பல்லாண்டு காலமாக நாம் செவி வழியே கேட்டு வளர்ந்த சில பாரம்பரியக் கதைகளை இந்தத் தொடரில் என்னுடைய நடையில் தரப் போகிறேன்.
- ஏழை விவசாயியும் பேசும் பாத்திரமும்
ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருத்தன் வசித்து வந்தான். ஒரு சிறிய துண்டு நிலம் தான் அவனிடம் இருந்தது. அதில் ஏதோ தன்னால் முடிந்த அளவு விவசாயம் செய்து பிழைத்து வந்தான். மிகக் குறைந்த வருமானம் தான். உணவுக்கும், உடைக்கும் தேவையான வருமானம் சிறிதளவு கிடைத்தது.
ஒருமுறை கொடும் பஞ்சம் வந்து அந்தப் பகுதியில் தலைவிரித்தாட, மக்கள் உண்ண உணவில்லாமல் வறுமையில் வாடிப் போனார்கள். விவசாயியிடம் இருந்தது அவன் வசித்து வந்த குடிசையும் ஒரு பசுவும் தான். அவனும் அவனுடைய மனைவியும் மட்டும் தான் அந்தக் குடும்பத்து உறுப்பினர்கள். நிலத்தில் விதைக்க விதை நெல் இல்லை. சமைக்க எந்த தானியமும் இல்லை. சமையலறையில் எல்லா டப்பாக்களும் காலி. பரிதாபமான நிலை. பசுவுக்கும் தீவனம் போட முடியாத நிலை. அது கறக்கும் பாலும் மிகக் குறைவாகத் தான் கிடைத்தது.
இந்த நிலையில் தங்களிடம் இருக்கும் பசுவை விற்று விடலாமென்று அவர்கள் முடிவு செய்தார்கள். விவசாயி தன்னுடைய பசுவை ஓட்டிக் கொண்டு அருகிலிருக்கும் சந்தைக்குக் கிளம்பினான்.
மாட்டை விற்கும் பணத்தில் வீட்டிற்குத் தேவையான சாமான்களைக் கணவன் வாங்கி வருவான் என்ற நம்பிக்கையுடன் விவசாயியின் மனைவி மனதில் உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு அவன் திரும்பி வருவதற்காகக் காத்துக் கொண்டிருந்தாள்.
சந்தைக்குப் போகும் வழியில் விவசாயி, ஒரு முதியவரைச் சந்தித்தான். ஏழ்மையான தோற்றம். அவர் கையில் ஒரு பழைய பாத்திரம். பெரிய பாத்திரம். ஆனால் அதிகம் புழங்கப்பட்டதால் கொஞ்சம் அங்கங்கு நெளிந்து பரிதாபமாகத் தெரிந்தது.
” என்னப்பா? சந்தைக்குப் போறயா? “
” ஆமாம் பெரியவரே! நீங்க? “
” நானும் சந்தைக்குத் தான் போறேன். என்ன இந்தப் பசுவைத் தான் விக்கணுமா?”
” ஆமாம் “
” சரி, எனக்கு விலைக்குத் தரயா? “
ஒரு நிமிடம் யோசித்த விவசாயி, ” சரி, என்ன விலை தருவீர்கள்? ” என்று கேட்டான். சந்தை வரை நடக்காமல் போகிற வழியில் வேலை முடிந்தால் நேரம் மிச்சம் தானே என்று மனதிற்குள் கணக்கு போட்டான்.
” விலையா? எங்கிட்ட இருக்கிறது இந்தப் பாத்திரம் தான். பணமெல்லாம் தரமாட்டேன். பசுவைக் கொடுத்துட்டு இந்தப் பாத்திரத்தை வாங்கிக்கோ” என்ற பெரியவரை ஏற இறங்கப் பார்த்தான் விவசாயி.
‘ இவருக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா? இந்தப் பழைய பாத்திரத்துக்கு பதிலா என் மாட்டைக் கேக்கறாரே? இதுக்கு ஒத்துக்க நான் என்ன முட்டாளா? ‘ என்று நினைத்தான்.
” கவலைப்படாதே! உனக்கு நிச்சயமாக நஷ்டம் வராது. இது நல்ல விலை பெறும். நல்ல மனதோடு தான் கொடுக்கறேன் உனக்கு” என்று பெரியவர் சொல்ல, விவசாயி அந்தப் பாத்திரத்தைக் கையில் எடுத்துப் பார்த்தான். ஒருவேளை ஏதாவது விலைமதிப்பற்ற உலோகத்தால் செய்யப்பட்ட பாத்திரமோ என்று நினைத்துக் தான் கையில் எடுத்தான்.
” என்னை வாங்கிக்கோ, என்னை வாங்கிக்கோ” என்று அந்தப் பாத்திரம் விவசாயியிடம் பேச, திடுக்கிட்டுப் பயந்து போன விவசாயி, அந்த முதியவரிடம் பாத்திரத்தைத் திருப்பிக் கொடுத்தான். ‘சாதாரண பாத்திரம் தான், இதுக்கு பதிலாப் பசுவைக் கொடுக்கக் கூடாது ‘ என்று முடிவு செய்து, “வேண்டாம்” என்று சொல்ல வாயைத் திறந்தான்.
” என்னை வாங்கிக்கோ, என்னை வாங்கிக்கோ ” என்று மீண்டும் பேசியது அந்தப் பாத்திரம். சட்டென்று முடிவெடுத்த விவசாயி, மாட்டைக் கொடுத்து விட்டு அந்தப் பாத்திரத்தை வாங்கிக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினான்.
தன் கணவன் கை நிறைய சாமான்களுடன் வருவாரென்று காத்திருந்த விவசாயியின் மனைவி, அந்தப் பாத்திரத்தைப் பார்த்து ஏமாந்து போனாள். பசியோடு சென்று படுத்துக் கொண்டாள்.
அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை. ஊர் முழுவதும் ஏழை மக்கள் அதிகம் வசித்து வந்தார்கள்.யாரிடமும் பண்டிகை கொண்டாடும் அளவு வசதியோ, சூழ்நிலையோ அந்த வருடம் இல்லாததால் ஊர் முழுவதுமே சோர்ந்து கிடந்தது.
அதே ஊரில் ஒரு பெரிய பணக்காரன் இருந்தான். கை நிறையப் பணம், வீட்டில் தங்கம், வெள்ளி, தானியங்கள், காய்கறிகள், பழங்கள் என்று எல்லாம் இருந்தன. அனைத்து வசதிகளும் இருந்தாலும் படு கருவி. யாருக்கும் உதவும் மனம் தான் இல்லை. எச்சில் கையாலும் காக்கை ஓட்டாத குணம் என்பார்களே அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்பவன்.
அடுத்த வாரம் பண்டிகை வருகிறதே, தன்னிடம் இருக்கும் சாமான்களை ஊர் மக்களுக்குத் தெரியாமல் எப்படி ஒளித்து வைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
அங்கே விவசாயியின் வீட்டில் அந்தப் பேசும் பாத்திரம் உருண்டு உருண்டு விவசாயியின் அருகில் வந்து, ” என்னை எடுத்து சுத்தம் செய்” என்று கட்டளையிட்டது. விவசாயியும் அதை எடுத்து நன்றாகத் தேய்த்து சுத்தம் செய்து வைத்துவிட்டு, ஓரமாகப் படுத்துத் தூங்கிப் போனான். அந்தப் பாத்திரம் உருண்டு உருண்டு எங்கோ வெளியே சென்றது.
அந்தப் பணக்காரன் யோசித்துக் கொண்டிருந்த போது அவனெதிரே வந்து காட்சியளித்த அந்தப் பாத்திரத்தைப் பார்த்தான். ‘ அட, இப்படி ஒரு பாத்திரம் நம்ம வீட்டில் இருக்கா? இது நல்ல பெரிய பாத்திரமா இருக்கே? இதில் வைச்சா யாரும் கவனிக்க மாட்டாங்க’ என்று முடிவு செய்து நல்ல விருந்துக்குத் தேவையான அத்தனை பொருட்களையும் அந்தப் பாத்திரத்தில் அடுக்கி வைத்தான். அந்தப் பாத்திரத்திலோ சாமான்களை வைக்க வைக்க நிறைய இடம் இருந்தது. நிறையக் கொள்ளளவு கொண்டதாக இருந்தது. அதில் வைக்க முடிந்த அளவு பொருட்களைத் திணித்து வைத்து விட்டு, வீட்டில் ஒரு மூலையில் அந்தப் பாத்திரத்தை ஒளித்து வைத்து விட்டு நிம்மதியாகத் தூங்கப் போனான்.
அடுத்த நாள் அதிகாலையில் விவசாயியும் அவன் மனைவியும் கண் விழித்தபோது,, கண் முன்னே அந்தப் பாத்திரத்தையும் அதில் நிரம்பியிருந்த பொருட்களையும் பார்த்து ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர். எடுக்க எடுக்கக் குறையாமல் நிறைய அரிசி, பருப்பு, வெல்லம், முந்திரி, நெய், ஏலக்காய், பழங்கள், காய்கறிகள், தேங்காய் என்று எண்ணற்ற பொருட்கள்.
பண்டிகையை நன்றாகக் கொண்டாடிய விவசாயியின் குடும்பம், அக்கம்பக்கத்து ஏழைகளுக்கும் வயிறார உணவளித்து உதவி செய்தார்கள். சில நாட்கள் கவலை இல்லாமல் ஓடின. பாத்திரத்தில் இருந்த பொருட்கள் தீர்ந்ததும் மீண்டும் வீட்டில் வறுமை, பற்றாக்குறை.
பேசும் பாத்திரம் விவசாயியின் முன்னே வந்து, ” என்னை சுத்தம் செய், சுத்தம் செய்” என்று குரல் கொடுத்தது. அவனும் அதைத் தேய்த்து சுத்தம் செய்து வைத்தான். பிறகு அடுத்த நாள் பற்றிய கவலையுடன் தூங்கப் போனான்.
பணக்காரன் அந்தப் பாத்திரத்தைத் தேடிப் பார்த்து விட்டு மறந்தே போனான். வீட்டில் யாராவது பார்த்து எடுத்து உபயோகித்து இருப்பார்கள் என்று நினைத்து மனதை சமாதானம் செய்து கொண்டான். இந்த முறை தன்னிடம் இருக்கும் தங்கக் காசுகளை ஒளித்து வைக்க இடம் தேடிக் கொண்டிருந்தான். அதே பாத்திரம் அவன் முன்னே உருண்டு உருண்டு வர, அதில் தன்னுடைய பொற்காசுகளை நிரப்பி விட்டு முன்பு செய்தது போலவே ஓரமாக ஒளித்து வைத்து விட்டுத் தூங்கப் போனான்.
அடுத்த நாள் பொழுது விடிந்ததும் விவசாயி, பாத்திரம் நிறைய தங்கக் காசுகளைப் பார்த்து ஆனந்தம் கொண்டான். அவற்றை வைத்துப் புதிய தொழில் தொடங்கினான். நிலமும் வாங்கினான். குடிசையை வீடாக மாற்றினான். கிராமத்தில் இருக்கும் ஏழை மக்களுக்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்தான்.
அந்தப் பேசும் பாத்திரம் திடீரென்று ஒரு நாள் அவன் வீட்டில் இருந்து காணாமல் போனது. விவசாயியும், யாராவது ஏழையின் வீட்டை அந்தப் பாத்திரம் சென்று அடையட்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டான்.
விவசாயியும், அவனது மனைவியும் மகிழ்ச்சியுடன் பல வருடங்கள் வாழ்ந்து ஊர் மக்களுக்கும் உதவி வந்தனர்.
வங்கி வேலை, கணித ஆசிரியை அவதாரங்களுக்குப் பிறகு இப்போது எழுத்தாளர். அதுவும் சிறுவர் கதைகள் எழுத மனதிற்குப் பிடிக்கிறது. மாயாஜாலங்கள், மந்திரவாதி கதைகள் எழுத ஆசை. பூஞ்சிட்டு இதழ் மூலமாக உங்களுடன் உரையாடத் தொடர்ந்து வரப் போகிறேன். மகிழ்ச்சியுடன் நன்றி.