முன்னொரு காலத்தில் நமது பாரதத்தில் ஒரு சிறிய நாடு இருந்தது. அரசரும், அரசியுமாக நாட்டில் நல்லாட்சி செய்து வந்தார்கள். மக்களும் மனநிறைவுடனும் மகிழ்ச்சியாகவும் தங்கள் நாட்டில் வசித்து வந்தார்கள். அரச குடும்பத்தினர் மீது அபரிதமான அன்பு வைத்திருந்தார்கள் நாட்டு மக்கள்.

அவர்களுக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். இளவரசனும் கல்வி கற்றுத் தேர்ந்தான். மற்ற கலைகளையும், போர்க் கலையையும் கற்று முடித்தான். திருமண வயதை எட்டிய இளவரசனுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டார்கள் அரசரும், அரசியும்.

” எப்படிப்பட்ட பெண்ணை மணக்க விரும்புகிறாய் மகனே? ” என்று அரசி மகனைக் கேட்டாள்.

” நீங்களே கூறுங்களேன், நான் கேட்டுக் கொள்கிறேன்” என்று தாய், தந்தையைப் பார்த்து எதிர்க் கேள்வி கேட்டான் இளவரசன்.

” அழகான பெண்ணாக இருக்க வேண்டும். அறிவும், தெளிவான சிந்தனையும் உள்ள பெண்ணாக இருக்க வேண்டும் ” என்றாள் தாய்.

” நல்ல பண்புள்ளவளாக இருக்க வேண்டும். பெரியோரை மதித்து நடக்க வேண்டும். வீரமும், விவேகமும் கொண்டவளாக இருக்க வேண்டும் ” என்றார் அரசர்.

” இவையெல்லாம் சாதாரணமாகத் திருமணத்தில் எதிர்பார்க்கப் படும் தகுதிகள் தானே? எனக்கு மனைவியாக வரப்போகும் பெண்ணின் மனதில் கருணையும், மனித நேயமும் நிறைந்திருக்க வேண்டும். அதைத் தவிர மிகவும் மென்மையான பெண்ணாக இருக்க வேண்டும் ” என்று கூறிவிட்டான் இளவரசன்.

அரசரும், அரசியுமாக மகனுக்காக இளவரசியை எட்டுத் திக்குகளிலும் உள்ள நாடுகளுக்குத் தூதனுப்பித் தேட ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு பெண்ணையும் ஏதாவது குறை சொல்லித் தட்டிக் கழித்தான் இளவரசன். மனம் வருந்திய பெற்றோர், மகனுக்கு என்று நல்ல வாழ்க்கைத் துணை அமையப் போகிறதோ என்று மனதில் பெருங்கவலை உற்றார்கள்.

ஒருநாள் மாலை நேரம் முடிந்து இருள் சூழ ஆரம்பித்திருந்தது. திடீரென்று நல்ல மழை கொட்டியது. பலத்த இடியுடன் மின்னல் வானத்தில் பளீர் பளீரென்று தோன்றி மறைந்தது. அந்த சமயத்தில் அரண்மனை வாயிற் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது.

காவலர்கள் சென்று கதவைத் திறந்தனர். மழையில் நன்றாக நனைந்ததால் குளிரில் நடுங்கியபடி நின்று கொண்டிருந்தாள் ஓர் இளம்பெண். காவலர்கள் அவளை அரசியிடம் அழைத்து வந்தனர்.

” யார் நீ பெண்ணே! மழையில் நனைந்து விட்டாயா? உதவி வேண்டுமா? ” என்று பரிவுடன் விசாரித்தாள் அரசி.

” நான் அண்டை தேசத்து இளவரசி. எங்கள் நாட்டின் எல்லையில் இருக்கும் வனத்தில் தோழிகளுடன் அலைந்து கொண்டிருந்தேன். அடிக்கடி அங்கே வரும் வழக்கமுண்டு எனக்கு. திடீரென்று வேங்கை துரத்தியதால்  அனைவரும் பிரிந்து விட்டோம். நானும் வழி தவறி விட்டேன். திடீரென்று பெய்த மழையில் நனைந்து விட்டேன். இந்த மாளிகையின் வெளிச்சத்தைப் பார்த்து இங்கே வந்தேன்” என்றாள் குளிரில் நடுங்கியபடி.

” இந்தப் பெண்ணை உள்ளே அழைத்துச் சென்று மாற்று உடையும், உணவும் அளித்து உறங்குவதற்கு இடமும் தயார் செய்யுங்கள். காலை விடிந்ததும் தகுந்த பாதுகாப்போடு இவளுடைய நாட்டிற்கு அனுப்பி வைப்போம்” என்று அங்கிருந்த சேடிப் பெண்களுக்கு உத்தரவிட்டாள் அரசி.

அரசிக்கும், அரசருக்கும் அந்த இளவரசியைப் பார்த்ததுமே  மனதிற்குப் பிடித்தது. இளவரசரின் முகத்தைப் பார்த்தார்கள் இருவரும். இளவரசனுக்கும் அவளைப் பிடித்திருப்பது போலத் தோன்றியது.

” உண்மையில் இந்தப் பெண் இளவரசி தானா என்று கண்டுபிடிக்க வேண்டும். அதோடு சேர்த்து அவள் மென்மையான பெண்ணா என்று கண்டுபிடிக்க வேண்டும் ” என்றான் இளவரசன். அவனுடைய பேச்சைக் கேட்டு மகிழ்ந்து போனாள் அரசி.

” அவ்வளவு தானே? நான் அதைக் கண்டுபிடிக்கிறோம். என் மனதில் ஓர் உபாயம் தோன்றுகிறது ” என்றாள் அரசி.

சேடிப்பெண்களை அழைத்து,

” அந்த இளவரசிக்குப் படுக்கை தயார் செய்து விட்டீர்களா? ” என்று கேட்டாள்.

” இன்னும் இல்லை” என்று பதில் கூறினார்கள் அவர்கள்.

” சரி, படுக்கை தயார் செய்யும் போது நான் கூறுவது போலவே செய்யுங்கள். கட்டிலில் முதலில் ஒரு சிறிய பட்டாணியை வைத்து, அதன் மேல் இரண்டு, மூன்று மெத்தைகளை விரித்து அதையும் ஒரு விரிப்பால் மூடி அவளுக்கு அளியுங்கள் ” என்றாள்.

அடுத்த நாள் காலையில், அந்தப் பெண்ணைச் சந்திக்கச் சென்ற அரசி, ” நன்றாகத் தூங்கி எழுந்தாயா? ” என்று கேட்டாள்.

” இல்லை, எனக்கு உறக்கம் வரவில்லை. படுக்கையில் ஏதோ உறுத்தியது. என்னால் தூங்க முடியவில்லை ” என்று இளவரசி பதில் கூறியதும், ஆச்சரியம் அடைந்தாள் அரசி.

‘உண்மையில் இந்த இளவரசி மென்மையானவள் தான் என்று நிரூபித்து விட்டாள். ஒரு சிறிய பட்டாணியை மெத்தையின் கீழே ஒளித்து வைத்ததை இவளால் உணர முடிகிறது என்றால் உண்மையாகவே இவள் மென்மையான பெண் தான் ‘ என்று மனதிற்குள் எண்ணிய அரசி, தனது மகன் விரும்பிய குணமுள்ள இளவரசி கிடைத்துவிட்டாள் என்று மகிழ்ச்சி அடைந்தாள்.

அதற்குள் சேடிப்பெண்கள், அரசியிடம் பரபரப்புடன் ஓடி வந்தார்கள்.

” அரசியார், அரசியாரே, மிகப்பெரிய அதிசயம். காணக் கிடைக்காத புதுமையான காட்சி நமது அரண்மனையில் ” என்று கூறி அவளை அழைத்துச் சென்றார்கள்.

அரண்மனை நந்தவனத்தில் ஓரிடத்தில் மயில்கள் தோகை விரித்தாடிக் கொண்டிருந்தன. குயில்கள் பாடிக் கொண்டிருந்தன. பல வண்ணத்துப் பூச்சிகளும், வணடுகளும், பூச்சிகளும் ஒரே இடத்தில் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தன. வண்டுகளின் ரீங்காரமும் பின்னணியில் ஒலித்தது. சிற சிறு

முயல்களும், மான்களும் கூட அங்கே குழுமியிருந்தன. பார்க்கவே ரம்மியமான காட்சியாக இருந்தது அது.

” எந்த இடம் அது? என்ன நடக்கிறது இங்கே? ” என்றாள் அரசி.

” அரசியாரே, நேற்று இரவு மழையில் நனைந்து இங்கே புகலிடம் கேட்டு வந்த பெண் தங்கியிருக்கும் அறையின் சாளரத்தின் எதிரே தான் இந்த அற்புதக் காட்சி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அந்தப் பெண்ணிற்கும் பறவைகளின் மற்றும் விலங்குகளின் மொழி தெரிந்திருக்கிறது. அவற்றுடன் சங்கேத மொழியால் ஏதோ பேசுகிறாள். அவைகளும் அந்தப் பெண் பேசுவதைப் புரிந்து கொண்டு ஆனந்தமாக அவளெதிரே நடமாடிக் கொண்டிருக்கின்றன” என்றார்கள் அந்தச் சேடிப்பெண்கள்.

‘ பரவாயில்லையே, நிறையக் கலைகளைக் கற்றிருக்கும் திறமைசாலி தான் இவள்’ என்று எண்ணியபடி சாளரத்தில் தெரிந்த அந்தப் பெண்ணைப் பார்த்தபோது முகத்தில் தெரிந்த அசாதாரணமான அமைதியையும், கருணை சொட்டும் விழிகளையும் கண்டு மனதிற்குள் மகிழ்ச்சி கொண்டாள்.

அதற்குள் பக்கத்து தேசத்தில் இருந்து தூதுவர்கள் வந்திருப்பதாகக் காவலர்கள் வந்து கூறினார்கள். அரசரும், அரசியும் அவர்களை வரச் சொல்லிச் சந்தித்தார்கள்.

” அரசருக்கும், அரசிக்கும் எங்களுடைய பணிவான வணக்கம். எங்கள் இளவரசியார் நேற்று வனத்தில் வழிதவறி விட்டார். ஒருவேளை இங்கு வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் தேடிக்கொண்டு வந்தோம். உங்களுடைய நாட்டில் தேடுவதற்கு உங்கள் அனுமதியும், உதவியும் வேண்டும் ” என்று அவர்கள் கூற ,

” உங்கள் இளவரசி எங்கள் அரண்மனையில் பத்திரமாக இருக்கிறாள்” என்று கூறி அவளை, அவர்களுடன் பத்திரமாக அனுப்பி வைத்தார்கள்.

விரைவிலேயே இளவரசனுக்கும், இளவரசிக்கும் கோலாகலமாகத் திருமணம் நடந்தது.

மெத்தையில் ஒளித்து வைக்கப்பட்ட சிறிய பட்டாணி, ஒய்யாரமாக அரண்மனை அந்தப்புரத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டது. அதற்கு ஒரு சிறிய கிரீடமும் செய்து வைக்கப்பட்டது. அன்று முதல் இளவரசியும், “பட்டாணி இளவரசி” என்று அழைக்கப்பட்டாள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments