thoorigai

தூரிகையாம் தூரிகை
விதவிதமாய் தூரிகை
அழகழகாய் ஓவியங்கள்
வரையும் அந்த தூரிகை

வெள்ளை நிற காகிதத்தை
விருந்தாக்கும் தூரிகை

வண்ணங்களைக் கலந்தே
வானவில்லைக் காட்டும்
சின்னச் சின்னக் கோடுகளில்
புதிய உலகம் படைக்கும்

குட்டிக் குட்டி கைகளிலே
குதியாட்டம் போடும்
சுட்டிச் சுட்டி சிறுவர்களின்
சிறகை விரிக்க உதவும்

கனவுகளின் நளினத்தை
வண்ணங்களால் நிரப்பும்
எண்ணங்களின் செரிவை
எடுத்துரைக்க உதவும்

புரியாத பாடங்களை
எளிதாக விளக்கலாம்
புதிரான நிகழ்வுகளை
படம்வரைந்து தெளியலாம்

இரகசியங்கள் சிலதை
ஓவியமாய் மறைக்கலாம்
புதையல்களின் தடத்தை
பூடகமாய் அறியலாம்

நிற்காது ஓடும்
காலத்தைக் கட்டலாம்
இயற்கையின் அழகை
சிறைபிடித்து இரசிக்கலாம்

சித்திரத்தின் வழியே
சிகரங்களைத் தொடலாம்
சரித்திரத்தின் பக்கங்களை
எட்டிப்பார்த்து வரலாம்

ஓவியங்கள் மூலம்
வாழ்வதனை அறியலாம்
நிகழ்காலம் தீட்டி
நினைவுகளைச் சேர்க்கலாம்

வருங்காலத் தலைமுறைக்கு
வழிகாட்ட உதவலாம்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments