அது ஒரு அழகான மலைக்கிராமம். குளிர்காலத்தில் மலை முழுக்க பனி மூடிக் கிடக்கும். குளிர்காலம் முடிந்து வசந்த காலம் துவங்கியது. ஓடைகளில் பனி உருகி, நீர் ஓடத் தொடங்கியது.
மரங்களிலும், புதர்களிலும் ஊதா நிற மொட்டுகள் தோன்றின. உயரமான மரக் கிளைகளில், பறவைகள் பாடத் துவங்கின. “ஆஹா! வசந்தம் வந்துவிட்டது; ஜாலியாக இரு” என்று, அவை தங்கள் ஜோடி பறவைகளிடம் பாடின.
ராபின், குயில், நீலப்பறவை போன்ற பறவைகள், வசந்தத்தை வரவேற்றுப் பாடின. பழத்தோட்டங்களில் அவற்றின் இனிமையான பாடல்கள் ஒலித்தன. குட்டிச் சிட்டுக்குருவி மகிழ்ச்சியுடன் “கீச் கீச்” என்று கத்தியது. பசியோடு இருந்த காகங்கள் கூட்டமாகக் கூடின; சத்தமாகக் குரல் எழுப்பி வசந்தத்தை வரவேற்றன.
பறவைகள் மரங்களிலும், புதர்களிலும் கூடு கட்டத் துவங்கின. ஒவ்வொரு மரத்திலும், ஒவ்வொரு கிளையிலும் கூடுகள் தெரியத் துவங்கின. ஒவ்வொரு கூட்டிலும், முட்டைகள் இருந்தன. ஒவ்வொரு முட்டையில் இருந்தும், குஞ்சு வெளிவரப் போவதை நினைத்துப் பறவைகள் மகிழ்ச்சியில் ஒன்றாகச் சேர்ந்து பாடின.
விவசாயிகள் அவர்களுடைய வயல்களை உழுது பயிர் செய்ய ஆரம்பித்தார்கள். மரங்களின் உச்சிகளிலிருந்து, பல பறவைகள் பாடுவதை அவர்கள் கேட்டார்கள்.
“இதுக்கு முன்ன நம்ம ஊர்ல, இவ்ளோ பறவைங்க இல்ல. இதுக்கு நாம ஏதாவது செஞ்சாகணும். இல்லேன்னா, நாம உற்பத்தி பண்ற தானியத்துல பாதியை இதுங்களே தின்னுடும். நம்ம புள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டிய பழங்களையும், இதுங்களே எடுத்துட்டுப் போயிடும்” என்று அவர்கள் சொன்னார்கள்.
எனவே அவர்கள் ஒரு கூட்டம் போட முடிவு செய்தார்கள். அக்கூட்டத்தில் ஊரிலிருந்த எல்லோரும் கலந்து கொள்ள ஏற்பாடு ஆயிற்று. “தொல்லை கொடுக்கும் இந்தப் பறவைகளை என்ன செய்வது?” என்று கூட்டத்தில் பேச முடிவு செய்தார்கள்.
ஊரிலிருந்த பெரிய மனிதர்கள் எல்லோரும் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். தூரத்தில் இருந்தும், பக்கத்தில் இருந்தும் விவசாயிகள் வந்து இருந்தார்கள். அந்த பெரிய ஹால் முழுக்க, கூட்டம் நிரம்பி வழிந்தது.
அந்த ஹாலின் கதவுகளும், ஜன்னல்களும் திறந்து இருந்தன. அவற்றின் வழியாகப் பறவைகளின் இனிமையான பாடல், அவர்கள் காதில் விழுந்தது. ஆனால் அவர்கள் அதைக் கேட்டு, வெறுக்கும் விதமாகத் தலையை ஆட்டினார்கள்.
“இந்தப் பறவைகள் தானியங்களைத் தின்றுவிடுகின்றன; பழங்களைக் கொத்திச் சேதப்படுத்தி விடுகின்றன” என்று அவர்கள் பேசினார்கள். “இந்தப் பறவைங்க போயாகணும்” என்று எல்லோருமே சொன்னார்கள். அங்கே இருந்தவர்களில், பறவைகளின் நண்பர் ஒருவர் கூட இல்லை என்று தோன்றியது.
ஆனால் கடைசியாக ஒருவர் எழுந்து பேசினார். அவர் ஓர் ஆசிரியர். பக்கத்து நகரத்தில் இருந்து வந்திருந்தார். அவரைக் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். கடவுள் படைத்த எல்லாவற்றையும், அவருக்குப் பிடிக்கும்.
அவர் எல்லோரையும் வருத்தமாக ஒரு முறை பார்த்தார். பிறகு பேசத் தொடங்கினார்:-
“நண்பர்களே! ஒரு கைப்பிடி அளவுக்குத் தானியத்தையும், கொஞ்சூண்டு பழங்களையும் இந்தப் பறவைங்க தின்னுதுங்க; அதுக்காகக் கடவுள் நமக்காக படைச்சி அனுப்பியிருக்கிற இதுங்களை, நீங்க துரத்தப் போறீங்களா?
வெளியில கேட்கிற இனிமையான இசையை, நீங்க இழக்கப் போறீங்களா? பறவைங்க இல்லேன்னா மரங்களும், பழத்தோட்டமும் எப்பிடியிருக்கும்னு கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்க. நீங்க பார்க்க போகிற காலியான கூடுகளை நினைச்சிப் பாருங்க. இந்தப் பறவைங்க உங்களைக் கொள்ளையடிக்கிறதா நீங்க நினைக்கிறீங்க. ஆனா இதுங்க உங்களுக்கு ரொம்ப உதவி பண்ணுதுங்க.
பிரகாசமான குட்டியோண்டு கண்ணால, பழங்களை வீணாக்குகிற சின்னப் புழுக்களையும், பூச்சிகளையும் கண்டுபிடிச்சிக் கொல்லுதுங்க. யாரு இதுங்களைப் படைச்சான்னு கொஞ்சம் யோசிங்க. யாரு பறவைங்களுக்குப் பாடக் கத்துக் கொடுத்தது? யாரு கூடு கட்ட சொல்லிக் கொடுத்தது? பறவைங்க போயிடுச்சின்னா, அதுக்காக நீங்க ரொம்ப வருத்தப்படுவீங்க. அதுங்க திரும்பி வரணும்னு, ஒரு நாள் கண்டிப்பா நீங்க ஆசைப்படுவீங்க”
அவர் பேசியதைக் கேட்ட பிறகும், விவசாயிகள் மறுப்பு தெரிவித்தனர். “இந்தப் பறவைங்க போகணும்” என்றனர்.
பிறகு அக்கிராமத்தில் இருந்த அத்தனை பறவைகளும், துரத்தி அடிக்கப்பட்டன. அதற்குப் பிறகு, அங்கே ஒரு சின்னச் சத்தம் கூட கேட்கவில்லை. எல்லாக் கூடுகளும் காலியாகக் கிடந்தன.
அங்கு இருந்த குட்டிக் குழந்தைகள் தங்கள் நண்பர்களை மறுபடியும் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டனர். ஆனால் பறவைகளின் பாட்டுச் சத்தம் இல்லாமல், அந்தக் கிராமமே பயங்கர அமைதியில் மூழ்கியது.
வசந்தம் போய்க் கோடைக் காலம் வந்தது. அதற்கு முன் கோடைக் காலம் அவ்வளவு சூடாக இருந்தது இல்லை. பறவைகள் தின்னும் சின்னப் பூச்சிகளும், புழுக்களும் மரங்களில் இருந்த எல்லா இலைகளையும் தின்று விட்டன. வெறும் குச்சிகளுடன், மரங்கள் மொட்டையாக நின்றன.
மரங்களின் நிழல் இல்லாமல், தெருக்கள் சூடாக இருந்தன. பழங்கள் கீழே விழுந்து, வெயிலில் காய்ந்து கிடந்தன. விவசாயிகள் வயலில் விளைந்த தானியங்களைச் சேகரித்தனர். விளைச்சலில் பாதி, பூச்சிகள் அரித்து வீணாகி விட்டது.
ஒரு நாள் காலையில் அக்கிராமத்தில் ஒரு பெரிய லாரி வந்து நின்றது. அதில் நிறைய பச்சைக் கிளைகள் இருந்தன. அந்தக் கிளைகளுக்கு நடுவே பெரிய கூண்டுகள் இருந்தன. அது முழுக்க பறவைகள்! ஆஹா! அவற்றில் பல விதமான நிறங்களில் ராபின், வானம்பாடி, நீலப்பறவை, குயில் போன்ற பல பறவைகள் இருந்தன.
அந்தக் கூண்டுகளை வண்டியில் இருந்து இறக்கினார்கள். குட்டிக் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் அந்தக் கூண்டுகளைத் திறந்து விட்டார்கள். பறவைகள் பறந்து சென்று வயல்களிலும், பழத்தோட்டங்களிலும் மரங்களிலும் உட்கார்ந்தன. மீண்டும் மீண்டும் இனிமையாகப் பாடின.
“ஆஹா! மறுபடியும் இங்க வந்ததுல, எங்களுக்கு மகிழ்ச்சி” என்று அவை பாடின.
குட்டிக் குழந்தைகளும், அவற்றோடு சேர்ந்து பாடினார்கள்.
விவசாயிகள் “இனிமே இந்தப் பறவைங்க கண்டிப்பா நம்ம ஊர்ல தங்கி இருக்கணும்” என்றனர்.
ஆங்கிலம் – (ஹென்றி வேட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ)
(THE BIRDS OF KILLINGWORTH (Henry Wadsworth Longfellow)
தமிழாக்கம் – ஞா.கலையரசி
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.