ஒரு ஓட்டு வீட்டில் இரண்டு சிட்டுக்குருவிகள் கூடு கட்டி வசித்தன.  அவை இரண்டும் சேர்ந்து தானியங்களையும், விதைகளையும் சேகரித்துத் தின்பது வழக்கம்.

அவற்றுக்கு ஒரு நாள் கொஞ்சம் அரிசி கிடைத்தது. அதை ஒரு மண்பானையில் போட்டுச் சோறு சமைக்கலாம் என முடிவு செய்தன.  

பெண் குருவி சமைத்து முடித்தவுடன், சோற்றை இரண்டு சம பங்காகப் பிரித்தது. மனைவி சாப்பிட வரும் வரை, ஆண் குருவியால் பொறுத்து இருக்க முடியவில்லை. அவசரமாக அதன் பங்கை எடுத்துத் தின்று முடித்தது.

அப்போது தான் வேலையை முடித்து வந்த மனைவியை, ஓய்வு எடுக்க விடாமல், “போய்த் தண்ணி எடுத்துட்டு வா” என்று அதிகாரம் பண்ணியது ஆண்குருவி. 

பெண் மிகவும் நல்ல குருவி. கணவன் அதிகாரம் பண்ணியதைப்  பொருட்படுத்தாமல், தண்ணீர் எடுக்க உள்ளே சென்றது. அது உள்ளே போன சமயத்தில், மனைவியின் பங்கையும் எடுத்து, ஆண்குருவி காலி பண்ணி விட்டது. 

பெண் குருவி தண்ணீர் கொடுத்து விட்டுத் திரும்பிப் பார்த்தால், அதன் பங்குச் சோற்றைக் காணோம். 

“என் சோறு எங்க போச்சு?” என்று பெண் குருவி குழம்பியது. ஆண் குருவியைத் திரும்பிப் பார்த்த போது, அது திருட்டு முழி முழித்தது.

“ஏன் என்னோட பங்கையும் சாப்பிட்டே?” என்று கணவனிடம் சத்தம் போட்டது, பெண்.

“நான் உன் சாப்பாட்டைத் தொடவே இல்லை” என்று கோபமாகச் சொன்னது ஆண்குருவி.

“எனக்கு நல்லாத் தெரியும். நீதான் தின்னுருக்கே. திருதிருன்னு நீ முழிக்கிறதைப் பார்த்தாலே, உன் திருட்டுத்தனம் தெரியுது” என்றது பெண். 

பல முறை கேட்டும், “நான் தின்னவேயில்லை” என்று ஆண்குருவி சாதித்தது 

தப்பு செய்பவர்கள் கோபத்தை வெளிப்படுத்தி, தங்கள் திருட்டுத்தனத்தை மறைப்பதைப் போலவே, ஆண்குருவியும் பயங்கரமாகக் கோபப்பட்டது.

“நீ பொய் சொல்றியா, உண்மையைச் சொல்றியான்னு கண்டுபிடிக்க, எனக்கு ஒரு வழி தெரியும். என்கூட வா” என்று சொல்லிவிட்டுப் பெண்குருவி, ஒரு கிணற்றை நோக்கிப் போனது.

கிணற்றின் மேலே இருந்த சுவரில் ஒரு சின்னக் கயிற்றை நீட்டி வைத்தது. அதன் நடுவில் பெண் குருவி உட்கார்ந்தது.

“நான் பொய் சொன்னா, இந்தக் கிணத்துல விழுந்துடுவேன்” என்றது

கொஞ்ச நேரம் ஆன பிறகும், பெண்குருவி கிணற்றில் விழவில்லை.

அடுத்து ஆண்குருவி அதில் உட்கார்ந்தது. 

“நான் பொய் சொன்னா, இந்தக் கிணத்துல விழுந்துடுவேன்” என்றது. அது சொல்லி முடிக்கவில்லை. அடுத்த நொடி, அது கிணற்றுக்குள் விழுந்து விட்டது. அது உள்ளே விழுந்தவுடன், பெண்குருவி மிகவும் வருந்தியது. 

“என் சாப்பாட்டைத் தின்னதுக்காக, நானே என் கணவனைக் கொன்னுட்டேனே” என்று அழுதது.

அப்போது அங்கே ஒரு பூனை வந்தது. “என்ன விஷயம்?” என்று கேட்டது.

cat sparrow
படம்: அப்புசிவா

“என் கணவன் இந்தக் கிணத்துக்குள் விழுந்துட்டான். அவனை எப்படித் தூக்குறதுன்னு தெரியலை” என்றது குருவி.

“நான் அவனை வெளியே கொண்டு வரேன்; அப்படிக் கொண்டு வந்தா என்னைத் தின்ன விடுவியா?” என்று பூனை கேட்டது.

“கண்டிப்பா நீ தின்னலாம்” என்றது குருவி.

உடனே பூனை கிணற்றுக்குள் இறங்கி, ஆண் குருவியை மேலே தூக்கி வந்தது.

மேலே வந்தவுடன், “நீ வாக்கு அளித்தபடி, இப்ப நான் இவனைத் தின்னப் போறேன்” என்றது பூனை.

“சரி தின்னலாம். ஆனா உன் வாய் ரொம்ப அசுத்தமா இருக்கு. இப்ப தான் நீ சுண்டெலியைத் தின்னு இருக்கே? சரி தானே?” என்று கேட்டது பெண் குருவி. 

“ஆமாம். தின்னேன்; அதுக்கென்ன இப்ப?” என்று கேட்டது பூனை.

“நாங்க பறவைங்க; ரொம்ப சுத்தமா இருப்போம்; சாப்பிடுறதுக்கு முன்னாடி, உன் வாயை நல்லாக் கழுவிட்டு வா” என்றது குருவி.

பூனையும் “சரி”யென்று சொல்லிவிட்டுப் போய், வாயை நன்றாகக் கழுவிவிட்டுத் திரும்பி வந்தது.

பெண் குருவி பூனையை நன்றாக உற்றுப் பார்த்தது. “உன் மீசையைக் சரியாக் கழுவுல; அது இப்பவும் அழுக்காத் தான் இருக்கு” என்றது குருவி. 

பூனை மீண்டும் அதன் மீசையைக் கழுவச் சென்றது.

அதுவரை ஆண்குருவி கிணற்றின் சுவரில் உட்கார்ந்து இருந்தது. நீரில் நனைந்து ஒட்டி இருந்த அதன் சிறகுகள், இப்போது வெயிலில் நன்றாகக் காய்ந்து விட்டன.

“அன்பே! நீ இப்ப பறக்கலாம்; வா போயிடுவோம்” என்றது பெண்குருவி.

பூனை திரும்பி வந்த போது, இரண்டும் சேர்ந்து பறந்துவிட்டன.

பூனைக்கு மிகவும் ஏமாற்றம். ‘நான் இவ்ளோ முட்டாளா இருந்திருக்கக் கூடாது’ என்று தன்னைத் தானே நொந்து கொண்டது.

(இந்திய நாட்டுப்புறக்கதை)

(ஆங்கிலத்திலிருந்து தமிழில் – ஞா.கலையரசி)

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments