மறுநாள் காலையில் மந்திரவாதி என்ன செய்யப் போகிறார் என்ற சிந்தனையாகவே இருந்தது டாரத்திக்கு. விடிந்ததும் மந்திரவாதியைத் தேடி அவள் சென்ற போது அவர் ஒரு மிகப்பெரிய பலூனை செய்து வைத்திருந்தார். “உன்கிட்ட நான் சொன்னேன் இல்ல? நான் அந்தக் காலத்துல சர்க்கஸ்ல பலூன் செஞ்சு வித்தை காட்றவன்.. அதனால இப்ப பெரிய பலூன் செஞ்சிருக்கேன். எனக்கும் இங்கே இருந்து சலிப்பா ஆயிடுச்சு. நம்ம சொந்த ஊர்களுக்கு இதுல உறுதியா போக முடியுமான்னு எனக்குத் தெரியல, ஆனா நிச்சயமா இந்த மந்திர உலகத்திலிருந்து வெளியே போயிடலாம்” என்று கூறியவர், பலூனுக்கு கீழே இருந்த கூடையில் ஏறி அமர்ந்தார்.

டாரத்தியும் ஏறுவதற்குத் தயாராக, அப்போது பார்த்து டோட்டோ எங்கேயோ ஓடிவிட்டது. “டோட்டோ! எங்கே போயிட்ட? இங்கே வா!” என்று தேடி டாரத்தி போன சமயம் பலூன் மந்திரவாதியை மட்டும் ஏற்றிக்கொண்டு ஜிவ்வென்று பறந்து மேலே சென்று விட்டது. அதைக் கீழே இறக்குவதற்காக மந்திரவாதி செய்த எந்த முயற்சியும் பலிக்கவில்லை. டாரத்தியும் எவ்வளவோ சத்தமிட்டு அழைத்துப் பார்த்தாள். பலூன் கீழே வரவே இல்லை.

“ஐயோ இங்கே இருந்து போறதுக்குக் கிடைச்ச ஒரு வாய்ப்பும் போயிடுச்சே! என்ன பண்றது” என்று சோகத்துடன் அமர்ந்தாள் டாரத்தி.

இது அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார் மரகத நகரத்தின் காவலர் ஒருவர். அவர் பச்சை நிற தாடியை வைத்திருந்தார். “நீங்க தெற்கு திசையோட நல்ல மந்திரவாதியான க்ளிண்டாவைப் போய் பாருங்க. அந்த அம்மா ரொம்ப அன்பானவங்க. நிச்சயம் உனக்கு உதவி பண்ணுவாங்க” என்றார்.

“அங்கே எப்படிப் போகணும்?” என்று வழி கேட்டுத் தெரிந்து கொண்டாள் டாரத்தி. தகர மனிதன், சோளக்கொல்லை பொம்மை, சிங்கம் மூவரும் அவளுடனும் டோட்டோவுடனும் துணைக்குக் கிளம்பினர்.

 அனைவரும் தெற்கு திசையில் இருக்கும் நல்ல மந்திரவாதியான க்ளிண்டா என்ற பெண்மணியின் ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். அவர்கள் சென்ற பாதை மிகக் கடினமாக இருந்தது. முதலில் ஒரு அடர்ந்த காட்டுப் பகுதி வழியே சென்றனர். அந்தக் காட்டில் உள்ள மரங்கள் இவர்களை நேரடியாக எதிர்த்தன. அந்த எதிர்ப்பை மீறி காட்டிற்கு வெளியே சென்றால் அங்கு ஒரு சிறிய மலை இருந்தது. அந்த மலையில் ஏறி இறங்க முயன்ற போது பீங்கானால் செய்யப்பட்ட சிறிய மனிதர்கள் இருந்தனர். அவர்களும் இவர்களது வருகைக்குத் தடை போட்டனர். ஆயுதங்களுடன் வழியை மறித்துக்கொண்டு போக விடமாட்டோம் என்றனர். ‌

எவ்வளவு முயன்றும் முன்னேற முடியாததால் டாரத்தி தன்னுடைய மந்திர சக்தியால் பறக்கும் குரங்குகளின் படையை அழைத்தாள். அடுத்த நொடி பறக்கும் குரங்குகள் படை, நண்பர்களின் உதவிக்காக வந்து சேர்ந்தது. பீங்கான் மனிதர்களிடம் சண்டையிட்டு அங்கிருந்து அவர்களை ஓடச் செய்தது. அப்படியே டாரத்தி மற்றும் நண்பர்களை தங்கள் தோள்களில் சுமந்து கொண்டு தெற்குத் திசையின் நல்ல மந்திரவாதியான க்ளிண்டாவிடம் சென்று பறக்கும் குரங்குகள் விட்டன.

 க்ளிண்டா மிக அழகான மற்றும் இனிமையான பெண்மணியாக இருந்தார். தூய வெள்ளை நிற ஆடையை அணிந்திருந்தார். அவரது கண்கள் நீல நிறமாகவும் தலைமுடி தகதகவென மின்னும் சிவப்பு நிறத்திலும் இருந்தது. “நீங்க யார்? எதுக்காக என்னைப் பார்க்க வந்திருக்கீங்க?” என்று அன்புடன் கேட்டார்.

தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு தங்களைப் பற்றி எல்லா விஷயங்களையும் சொன்னாள் டாரத்தி. “இப்ப எனக்கு என் சொந்த ஊரான கான்சாசுக்கு போகணும். எப்படியாவது உதவி செய்யுங்களேன்!” என்று டாரத்தி கூற,

“ஹா ஹா” என்று சிரித்தார் க்ளிண்டா.

“ஏன் சிரிக்கிறீங்க?”  என்று டாரத்தி  கேட்க,

“இதுக்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டே? நீ நெனச்சா என்னைக்கு நீ கான்சாஸ்ல இருந்து இந்த மந்திர உலகத்துக்குள்ள வந்தியோ, அன்னைக்கே உன்னால ஊருக்குப் போயிருக்க முடியுமே!” என்றார் க்ளிண்டா.

“எப்படி?” இன்று டாரத்தி வியப்புடன் கேட்க, உடன் வந்த அவளது நண்பர்களுக்கும் மிகுந்த ஆச்சரியம்.

wizard 9
படம்: அப்புசிவா

“நீ போட்டுருக்கியே ஒரு மந்திரக் காலணி.. அது உன்னை எங்கே வேணாலும் கொண்டு போகிற சக்தி படைச்சது. எங்களுக்கெல்லாம் இந்த காலணி கிடைக்கல. உனக்குத் தான் அந்தப் பெருமை கிடைச்சிருக்கு. நீ என்ன செய்யணும்னா உன்னுடைய குதிகால்களை மூன்று முறை தரையில் தட்டி, நீ போக விரும்புற ஊர் பெயரை சொன்னேன்னா அங்கே கொண்டு போய் உன்னை விட்டுடும். அவ்வளவுதான்!” என்றார்.

“நெஜமாவா? அவ்வளவே தானா!” என்று உறுதி செய்து கொண்ட டாரத்தி நண்பர்களிடம் பிரியா விடை பெற்றாள். அதன் பின் தன் குதிங்கால்களால் மூன்று முறை பூமியில் தட்டி, “என்னை கன்சாஸுக்குக் கொண்டு போங்க!” என்றாள்.

 இந்த முறை மறக்காமல் டோட்டோவைத் தூக்கி அணைத்துப் பிடித்துக் கொண்டாள். அடுத்த நொடி மந்திரக் காலணிகள் டாரத்தியை விண்ணில் பறக்கச் செய்தன! கண்ணிமைக்கும் நேரத்தில் கான்சாஸில் இருந்த தன் வீட்டின் முன் வந்து இறங்கினாள்.

“அட! டாரத்தியா? எங்கே போனே? இத்தனை நாளா நீ கிடைக்கவே மாட்டியோன்னு பயந்துட்டோம். எங்கெல்லாம் தேடினோம் தெரியுமா?” என்று அவளின் அத்தை எம்மா ஆச்சரியப்பட்டார். அவர் புயலால் சேதமுற்றிருந்த வீட்டை மீண்டும் செப்பனிட்டிருந்தார்.

“நான் ஆஸ் நகரத்துக்குப் போனேன்! அது ஒரு பெரிய கதை!  அதைப்பற்றி சொல்லலாம், சொல்லலாம், நாள் பூரா சொல்லிகிட்டே இருக்கலாம். முதல்லே ஓய்வெடுக்கிறோம் நானும் டோட்டோவும்.. வீட்டுக்கு வந்ததுலே  ரொம்ப ரொம்ப சந்தோஷம்” என்றபடி அத்தையைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள் டாரத்தி!

(நிறைந்தது)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments