இதுவரை:
புயல் காற்றினால் வேறு ஒரு உலகத்தில் சென்று இறங்கிய டாரத்தியும் அவளது நாய் டோட்டோவும் அங்கு மூன்று நண்பர்களை சந்திக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உதவி தேவைப்பட, அவர்கள் அதற்காக ஆஸ் நகரத்தின் பெரிய மந்திரவாதியை சந்திக்க பயணம் மேற்கொண்டனர். அந்தப் பயணத்தின் நடுவே போதைச் செடிகள் நிரம்பிய ஒரு தோட்டத்தைக் கடக்கும் பொழுது டாரத்தியும் சிங்கமும் மயக்கம் அடைந்து விட்டனர். இனி..
as

அத்தியாயம் 3

“ஐயோ இன்னும் கொஞ்ச நேரம் நம்ம சிங்கம் அந்த தோட்டத்துக்குள்ளேயே இருந்துச்சுன்னா அந்த போதைச் செடியோட வாசனை அதோட உயிருக்கே ஆபத்தா முடிஞ்சிடும்!” என்று வருத்தப்பட்டது சோளக்காட்டு பொம்மை.

“எப்படியாவது சிங்கத்தை சீக்கிரமா அந்தத் தோட்டத்தை விட்டு வெளியே கொண்டு வரணும்” என்று தகர மனிதன் சொன்னான். அப்போது அங்கு அவர்கள் முன்னே ஒரு எலி ஓட, வெகு அருகில் அதைத் துரத்திக் கொண்டு ஒரு பெரிய காட்டுப் பூனையும் ஓடியது.

 தகரமனிதனுக்கு ஏனோ அந்த எலியைப் பார்ப்பதற்குப் பாவமாக இருந்தது. ‘இவ்வளவு சின்ன எலி இந்த பூனை வாயில் மாட்டிக்கிட்டா பாவம் தானே?’ என்று நினைத்த தகர மனிதன் தன் கோடரியால் அந்த காட்டுப் பூனையின் தலையை வெட்டி விட்டான். திரும்பி வந்த எலி இவர்களுக்கு நன்றி கூறியது.

“ரொம்ப நன்றி நீங்க சொன்ன உதவியை நான் என்னைக்கும் மறக்க மாட்டேன். ஆமா, நீங்க ஏன் இங்கே இருக்கீங்க?” என்று எலி கேள்வி கேட்க,

“எங்களுடைய நண்பனான சிங்கம் அந்த போதைச் செடிகள் நிரம்பிய வயலுக்குள் மயங்கிடுச்சு. அதை வெளியே கொண்டு வரணும்னா என்ன பண்றதுன்னு யோசிக்கிறோம்” என்றது சோளக்காட்டு பொம்மை.

“நான் தான் இந்தப் பகுதியில இருக்கும் எலிகள் ராஜ்யத்தின் அரசி. நான் சொன்னா எல்லா எலிகளும் கேட்பாங்க. இருங்க நான் அவங்க எல்லாத்தையும் கூட்டிட்டு வரேன். ஏதாவது வழி இருக்கும்” என்று வேகமாக ஓடிச் சென்று ஒரு பொந்தில் மறைந்தது எலி.

 தகர மனிதன், “பக்கத்தில் இருக்கிற மரங்களோட கிளைகளை வெட்டி ஒரு ஒரு பெரிய வண்டி செய்யலாம். அதுல சிங்கத்தைத் தூக்கி வச்சு வெளியே கொண்டு வந்துடலாம்” என்று சொல்ல, அதன்படியே இருவரும் வெகு விரைவில் ஒரு தள்ளு வண்டியைத் தயார் செய்தனர்.‌

அதற்குள் எலி தன் ராஜ்யத்தில் உள்ள அனைத்து எலிகளையும் அழைத்துக் கொண்டு வர, எல்லாருமாகச் சேர்ந்து சிங்கத்தின் பெரிய உருவத்தைத் தூக்கி வண்டியில் வைத்து அதைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்தனர். சிறிது நேரத்தில் டாரத்தியும் சிங்கமும் கண் விழித்து விட்டார்கள். நடந்த விஷயங்களை அவர்களிடம் சொல்ல அவர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி. எல்லாருமாகச் சேர்ந்து எலிகளுக்கு நன்றி கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்கள்.

பயணத்தைத் தொடர்ந்தவர்கள் மறுநாள் மரகத நகரத்தை அடைந்தார்கள். அந்த நகரத்தின் வாயிலில் மிகப்பெரிய கதவு இருந்தது. அந்தக் கதவில் பளபளக்கும் பச்சை மரகத கற்கள் பதிக்கப்பட்டு இருந்தன. அதன் வெளியே தொங்கிய அழகிய மணியை அவர்கள் ஒலிக்க, அந்தப் பெரிய கதவு தானாகவே திறந்தது. மரகத நகரத்தின் தலைமைக் காவலர் அவர்களை வரவேற்றார்.

“நீங்க யாரு எங்கிருந்து வந்திருக்கீங்க?” என்று அவர் கேட்டதற்கு, டாரத்தி தங்களைப் பற்றிக் கூறினாள். ஆஸ் நகரத்தின் மந்திரவாதியை நாங்கள் சந்திக்க வேண்டும் என்று அவள் கேட்க, “முக்கியமான விஷயமா இருந்தால் தான் பெரிய மந்திரவாதி உங்களை சந்திப்பார். சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் அவரை தொந்தரவு பண்ணினீங்கன்னா அவருக்குக் கோபம் வந்துடும்” என்று கூறினார் தலைமைக் காவலர்.

“நாங்க எல்லாருமே எங்கள் வாழ்க்கையோட இக்கட்டான கட்டத்தில் இருக்கோம்.. இப்ப மந்திரவாதியோட உதவி எங்களுக்கு அவசியம் தேவை” என்றாள் டாரத்தி.

“சரி இந்த அறையில் ஓய்வெடுங்க”  அவர்களுக்கு ஒரு அறையைக் காட்டினார் தலைமைக் காவலர். கூடவே உணவும் வழங்கினார்.

“ஒரு நாளைக்கு ஒருத்தரைத் தான் பெரிய மந்திரவாதி பார்ப்பார். அதனால ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தர் மந்திரவாதியை சந்திக்கத் தயாரா இருந்துக்கோங்க” என்றவர், “அதுக்கு முன்னாடி இந்த பச்சைக் கலர் கண்ணாடியைப் போட்டுக்கோங்க” என்று அனைவருக்கும் ஒரு கண்ணாடியைப் பரிசளித்தார்.

“இதைப் போட்டுக்கிட்டு நீங்கள் ஊரைச் சுத்திப் பார்க்கலாம். இங்கே நிறைய மரகத கற்கள் பதிச்சிருப்போம். கண்ணாடி போடாமப் பார்த்தீங்கன்னா  மரகத கற்களோட பளபளப்பால உங்களுக்கு கண்கள் கூசும்” என்றார். மகிழ்ச்சியுடன் அந்தக் கண்ணாடியை வாங்கி அனைவரும் அணிந்தனர். டோட்டோவுக்கும் கூட பொருத்தமான ஒரு சிறிய கண்ணாடி தலைமைக் காவலரிடம் இருந்தது.

சிறிது நேரம் ஓய்வெடுத்தபின் நண்பர்கள் மரகத நரக நகரத்தைச் சுற்றிப் பார்த்தனர். வீடுகள் அனைத்தும் பச்சை நிறப் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டிருந்தன. சுவர்கள் எல்லாமே பச்சை வண்ணத்தில் இருந்தது. அவர்கள் பார்த்த காட்சிகள் அனைத்தும் அவர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தன. அன்றிரவு நன்றாக தூங்கி எழுந்தபின் மறுநாள் காலை முதல் ஆளாக ஆஸ் நகரத்தின் பெரிய மந்திரவாதியை சந்திக்க சென்றாள் டாரத்தி.

-தொடரும்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments