மாதிரி பயந்துட்டு, ஓடி வந்திருக்கக் கூடாது; நீ வீட்டுக்குப் போய்ப் பார்த்துட்டு வா” என்று திருடர்களின் தலைவன், ஒருவனை அனுப்பினான்.

வீடு சத்தம் எதுவும் இல்லாமல், அமைதியாக இருந்தது. வந்தவன் தைரியமாக வீட்டுக்குள் நுழைந்து, மெழுகுவர்த்தி ஏற்ற அடுப்பங்கரைக்குச் சென்றான். அடுப்பின் மேல் படுத்து இருந்த பூனையின் கண்கள், இருட்டில் நெருப்பு போல மின்னின. அது கரியின் நெருப்பு என்று நினைத்து, அவன் மெழுகுவர்த்தியைப் பூனையின் முகத்துக்கு அருகே நீட்டினான். அது உடனே அவன் மேல் பாய்ந்து, அவன் முகத்தைக் கீறியது.

அவன் மிகவும் பயந்து போய்ப் பின்பக்க கதவு வழியே ஓடினான். அங்குப் படுத்திருந்த நாய், அவன் காலைக் கடித்து விட்டது. அவன் வெளி முற்றத்தில் வைக்கோல் போர் பக்கம் ஓடிய போது, கழுதை பின்னங்காலால் ஓங்கி ஒரு உதை விட்டது. இந்தச் சத்தத்தில் விழித்த சேவல், உத்தரத்தில் இருந்து, ’கொக்கரக்கோ’ என்று கூவியது.

அவன் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ, அவ்வளவு வேகமாகத் திருடர் தலைவனிடம் ஓடினான்.

“என்ன நடந்தது?” என்று தலைவன் விசாரித்தான்.

“அந்த வீட்டுல பயங்கரமான சூன்யக்காரி ஒருத்தி இருக்கா; அவ என் முகத்தில் எச்சிலைத் துப்பி, நகத்தால முகத்தைப் பிறாண்டி விட்டுட்டா. பின் கதவுப்பக்கம் ஒருத்தன் நின்னான். அவன் என் காலுல, ஒரு கத்தியால் குத்திட்டான். வெளி முற்றத்துல ஒரு அரக்கன் படுத்து இருந்தான். அவன் ஒரு கம்பால் என்னை அடிச்சான். வீட்டு உச்சியில ஒரு நீதிபதி உட்கார்ந்து இருந்தாரு. அவரு ‘அந்தப் போக்கிரி பயலை, எங்கிட்ட அழைச்சிட்டு வா’ன்னு சொன்னாரு; நான் பயந்து போய் வேகமாக ஓடி வந்துட்டேன்” என்று சொல்லி முடித்தான்.

அதற்குப் பிறகு, திருடர்களுக்கு அந்த வீட்டுக்குப் போகத் துணிச்சல் ஏற்படவில்லை.

நான்கு நண்பர்களுக்கும், அந்த வீடு வசதியாக இருந்தது. அவை மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தன. அதற்குப் பிறகு, அந்த நான்கு நண்பர்களும் நகரத்திற்குச் செல்லவேவில்லை; இசைக் கலைஞர்களாக மாறவும் இல்லை.

(Town musicians of Bremen) (Brothers Grimms story)
(ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் – ஞா.கலையரசி)

What’s your Reaction?
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments