அது ஒரு அழகான காடு. அங்க நிறைய உயிரினங்கள் வாழ்ந்துகிட்டு இருந்தது. அந்தக் காட்டுல ஒரு பயங்கரமான சிறுத்தையும் இருந்ததாம்.

அந்த சிறுத்தைய பார்த்தா வேற எந்த உயிரினமும் பயப்படாதாம். ஆனா, முயல்கள் மட்டும் ரொம்ப பயப்படுமாம்.

ஏன்னா, அந்த சிறுத்தைக்கு முயல்கறின்னா ரொம்ப புடிக்குமாம். அதனால தினமும் முயல்களா வேட்டையாடி சாப்டுமாம்.

அதனால மற்ற விலங்குகள் பயமில்லாமலும், முயல்கள் ரொம்ப பயத்தோடவும் வாழ்ந்தாங்களாம்.

ஒரு நாள், அந்த முயல்கள் எல்லாம் கூடி எப்படியாவது சிறுத்தை கிட்ட இருந்து தப்பிக்கனும்னு ஆலோசனை செஞ்சதாம்.

அப்ப ஒரு முயல் சொல்லுச்சாம், “நம்மள்ல ரெண்டு பேர் அந்த பெரிய மரத்துக்கிட்ட நிப்போம். மரத்துக்கு மேல் கிளையில ஒரு பெரிய கல்லை கட்டி வச்சிருவோம். நம்மை சாப்பிட சிறுத்தை வரும் போது அந்த கல்லை கீழ விட்ருவோம். அப்ப அந்த சிறுத்தை தலையிலேயே கல் விழுந்துடும். சிறுத்தைக்கு எல்லாமே மறந்துடும். அப்பறம் நம்மள மட்டும் சாப்பிடற பழக்கத்தையும் மறந்துடும்” அப்டின்னு.

இதை கேட்ட இன்னொரு முயலுக்கு சந்தேகம் வந்துருச்சாம்.

“நாம எப்படி கல்லை மரத்தில கட்றது”

“பறவை நண்பர்களோட உதவியோடவும் குரங்கு நண்பர்களோட உதவியோடவும் கல்லை மரத்தில் கட்டி சிறுத்தை வரும் போது போடலாம்” அப்டின்னு இன்னொரு முயல் சொல்லுச்சாம்.

பறவைகளும் குரங்குகளும் சம்மதிக்க, எல்லாரும் சேர்ந்து மரத்தின் உயர்ந்த கிளையில கல்லை கட்டிட்டு அதுக்கு நேரா நின்னாங்களாம்.

நிறைய முயல்கள் இருக்கே! இன்னிக்கு சரியான வேட்டைதான் அப்டின்னு நெனச்சுக்கிட்டே வந்ததாம் சிறுத்தை. ஆனா தூரத்தில் வர்றப்பவே மரத்தில கல் இருக்கறத பார்த்துட்டு முயல்கள் பக்கமே வராம வேற பக்கமா பாய்ஞ்சு ஓடி தப்பிச்சிடுச்சாம் சிறுத்தை.

“போச்சு போச்சு நம்ம திட்டம் வேற சிறுத்தைக்கு தெரிஞ்சிருச்சி.. இனி என்ன செய்ய” அப்டின்னு எல்லா முயல்களும் அழ ஆரம்பிச்சதாம்.

நிறைய முயல்கள் ஒன்னா அழுததால அந்த சத்தம் ரொம்ப தூரம் வரைக்கும் கேட்டுச்சாம். அதே போல ரொம்ப உயரமாவும் அவங்களோட அழுகை சத்தம் கேட்டுச்சாம்.

வானத்தில் போய்க்கிட்டிருந்த ஒரு மேகம் இவங்க சத்தத்த கேட்டு என்ன சத்தம் இது அப்டின்னு ரொம்ப நேரம் தேடுச்சாம்.

அது முயல்களோட அழுகை சத்தம்னு கண்டுபிடிச்சி, முயல்கள் கிட்ட வந்து,

“ஏன் அழறீங்க உங்க சத்தம் வானம் வரைக்கும் கேக்குது” அப்டீன்னு கேட்டுச்சாம்.

“இங்க ஒரு சிறுத்தை, முயல்களை மட்டும் சாப்டுது. அத தடுக்க நாங்க எடுத்த முயற்சியும் அதுக்கு தெரிஞ்சுடுச்சு.. இனி எங்கள பழி வாங்கும்.. அதான் நாங்க பயத்தில் அழறோம்” அப்டின்னு முயல்கள் எல்லாம் அழுதுட்டே சொல்லிச்சாம்.

“சரி அழாதீங்க.. ரொம்ப தூரத்தில எனக்குத் தெரிஞ்ச முயல்களே இல்லாத காடு ஒன்னு இருக்கு. நான் சிறுத்தைய அங்க கூட்டிட்டு போய்டுறேன்” அப்டின்னு சமாதானம் சொல்லுச்சாம் மேகம்.

சரின்னு எல்லா முயல்களும் மேகத்துக்கு நன்றி சொன்னாங்களாம்.

Muyal illadha Kaadu

சிறுத்தை ஒரு மரக்கிளைல ஓய்வெடுக்கறத பார்த்த அந்த மேகம், அந்த மரக்கிளையோட தூக்கிகிச்சாம்.

அப்டியே உயர உயர வானத்தில் பறந்து போய் முயல்கள் இல்லாத காட்டில் இறக்கிவிட்டதாம்.

முயல்கள் ரொம்ப மகிழ்வா வாழ்ந்தாங்களாம்.

முயல் இல்லா காட்டுக்கு போன சிறுத்தையும் மற்ற உணவுகளை சாப்பிட பழகி ரொம்ப மகிழ்வா இருந்ததாம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments