ஆனி கண் விழித்த போது, நன்றாக விடிந்து இருந்தது. ஒரு கணம் தான் எங்கு இருக்கிறோம் என்று, அவளுக்குப் புரியவில்லை.

அந்த ஜூன் மாதக் காலையில் சன்னல் வழியே தெரிந்த, அந்த அழகான காட்சியால், முதலில் அதிக மகிழ்ச்சி ஏற்பட்டது.  அவள் படுக்கையை விட்டு எழுந்து, சன்னலுக்கு அருகில் சென்றாள்.  வெளியே, நிறைய பூக்களுடன், ஒரு செர்ரி மரம் இருந்தது. ஆனியின் கண்கள், மகிழ்ச்சியில் மின்னின. ‘ஆஹா! எவ்வளவு அழகு! எவ்வளவு இனிமையான இடம்!’

 ‘இது கிரீன் கேபிள்ஸ். நான் பையன் இல்லை என்பதால், அவர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை’ என்று அடுத்த கணம் அவள் நினைவுக்கு வந்து, சோகத்தில் மூழ்கினாள்.

வெளியே இருந்த பெரிய செர்ரி மரத்தின் கிளைகள், வீட்டைத் தொட்டன. ஒரு இலை கூடத் தெரியாமல், மரம் முழுக்க, பூக்கள் நிறைந்து இருந்தன. வீட்டின் இரண்டு பக்கமும், ஒரு பெரிய பழத்தோட்டம் இருந்தது.  ஆப்பிள் மரங்கள் ஒரு பக்கமும், செர்ரி மரங்கள் இன்னொரு பக்கமும் பூத்துக் குலுங்கின.

annie 3
படம்: அப்புசிவா

புல்வெளியில் குட்டி குட்டி மஞ்சள் பூக்கள் பூத்து இருந்தன. தோட்டத்தில் இருந்த மரங்களில், ஊதாப் பூக்கள் இருந்தன. அந்தப் பூக்களின் இனிமையான வாசனையைச் சன்னல் வழியே, காற்று உள்ளே கொண்டு வந்தது. தோட்டத்திற்குக் கீழே, ஒரு ஓடை ஓடியது. தூரத்தில் நீலக்கடல் மின்னியது.

அழகை விரும்பும் ஆனியின் கண்கள், ஒவ்வொரு காட்சியையும் ரசித்துப் பார்த்தன. அவள் இதற்கு முன், எத்தனையோ அழகான இடங்களைப் பார்த்து இருக்கிறாள். ஆனால் இந்த இடம் போல, அழகான இடத்தை அவள் கற்பனை செய்து கூடப் பார்த்தது இல்லை.

அவள் இயற்கையின் அழகில், தன்னை மறந்து நின்றாள். அவள் தோளில் ஒரு கை பட்டவுடன் திடுக்கிட்டாள்.  மரிலா உள்ளே வந்தது கூட அவளுக்குத் தெரியவில்லை.

“நீ உடை மாற்றிக் கொள்வதற்கான நேரம் இது” என்றார் மரிலா

ஆனி நீண்ட பெருமூச்சு விட்டாள். “இந்தக் காட்சி ரொம்ப அழகா இருக்கு அல்லவா?” என்று சன்னல் பக்கம், கையைக் காட்டிக் கேட்டாள்.

“இது பெரிய செர்ரி மரம். நிறையப் பூக்கும். ஆனால் பழத்தில், நிறைய பூச்சி இருக்கும்” என்றார் மரிலா.

“நான் இந்த மரத்தை மட்டும் சொல்லவில்லை. இந்தத் தோட்டம், பழ மரங்கள், இந்த ஓடை என்று ,எல்லாவற்றையும் சேர்த்துச் சொல்கிறேன். இங்கே ஒரு ஓடை இருப்பதில், எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. நீங்க என்னைத் தான் கேட்டதாகவும், இங்கேயே நான் எப்பவும் இருக்கப் போறதாவும் கற்பனை பண்ணிக்கிட்டு இருந்தேன்”.  

“சீக்கிரம் உடை மாத்திக் கொண்டு, கீழே வந்தால் நல்லது. காலை உணவு தயாரா இருக்கு. முகத்தை அலம்பிக் கொண்டு, தலையைச் சீவி விட்டு வா. படுக்கையைச் சரி செய்து விட்டு வா. சமர்த்தா நடந்துக்கோ” என்றார் மரிலா

10 நிமிடங்களில் தயாராகி, ஆனி கீழே இறங்கினாள்.

“இன்னிக்கு எனக்கு நல்ல பசி. இன்னிக்குக் காலையில, நல்ல வெயில் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால் எனக்கு மழை பெய்கிற காலை வேளையும் பிடிக்கும்” என்றாள் ஆனி.

“பேச்சை நிறுத்து. இவ்வளவு சின்னப் பெண்ணா இருந்துக்கிட்டு நிறைய பேசுற” என்றார் மரிலா.

அதற்குப் பிறகு, ஆனி வாயே திறக்கவில்லை.  மாத்யூவும் எதுவும் பேசவில்லை. அமைதியாக எல்லோரும் சாப்பிட்டு முடித்தனர். ஆனியின் பெரிய கண்கள், சன்னலுக்கு வெளியே தெரிந்த வானத்தில் லயித்து இருந்தன. சாப்பிட்டு முடிந்தவுடன், ஆனி பாத்திரங்களைக் கழுவ வந்தாள்.

“நீ பத்துப் பாத்திரங்களைக் கழுவுவாயா?” மரிலா நம்பிக்கை இல்லாமல் கேட்டார்.

“நல்லாக் கழுவுவேன். குழந்தைகளை நல்லாப் பார்த்துப்பேன். அதுல எனக்கு நிறைய அனுபவம் இருக்கு. ஆனா இங்க பார்த்துக்க, ஒரு குழந்தை கூட இல்லை.”

“எனக்கு இப்ப இருக்கிறதே போதும். உன்னை வைச்சிக்கிட்டே, நான் என்னப் பண்ணப் போறேன்னு தெரியலை. மாத்யூ செஞ்சது, அபத்தமான காரியம்” என்றார் மரிலா.

“மாத்யூ ரொம்ப நல்லவர். என் கிட்ட ரொம்ப கருணையோடு நடந்து கொண்டார். நான் எவ்வளவு பேசினாலும், அதை எல்லாம் பொறுத்துக் கொண்டார்.”

“சரி பாத்திரங்களைக் கழுவு. நிறையா வெந்நீர் எடுத்துக்கோ. நல்லாக் காய  வை. மதியம் திருமதி ஸ்பென்சரைப் பார்க்கப் போகணும். நீயும் என் கூட வரணும். இந்தப் பிரச்சினையைச் செட்டில் பண்ணனும்” என்றார் மரிலா.

“இன்னிக்கு மதியம் குதிரை வண்டியை எடுத்துக்கலாமா மாத்யூ?” மரிலா கேட்டார். மாத்யூ தலையாட்டிவிட்டு, ஆனியைப் பார்த்தார்.

“இன்னிக்குத் திருமதி ஸ்பென்சர் கிட்ட போயி, இந்தப் பிரச்சினையை முடிக்கணும் அவங்க இவளை எங்கே இருந்து வந்தாளோ, அங்க திருப்பி அனுப்பி விடுவாங்க. அதுக்குப் பிறகு, நான் நேரத்தோட வீட்டுக்கு வந்து  விடுவேன்” என்றார் மரிலா

மாத்யூ பதில் பேசவில்லை. அவர் வாசல் கேட்டைத் திறந்து விட்டார்.

மரிலாவும், ஆனியும் வண்டியில் ஏறிக் கிளம்பினார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments