சின்னச் சின்ன பொம்மை!
செல்லமான பொம்மை இது!
அப்பா, அம்மா வாங்கித் தந்த
அழகான பொம்மை இது!
விளையாட எனக்குத் தோழி!
வெளியில் போகத் துணையிவளே!
சொன்ன பேச்சைக் கேட்கின்றாள்!
சிரித்துக் கொண்டே இருக்கின்றாள்!
நான் சொல்லும் கதைகள் எல்லாம்
நாள் முழுவதும் கேட்கிறாள்!
பள்ளிக்கூடம் தினமும் சென்று
பாடங்களைக் கற்றிடுவேன்!
மேற்படிப்பு நிறைய நானும்
மகிழ்வோடு படித்திடுவேன்!
வேலை பார்க்கப் போவேனே!
ஊதியமும் கிடைத்திடுமே!
கை நிறைய பொம்மைகளை
வாங்கி நான் சேர்த்திடுவேன்!
விளையாடும் குழந்தையர்க்கு
பொம்மைகளை நான் தருவேன்!
பொம்மைகளைப் தருகையில் நான்
புத்தகமும் படிக்கச் சொல்வேன்!
வண்ண வண்ணப் புத்தகங்கள்
வாங்கி நானும் தந்திடுவேன்!
வாசிப்பை வளர்த்திடுவோம்!
நேசத்துடன் மலர்ந்திடுவோம்!
அள்ளி அள்ளிப் பரிசுகளை
அனைவருக்கும் அளித்திடுவேன்!
அன்பெனும் நல் மந்திரத்தை
அகிலமெங்கும் பரப்பிடுவேன்!
வங்கி வேலை, கணித ஆசிரியை அவதாரங்களுக்குப் பிறகு இப்போது எழுத்தாளர். அதுவும் சிறுவர் கதைகள் எழுத மனதிற்குப் பிடிக்கிறது. மாயாஜாலங்கள், மந்திரவாதி கதைகள் எழுத ஆசை. பூஞ்சிட்டு இதழ் மூலமாக உங்களுடன் உரையாடத் தொடர்ந்து வரப் போகிறேன். மகிழ்ச்சியுடன் நன்றி.