கனடா நாட்டில் அவன்லீ என்ற நகரத்தில், திருமதி ரேச்சல் லின்ட் வசித்தார். அவர் சமையல் அறையில் அமர்ந்து, தையல் வேலை செய்வார். அப்படியே சன்னல் வழியாகத் தெருவில் நடக்கும் நிகழ்வுகளையும், ஒன்று விடாமல் கவனிப்பார். அடுத்தவர் வீட்டுச் செய்திகளைத் தெரிந்து கொள்வதில், அவருக்கு ஆர்வம் அதிகம்.

ஒரு நாள் மதியம் மாத்யூ குத்பர்ட் என்பவர், நன்றாக உடையணிந்தபடி குதிரை வண்டியில் சென்றதை, ரேச்சல் பார்த்தார். அவருக்கு ஆர்வம் அதிகமானது.

‘மாத்யூ கூச்ச சுபாவம் உள்ளவர்; அவ்வளவாக வீட்டை விட்டு, எங்கும் வெளியே செல்ல மாட்டார்; நன்றாக உடுத்தியிருப்பதால், அவர் வெளியூருக்குச் செல்கிறார்; வண்டியை வேகமாக ஓட்டாததால், அவர் டாக்டர் வீட்டுக்குப் போகவில்லை; வேறு ஏதோ முக்கியமான காரணம் இருக்க வேண்டும்; அது என்னவாக இருக்கும்?’ என்று ரேச்சல் யோசித்தார். கிரீன் கேபிள்ஸ் வீட்டுக்குச் சென்று, காரணத்தைத் தெரிந்து கொள்ள முடிவு செய்தார்.

கிரீன் கேபிள்ஸ் பழமையான பெரிய பண்ணை வீடு. பண்ணையைச் சுற்றிலும், நிறைய பழத்தோட்டங்கள் இருந்தன. அந்த வீட்டில் மாத்யூவும் அவர் தங்கை மரிலாவும் வசித்தார்கள். இருவருமே திருமணம் செய்து கொள்ளவில்லை.

ரேச்சல் அந்தப் பண்ணை வீட்டுக்குப் போன போது, மரிலா சமையல் அறையில் அமர்ந்து, துணி தைத்துக் கொண்டு இருந்தார். சாப்பாட்டு மேசையில் மூன்று தட்டுகள் இருந்தன. யாரோ ஒரு விருந்தாளி வீட்டுக்கு வரப் போகிறார் என்று, ரேச்சல் தெரிந்து கொண்டார். மரிலா ரேச்சலை வரவேற்று, நாற்காலியில் உட்காரச் சொன்னார்.

“மாத்யூ என் வீட்டைத் தாண்டி, வேகமா வண்டி ஓட்டிக்கிட்டுப் போனதைப் பார்த்தேன். உங்களுக்கு உடம்பு சரியில்லையோன்னு, எனக்குப் பயமாயிடுச்சி. டாக்டரைக் கூப்பிடத்தான் மாத்யூ போறாரோன்னு நினைச்சி, உங்களைப் பார்க்க வந்தேன்” என்றார் ரேச்சல்.

aani
படம்: அப்புசிவா

அடுத்தவர் வீட்டு விஷயங்களைத் தெரிந்து கொள்வதில், ரேச்சலுக்கு  ஆர்வம் அதிகம் என்பது, மரிலாவுக்குத் தெரிந்தே இருந்தது.

“பக்கத்து நகரத்துல இருக்கிற ஒரு ஆதரவற்றோர் இல்லத்துலேர்ந்து, ஒரு சின்னப் பையனை கூட்டிக்கிட்டு வர, மாத்யூ போயிருக்காரு” என்றார் மரிலா.

அதைக் கேட்டு, ரேச்சலுக்கு ஆச்சரியமாகிவிட்டது. 

“ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தீங்க மரிலா?” என்று, (அது சரியில்லை என்பது போல்) ரேச்சல் கேட்டார்,

“கொஞ்ச நாளாவே அதைப் பத்தி யோசிச்சிக்கிட்டு இருந்தோம். திருமதி அலெக்ஸாண்டர் ஸ்பென்சர் ஆதரவற்றோர் இல்லத்துலேர்ந்து, ஒரு சின்னப் பெண்ணைத் தத்து எடுக்கப் போறதாச் சொன்னாங்க; அவங்களைப் பார்த்து, நாங்களும் ஒரு சின்னப் பையனைத் தத்து எடுக்கலாம்னு முடிவு செஞ்சோம்.  

ஏற்கெனவே மாத்யூவுக்கு 60 வயசு ஆயிடுச்சி. அண்ணனுக்கு இதயத்துல ஒரு சின்னப் பிரச்சினை வேற இருக்கு; வீட்டு வேலைக்கு ஆள் கிடைக்கிறது, ரொம்ப கஷ்டமாயிருக்கு. அதனால அவங்க ஒரு பெண்ணைத் தத்து எடுக்கிறப்ப, அப்படியே எங்களுக்கும் பத்து அல்லது பதினொரு வயசுல, ஒரு பையனை அனுப்பச் சொன்னோம். அந்த வயசுல இருந்தா, வேலையைச் சொல்லிக் கொடுத்துப் பழக்குறது சுலபம்; அதோட அவனைப் பள்ளிக்கூடத்துல சேர்த்துப் படிக்கவும் வைக்கலாம்; இன்னிக்கு ராத்திரி ரயில்ல வர்றதா, திருமதி அலெக்ஸாண்டர் ஸ்பென்சர் கிட்டேயிருந்து தந்தி வந்துச்சி. அந்தப் பையனைக் கூட்டிட்டு வரத்தான், மாத்யூ போயிருக்காரு” என்றார் மரிலா.

“முன்னே பின்னே தெரியாத பையனைத் தத்து எடுக்கிறது, ரொம்ப ஆபத்து;  இந்த மாதிரி தத்து எடுத்த பையன் ஒருத்தன், வீட்டுக்குத் தீ வைச்சுட்டான்னு, போன வாரம் தான் பத்திரிக்கையில படிச்சேன்; இந்த விஷயத்துல, நீங்க என் யோசனையைக் கேட்கிறதா இருந்தா, வேணாம்னு தான் சொல்வேன்” என்றார் ரேச்சல்.

“நீங்க சொன்னதை, நான் மறுக்கலை. ஆனா மாத்யூ ஏற்கெனவே முடிவு பண்ணிட்டாரு; அவரு முடிவு பண்ணிட்டாருன்னா, நான் அதை ஒத்துக்கிறதைத் தவிர, வேற வழியில்லை; எல்லாத்துலேயும் ஆபத்து இருக்கத் தான் செய்யுது. சமயத்துல பெத்த புள்ளைங்க கூடத் தான், தப்பு பண்ணுறாங்க” என்றார் மரிலா.

“எல்லாம் நல்லபடியா இருந்தா சரி. நான் எச்சரிக்கலேன்னு, அதுக்கப்புறம் என்னைக் குத்தம் சொல்லக் கூடாது. இன்னொரு ஊர்ல, ஒரு அனாதை குழந்தை வீட்டைக் கொளுத்தி, கிணத்துத் தண்ணியில விஷத்தைக் கலந்துட்டுதாம். ஆனா அது ஒரு பொண்ணு”. என்றார் ரேச்சல்.

“நாங்க பையனைத் தான் தத்து எடுக்கிறோம். எப்பவுமே நான் பொண்ணை வளர்க்கிறதைப் பத்தி, கனவு கூட காண மாட்டேன். திருமதி அலெக்ஸாண்டர் ஸ்பென்சர் பொண்ணைத் தத்து எடுத்து வளர்க்கப் போறதை நினைச்சா, ஆச்சரியமாயிருக்கு” என்றார் மரிலா. 

அதற்குப் பிறகு, ரேச்சல் வீட்டுக்குக் கிளம்பினார்.

‘பாவம் அந்த அனாதைப் பையன்! அவனை இந்த மாத்யூவும், மரிலாவும் எப்படி வளர்க்கப் போறாங்களோ! குழந்தை வளர்ப்பைப் பத்தி, இவங்களுக்கு ஒன்னுமே தெரியாது’ என்று வீட்டை விட்டு வெளியே வந்தவுடன், தமக்குள் முணுமுணுத்தார் ரேச்சல்.

இதற்கிடையில் மாத்யூ ‘பிரைட் ரிவர்’ என்ற ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய்ச் சேர்ந்துவிட்டார். அங்கே தான் அந்தச் சின்னப் பையன் காத்திருப்பான் என்று அவரிடம் சொல்லி இருந்தார்கள்.

அவர் போன போது, இரயில் வந்ததற்கான அடையாளமே இல்லை. அந்த நீண்ட ரயில்வே பிளாட்பாரம், ஆளே இல்லாமல் காலியாகக் கிடந்தது. பிளாட்பாரம் முடிகிற இடத்தில், சின்னப் பாறைகள் மேல் ஒல்லியாக ஒரு சின்னப் பெண் உட்கார்ந்து இருந்தாள். யாரையோ எதிர்பார்த்து, அவள் காத்து இருப்பதாக அவருக்குத் தோன்றியது.

மாத்யூ ஸ்டேஷன் மாஸ்டரிடம், அந்த ரயில் பற்றி விசாரித்தார். அரை மணி நேரத்துக்கு முன்பே, அது வந்து சென்று விட்டதாக, அவர் சொன்னார்.

“உங்களுக்காகத் தான், அந்தச் சின்னப் பெண் காத்து இருக்கிறாள்” என்றார் ஸ்டேஷன் மாஸ்டர்.

“இல்லை. நான் ஒரு பையனை எதிர்பார்த்துக் காத்து இருக்கிறேன். திருமதி அலெக்ஸாண்டர் ஸ்பென்சர், அவனை அழைத்து வருவார்” என்றார் மாத்யூ.

திருமதி ஸ்பென்சர் தான், இந்தப் பொண்ணைக் கொண்டு வந்து இங்க விட்டாங்க. நீங்க வந்து அழைச்சிட்டுப் போவீங்கன்னு சொன்னாங்க; அந்தப் பொண்ணுக்கிட்ட கேளுங்க” என்றார் ஸ்டேஷன் மாஸ்டர்.

மாத்யூ திரும்பி அந்தச் சிறுமியைப் பார்த்தார். அவளுக்கு 11 வயது இருக்கலாம் என்று தோன்றியது. அழுக்கான மஞ்சள் ஆடை அணிந்து இருந்தாள். வெள்ளை முகத்தில், நிறைய புள்ளிகள் இருந்தன. சிவந்த முடியைப் பின்னி, இரட்டை சடை போட்டு இருந்தாள். அவள் தலையில் வெளுத்துப் போன மாலுமி தொப்பி இருந்தது. பெரிய கண்கள்.

“நீங்க தான் கிரீன் கேபிள்ஸ் வீட்டு மாத்யூவா?” என்று அவள் இனிமையாகக் கேட்டபடி கை நீட்டினாள். “நீங்க வரவே மாட்டீங்களோன்னு, பயந்துட்டேன்; இன்னிக்கு ராத்திரி நீங்க வரலேன்னா, தாழ்வான இந்தப் பெரிய செர்ரி மரத்து மேல ஏறித் தங்கலாம்னு, முடிவு பண்ணியிருந்தேன். நான் கொஞ்சங்கூட பயப்படல. வெள்ளையாப் பூத்திருக்கிற இந்த செர்ரி மரத்துல, நிலா வெளிச்சத்துல ராத்திரி தூங்குறது, நல்லா இருக்கும்ல? இன்னிக்கு ராத்திரி நீங்க வரலேன்னாலும்,  கண்டிப்பா நாளைக் காலையில வந்துடுவீங்கன்னு, உறுதியா இருந்தேன்” என்றாள் அவள்.

நீட்டிய அவளது ஒல்லியான கையைப் பிடித்துத் தன் கையில் வைத்துக் கொண்டார் மாத்யூ. “நான் உனக்காக வரவில்லை” என்று அவளிடம் சொல்ல, அவருக்கு மனம் வரவில்லை. ‘வீட்டுக்கு அழைத்துச் சென்ற பிறகு, மரிலா அதை முடிவு செய்யட்டும்; நடந்த தவறுக்காக, இவளை இங்கேயே விட்டுச் செல்லக் கூடாது’ என்று நினைத்தார் மாத்யூ.

“சாரி. நான் கொஞ்சம் தாமதமா வந்துட்டேன்; வா. குதிரை வெளியில நிக்குது. உன் பையைக் கொடு” என்றார் மாத்யூ.

“ஓ! நீங்க சிரமப்படாதீங்க.  நான் எடுத்துட்டு வரேன்; பை அதிக கனமில்லை. நீங்க வந்ததுல, எனக்கு ரொம்ப மகிழ்ச்சி” என்றாள் அவள்.

இருவரும் வண்டியில் ஏறி, வீட்டுக்குக் கிளம்பினார்கள். அந்தச் சின்னப் பெண் பெரிய வாயாடியாக இருந்தாள். தொணதொணவென்று வழியெங்கும் பேசிக் கொண்டே வந்தாள். ஆதரவற்றோர் இல்லத்தில், தன் மோசமான வாழ்வு குறித்துப் பேசினாள். 

“நான் உங்க கூட வசிக்கப் போறதை நினைச்சி, மகிழ்ச்சியா இருக்கு” என்றாள். அவரது கூச்ச சுபாவம் காரணமாக, மாத்யூ அதிகம் பேசவில்லை. அவள் பேசுவதைக் கேட்டு ரசிப்பது, அவருக்குப் பிடித்திருந்தது.

‘நான் அதிகமாப் பேசறேனா? நான் அதிகமாப் பேசறதா எல்லாரும் சொல்வாங்க. நீங்க நிறுத்த சொன்னா, கஷ்டமா இருந்தாலும் பரவாயில்லை; நிறுத்தறேன்” என்றாள் அவள்.

“நீ விரும்புற வரைக்கும் பேசு. எனக்குப் பிரச்சினையில்லை” என்றார் மாத்யூ.

ஆங்கிலம் – Anne of Green Gables

Author –  Lucy Maud Montgomery

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments