இதுவரை:

டாரத்தி என்ற சிறுமியின் மரவீடு ஒரு பெரிய சுழல் காற்றில் சிக்கிப் பறந்து சென்றது. அது சென்று இறங்கிய இடம் ஒரு மந்திர நகரம். டாரத்தியும் அவள் செல்ல நாய் டோட்டோவும் அந்தப் புதிய நகரத்திற்குள் காலடி எடுத்து வைக்க, அவர்களை ஒரு நல்ல சூனியக்காரி வரவேற்றார். அங்கிருக்கும் கெட்ட சூனியக்காரி ஒருவரை அழிப்பதற்கு டாரத்தி தான் உதவ வேண்டும் என்று அவரும் அவரது உதவியாளர்களும் கேட்டுக் கொண்டனர். அதற்காக டாரத்தியை மரகத நகரத்தில் இருக்கும் பெரிய மந்திரவாதியை சந்திக்குமாறு கூறினர்.

2. புதிய நண்பர்கள்

மரகத நகரத்திற்குச் செல்லும் வழியில் டாரத்தி ஒரு சோள காட்டு பொம்மையை பார்த்தாள்‌. அது ஒரு வயலின் நடுவிலிருந்த பெரிய கம்பின் உச்சியில் மாட்டி வைக்கப்பட்டிருந்தது. அந்த சோளக்காட்டு பொம்மைக்கு பேசத் தெரியும். அதனால் அது டாரத்தியைக் கூப்பிட்டு, ‘என்னை கொஞ்சம் கீழே இறக்கி விடேன்’ என்று கேட்டது. டாரத்தியும் இறக்கி விட்டாள்.

“நீ எங்கே போறே?” என்று சோளக் காட்டு பொம்மை கேட்க,

“நான் பெரிய மந்திரவாதியை சந்திக்க மரகத நகரத்துக்குப் போறேன். அவர் என்னை கான்சாஸில் இருக்கிற என்னோட வீட்டுக்கு போறதுக்கு உதவி பண்ணுவார்” என்றாள் டாரத்தி.

“நானும் வரலாமா? என்னுடைய தலைக்குள்ள வைக்கோல் தான் இருக்கு. மூளையே இல்லை. பெரிய மந்திரவாதி நினைச்சா எனக்கு கொஞ்சம் மூளை கொடுக்க முடியும்” என்று சோளக் காட்டு பொம்மை கேட்டது.

“தாராளமா வா என் எனக்கும் துணைக்கு ஒரு ஆளாச்சு” என்றால் டாரத்தி. டோட்டோ, டாரத்திசோளக் காட்டு பொம்மை மூன்று பேரும் வெகு தூரம் நடந்து சென்றனர். இரவாகி விட்டது. சாலையும் கரடு முரடாக இருந்தது. அங்கிருந்த ஒரு சிறு குடிசைக்குள் மூவரும் நுழைந்தனர். டாரத்தி உடனடியாகத் தூங்கி விட்டாள்.

 மறுநாள் காலையில் அவள் கண்விழித்துப் பார்க்கையில் யாரோ முனகும் சத்தம் கேட்டது. வெளியே சென்று பார்க்க, ஒரு மரத்தின் அருகில் தகரத்தால் ஆன ஒரு மனிதன் இருந்தான். அவன் கையில் ஒரு கோடரியை வைத்திருந்தான்.

“நீ தான் இப்ப உறுமினியா? ஏன்? என்றாள் டாரத்தி.

“என்னுடைய மூட்டுகள் எல்லாம் துருப்பிடிச்சுப் போயிடுச்சு. அதனால எனக்கு ரொம்ப வலி எடுக்குது.. உன்னால கொஞ்சம் எண்ணெய் போட்டு விட முடியுமா?” என்று கேட்டான் அந்த தகர மனிதன்.

குடிசைக்குள் சென்று கொஞ்சம் எண்ணெய் தேடி எடுத்து வந்தாள் டாரத்தி. இரும்பு மனிதனின் கை, கால்களில் அதை அவள் தடவி விட்டதும் இரும்பு மனிதனுக்கு வலி வெகுவாகக் குறைந்தது. “ரொம்ப நன்றி! நீங்க யாரு, எங்க போறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்றான் தகர மனிதன்.

 டாரத்திவிவரத்தைச் சொல்ல, “நான்  முன்னாடி ஒரு நாள் இதே மாதிரி காட்டுல விறகு வெட்டிக் இருக்கும்போது கிழக்கு திசையோட கெட்ட சூனியக்காரி வந்து என்னுடைய இதயத்தை திருடி எடுத்துக்கிட்டு என்னையும் தகர மனிதனா மாத்திட்டாங்க. நானும் உன் கூட வரவா? பெரிய மந்திரவாதி எனக்கு புதுசா ஒரு இதயம் தருவாரா?” என்று இரும்பு மனிதன் கேட்க,

“எனக்குத் தெரியல.. இருந்தாலும் முயற்சி பண்ணிப் பாக்குறதுல தப்பு இல்லன்னு நினைக்கிறேன்” என்றாள் டாரத்தி. அதனால் அந்த மூவர் கூட்டணியுடன் நான்காவதாக இரும்பு மனிதனும் சேர்ந்து கொண்டான்.

டாரத்தியும் அவளது நண்பர்களும் நடந்து சென்று கொண்டிருக்கையில் அவர்கள் ஒரு சிங்கத்தைத் சந்தித்தனர். அந்த சிங்கம் டோட்டோவைப் பார்த்து உறுமியது. கடிக்க வருவதைப் போல் அருகில் வந்தது. டாரத்திக்குக் கோபம் வந்துவிட்டது. “என்னோட செல்ல நாயையா மிரட்டுற?” என்று தைரியமாக அதன் அருகில் போய் அதன் மூக்கிலேயே ஒரு குத்து விட்டாள்.

wizard 2
படம்: அப்புசிவா

‘கோபத்தில் அடிச்சுட்டோமே! அய்யய்யோ சிங்கம் நம்ம மேல பாயப் போகுது’ என்று பயந்தாள். ஆனால் சிங்கமோ அழ ஆரம்பித்து விட்டது. “அழாதே! என்னாச்சு” என்று அதை சமாதானம் செய்த பின் டாரத்தி கேட்க,

“நான் தான் இந்தக் காட்டோட ராஜா. ஆனா எனக்கு தைரியமே இல்லை. நான் கோழையா இருக்கேன்” என்று வருத்தத்துடன் சொன்னது சிங்கம்.

“நீ வேணா எங்க கூட வாயேன். பெரிய மந்திரவாதியை சந்திக்கப் போறோம் நாங்க. அவர் உனக்கு தைரியத்தைத் தந்தாலும் தருவார்” என்று சோளக் காட்டு பொம்மை சொல்ல, மகிழ்ச்சியுடன் சிங்கம் தலையாட்டியது.

 ஐந்து நண்பர்களும் பல நாட்கள் காட்டினூடே பயணித்து ஒரு வயலை வந்தடைந்தனர். அது ஒரு போதைப் பொருளை விளைவிக்கும் காடு. அந்த போதைப் பொருளின் வாசனை மிகக் கடுமையானதாக இருந்ததால் அந்த வயலுக்குள் நுழைந்தவுடனேயே டாரத்தி படுத்துத் தூங்கி விட்டாள். அவளது நண்பர்களால் அவளை எழுப்ப முடியவில்லை. தகர மனிதனும் சோளக் காட்டு பொம்மையும் மனிதர்கள் இல்லாததால் அவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை.

“இப்படியே விட்டோம்னா டாரத்தி இறந்து போயிடுவா” என்று கூறிய சோளக்காட்டு பொம்மை, “டோட்டோ, நீயும் சிங்கமும் இரண்டு பேரும் இந்த வயல்ல ரொம்ப நேரம் நிக்காதீங்க. வேகமா ஓடி இதைக் கடந்து போயிடுங்க. நாங்க டாரத்தியைத் தூக்கிக்கிட்டு வர்றோம். நீங்களும் மயங்கி விழுந்துட்டீங்கன்னா எங்களால தூக்க முடியாது” என்று கூறினர்.

டாரத்தியை அவர்கள் பத்திரமாக அந்த வயலைத் தாண்டி கொண்டு சென்றனர். திரும்பிப் பார்த்தால் சிங்கம் அவர்களுடன் வரவில்லை. பாதி வழியிலேயே சிங்கத்துக்கும் அந்த செடியின் வாசனை தாக்கி மயக்கம் வந்துவிட்டது. டாரத்தியை ஒரு ஆற்றின் கரையருகே பத்திரமாகப் படுக்க வைத்து விட்டு சிங்கத்தை எப்படிக் காப்பாற்றலாம் என்று நண்பர்கள் தீவிரமாக யோசித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு எளிய விலங்கிடமிருந்து அவர்களுக்கு உதவி கிடைத்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments