பணம் இல்லை என்பதால் அம்மாவிற்கு சிகிச்சை கிடைக்காமல் போகக் கூடாது என்று ராபர்ட்டா, ஃபிலிஸ் மற்றும் பீட்டருக்குப் புரிந்தது. ராபர்ட்டா அம்மாவின் அறையில் இருந்து ஒரு தாளையும் ஒரு பேனாவையும் எடுத்தாள். ஒரு கடிதம் எழுதினாள். பீட்டரிடம் ஒரு பெரிய வெள்ளை அட்டையைக் கொடுத்து அதில் பெரிய எழுத்துக்களால் சில வாசகங்களை எழுதச் சொன்னாள்.

எழுதி முடித்ததும், ராபர்ட்டா வீட்டிலிருந்து அம்மாவை கவனித்துக் கொள்ள, அட்டையையும் கடிதத்தையும் எடுத்துக்கொண்டு பீட்டரும், ஃபிலிஸும் ரயில் நிலையத்தை நோக்கி ஓடினார்கள். பச்சை டிராகன் மெதுவே ரயில் நிலையத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தது. பீட்டர் தாங்கள் வழக்கமாக நின்று கையசைக்கும் இடத்தில் நின்று அவன் வைத்திருந்த பெரிய அட்டையை நன்கு வெளியே தெரியும்படி பிடித்துக் கொண்டிருந்தான்.

“அவசரம்! நிலையத்தில் ரயில் நிற்கும்போது என் தங்கை காத்திருப்பாள். தயவுசெய்து அவளை பாருங்கள்!”

 என்று அந்த அட்டையில் எழுதியிருந்தது. இவர்களைப் பார்த்து கையசைப்பதற்காக ரயிலின் உள்ளே காத்திருந்த பெரிய மனிதர் அந்த அட்டையில் உள்ள வாசகங்களை வாசித்தார். ரயில் நிலையத்திற்குள் நுழைந்து மெதுவாக நின்றது. சில நிமிடங்களே அந்த நிலையத்தில் ரயில் நிற்கும். அதற்குள் ரயில் பெட்டியின் வாசலுக்கு வந்தார் அந்தப் பெரியவர்.

rail friends 4
படம்: அப்புசிவா

 அப்போது ஃபிலிஸ் ராபர்ட்டா எழுதிக்கொடுத்த கடிதத்துடன் காத்துக் கொண்டிருந்தாள். அவளை நோக்கி பெரியவர் கையசைக்கவும், ஃபிலிஸ் ஓடிச் சென்று அந்தக் கடிதத்தை அவரிடம் கொடுத்தாள்.

 ரயில் அதற்குள் நிலையத்தை விட்டு அடுத்த ஊருக்குச் செல்ல புறப்பட்டது. தன் இருக்கையில் அமர்ந்த அந்தப் பெரியவர், குழந்தைகளிடமிருந்து கிடைத்த கடிதத்தை வாசித்தார்.

“எங்கள் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை. எங்கள் அப்பாவும் வெளியூரில் இருப்பதால் இவற்றை வாங்குவதற்குப் பணம் இல்லை. தயவு செய்து இந்தப் பொருட்களை வாங்கித் தாருங்கள். அப்பா திரும்பி வந்தவுடன் உங்களுக்கு இதற்கு ஆகும் செலவைக் கொடுத்து விடுவார். இல்லையென்றால் பீட்டர் வளர்ந்து பெரியவனாகி வேலைக்குப் போனவுடன் அந்தப் பணத்தைத் திருப்பித் தருவான். எங்களை நம்புங்கள். உங்கள் நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றுவோம். பொருட்களை வாங்கி விட்டீர்கள் என்றால் ஸ்டேஷன் மாஸ்டரிடம் கொடுக்கவும். நன்றி!

இப்படிக்கு,

ராபர்ட்டா, ஃபிலிஸ், பீட்டர்.” என்று அதில் எழுதி இருந்தது.

கூடவே மருத்துவர் கொடுத்த பொருட்களின் பட்டியலும் எழுதி இருந்தது.

அன்றைய பகல் நேரம் முழுவதும் அம்மாவின் உடல்நிலை மோசமாகவே இருந்தது. காய்ச்சல் குறையவே இல்லை. “பெரியவர் கிட்ட உதவி கேட்டிருக்கோம். செய்வாரா இல்லையானு தெரியலையே சரி காத்திருந்து பாப்போம்” என்று சொன்னாள் ராபர்ட்டா.

 அன்று மாலையே அந்தப் பெரியவரின் நல்ல மனது அவர்களுக்குத் தெரிய வந்தது. ரயில் நிலையத்திலிருந்து ஒரு பணியாளர் ஒரு பெரிய பார்சலை அவர்களது வீட்டுக்கே வந்து கொடுத்தார். அதைப் பிரித்துப் பார்க்கையில் இவர்கள் கேட்டிருந்த எல்லா பொருட்களும் அதில் தேவைக்கு அதிகமாகவே இருந்தன. கூடவே ஒரு கடிதமும் இருந்தது.

“உங்கள் அம்மா இந்தப் பொருட்கள் எல்லாம் எப்படி கிடைத்தது என்று கேட்டால் ஒரு நல்ல நண்பர் உங்களுக்குத் தந்தார் என்று சொல்லுங்கள்” என்று எழுதி பெரியவர் தன் கையெழுத்தையும் போட்டிருந்தார்.

பெரு மகிழ்ச்சி அடைந்த குழந்தைகள் விரைவாக அந்த மருந்துகளையும் அதிலிருந்த உணவுப் பொருட்களையும் அம்மாவுக்குக் கொடுத்தார்கள். அடுத்த சில நாட்களுக்குள் அம்மா முழுவதுமாக உடல் நலம் தேறி விட்டார்.

அப்படியே சில நாட்கள் கழிந்த நிலையில் ராபர்ட்டாவுக்குப் பிறந்தநாள் வந்தது. அன்று காலை ராபர்ட்டா உணவுக் கூடத்திற்குள் நுழைந்த நேரம் அம்மா, ஃபிலிஸ், பீட்டர் மற்றும் அவர்களது வீட்டு உரிமையாளரான திருமதி. வினே அனைவரும் “பிறந்தநாள் வாழ்த்துக்கள்!” என்று உற்சாகமான குரலில் கூறினார்கள். அப்படியே ராபர்ட்டாவின் பிறந்தநாளுக்கென அம்மா எழுதியிருந்த ஒரு விசேஷமான பாடலையும் பாடினார்கள்.

 ராபர்ட்டாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி! அம்மா அவளுக்கு வெள்ளியினால் ஆன ஒரு அழகிய ஆபரணத்தை பரிசாகத் தந்தார். திருமதி. வினே இரண்டு நீல நிற கண்ணாடி பூ ஜாடிகளைத் தந்தார். ஃபிலிஸ் ராபர்ட்டாவிற்கு ஒரு புத்தகத்தைப் பரிசாகத் தந்தாள். இவை அனைத்தையும் விட சிறந்த பரிசு அவளுக்காக உணவு உண்ணும் மேஜையில் காத்திருந்தது!

 அது ஒரு பெரிய பிறந்தநாள் கேக்! அதில் அழகழகான பூக்களால் ஒரு படம் வரையப் பட்டிருந்தது. “ராபர்ட்டா! இங்கே பார் இது ரயில்வேயோட மேப். இந்த வயலட் நிறப் பூக்களை வச்சு தண்டவாளம் செஞ்சிருக்கோம். ஸ்டேஷனை பிரவுன் நிறத்தில் செஞ்சிருக்கோம். இதோ இதுதான் ரயில். இந்த மூன்று பூக்களும் நம் மூன்று பேரையும் குறிக்குது. இதோ இங்கே நிற்கிறது தான் நம்ம நண்பரான பெரியவர்!” என்றான் பீட்டர் உற்சாகத்துடன்.

 அதைப் பார்த்து வியந்து கொண்டிருக்கையில் அவள் முன் தனக்குப் பிரியமான பொம்மை ரயில் இன்ஜினை வைத்தான் பீட்டர். அதில் வெள்ளைத் தாள்களால் சுற்றப்பட்டு நிறைய இனிப்புகள் இருந்தன.

“இதுதான் என்னோட பரிசு!” என்றான் பீட்டர்.

“உனக்கு இந்த இன்ஜின் ரொம்ப பிடிக்குமே? இதை என்கிட்ட கொடுத்துட்டியே?” என்று கேட்டாள் ராபர்ட்டா.

“என்ஜின் உடைஞ்சிருந்தாலும் கூட எப்பவும் என்னோடது தான். இந்த இனிப்புகள் தான் உனக்கு” என்று சொன்ன பீட்டர் சற்று யோசித்து விட்டு, “வேணும்னா நானும் நீயும் சேர்ந்து இந்த எஞ்சினை வச்சுக்கலாம்” என்றான்.

அவனுடைய அன்பில் நெகிழ்ந்து போனாள் ராபர்ட்டா. அடுத்து வரும் அவனுடைய பிறந்த நாளுக்கு ஒரு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியை அவனுக்குக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்.

தொடரும்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments