இதுவரை:

 டாரத்தியும் அவளது நாய் டோட்டோவும் இருந்த மரவீடு ஒரு பெரிய சுழல் காற்றின் காரணமாகப் பறந்து சென்று ஒரு மந்திர உலகத்தின் கெட்ட சூனியக்காரி மேல் விழ, அவள் இறந்தாள். அதனால் அங்குள்ள மனிதர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். டாரத்தி தன் ஊருக்குச் செல்ல வேண்டும் என்று நினைக்க, அவளை ஆஸ் நகரத்தின் பெரிய மந்திரவாதி சந்திக்கச் செல்லுமாறு அவர்கள் கூறினர். டாரத்தி மந்திரவாதியைச் சந்திக்கச் செல்லும் வழியில் மேலும் சில நண்பர்களும் அவர்களுடன் இணைந்து கொண்டனர். இனி..

அத்தியாயம் 4

ஆஸ் நகரத்தில் பெரிய மந்திரவாதியை டாரத்தி சந்திப்பதற்கான நேரம் வந்தது. அவரை சந்திக்க வேண்டும் என்றால் பச்சை நிற உடைகளைத் தான் அணிந்து கொள்ள வேண்டும் என்று கோட்டையின் தலைமைக் காவலர் கூறினார். அவர் கொடுத்த பளபளப்பான பச்சை நிற உடையை டாரத்தி அணிந்து கொண்டாள். முதன்முதலில் டாரத்தியும் டோட்டோவும் இந்த மந்திர உலகத்திற்கு வந்த போது அவளது வீடு பறந்து வந்து கிழக்குத் திசையில் கெட்ட சூனியக்காரி மேல் விழுந்தது அல்லவா? அவள் இறந்த போது, அவள் அணிந்திருந்த வெள்ளியினாலான மந்திரக் காலணிகளை வடக்குத் திசையின் நல்ல சூனியக்காரி டாரத்திக்கு பரிசாக அளித்துவிட்டு டாரத்தியின் நெற்றியில் முத்தமிட்டார். அதனால் டாரத்தியின் நெற்றியில் ஒரு அழகான மச்சம் உருவானது.

பச்சை உடையை அணிந்து தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள் டாரத்தி. நெற்றியில் அந்த மச்சம் தென்பட,  வெள்ளிச் செருப்புக்களையும் காலில் அணிந்து கொண்டாள். டோட்டோவுக்கும் கூட அழகான பச்சை நிற கழுத்துப் பட்டையை வழங்கினார் தலைமைக் காவலர். டாரத்தியும் டோட்டோவும் மந்திரவாதியைச் சந்திக்கச் சென்றனர். நீளமான அறையின் ஓரத்தில் ஒரு அரியணை இருந்தது. அந்த அரியணையில் ஒரு பெரிய தலை மட்டும் இருந்தது, உடல் எதுவும் இல்லை.

“நான் தான் ஆஸ் நகரத்தின் பெரிய மந்திரவாதி. உங்களுக்கு என்ன வேணும்?” என்று அந்தத் தலை கேட்டது.

 தான் இங்கு வந்த விதத்தைச் சொல்லி, “கான்சாஸில் இருக்கிற என்னுடைய வீட்டுக்குப் போக நீங்க உதவி செய்யணும்” என்று கேட்டுக் கொண்டாள் டாரத்தி.

 டாரத்தியின் நெற்றியில் இருந்த மச்சத்தையும், வெள்ளி செருப்பையும் பார்த்த மந்திரவாதி அதைப் பற்றிக் கேட்டார்.  டாரத்தி இதுவரை நடந்ததைக் கூறினாள். ” ஏற்கனவே நீ ஒரு கெட்ட சூனியக்காரியைக் கொலை பண்ணியிருக்கியே! வாழ்த்துக்கள். மேற்குத் திசையோட கெட்ட சூனியக்காரியையும் நீ கொலை பண்ணனும். அப்ப தான் நான் உனக்கு உதவுவேன்” என்றார்.

“அன்னைக்கு நான் வேணும்னே கொலை பண்ணலை. என்னோட வீடு விழுந்து அந்த கெட்ட சூனியக்காரி இறந்து போனதே எனக்கு மனசுக்குக் கஷ்டமா இருக்கு. என்னால இதுக்கு மேலே யாரையும் கொல்ல முடியாது” என்றாள் டாரத்தி.

“அப்ப என்னால உனக்கு உதவ முடியாது” என்று அந்த தலை கூறிவிட்டு ஒரு நொடியில் மறைந்து விட்டது. சோகத்துடன் தான் தங்கி இருந்த அறைக்குத் திரும்பினாள் டாரத்தி.

அடுத்த நாள் சோளக்கொல்லை பொம்மை பெரிய மந்திரவாதியை சந்திக்கச் சென்றது. அன்று மந்திரவாதி, நீளமான பச்சை உடையை அணிந்து, உடல் முழுவதும் மரகதக் கற்களாலான நகைகளை அணிந்திருந்த அழகிய பெண்மணியாகத் தோன்றினார்.  தனக்கு உலகின் சிறந்த மூளை வேண்டும் என்று சோளக்கொல்லை பொம்மை கேட்க, மந்திரவாதி, “உலகத்திலேயே சிறந்த மூளையை உனக்குத் தரேன். ஆனா நீ அதுக்கு முன்னாடி மேற்கு திசையோட கெட்ட சூனியக்காரியைக் கொலை செய்யணும்” என்றார். தன்னால் முடியாதே என்று நினைத்த சோளக்கொல்லை பொம்மை சோகத்துடன் திரும்பியது.

wizard oz ed30
படம்: அப்புசிவா

 மூன்றாவது நாள் வந்தது. அன்று தகரமனிதன் பெரிய மந்திரவாதியை சந்திக்க வேண்டிய நாள். அன்று பெரிய மந்திரவாதி யானை போன்ற பெரிய உருவத்துடன், காண்டாமிருகத்தை போன்ற தலையுடனும் தோன்றினார். அவரின் உடலில் நிறைய முடிகள் இருந்தன. ஐந்து கைகளும் ஐந்து கால்களும் இருந்தன. “நான் தான் பெரிய மந்திரவாதி” என்று கொடூரமான குரலுடன் அவர் தகரமனிதனிடம் சொல்ல,

“எனக்கு ஒரு இதயம் வேணும். அதை வச்சு நான் எல்லார் மேலேயும் அன்பு செலுத்துவேன்” என்றான் தகர மனிதன். “உலகத்திலேயே ரொம்ப அன்பான இதயத்தை நான் உனக்குத் தரேன். ஆனா அதுக்குப் பதில் நீ மேற்குத் திசையோட கெட்ட சூனியக்காரியைக் கொல்லணும்” என்றார் பெரிய மந்திரவாதி. தகர மனிதனும் தலையைக் குனிந்தவாறு அங்கிருந்து சென்றான்.

 நான்காம் நாள் சிங்கம் மந்திரவாதியைச் சந்திக்கச் சென்றது. அன்று பெரிய மந்திரவாதி ஒரு பெரிய நெருப்புப் பந்தாகத் தோற்றமளித்தார். “எனக்கு நிறைய தைரியத்தைக் கொடுக்கணும் நீங்க” என்று சிங்கம் கேட்டுக்கொள்ள, “சூனியக்காரியை நீங்க கொல்லாமல் என்னால எதுவும் செய்ய முடியாது” என்று அதே பதிலைக் கூறினார் மந்திரவாதி. சிங்கமும் தன் நண்பர்களிடம் திரும்பிச் சென்று நடந்ததைச் சொன்னது.

 டாரத்தியும் அவளது நண்பர்களும் சேர்ந்து என்ன செய்யலாம் என்று யோசித்தனர். “கெட்ட சூனியக்காரியைக் கண்டுபிடித்துக் கொல்றதைத் தவிர நமக்கு வேற வழி இல்லை” என்றது சிங்கம். அனைவரும் அதை ஏற்றுக் கொள்ளவே, மறுநாள் அவர்கள் கிளம்பினர்.

 கோட்டைக் காவலர் அவர்களிடம், “பத்திரமா இருங்க. ஜாக்கிரதையா போயிட்டு வாங்க. அந்த கெட்ட சூனியக்காரி உங்களை அடிமைகளா மாத்தினாலும் மாத்திடுவா. அவ ரொம்ப மோசமானவ” என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

-தொடரும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments