(உதவிய நூல்: நன்னீர்பாலை
பயணி: இரமணன் செல்வம்)

அன்று வழக்கமான காலை நேரம். சமையலறையில் யாழினி வைத்த வெந்நீர் கொதித்துக் கொண்டிருந்தது. அடுப்பில் வைத்ததை மறந்தவளாக தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள். கௌதம் எதேச்சையாக சமையல் அறையில் நுழைந்தவர் இதனைக் காண நேர்ந்தது. கூப்பிடும் தொலைவில் சோபாவில் அமர்ந்து கணினியில் விளையாடிக் கொண்டிருந்த நிலனை அழைத்தபடி,

கௌதம்: நிலன்! அம்மா எங்கே இருக்கிறார்? சமையல் அறையில் இல்லையே! எதற்காக தண்ணீரை அடுப்பில் வைத்தார்? நன்றாகக் கொதித்துக் கொண்டிருக்கிறதே! இதனைப் பார்த்தால் டிரேக் பேசேஜ்ஜில் (Drake passage) கடல் கொந்தளிப்பதை பார்த்தது தான் நினைவிற்கு வருகிறது.

நிலன்: அம்மா அவரது அறையில் கைபேசியின் மூலம் பேசிக் கொண்டு இருக்கிறார் அப்பா! அது என்ன ட்ரேக் பேசேஜ்? எந்தக் கடலில் இந்த இடம் இருக்கிறது?

கௌதம்: ஒரு வார்த்தையை புதியதாகக் கேட்டாலே நீ விட மாட்டாய் நிலன். கொதிக்கும் தண்ணீரை நிறுத்தி விட்டு வருகிறேன். விரிவாகப் பேசுவோம்.

யாழினி: காபி போடுவதற்காக வைத்த தண்ணீர் தான்! அதை பார்த்து விட்டு கதை பேச ஆரம்பித்து விட்டீர்களா? நான் தான் அடுப்பில் வைத்ததை மறந்து விட்டேன்.

பாட்டி: அவ்வப்பொழுது தவறுவது சகஜம் தானே? பரவாயில்லை விடு யாழினி. நிலன் கேட்ட கேள்வியால் எனக்கு ஒரு தகவல் நினைவிற்கு வருகிறது. தென் துருவத்தில் இருக்கும் அண்டார்டிகா கண்டத்திற்கு அலுவலக நண்பர்களோடு ட்ரேக் பேசேஜ் வழியாக போனதாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கௌதம் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தான். நிலன் அப்போது கைக்குழந்தை. அதைப் பற்றி இந்த வயதில் அவனுக்குச் சொன்னால் தெளிவாகப் புரியும்.

தாத்தா: நான் சிறுவயது பையனாக இருந்தபோது, ‘அண்டார்டிகா என்று ஒரு கண்டம் இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி வெளி உலகத்திற்கு எதுவுமே தெரியாது.’ என்று தான் அறிந்திருந்தேன். இப்போது ஏகப்பட்ட தகவல்கள் வர ஆரம்பித்துவிட்டது. எல்லாம் விஞ்ஞான வளர்ச்சி தான் காரணம்.

கௌதம்: ஆமாம் அப்பா! 18 ஆம் நூற்றாண்டில் தான் இந்த கண்டத்தையே கண்டுபிடித்து இருக்கிறார்கள். செயற்கை கோள்கள் வந்த பிறகு, நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி என ஆண்டுக்கு நான்கு மாதங்கள் மட்டும் கப்பல் மூலமாக அங்கே போக முடியுமென தெரிந்தது.

thenkadaikodi
படம்: அப்புசிவா

ஆராய்ச்சியாளர்கள் மட்டுமல்லாமல், சவாலான பயணங்களை விரும்புறகிறவர்களும் போக ஆரம்பித்தார்கள். எந்த நாட்டிற்கும் சொந்தமில்லாத அண்டார்டிகா கண்டத்தில், விரும்புகின்ற நாடுகள் மட்டும் தங்களது ஆராய்ச்சிக் கூடங்களை அங்கு அமைத்துக் கொள்ளலாம்.

மனிதர்கள் வாழத் தகுதியில்லாத கண்டம் என்றாலும் வடதுருவத்தில் காணப்படாத தென் துருவத்தில் மட்டுமே வாழ்கின்ற பென்குயின் பறவைகள் பல வகைகளில் அங்கே இருக்கின்றன. சீல், திமிங்கலம், இவற்றோடு அல்பெட்ராஸ், ஸ்குவாஸ், ஸ்நோ பெட்ரல் போன்ற பறவைகளும் இங்கு வாழ்கின்றன. வட துருவத்தில் மட்டும் வாழ்கின்ற பனிக்கரடிகள் தென் துருவத்தில் இருப்பதில்லை.

கோடை காலத்தில் ஹேர் கிராஸ் (hair grass) எனும் புல் வகையும், பியல் ஒயிட் (pearl white) எனும் செடி வகையும் வளர்கின்றன. இவை கிரில் (krill) எனும் இறால் போன்ற உயிருக்கு உணவாக அமைந்து, கிட்டத்தட்ட 4000 கிலோ கிரில் ஒரு நாளைக்கு ஒரு திமிங்கலத்திற்கு உணவாகப் பயன்படுகின்றன.

நிலன்: இந்த திமிங்கலம் பிறகு யாருக்குப் பயன்படுகிறது அப்பா?

அப்பா: மனிதர்களுக்குத்தான் நிலன். அளவுக்கு அதிகமாகவே பயன்படுத்துகிறார்கள். முழுமையாக வளர்ந்த நீலத் திமிங்கிலத்தை பிடித்து அறுத்தால், அதன் தோல் பகுதிக்கு அடியில் உள்ள எண்ணெயானது கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட பீப்பாய்களில் நிரப்பும் அளவிற்கு அதிகமானது. இதனை சமையல் உட்பட விளக்கு எரிக்க, வார்னிஷ், சோப்பு,அழகு சாதனப் பொருட்கள், பெயிண்ட் போன்றவை தயாரிக்கவென பயன்படுத்தி அனுபவிக்கும் நாம், அதற்கு பிரதிபலனாக இயற்கைக்கு எதுவுமே கொடுப்பதில்லை. இதனால் லட்சக்கணக்கான திமிங்கலங்கள் அழிந்தது தான் மிச்சம்.

நிலன்: அதனால் தான் திமிங்கலங்களைக் காப்பாற்றுவதற்கு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார்களா? டிரேக் பேசேஜ் (Drake passage) பற்றிப் பேச ஆரம்பித்தோம். இப்போது திமிங்கலம் வரைக்கும் வந்து விட்டோம். பேசேஜ் பற்றி சொல்லுங்க அப்பா.

யாழினி: நிலன் கண்ணா! சமையல் அறையில் தண்ணீர் கொதித்ததை பார்த்தாய் தானே? அதுதான் உங்களுக்கெல்லாம் கடல் கொந்தளிப்பதை நினைவுபடுத்திவிட்டது. தென் அமெரிக்கா முனையிலிருந்து அண்டார்டிகா கண்டத்திற்கு இடைப்பட்ட இடத்தில் கடல் எப்பொழுதும் கொந்தளித்துக் கொண்டே இருக்கும். கடல் பகுதியின் இந்த இடத்தை தான் டிரெக் பேசேஜ் என்று அழைக்கிறார்கள்.

ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் இருக்கும் இந்த தொலைவினை, கப்பல் மூலம் கடந்து அண்டார்டிகாவை அடைய இரண்டு நாட்கள் ஆகும். பயணம் செய்பவர்களுக்கு வயிறு குமட்டல் ஏற்பட்டு உடல் சோர்வடையும் அளவிற்கு இவ்வழியே செல்லும் கப்பல் குலுங்கும்.

வெப்பமான பசிபிக் பெருங்கடலும், துருவப் பகுதியில் பனியால் உருகிய குளிர்ந்த அண்டார்டிக் பெருங்கடலும் ஒன்றையொன்று சந்திக்கும் கடல் பகுதியே இவ்விடம் என்பதால் எப்பொழுதும் கொந்தளிப்புடனேயே இருந்தாலும் சில நேரங்களில் அமைதியாகும் போது, அந்நேரம் இதன் மீது கப்பலில் செல்பவர்கள் உல்லாசமாக பொழுதுபோக்கு விளையாட்டுகளை விளையாடிக் கழிக்க வாய்ப்பாக எடுத்துக் கொள்கிறார்கள்.

நிலன்: இவ்வளவு சிரமங்களோடு அண்டார்டிகா கண்டத்திற்குச் சென்று என்னவெல்லாம் பார்க்கலாம்? அங்கே உணவிற்கு என்ன செய்வார்கள்?

யாழினி: சவாலான பயணத்தின் பயனாக, இறுதியில் இயற்கையோடு இயற்கையாகக் கலந்து வெண்பனியையும், ஊதா நிற வானத்தையும், அதனைப் பிரதிபலிக்கும் கடல் பகுதியையும், பஞ்சு போன்ற மேகங்களையும், சூரியன் இப்பகுதிகளில் பட்டுத் தெறிக்கும் அழகையும், அங்கே வாழும் கடல் வாழ் உயிரிகளையும் பறவைகளையும் கண்டுகளிக்க அழகானதொரு கண்டம் அண்டார்டிகா.

பூமியின் மற்ற பகுதிகளை விட இங்கு மிகவும் மாறுபட்ட இயற்கை சூழ்நிலையாக ஆண்டுக்கு ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து சூரிய வெளிச்சமே இருக்காது. கடலின் மேற்பரப்பில் உறைந்திருக்கும் பனியின் மீது நம்மால் நடக்கவும் முடியும். சில சமயங்களில் இங்கு வீசும் பனிப்புயல் மிக ஆபத்தானது.

இவை யாவற்றையும் கடந்து கோடை காலத்தில் மட்டும் சுற்றுலாப் பிரியர்கள் வந்து போகும் இடமாக, முதலில் பிளாக் லேண்ட் தீவு, ஜார்ஜியா தீவு, அண்டார்டிகாவின் நுழைவு வாயிலான உலகின் அழகான கல்லறைகளைக் கொண்ட பூண்டா அரேனஸ், பச்சை பசேலென்று அமைந்திருக்கின்ற இரண்டு மலைகளுக்கு நடுவில் இருக்கும் கரிபால்டி பனிப்பாறை, பென்குயின்கள் அதிகம் வாழும் கிங் ஜார்ஜ் தீவு, சீல், ஸ்குவா எனும் பறவை, சின்ஸ்ட்ராப் பென்குயின்,18 போன்றவை வாழ்கின்ற இரண்டு கிலோமீட்டர் நீளம் மட்டுமே உள்ள மிகச் சிறிய பிறை போன்ற வடிவம் கொண்ட பிறைநிலாத் தீவு, கடலின் மீது படிந்துள்ள உறைபனி கொண்ட வில்ஹெல்ம்மினா வளைகுடா, திமிங்கலங்களை அதிகமாக வேட்டையாடிய பகுதியான நெகோ ஹார்பர், என பல புதுப்புது இடங்களானது நாம் வாழ்கின்ற இடத்திலிருந்து வேறுபட்டு இருப்பதால் காணும் போது உற்சாகமாக உணர வைக்கின்ற பகுதியாக அண்டார்டிகா இருக்கின்றது.

கௌதம்: மிகவும் பிரமிப்பாக இருக்கிறதா நிலன்? மனிதர்கள் குடியிருந்து வாழாத கண்டமான அண்டார்டிகாவானது பூமிப்பந்தின் தென்முனையில் இருக்கும்போது, மனிதர்கள் வாழ்கின்ற உலகத்தின் முடிவு தென் அமெரிக்கா கண்டத்தின் தென்கோடியில் சிலியின் கப்பல் படை உருவாக்கிய நகரமான புரோட்டோ வில்லியம்ஸ் என்னும் இடமாகும்.

நிலன்: அப்படியா அப்பா?! கடை கோடியில் வாழும் மக்களை பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அம்மாவும் நீங்களும் தாத்தாவும் பாட்டியும் இதுவரை சொன்ன தகவல்களைக் கேட்ட பிறகு எனது மனதிற்குள்ளே பிரம்மாண்டமான பனி மலைகளும், நீலக் கடலும், திமிங்கலமும், தத்தி தத்தி நடக்கும் பென்குயின் பறவைகளும், தவழ்ந்து நகரும் சீலும் கண்ணுக்குள்ளே படமாகத் தெரிகின்றன. உலகில் இன்னும் பல பகுதிகளைப் பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறது.

தாத்தா: ஆமாம் நிலன். ஏதோ பிறந்தோம் ஏனோ வளர்ந்தோம் என்று இல்லாமல், வாழ்க்கையை அனுபவிக்க நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ளவும் வேண்டும். நல்லதொரு உயர்ந்த நிலையை அடைய உன்னை தகுதிப்படுத்திக் கொள்வதில் குறியாக இருந்தால் இவ்வாறான பயணங்கள் எல்லாம் உனக்கு சாத்தியம் தான். ஆசைப்படும்போது தான் அதனை அடைகிறோம். கனவுகள் மெய்யாவது இயல்பு நிலன். நீ பூமி முழுவதும் மட்டுமல்ல, விண்ணில் இருக்கும் கோள்களுக்கும் எதிர்காலத்தில் சுற்றுலாவாகச் சென்று காணத்தான் போகிறாய்! வாழ்த்துகள் கண்ணா.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments