ஞாயிற்று கிழமை மாலை.. பக்கத்திலிருந்த பார்க்குக்கு அனுவையும் வினுவையும் அழைத்துச் சென்று அவர்கள் ஓர் ஆட்டம் ஆடியும் அலுத்துப் போகாமலிருக்க, அவர்களை அள்ளி உருட்டி வெளியே வந்தால், அதுவரை எட்டிப் பார்க்காத பசி அரக்கன், ஓடி வந்து சுட்டிகள் இருவரையும் ஒட்டிக் கொள்ள, அவர்கள் நச்சு தாங்காமல் இருவரையும் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர் அம்மாவும் அப்பாவும்.

நவீன தலைமுறைக் குழந்தைகளாய் மெனுகார்டை லாவகமாய் பயன்படுத்தி அ முதல் ஃ வரை ஆர்டர் செய்தனர் அனுவும் வினுவும். அத்தனையும் கொரித்து விட்டு வீட்டுக்குக் கிளம்பி, கை கால் கழுவி, பள்ளி கொள்ள, படுக்கைக்கு வர மணி பத்து ஆனது.

படுத்ததும், “அப்பா.. கதை!” என்று அனு இழுத்தாள்.

“டயர்டா இருக்குதுல்ல.. தூங்கலாமே..”

“அப்பா.. ப்ளீஸ்!” இது வினு.

“ம்.. சரி..” என்று சில நொடிகள் கண்மூடி படுத்திருந்தார் அப்பா.

“அப்பா.. தூங்கிட்டீங்களா?” இரகசியக் குரலில் அனு.

மெலிதாய் புன்னகைத்த அப்பா, “கதை யோசிச்சேன்டா.. சொல்றேன், கேளுங்க..”

“ஓகே..ஓகே..” ஆரவாரமாய் இருவரும் கூற, ‘இவர்கள் உடலில் இன்னும் எனர்ஜி எப்படி இருக்கு!?’ என்ற ஆச்சர்யத்தில் அமைதியாய் அம்மா பார்த்திருந்தார்.

“ஒரு ஊர்ல ஒரு ஹோட்டல் இருந்தது. அங்கே பல வகையான உணவுகள் இருந்துச்சு..” நடுவில் படுத்திருக்கும் இருவரையும், இரவு விளக்கின் ஒளியில் பார்க்கும்படி ஒரு பக்கமாய் சாய்ந்து படுத்தார் அப்பா.

“நம்ம இன்னைக்குப் போனோமே அது மாதிரியாப்பா?”

“யெஸ்.. ஒரு நாள் அங்கே இருக்கிற உணவுகளுக்குள்ள சண்டை வந்துடுச்சி.. யார் பெரியவங்கன்னு.. எல்லோரும் , “நான்தான்! நான்தான்!”;என்று கூச்சலிட கோபம் கொண்ட‌ எலுமிச்சை ஜூஸ் மேஜையில் ஏறியது. “அமைதியாய் இருங்கப்பா! இப்போ என்ன? யார் பெஸ்ட்ன்னு முடிவு பண்ணனும், அவ்ளோதானே? ‘மக்கள் முடிவே மகேசன் முடிவு! எந்த உணவை மக்கள் நிறைய முறை ஆர்டர் பண்ணியிருக்காங்கன்னு பார்ப்போம். அதுதான் பெஸ்ட் உணவுன்னு முடிவு பண்ணிடலாம்.‌என்ன சொல்றீங்க?” என்க, அனைத்து உணவுகளும், “சரிதான்.. சரிதான்.. ” என்று தலையை ஆட்டினாங்க. , இனிப்பு சீரகம் பில்லிங் புக்கை ஆராய்ச்சி செய்தது. அரை மணி நேரம் கழிச்சி சொன்னது, எல்லா உணவுகளையும் விட அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டது, சிக்கன் பிரியாணியும் சாக்லேட் ஐஸ்க்ரீமும்!” என்று.

chicken biriyani
படம்: அப்புசிவா

“ரெண்டுல எது அதிகம்பா?”

“இதே கேள்வியைத் தான் அங்கேயும் கேட்டாங்க. அதுக்கு  இனிப்பு சீரகம் சொன்னது, “ரெண்டு பேரும் சரியா ஒரே எண்ணிக்கையில ஆர்டர் செய்யப்பட்டிருக்காங்க”ன்னு.

உடனே சிக்கன் பிரியாணியும் சாக்லேட் ஐஸ்க்ரீமும், “நான்தான்! நான்தான்!” என சண்டையிட ஆரம்பிச்சிட்டாங்க.”

“மறுபடியுமா?”

“ஆமா.. உடனே எலுமிச்சை ஜூஸ் முன்னே வந்து, “சண்டை போடாதீங்க ப்பா.. நீங்க ரெண்டு பேரும் வந்து உங்களோட பாஸிட்டிவ் மற்றும் நெகட்டிவ் பாய்ண்ட்ஸ்களை சொல்லுங்க. நான் தீர்ப்பு சொல்றேன் யார் பெஸ்ட்ன்னு.” அப்படின்னு சொன்னதும் , சிக்கன் பிரியாணியும் சாக்லேட் ஐஸ்க்ரீமும் மேஜை மேல் ஏறுனாங்க. சுத்தி எல்லா உணவும் ஆடியன்ஸா உட்கார்ந்தாங்க ..”

“எந்த உணவுலாம் இருந்துச்சிபா?”

“ஸ்வீட் கார்ன் சூப், சிக்கன் தந்தூரி, சிக்கன் க்ரில், பனீர் 65, பரோட்டா, நான், பனீர் பட்டர் மசாலா, ஃப்ரைட் ரைஸ், கேக், க்ளோப் ஜாமுன் எல்லாம் உட்கார்ந்தது.”

“அப்பா.. சிக்கன் லாலிபாப்!” என்று வினு தன் அறிவையும் அரிசிப்பல்லையும்  காட்ட, “ம்.. அதுவும் இருந்துச்சிடா..” என்று‌ அப்பா அவன் தலையில் செல்லமாய் கொட்டிவிட்டு கதையைத் தொடர்ந்தார், “சிக்கன்‌பிரியாணி சொன்னது, “எல்லோரும் ஹோட்டலுக்கு வந்ததும்‌ என்னைத்தான் கேட்பாங்க. நான்னா அவ்ளோ இஷ்டம்னு. அதற்கு ஐஸ்க்ரீம், “எத்தனை சாப்பிட்டாலும் எனக்குன்னு கொஞ்சம் இடம்‌வச்சி என்னை சாப்பிடாம சாப்பாட்டை முடிக்க மாட்டாங்க.‌நான்னா அவ்ளோஓஓ இஷ்டம்..” னு இழுத்தது”.

“என் வாசம் வந்தாலே எல்லோருக்கும் வாயில் எச்சில் ஊற ஆரம்பிச்சிடும். சும்மா, ‘கம கம’ன்னு இருப்பேன்” னு பிரியாணி சொல்லுச்சி. அதுக்கு ஐஸ்க்ரீம், “நான்‌ சாஃப்ட்டா இருப்பேன்; வாயில் வச்சதும் அப்படியே கரைஞ்சிடுவேன்; என்னைப் பத்தி நினைச்சாலே எல்லோருக்கும் வாயில் எச்சில் ஊறும்.” னு சொன்னது.

“பதிலுக்கு சிக்கன் பிரியாணி, “பேசிக்கா நான் ஒரு புரதச்சத்துள்ள உணவு.‌என்னைச் சாப்பிட்டா புரோட்டின் கிடைக்கும்.”

“ம்க்கும். என்னைச் சாப்பிட்டா கூட எனர்ஜி கிடைக்கும்.” என்ற‌ ஐஸ்க்ரீம் ஆரோக்கியம் டிபார்ட்மென்ட்டில் தான் ரொம்ப வீக் என்று புரிந்ததால், சிக்கன் காலை வார ஆரய்பித்தது, “உன்னைச் சாப்பிட்டா புரோட்டின் கிடைக்கும் தான். ஆனா அது வீட்ல செஞ்சா. இங்கே எவ்ளோ கெமிக்கல்ஸ் போடுறாங்க. பயன்படுத்தும் சிக்கன் பல இடங்கள்ல பதப்படுத்தப்பட்டதுதான். கலரா இருக்க, கலர் பவுடர் போடுறாங்க; அரிசி சாஃப்ட்டா இருக்க அஜினமோட்டோ போடுறாங்க. அது சாப்பிட்டா குடல் கெட்டுப் போயிடுமாம்.”

“அது செய்ற‌ இடத்தைப் பொறுத்து இருக்கு. உனக்கும்தான் ஆயிரம் ப்ரிசர்வேட்டிவ் போடுறாங்க.‌கலர் கலரா எசன்ஸ் ஊத்துறாங்க. நீதான் பெரிய ஜங்க் ஃபுட்.”

“சரி.. சரி.. நிப்பாட்டுங்க. நான் தீர்ப்பு சொல்றேன். உங்க தரப்பு பாயிண்ட்சையெல்லாம் வைத்து யோசிச்சத்துல்ல, ரொம்ப சிறந்த உணவு எதுன்னா,.. ” என்று அனைவரையும் ஒரு நொடி சஸ்பென்சில் வைத்த எலுமிச்சை ஜூஸ் , “அது, நம்ம தண்ணீர் தான். ” என்று சத்தமாகக் கூற, ஆச்சர்யத்தில் தண்ணீர் ஜக் தலை நிமிர, “ஏன்?” “எப்படி?” என்று ஆங்காங்கே சத்தம் எழுந்தது.

“அமைதி!அமைதி! எப்படின்னு நான் சொல்றேன். இந்த ஹோட்டல்ல எல்லோரும் நிறைய முறை கேட்குறது தண்ணீர்தான்; உள்ளே வந்ததும் முதல்ல கேட்குறது தண்ணீர்தான்; தாகமா வர்றவங்களோட தாகத்தைத் தீர்க்குது; வெயில் காலத்துல  ரொம்ப முக்கியமான நீர்ச்சத்து கொடுக்குது; சுத்தமா வச்சிருந்தா, அதனால் உடம்புக்கு எந்த கெடுதியும் கிடையாது.  அதனால் தண்ணீர்தான்  பெஸ்ட் உணவு!” என்று எலுமிச்சை ஜூஸ் சத்தமாய் சொல்ல, எல்லா உணவுகளும்‌, ஹேஏஏஏ!” என்று ஆரவாரமாய்க் கைதட்ட, கம்பீரமாய் நின்றது தண்ணீர் ஜக்..”

“வாவ்.. சூப்பர்பா.. தண்ணீர்  ஜெயிச்சிடுச்சி.. ” என்று அனுவும் வினுவும் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள, அம்மா புன்னகைத்தபடி , “இதுல்ல இருந்து என்ன தெரியுது?” என்றார்.

இருவரும் ஒன்றும் சொல்லாமல் பதிலுக்காக அப்பாவைப் பார்க்க, அப்பா புன்னகைத்தபடி, “அடுத்தமுறை  வெளியே போனா, தண்ணீர் மட்டும் வாங்கிக் குடிச்சிட்டு வீட்டுக்கு வந்துடனும். அதுதான் உங்க உடம்புக்கும் நல்லது.. அப்பா பர்சுக்கும் நல்லது!!” என்க, ” அப்பாஆஆ!” என்று செல்லமாய் சிணுங்கினர் சுட்டிகள் இருவரும். 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments