ஒரு முறை ஒரு வீட்டில் இருந்தவர்கள் வெளியூருக்குச் சுற்றுலா சென்றனர். அவர்கள் போவதற்கு முன்பு, வேலைக்காரர்களையும் வெளியே அனுப்பிவிட்டு, வீட்டைப் பூட்டிக் கொண்டு சென்றனர்.

அவர்கள் பசுமைக் குடிலுக்குள் வைத்து இருந்த பூச்செடிகளுக்குத்  தண்ணீர் ஊற்றாமல் காய்ந்து போகும்படி, விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். அந்தப் பரிதாபமான அழகிய பூச்செடிகளை நினைத்துத் தேவதைகள் கவலைப்பட்டன.

“நாம இந்தப் பூச்செடிகளுக்கு உதவ முடியாதா?” என்று அவை பேசிக் கொண்டன. கண்ணாடியால் அமைக்கப் பட்டிருந்த அந்தப் பசுமைக்குடிலை அவை சுற்றிச் சுற்றி வந்தன. கண்ணாடி வழியே அந்தப் பூக்களைப் பார்த்துக் கொண்டே வந்த போது, ஒரு இடத்தில் கண்ணாடி கொஞ்சம் விரிசல் விட்டு உடைந்திருப்பது தெரிந்தது.

எல்லாத் தேவதைகளும் கைகளில் பனித்துளிகளை எடுத்துக் கொண்டன. உடைந்த கண்ணாடி வழியே உள்ளே பறந்து சென்று, செடிகள் மீது தெளித்தன. ஆனால் செடிகளுக்கு இந்த ஒரு சொட்டு நீர் போதுமானதாக இல்லை. இந்தப் பனித்துளிகளால் அவற்றின் தாகம் கொஞ்சமும் தீரவில்லை.

Next door boy
படம்: அப்புசிவா

“நாம எப்படி இதுங்களுக்கு உதவுறது?” என்று அந்தத் தேவதைகள் பேசிக் கொண்டே இருந்தன. அதற்கான வழியை அவைகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவற்றுள் மிக அழகுடனும், அறிவுடனும் இருந்த ஒரு தேவதை எங்கோ பறந்து சென்றது. 

“எதைப் பத்தியும் கவலைப்படாம, அவ எப்பிடியிருக்கா பாரு?” என்று மற்ற தேவதைகள், தங்களுக்குள் அந்தத் தேவதையைப் பற்றிப் பேசிக்கொண்டன.

மறு நாள் அந்தப் பசுமைக்குடிலுக்குள் இருந்த பூக்கள் மேலும் வாடித் தொங்கின. கடைசி மூச்சை விடப் போவதற்கு முன்பு, ‘தண்ணீர்’ ‘தண்ணீர்’ என்று அவை முனகின.

அப்போது பக்கத்து வீட்டிலிருந்த குட்டிப்பையன் சுவர் வழியாக மேலே ஏறி கண்ணாடி வழியே அந்தப் பூக்களைப் பார்த்தான். உடைந்த கண்ணாடி வழியாக உள்ளே சென்று, அந்தச் செடிகளுக்குத் தினமும் நீர் ஊற்றினான்.

“அவனுக்கு எப்படி இந்த யோசனை வந்துச்சி?” என்று அந்தத் தேவதைகள் கேட்டுக் கொண்டன.

“நான் தான் அதைச் செஞ்சேன்” என்று அந்தப் புத்திசாலி தேவதை, பதில் சொன்னது.

“நீங்க எல்லாரும் பேசிக்கிட்டு இருந்தப்ப, நான் அங்க போனேன். அவன் தலைகாணியில ஒக்கார்ந்து தண்ணியில்லாம வாடுற இந்தப் பூச்செடிகளைப் பத்திச் சொன்னேன். அவன் அது ஒரு கனவுன்னு நெனைச்சிக்கிட்டான். ஆனா நமக்கும் இந்தப் பூக்களுக்கும் தான், நடந்த உண்மை தெரியும்”. என்று அந்தத் தேவதை சொன்னது.

சில நாட்களுக்குப் பிறகு, சுற்றுலாவிலிருந்து அந்த வீட்டினர் திரும்பி வந்தனர். பூச்செடிகள் காய்ந்து போகாமல், உயிருடன் இருப்பதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.

பக்கத்து வீட்டுக் குட்டிப்பையன் பூச்செடிகளின் மீது வைத்த அன்பையும் அக்கறையையும் பார்த்து மிகவும் மகிழ்ந்தனர். அந்த வீட்டின் உரிமையாளர் எல்லாச் செடிகளையும் அவனிடமே கொடுத்து விட்டார். புதிதாக அவருக்குச் சில செடிகளை வாங்கிக் கொண்டார்.

(ஆங்கிலம் – ஈ.நெஸ்பிட்)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments