அரையாண்டு தேர்வு முடிந்த அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு உறக்கத்திலிருந்து எழவே மனமில்லாமல் உருண்டு புரண்டு உறங்கிக் கொண்டிருந்தான் ராமு. அம்மா கௌரி பரபரப்பாக சமையலறையில் பாத்திரங்களை உருட்டும் சத்தத்தோடு சமைத்துக் கொண்டிருந்தாள். அப்பா ஷங்கர் காலையிலேயே கடைக்குச் சென்று வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கி திரும்ப வந்து கொண்டிருந்தார். ராமு படுக்கையை விட்டு இன்னும் எழாமல் இருப்பதை இதற்கு மேலும் கௌரியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவனது அறைக்குள் நுழைந்து..
கௌரி: ராமு உறங்கினது போதும். நீ படுக்கையை விட்டு எழுந்தா உனக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி சொல்லப் போறேன். சொல்லட்டுமா? வேணாமா?
ராமு: அம்மா நீங்க சொல்லுங்க. நான் எழுந்திருக்கிறேன்.
கௌரி: உன்னோட அத்தை மாமாவும் மாமா பொண்ணு வருணவியும் இன்னைக்கு வீட்டுக்கு வரப் போறாங்க.
ராமு: ஹைய்யா! நிஜமாவா சொல்றீங்க?! மாமா வெளிநாட்டுக்குப் போயி ரெண்டு வருஷம் ஆயிடுச்சே?!
கௌரி: ஆமாம் அதனாலதான் இந்த டிசம்பர் விடுமுறையில ரெண்டு வாரம் நம்ம கூட இருக்கப் போறாங்க பாட்டி தாத்தாவும் கிளம்பி வந்துகிட்டு இருக்காங்க.
கௌதம்: (காய்கறிகளை கொண்டு வந்து மேசையில் வைத்தவாரே) கௌரி! அத்தையும் மாமாவும் வந்துட்டாங்க. ராமு என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்?
கௌரி: வாங்க அம்மா! வாங்க அப்பா! நீங்களும் தம்பியும் வரீங்கன்னு சொன்ன பிறகு தான் ராமு படுக்கையை விட்டே எழுந்தான். தம்பி இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவான். இப்ப தான் போன் பண்ணினான். வருணவியும் நல்லா வளர்ந்திருப்பாள்னு நினைக்கிறேன். பார்க்கணும்னு ஆசையாவும் ஆர்வமாவும் இருக்கு.
தாத்தா; ஆமாம் கௌரி. லேப் டாப்ல வீடியோ மூலமா வருணவி பேசினா. தமிழ் கொஞ்சம் தடுமாறி பேசுறா. வீட்டிலேயும் ஆங்கிலத்திலேயே பேசிப் பழகியதால, தாத்தா பாட்டி என்பது கூட அவளுக்கு தடுமாறி தான் வருது.
ராமு: (தனது அறையிலிருந்து வெளியே வருகிறான் ராமு)
ஹைய்யா! பாட்டி! தாத்தா! இன்னைக்கு அத்தையும் மாமாவும் வரப் போறாங்க. உங்களுக்குத் தெரியுமா?
பாட்டி: தெரியும் ராமு. வருணவியும் கூட வரப் போறா. இத்தனை நாளா வீட்டிலேயே குட்டிப் பையன் நீ தான். உன்னை விட குட்டிப் பொண்ணு வருணவி. நீ பெரியப் பையன் ஆகப் போற.
ராமு: பாட்டி! அப்படின்னா அவ என்னை என்னன்னு கூப்பிடுவா?
பாட்டி: நீ அவளோட அத்தைப் பையன் அல்லவா? அதனால உன்னை மாமான்னு கூப்பிடுவா! சந்தோஷம் தானே உனக்கு?
ராமு: நான் மாமாவா? அது எப்படி பாட்டி? ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு மாதிரி கூப்பிடுறோம். அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, மாமா, அத்தை, பெரியப்பா, பெரியம்மா, சின்னம்மா, சித்தப்பா, அண்ணா, அண்ணி இப்படி வெவ்வேறு மாதிரி அழைக்கிறோமே? நீங்க சொன்னா மட்டும் தான் எனக்கு தெரியுது. எனக்கே அவங்கள எப்படி கூப்பிடனும்னு தெரிய மாட்டேங்குது.
தாத்தா: அட ராமு கண்ணா! நீ ஒன்னும் கவலைப்படாதே! நீ சுலபமா தெரிஞ்சுக்கிற மாதிரி நான் உனக்கு சொல்லித் தரேன்.
உன்னோட அம்மா கூட பொறந்த அண்ணனோ தம்பியோ உனக்கு தாய் மாமா ஆவாங்க. அவங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க உனக்கு அத்தை. அத்தைக்கும் மாமாவுக்கும் பிறந்த பொண்ணு உனக்கு கல்யாணம் பண்ணிக்கிற முறை. இதுவரைக்கும் புரிஞ்சிருக்கா?
ராமு: புரியுது தாத்தா! ஆனா அவள எனக்கு கல்யாணம் எல்லாம் பண்ணி வைக்காதீங்க. ஐஸ்கிரீம் கேட்டுக்கிட்டு அழுதுகிட்டே இருப்பா.
பாட்டி: ஆசையப் பாரு! கல்யாணமெல்லாம் இப்ப இல்லை ராமு. அதெல்லாம் நீங்க பெரியவங்களா வளர்ந்த பிறகு தான். அதுவும் சொந்த பந்தத்துல இப்பல்லாம் யாரும் கல்யாணம் பண்றதில்ல. பழைய கால முறை அப்படி இருந்தது! தாத்தா அதைத் தான் சொல்லிக்கிட்டு இருக்கிறார்.
தாத்தா: அதே முறைப்படி சொன்னால்தான் புரியும். தாய்மாமா வீட்டில் பெண் எடுத்து பெண் கொடுப்பது என்பார்கள். அதாவது உனக்கு ஒரு தங்கச்சி இருக்கான்னு வச்சுக்கோ! வருணவிக்கு ஒரு அண்ணா இருக்கான்னு வச்சுக்கோ!
உன்னோட மாமா வருணவிய உனக்கு கல்யாணம் பண்ணி வச்சா, உன்னோட தங்கச்சியை வருணவியோட அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைப்பாங்க.
வருணவியோட அப்பா, உன்னோட அம்மாவின் உடன் பிறந்தவர் அப்படிங்கறதுனால, உன்னோட அம்மா அப்பாவா இருக்கிறவங்க அவளுக்கு அத்தை மாமா ஆவாங்க.
இந்த காலத்துல எல்லாம் இப்படி நெருங்கிய உறவுகளை திருமணம் செய்து கொள்வதில்லை. அந்த காலத்துல சொத்து பத்து வெளிய போயிடக் கூடாது சொந்த பந்தம் விட்டுப் போய்ட கூடாது என்பதற்காகவும், பிள்ளைங்க நம்ம குடும்பத்திலேயே பாதுகாப்பா இருப்பாங்க அப்படிங்கறதுக்காகவும் உருவாக்கின உறவு.
உடன்பிறந்த தங்கை, அவள் திருமணமான வீட்டில் குழந்தைகளோட நல்லா வாழ்கிறாளா அப்படிங்கறதுல அண்ணனுக்கு முக்கியமான பொறுப்பு இருக்கு. தன் தங்கை பிள்ளைகளுக்கு அவன் தான் தாய் மாமன். முக்கியமான உறவு இவர்தான்.
ராமு: சரிங்க தாத்தா, அப்படின்னா இப்ப எல்லாம் வெளியுறவுகள்ள திருமணம் செய்றதா பாட்டி சொன்னாங்க. அப்போ அவங்கள எப்படி கூப்பிடுறது?
பாட்டி: அதேதான் ராமு! எந்தப் பெண்ணை நீ திருமணம் பண்ணுவியோ அவங்களோட அம்மா அப்பா உனக்கு மாமன் அத்தை என வச்சுக்கலாம்.
அதே மாதிரி அந்தப் பொண்ணுக்கும் உன்னுடைய அம்மா அப்பாவும், அத்தை மாமன் என்ற உறவாக வச்சுக்கலாம்.
பெண் கொடுத்து பெண் எடுக்கும் முறை என இருக்கிறது அல்லவா? நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்ணு கூட பிறந்த அண்ணனுக்கு உன்னுடைய தங்கச்சியை கல்யாணம் பண்ற முறை.
உன்னுடைய அத்தை மாமாவா இருக்கிறவங்க, உனது தங்கச்சிக்கும் அத்தை மாமா தானே? அத்தையோட பையனை அவ கல்யாணம் பண்ணிக்கலாம்.
உன் மனைவி கூட பிறந்தவங்க உனக்கு மச்சான். அதே சமயத்துல உன் தங்கச்சியையோ அக்காவையோ கல்யாணம் பண்றவங்க பெரியவங்களா இருந்தா உனக்கு மாமா. இதுதான் மாமன் மச்சான் உறவு.
உன் மனைவி கூட அக்காவோ தங்கச்சியோ இருந்தா அவங்கள கல்யாணம் பண்ணிக்கிறவங்க உனக்கு சகலை ஆவாங்க.. அதே நேரத்தில் உன் மனைவிக்கு அவளுடைய தங்கச்சி கணவர் அத்திம்பேர் ஆவாங்க.
ஒரே வீட்டில் பிறந்த அண்ணன் தம்பி அவர்களின் மனைவிகளை ஓர் அகத்தி என்பார்கள். அதாவது ஓரகத்தி, ஒப்புடையவர்கள், ஒரே வீட்டில் திருமணம் செய்து கொண்டவர்கள் என அர்த்தம்.
ஒரு பெண்ணிற்கு அவளது கணவனுடன் பிறந்தவர் மூத்தவர் என்றால் மச்சாண்டார் எனவும், இளையவர் என்றால் கொழுந்தனார் எனவும் சொல்வாங்க.
ஒரு பெண் திருமணமாகி கணவன் வீட்டிற்குச் செல்லும் பொழுது கணவனுடன் பிறந்த தங்கையை நாத்தனார் அப்படின்னு சொல்லுவாங்க.
தன்னுடைய அண்ணனை கல்யாணம் பண்ணிக்கொண்ட பெண் அண்ணி ஆவாள். அந்த அண்ணிக்கு தன்னோட அண்ணனைப் பற்றி விளக்கங்களை கொடுக்கிறது இந்த நாத்தனார் தான். ஏன்னா, கூடவே பிறந்து வளர்ந்தவளுக்குத்தானே அண்ணனைப் பற்றி முழுமையாகத் தெரியும்?. இதைத்தான் நாத்தனார் விளக்கம் அப்படின்னு சொல்வது மருவி, நாத்தி விளக்கு என மாறிப் போச்சு. அண்ணனோட கல்யாணத்தப்ப தங்கச்சிய தேவையே இல்லாம விளக்கு புடிச்சுகிட்டு நிக்க சொல்றாங்க.
சரி அது இருக்கட்டும். இதுவரைக்கும் சொன்ன உறவுகளை அடிப்படையா வச்சு, ஒருவர் தனக்கு அண்ணன் முறை வந்தால் அவரை சூழ்ந்து இருக்கும் உறவு நமக்கு என்ன வேண்டும் என யூகம் பண்ணிக்கலாம்.
மாமா முறை வந்தாலும் தந்தை முறை வந்தாலும் அவர்களை வைத்து அவர்களை சூழ்ந்த உறவு என்னவாக இருக்கும் என நாம தீர்மானிக்க முடியும்.
ராமு: தாத்தா இவ்வளவு உறவு முறைகளைப் பத்தி சொன்னீங்க! இதுல பெரியப்பா பெரியம்மா, சித்தப்பா சின்னம்மா (சித்தி) என யாருமே வரலையே?!
பாட்டி: சமத்துக் குட்டி ராமு! இவ்வளவு நேரம் நீ கவனமாக தான் கேட்டுக்கிட்டு வந்திருக்க. அதெல்லாம் உனக்கு ஏற்கனவே தெரியும் தானே?! இருந்தாலும் அந்த உறவுகளை மட்டும் ஏன் விட்டு வைக்கணும்? நான் சொல்றேன்.. வெளிநாட்டுல வளருகிற வருணவிக்கு உறவுமுறைகள் பற்றி தெரியாமல் கூட இருக்கலாம். அவள் வந்த பிறகு அவளுக்கு நீ விளக்கம் சொல்ல முடியும். சொல்றேன், கேட்டுக்கோ பார்க்கலாம்.
அப்பா கூட பிறந்த அண்ணா உனக்கு பெரிய அப்பா. பெரியப்பா என்று சொல்றோம்.
அவருடைய தம்பி உனக்கு சின்ன அப்பா (சிறிய அப்பா). சித்தப்பா என்று கூப்பிடறோம். அவங்களோட மனைவியை முறையே பெரியம்மா சின்னம்மா அப்படின்னு கூப்பிடுறோம்.
அவங்களோட பிள்ளைங்க உங்களுக்கு பெரியவங்களா இருந்தா அக்கா, அண்ணா, சின்னவங்களா இருந்தா தம்பி தங்கச்சி.
இது அடிப்படையா வச்சு, அப்பாவுக்கு அண்ணன் அப்படின்னு அவர் கூப்பிடுற முறையில வரவங்களோட பிள்ளைகளை, நீங்க அண்ணா, அக்கா, தம்பி, தங்கச்சி அப்படின்னு முறை வைத்து கூப்பிடலாம்.
நாங்க மட்டும் இல்லாம, உன் அப்பாவுக்கு மாமா அத்தை முறையில் இருக்கிறவங்க, உனக்கு தாத்தா பாட்டி ஆவாங்க. அதேபோல அம்மாவுக்கும் மாமா அத்தை முறையில இருக்கிறவங்க உனக்கு தாத்தா பாட்டி.
அப்புறம் உன் அம்மா கூட பிறந்த அக்காவும் தங்கையும் உனக்கு பெரியம்மா சின்னம்மா ஆவாங்க. அவங்களுடைய கணவர் முறையே பெரியப்பா சித்தப்பா ஆவாங்க.
அதேபோல அவங்க பிள்ளைங்க எல்லாம் பெரியவங்களா இருந்தா அண்ணன் அக்கா, சிறியவங்களா இருந்தா தம்பி தங்கச்சி.
இப்படி இந்த உறவு முறைகளெல்லாம் கிளை பாய்ந்து போய்க்கொண்டே தான் இருக்கும். சுற்றம் சூழ வாழ்பவர்கள் நாம்.
கௌதம்: அத்தையும் மாமாவும் உறவு முறைகள பத்தி ரொம்ப விளக்கமா ராமு கிட்ட சொல்லி இருக்கீங்க. இத்தனை நாள் அவனுக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்க வாய்ப்பே இல்லை.
வருணவி வந்த பிறகு ஒன்னு நடக்கப் போகுது பாருங்க. இந்த முறைகள் எல்லாம் எதுவுமே இல்லாம அவள் வயதை ஒட்டி கொஞ்சம் பெரியவங்களா அல்லது சின்னவங்களாக இருக்கிற பிள்ளைகளை பேர் விட்டு கூப்பிடுவா. அவளோட அம்மா அப்பா அளவுக்கு பெரியவங்களாவோ கொஞ்சம் சின்னவங்களாவோ இருந்தா ஆன்ட்டி அங்கிள் அப்படின்னு கூப்பிடுவா. இதுதாண்டி வேற எதுக்கும் அவ போக மாட்டா.
மிஞ்சி போனா நீங்க கிராண்ட் பா, கிரான்மா அவ்வளவுதான.
சற்று நேரத்திற்கெல்லாம் ராமுவின் அத்தை மாமா வருணவியோடு உள்ளே நுழைந்தார்கள். ஆனால் கௌதம் சொன்னது போல வருணவி அப்படித்தான் எல்லோரையும் அழைத்தாள்.
உறவும் முறையும்
வ. எண் | உறவின்முறை | உறவின் பெயர் |
1 | அப்பாவின் அப்பா/ அம்மாவின் அப்பா | தாத்தா |
2 | அப்பாவின் அம்மா/ அம்மாவின் அம்மா | பாட்டி |
3 | அப்பாவின் அண்ணன்/ அண்ணன் மனைவி | பெரியப்பா/பெரியம்மா |
4 | அப்பாவின் தம்பி/ தம்பி மனைவி | சித்தப்பா/சின்னம்மா |
5 | அப்பாவின் அக்கா, தங்கை/ அவர்களது கணவர் | அத்தை/மாமா |
6 | அம்மாவின் அக்கா/அக்காவின் கணவர் | பெரியம்மா/பெரியப்பா |
7 | அம்மாவின் தங்கை/தங்கையின் கணவர் | சின்னம்மா/சித்தப்பா |
8 | அம்மாவின் அண்ணா,தம்பி/ அவர்களது மனைவி | மாமா/அத்தை (அ) (தாய் மாமன்/அத்தை) |
9 | அண்ணன் மனைவி | அண்ணி |
10 | தம்பியின் மனைவி | நங்கை |
11 | தன் மனைவியின் அக்கா | மைத்துனி |
12 | தன் மனைவியின் தங்கை கொழுந்தியாள் | கொழுந்தியாள் |
13 | தன் மனைவியின் அண்ணன் | மாமா |
14 | தன் மனைவியின் தம்பி | மச்சான் |
15 | தன் பெரியப்பா பெரியம்மாவின் பிள்ளைகள் | அவர்களது வயதைப் பொறுத்து அண்ணன், அக்கா தம்பி,, தங்கை |
16 | தன் சித்தப்பா சின்னம்மாவின் பிள்ளைகள் | அவர்களது வயதைப் பொறுத்து அண்ணன், அக்கா தம்பி, தங்கை |
17 18 | அக்காவின் கணவர் தங்கையின் கணவர் | மாமா வயதில் பெரியவர் எனில் மாமா; சிறியவர் எனில் மச்சான் |
19 20 | தன் கணவரின் அண்ணன்/அண்ணனது மனைவி தன் கணவரின் தம்பி/ தம்பியின் மனைவி அண்ணனுக்கு தம்பியின் மனைவி | மச்சாண்டார்/அக்கா ( ஓர் அகத்தி-ஒப்புடையவள்) கொழுந்தனார் /தங்கை (ஓர் அகத்தி-ஒப்புடையவள்) தம்பி பெண்டிர் |
21 | தாத்தா பாட்டியின் அம்மா/ அப்பா | கொள்ளு தாத்தா/ கொள்ளு பாட்டி |
_____________________________