ஹாய் குட்டீஸ்…
இந்த தடவை நாம் பார்க்கப்போவது ஒரு ஓவியமேதை பற்றிய சில தகவல்கள். அவர் பெயர் “வின்சென்ட் வான்கோ” (Vincent Van Gogh).
இவர் நெதர்லாந்தில் 1853 ல் பிறந்தவர். மிகவும் ஏழ்மையான குடும்பம். ஓவியம் வரைவது குடும்பத்தொழிலாக இருந்தது. இவருக்கு ஒரு தம்பி, மூணு தங்கச்சிங்க. வருமானம் இல்லாமல் சாப்பாட்டுக்கே கஷ்டம். அதனால் வான்கோவுக்கு மனசு ரொம்ப பாதிச்சு இருந்ததா சொல்லுவாங்க.
வான்கோ வை முதலில் வரைய விடலை. அவரை பள்ளி கல்லூரிகளுக்கு எல்லாம் அனுப்பி படிக்க வச்சாங்க. ஆனாலும் அவருக்கு படிப்பில் ஆர்வம் வராமல் ஏதோ இழந்த மாதிரியே டல்லா சுத்திட்டு இருந்தார். அப்போதான் அவரது சொந்தக்காரர் வீட்டுக்கு போனார். அவர் ஒரு புகழ்பெற்ற ஓவியர். அவர் பேர் “கான்டண்டைன் சி. ஹூயுமன்”. அவர் வரைவதை பார்த்து பார்த்து வான்கோவுக்கும் ஆர்வம் வந்திடுச்சு. வரைவதால் தன் மனம் கொஞ்சம் சுதந்திரமா இருப்பதாக உணர்ந்தார் வான்கோ. அந்த ஓவியர், ஆசிரியராக இருந்து வான்கோவுக்கு ஓவியம் வரைவதின் அடிப்படை விஷயங்களை சொல்லிக்கொடுத்தார்.
அப்போ எல்லாம் பார்த்ததை அப்படியே வரைவாங்க. சர்ச் சுவர்களில் ஓவியங்கள், அப்புறம் முக்கியமான ஆளுங்களுக்கு எல்லாம் வரைஞ்சு குடுப்பாங்க. அந்த சமயத்தில் வான்கோவுக்கு இதிலெல்லாம் திருப்தி ஏற்படவில்லை.
தனது இருபது வயதில்தான் வரைய ஆரம்பிக்கிறார் வான்கோ. தனக்கேயான தனி பாணியில் வரைகிறார். இவரது படங்களை “போஸ்ட்-இம்ப்ரஷனிஸம்”னு வகைப்படுத்தியிருக்காங்க. அதாவது ஓவியங்களை ஒவ்வொரு ஓவியரும் ஒவ்வொரு பாணியில் வரைவாங்க. அதை புரிஞ்சுக்க அதற்கு தனித்தனி பெயர் வச்சு பிரிப்பாங்க. அதில் வான்கோ வின் ஓவியங்கள் Post-Impressionism வகையில் வருது.
இந்த வகையில் வண்ணங்களுக்கு அதிக முக்கியத்துவம் குடுத்து வரைஞ்சிருக்கார் வான்கோ. முதலில் பார்க்கும்போது அலைஅலையாக வண்ணங்களை தீற்றியது மாதிரி இருக்கும். ஆனால் கவனிக்கும்போது அவர் என்ன சொல்ல நினைத்தாரோ அதை அழகாக படமாக வரைந்திருப்பார். பார்க்கப்பார்க்க நமக்கும் வரையணும்னு தோணும்.
தன் முப்பத்தேழாவது வயதில் அவரை தன்னைத்தானே மாய்த்துக்கொண்டார். அந்த குறுகிய கால வாழ்வில் ஆயிரக்கணக்கான படங்களை வரைந்தார் அவர். இன்று ஒவ்வொரு ஓவியத்தின் மதிப்பும் பல மில்லியன் டாலர்கள், அதாவது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ளது. ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் அவரால் ஒரே ஒரு ஓவியத்தைதான் விற்க முடிந்ததாம். எவ்வளவு கொடுமை இல்லையா?
தனித்துவமாகவும், தனக்கான தனி பாணியிலும் வரைந்த அவரது ஓவியங்களை தேடிப்பாருங்க. நீங்களும் உங்களுக்கான தனித்தன்மையான ஸ்டைல் எது என்று கண்டு வரைய ஆரம்பிங்க குட்டீஸ்.
காமிக்ஸ்..இலக்கியங்களை படிக்க ஆர்வம். தற்போது கதைகளும் எழுதிவருகிறேன். ஓவிய ஆர்வமுண்டு. மூன்று குழந்தை புத்தகங்கள் உட்பட ஆறு புத்தகங்கள் kindle ல் வெளியாகியுள்ளது. தற்போது குழந்தைகள் நாவல் ஒன்று எழுதி வருகிறேன்.