டாரத்தி, டோட்டோ, சிங்கம், தகர மனிதன், சோளக்கொல்லை பொம்மை ஆகிய ஐந்து பேரும் பெரிய மந்திரவாதியை சந்திக்க அவருடைய அரண்மனைக்குள் சென்றனர். அந்த நீளமான தர்பார் அறையில் யாருமே இல்லை. “வாருங்கள்!” என்று ஒரு குரல் மட்டும் அவர்களை வரவேற்றது.

“நீங்கள் யார்?” என்று டாரத்தி கேட்க,

“நான் தான் பெரிய மந்திரவாதி!” என்றது அந்தக் குரல்.

“நீங்க சொன்னபடியே நாங்க அந்த கெட்ட சூனியக்காரியை அழிச்சிட்டோம். நீங்க வாக்குக் குடுத்த மாதிரி எங்களுக்குத் தேவையானதை நீங்க தரணும்” என்றாள் டாரத்தி.

 “என்னென்ன தேவை உங்களுக்கு?” என்று மந்திரவாதி கேட்க,

“மறந்துட்டீங்களா? நானும் என்னுடைய டோட்டோவும் கான்சாஸ் நகரத்துக்குப் போகணும். இதோ இந்த தகரமனிதனுக்கு ஒரு இதயம் வேணும். சோளக்கொல்லை பொம்மைக்கு ஒரு மூளை வேணும். சிங்கத்துக்கு தைரியம் தேவை. இதெல்லாம் தர்றதாத் தான் நீங்க வாக்கு கொடுத்திருந்தீங்க” என்றாள்.

இதைக் கேட்டவுடன் பெரிய மந்திரவாதியிடமிருந்து கொஞ்ச நேரத்திற்கு எந்த பதிலும் இல்லை. பின்னர், “நீங்க இவ்வளவு சீக்கிரமா அந்த கெட்ட சூனியக்காரியைக் கொல்லுவீங்கன்னு நான் எதிர்பார்க்கல. எனக்கு யோசிக்கிறதுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் வேணும்” என்றது அந்தக் குரல்.

டாரத்திக்கும் அவளுடைய நண்பர்களுக்கும் கோபம் வந்தது. “ஏற்கனவே நாங்க ரொம்ப நாள் காத்திருந்துட்டோம். இனிமே முடியாது!” என்று கோபமாகச் சொன்னான் தகர மனிதன்.

wizard8
படம்: அப்புசிவா

“ஆமா! நாங்க எத்தனை கஷ்டத்தை அனுபவிச்சிருக்கோம்? இன்னும் நாட்களைத் தள்ளிப் போட்டுக்கிட்டே போறீங்க?” என்றது சோளக்கொல்லை பொம்மை.

 சிங்கம் இதுவரை இல்லாத அளவில் பெரியதாக ஒரு உறுமலை வெளியிட்டது. அந்த உறுமல் சத்தத்தைக் கேட்டு பயந்து போன டோட்டோ அங்கும் இங்குமாக ஓடி சுவற்றின் அருகில் இருந்த ஒரு பெரிய திரையை கீழே தள்ளி விட்டது. அந்தத் திரையின் பின்னால் வழுக்கைத் தலையுடன், முகம் நிறைய சுருக்கங்களுடன் வயதான ஒரு மனிதர் நின்று கொண்டிருந்தார்.

“நீங்க யார்?” என்று கேட்டாள் டாரத்தி.

 “நான் தான் ஆஸ் நகரத்தின் பெரிய மந்திரவாதி” என்றார் அந்த முதியவர்.

 “இல்ல. நான் நம்ப மாட்டேன். மந்திரவாதியை ஒரு பெரிய மிருகமா, நெருப்பினால் ஆன பந்தா, அழகான பொண்ணா இப்படி பல உருவங்கள்ல நாங்க பார்த்திருக்கோமே?” என்று  கேட்க,

“அது எல்லாமே என்னோட நடிப்பு. இதுதான் உண்மையான நான்” என்றார் மந்திரவாதி.

“என்ன சொல்றீங்க?” என்று டாரத்தி கேட்க, “அதுக்கு என்னைப் பத்தின எல்லா உண்மைகளையும் உங்ககிட்ட சொல்லணும்.. இதோ சொல்றேன் கேளுங்க” என்று முதியவர் தன் வாழ்க்கைக் கதையை சொல்லத் தொடங்கினார்.

 “நான் உண்மையில் மந்திரவாதியே கிடையாது. நான் ஒரு ‘குரல் வீசும் கலைஞன்'”

“குரல் வீசும் கலைஞனா? அப்படின்னா?” என்று  டாரத்தி கேட்க,

“குரல் வீசும் கலை* அப்படின்னா ஒரு இடத்தில் இருந்துக்கிட்டே வேற இடத்துல இருந்து நம்மளுடைய குரல் கேட்கிற மாதிரி செய்ய வைக்க முடியும். இப்ப நான் இந்தத் திரைக்குப் பின்னால இருந்துட்டு, மேலே இருந்து சத்தம் வர்ற மாதிரி உங்களை நம்ப வச்சேன் பாத்தீங்களா? அது ஒரு தந்திரம். அதற்குத் தீவிரமான பயிற்சியும் திறமையும் தேவை. அப்படியான குரல் வீசும் கலைஞன் தான் நான். சர்க்கஸ்ல வேலை பார்த்தேன். அங்கே பலூன் செய்து அதில் உயரப் பறந்து சாகசம் செய்கிற கலைஞனாவும் நான் இருந்தேன். ஒரு நாள் நான் செஞ்ச பலூன்ல ஏறி வித்தை காட்டிக்கிட்டு இருக்கும் போது அந்த பலூன் ரொம்ப உயரமாப் பறந்து, வழி தவறி இதோ இந்த நகரத்துக்குள்ள வந்து இறங்கிடுச்சு. மேகத்துக்குள்ள இருந்து நான் பலூன்ல இறங்கி வந்ததைப் பார்த்த இந்த ஊர் மக்கள் என்னைக் கடவுள் அவங்களுக்கு அனுப்பின அரசனா நினைச்சாங்க. என்னை வரவேற்று இந்த அரண்மனையில் தங்க வச்சாங்க. அவங்க மரியாதையையும் அன்பையும் பார்த்து இங்கேயே ராஜாவா தங்கிடலாம்னு முடிவு பண்ணினேன். நான்தான் மரகத நகரம் அப்படின்னு இதுக்கு பேர் வச்சு எல்லாத்தையும் பச்சை வண்ணமா மாத்தினேன்” என்றார் முதியவர்.

“அப்புறம் ஏன் இந்த மந்திரவாதி வேஷம்?” என்று டாரத்தி கேட்க

“இந்தப் பகுதியில கெட்ட சூனியக்காரிகளோட தொல்லை அதிகமா இருக்குன்னு கேள்விப்பட்டேன். எனக்கு அவங்கள நினைச்சா பயம் அவங்களோட சதிக்கு எதிரா என்னால எதுவும் செய்ய முடியாது. அதான் நானே ஒரு பெரிய மந்திரவாதின்னு காட்டிக்க இப்படி என்னுடைய சர்க்கஸ்ல கத்துக்கிட்ட திறமைகளை பயன்படுத்தி எல்லாரையும் நம்ப வச்சேன். உங்களைக் கூட முடியாத காரியங்களை செய்யச் சொல்லி இங்கிருந்து அனுப்பிடலாம்னு தான் பார்த்தேன். ஆனா நீங்க உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளை சிறப்பா முடிச்சிட்டீங்க. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. என்ன மன்னிச்சிடுங்க” என்றார் முதியவர்.

“நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டு நீங்க சொன்ன வேலையை முடிச்சிட்டு வந்திருக்கோம் தெரியுமா? எங்க ஆசையெல்லாம் இன்னிக்கு நிறைவேறிடும்னு ரொம்ப நம்பிக்கையா இருந்தோம்” என்றான் தகர மனிதன்.

 “நீங்க ரொம்ப ரொம்ப மோசமான மனிதர்” என்றது சோளக்கொல்லை பொம்மை.

“நான் நல்ல மனுஷன் தான். ஆனால் மோசமான மந்திரவாதி. அதை வேணா ஒத்துக்குறேன்” என்று சொன்ன முதியவர்,

“இன்னொன்னு சொல்றேன். என்னோட அனுபவத்தால நான் தெரிஞ்சுகிட்ட விஷயங்கள் இது” என்றவர், தகர மனிதனை நோக்கி, “இதயம் இருந்தா மட்டும்தான் மத்தவங்க மேல அன்பு செலுத்த முடியும் என்கிறது இல்லை. நீ இப்பவே நல்ல மனசு உடையவன் தான்” என்றார்.

பின் சோளக்கொல்லை பொம்மையைப் பார்த்து, “மூளை இருந்தா மட்டுமே ஒருத்தன் அறிவாளி ஆகிட முடியாது. அனுபவமும் வாழ்க்கைப் பாடமும் தான் அவனை அறிவாளியாக்கும். அதனால தனியா மூளை தேவையில்லை” என்றார்.

 பின் சிங்கத்தை அழைத்து, “உன்னோட தைரியம் உனக்குள்ள தான் இருக்கு. அதை நீ தான் கண்டுபிடிக்கணும். நல்லா யோசிச்சுப் பாரு. இந்தப் பயணத்துல பல தடவை உன்னை அறியாமல் உன் தைரியத்தை நீ வெளிப்படுத்தி இருக்க” என்றார்.

 அவர்கள் மூவரும், “எங்களை சமாளிக்கிறதுக்காக ஏதோ சொல்றீங்க. இருந்தாலும் எங்களால இதை ஏத்துக்க முடியாது. கண்டிப்பா எங்களுக்கு ஒரு தீர்வு வேணும்” என்றனர்.

“சரி நாளைக்கு வாங்க. உங்க மூணு பேருக்கும் ஏதாவது தீர்வு கொடுக்கிறேன்” என்றவர், டாரத்தியைப் பார்த்து,

“இவங்க மூணு பேரையும் சந்தோஷப் படுத்துற மாதிரி என்னால ஏதாவது கொடுக்க முடியும். ஆனா உன்னை உன்னோட ஊருக்கு அனுப்புறது என்னால இயலாத காரியம்னு  நினைக்கிறேன். சரி யோசிச்சுப் பார்க்கிறேன். நாளைக்கு வாங்க” என்றார் மந்திரவாதி.

(மறுநாள் என்ன நடக்கப் போகிறது? அடுத்த அத்தியாயத்தில் தெரியும்! அத்துடன் கதை நிறைவு பெறும்)

*குரல் வீசும் கலை- ventriloquism

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments