திருமதி ஸ்பென்சரைப் பார்ப்பதற்காக, குதிரை வண்டியில் மரிலாவும், ஆனியும் சென்றார்கள். கடற்கரை வழியாக வண்டி சென்றது. வழி எங்கும் கடற்கரை பற்றியும், கடல் பறவைகளைப் பற்றியும், வாய் ஓயாமல் ஆனி பேசிக் கொண்டே வந்தாள்.

அப்போது “உன் கடந்த கால வாழ்க்கையைப் பற்றிச் சொல்; நீ எங்கே பிறந்தாய்? உனக்கு இப்ப என்ன வயது?” என்று மரிலா, ஆனியிடம் கேட்டார்.

ஆனி தன் கதையைச் சொல்லத் தொடங்கினாள்:-

“கடந்த மார்ச் மாசம், எனக்கு 11 வயது ஆனது; நான் நோவா ஸ்காட்டியாவில் உள்ள, போலிங்புரோக் என்ற ஊரில் பிறந்தேன். என் அப்பா பேரு வால்டர் ஷெர்லி. அவர் அந்த ஊரில் இருந்த ஒரு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்தார்.

என் அம்மா பேரு பெர்த்தா ஷெர்லி. அவரும் ஒரு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர். ஆனால் என் அப்பாவைத் திருமணம் செய்த பிறகு, அம்மா வேலையை விட்டு விட்டார். நான் மூன்று மாதக் குழந்தையாக இருந்த போது, இருவரும் காய்ச்சலில், என்னை அனாதையாக விட்டு விட்டு இறந்து விட்டனர். அந்த ஊரில் எங்கள் உறவினர், யாரும் இல்லை. என்னை யாரும் எடுத்து வளர்க்க விரும்பவில்லை.

திருமதி தாமஸ் என்பவர் ரொம்ப ஏழை. மேலும் அவர் கணவர் குடிகாரர். அப்படி இருந்தும், அவர் என்னை எடுத்து வளர்த்தார். எனக்கு எட்டு வயது ஆகும் வரை, அவர் வீட்டில் இருந்தேன்.

திருமதி தாமஸுக்கு நாலு குழந்தைகள். என்னை விட இளையவர்கள். அவர்களை பார்த்துக் கொள்வது, ரொம்ப கஷ்டம். அதற்கு நான் அவருக்கு உதவி செய்தேன்.

ஒரு நாள் தாமஸ் ரயிலுக்கு அடியில், விழுந்து இறந்து விட்டார். அவர் அம்மா திருமதி தாமஸையும், அவர் குழந்தைகளையும் ஏற்றுக் கொண்டார். ஆனால் என்னை வேண்டாம் என்று, சொல்லி விட்டார்.

அதற்குப் பிறகு திருமதி ஹம்மன்ட்ஸ் என்பவர், என்னை அவர் வீட்டுக்குக் கூட்டிச் சென்றார். அவருக்கு எட்டுக் குழந்தைகள். அதிலும் ஆறு குழந்தைகள், இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தவர்கள். அங்கே நான் இரண்டு ஆண்டு இருந்தேன்.

அவர் கணவர் இறந்த பிறகு, குழந்தைகளை உறவினர்களிடம் அனுப்பி விட்டு, அமெரிக்கா போய் விட்டார். எனக்குப் போக இடம் இல்லை. அதற்குப் பிறகு, நான் ஹோப்டனில் இருந்த, ஆதரவற்றோர் இல்லத்துக்கு வந்தேன்.

முதலில் அங்கேயும் இடம் இல்லை என்று சொன்னார்கள். கடைசியாக வேறு வழியின்றி, என்னைச் சேர்த்துக் கொண்டனர். திருமதி ஸ்பென்ஸர் என்னைக் கூட்டி வரும் வரை, நாலு மாதம் அங்கே இருந்தேன்.”

ஆனி ஒரு பெருமூச்சுடன், தன் கதையைச் சொல்லி முடித்தாள்.

“நீ எப்போதாவது பள்ளிக்குப் போனாயா?” மரிலா கேட்டார்.

“ரொம்ப நாள் போக வில்லை. திருமதி தாமஸ் வீட்டில் இருந்த போது, சில நாள் போனேன். திருமதி ஹம்மன்ட்ஸ் வீடு, பள்ளியில் இருந்து ரொம்ப தூரம். குளிர் காலத்தில், என்னால் நடந்து போக முடியாது. கோடையில் விடுமுறை விடுவார்கள். எனவே வசந்த காலத்திலும், இலையுதிர் காலத்திலும் மட்டும், பள்ளிக்குப் போனேன்.

“திருமதி தாமஸும், திருமதி ஹம்மண்ட்ஸும், உன்னிடம் நல்ல விதமாக நடந்து கொண்டார்களா?” மரிலா கேட்டார்.

“குடிகார கணவர் இருந்தால், எவ்வளவு கஷ்டம்? மூன்று முறை இரட்டைக் குழந்தை பிறந்தால், எவ்வளவு கஷ்டம்? இருந்தாலும் அவர்களால் முடிந்த அளவு, இருவரும் என்னிடம் நல்ல விதமாகவும், இரக்கத்தோடும் நடந்து கொண்டார்கள்.”

மரிலா அதற்குப் பிறகு, கேள்வி எதுவும் கேட்கவில்லை. ‘யாரும் விரும்பாத, பட்டினியும், வறுமையும் நிறைந்த, எல்லோராலும் கைவிடப்பட்ட, எவ்வளவு பரிதாபமான வாழ்க்கை, இந்தக் குழந்தைக்கு!’ என்று நினைத்து, அவர் இதயத்தில், ஆனியின் மீது கருணை சுரந்தது!

‘அதனால் தான் கிரீன் கேபிள்ஸ் வீடு கிடைத்தவுடன், அவ்வளவு மகிழ்ச்சி அடைந்து இருக்கிறாள்!  அவள் வீட்டுக்காக ஏங்குவதில், ஆச்சரியம் ஏதுமில்லை. அவளைத் திருப்பி அனுப்புவது, மிகவும் பாவம் தான்’ என்று நினைத்து, மரிலா வருத்தப்பட்டார்.

இருவரும் திருமதி ஸ்பென்சர் வீட்டை அடைந்தனர். ஆனியுடன் மரிலாவைப் பார்த்த அவர், ஆச்சரியம் கலந்த பார்வையுடன், அவர்களை வரவேற்றார். மரிலா நடந்து விட்ட தவறு குறித்துத் திருமதி ஸ்பென்சரிடம் விளக்கினார்.

annie 4
படம்: அப்புசிவா

“உங்கள் சகோதரர் ராபர்ட்டிடம், ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து, 10 அல்லது 11 வயதில் ஒரு பையன் வேண்டும் என்று தான், நானும் மாத்யூவும் கேட்டு இருந்தோம்” என்றார் மரிலா.

“அப்படியா? ராபர்ட் தம் மகள் நான்சி மூலம், உங்களுக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும் என்று சொன்னார். ஒரு வேளை நான்சி தவறாக மாற்றிச் சொல்லி இருக்கலாம். என் மேல் தவறு இல்லை. நீங்கள் பெண் குழந்தை கேட்டதாக நினைத்துத் தான், அனுப்பினேன். நடந்த தவறுக்கு, ரொம்ப வருந்துகிறேன் மரிலா” என்றார், திருமதி ஸ்பென்சர்.

“பரவாயில்லை. எங்கள் மேல் தான் தவறு. நாங்கள் இன்னொருவர் மூலம் செய்தி சொல்லி, அனுப்பி இருக்கக் கூடாது. நேரடியாக உங்களிடம் வந்து சொல்லி இருக்க வேண்டும். எப்படியோ தவறு நடந்து விட்டது. அதைச் சரி செய்ய வேண்டும். இவளை அந்த ஆதரவற்றோர் இல்லத்துக்குத் திருப்பி அனுப்ப வேண்டும். அனுப்பினால், ஏற்றுக் கொள்வார்கள் தானே?” மரிலா கேட்டார்.

“ஏற்றுக் கொள்வார்கள் என்று தான், நினைக்கிறேன்; ஆனால் இவளை அங்கே அனுப்ப வேண்டிய அவசியம் இருக்காது. ஏன் என்றால், திருமதி பீட்டர் பிளிவெட், நேற்று இங்கு வந்து இருந்தார். அவருக்குப் பெரிய குடும்பம். “என் உதவிக்கு ஒரு பெண் இருந்தால், எவ்வளவு நன்றாய் இருக்கும்?” என்று, சொல்லிக் கொண்டு இருந்தார். ஆனியை அவரிடம் அனுப்பி விடலாம்” என்றார் திருமதி ஸ்பென்சர்.

திருமதி பீட்டர் பிளிவெட்டை ஏற்கெனவே, மரிலா பார்த்து இருந்தார். அவரைப் பற்றிக் கேள்விப்பட்டும் இருந்தார். அவர் கோபக்காரர்; கஞ்சத்தனம் அதிகம்; அவர் குழந்தைகள் பயங்கரமாகச் சண்டை போடுவார்கள்; திருமதி பிளிவெட்டைப் பற்றிப் பயங்கரமான கதைகளை, அவரிடம் வேலை செய்த பெண்கள், மரிலாவிடம் ஏற்கெனவே சொல்லி இருந்தார்கள். இப்படிப்பட்ட பெண்மணியிடம், ஆனியை அனுப்ப, மரிலாவின் மனசாட்சி உறுத்தியது.

அப்போது அங்கே வந்த திருமதி பிளிவெட்டை, ஆச்சரியத்துடன் திருமதி ஸ்பென்சர் வரவேற்றார். 

“இப்ப தான் உங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டு இருந்தேன்” என்று சொன்னவர், மரிலாவைத் திருமதி பிளிவெட்டுக்கு, அறிமுகம் செய்து வைத்தார்.

மடியில் தன் கைகளை வைத்தபடி, முக்காலியில் உட்கார்ந்து இருந்த ஆனி, திருமதி பிளிவெட்டையே பார்த்துக் கொண்டு இருந்தாள். இந்தப் பெண்மணியிடம் தன்னை அனுப்பப் போகிறார்கள் என்று நினைத்த போது அவள் தொண்டை அடைத்துக் கொண்டு, கண்கள் கலங்கின.

“ஒரு தவறு நடந்து விட்டது, திருமதி பிளிவெட். மரிலா ஒரு பையனைத் தான், தத்து எடுக்கக் கேட்டாராம். நேற்று நீங்கள் என்னிடம் சொன்னபடி, உங்களுக்குப் பெண் வேண்டும் என்றால், இவளைக் கூட்டிச் செல்லலாம்” என்றார் திருமதி ஸ்பென்சர்.

திருமதி பிளிவெட் ஆனியைத் தலை முதல் கால் வரை, ஒரு பார்வை பார்த்தார்.

“உன் பேரு என்ன?  என்ன வயசு?” என்று அவர் கேட்டார்.

“ஆனி ஷெர்லி. எனக்கு 11 வயசு”

“நீ ரொம்ப ஒல்லியா இருக்கே. ஆனால் நான் உன்னை அழைச்சிட்டுப் போறேன். உனக்கு அங்கே நிறைய வேலை இருக்கும். நீ ரொம்ப நல்ல பொண்ணா, சமர்த்தா, மரியாதையா நடந்துக்கணும். நீ நல்லா வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று ஆனியிடம் சொன்ன திருமதி பிளிவெட்,

“என் ஆண் குழந்தை பயங்கரமாகக் கஷ்டப்படுத்துகிறான். அவனைக் கவனிப்பதிலேயே நான் களைச்சிப் போயிடறேன். உங்களுக்குச் சம்மதம் என்றால், இப்பவே நான் இவளை அழைச்சிட்டுப் போறேன்” என்று மரிலாவைப் பார்த்துச் சொன்னார்,    

பயத்தில் வெளுத்துப் போன ஆனியின் முகத்தைப் பார்த்த மரிலாவின் மனம் இரங்கியது. எந்தப் பொறியில் இருந்து தப்பி வந்தாளோ, அதே பொறியில் மீண்டும் அகப்பட இருந்த, அந்த ஆதரவில்லாத குட்டிப் பெண்ணின் துன்பத்தை நினைத்து, மரிலா வருந்தினார்.

அந்தப் பரிதாபமான பெண்ணின் பார்வையை, அவர் நிராகரித்தால், அவர் சாகும் வரை, அது அவரைத் தொடர்ந்து வந்து துன்புறுத்தும் என்று, அவருக்குத் தோன்றியது. எளிதில் பதற்றப்படுகிற, உணர்ச்சி வசப்படுகிற ஆனியைத் திருமதி பிளிவெட் போன்ற பெண்மணியிடம் அனுப்ப, மரிலாவுக்கு மனம் வரவில்லை.

“நானும் மாத்யூவும், இவளை வைத்துக் கொள்ளவே மாட்டோம் என்று நான் சொல்லவில்லை. உண்மையில் மாத்யூ இவளை எங்கள் வீட்டில் சேர்த்துக் கொள்ளவே விரும்புகிறார். இந்தத் தவறு எப்படி ஏற்பட்டது என்று, தெரிந்து கொள்ளவே, நான் வந்தேன். நான் மீண்டும் வீட்டுக்கு இவளைக் கூட்டிச் சென்று, மாத்யூவிடம் பேசுகிறேன். அவர் இல்லாமல் நான் எந்த முடிவையும் எடுக்க மாட்டேன். நாங்கள் இவளை வைத்துக் கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்தால், நாளை இரவு இங்கு அழைத்து வந்து விடுகிறோம். அப்படி வரவில்லை என்றால், அவள் எங்களுடன் தங்கப் போவதாக அர்த்தம். சரியா திருமதி பிளிவெட்?” என்று கேட்டார் மரிலா.   

“சரி” என்றார், திருமதி பிளிவெட்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments