ஒரு கிராமத்தில் பூனையும் கோழியும் நண்பர்களாக இருந்தது. அது வசிக்கின்ற இடத்திற்கு அருகிலேயே பெரிய காடு இருந்தது.

  காலையில் கோழி அந்த காட்டிற்குள் சென்றது என்றால் மாலையில் வீட்டிற்கு திரும்பும். கூடவே பூனையும் அதற்கு துணையாக செல்லும்.

  கோழிக்கு ஈசல், கரையான் என்றால் உயிர்…காட்டில் புதர் மண்டிய இடங்களில்  சிறு குழிகளாக நோண்டி கரையானையும், ஈசலையும் உணவாக உண்ணும்.

cat hen

  இதற்கு பூனை தினமுமே உதவியாக இருக்கும். இது வாடிக்கையாக நடந்து வந்தது.

  தினமுமே கோழிக்கு கரையானை பிடித்துக் கொடுக்க உதவி செய்த பூனைக்கு ஒரு நாள் கரையானை சாப்பிடும் ஆசை வந்தது .

  அதுவும் அன்றைக்கு அந்த புற்றிலிருந்து நிறைய ஈசல் பறந்து வந்தது..ஈசலை பிடித்து சாப்பிட அந்த சுவை பூனைக்கு  மிகவும் பிடித்து விட்டது.

  சுவை மிகுந்த ஈசலை தன்னுடைய சகோதரிக்கு கொண்டு செல்ல ஆசைப்பட்டது பூனை .

  அதை அந்த கோழியிடம் கூற கோழியும் மகிழ்ச்சியாக அன்றைக்கு சரியென பறந்து வந்த ஈசல்களை எல்லாம் பிடித்து சாப்பிட்டு விட்டு.. மிச்சத்தை கொண்டு வந்திருந்த சிறு பையில் அடைக்க ஆரம்பித்தது..

  பூனை தன்னுடைய சகோதரிக்கு அந்த ஈசலை எல்லாம் கொண்டு சென்று கொடுத்தது.

  “இதை சாப்பிட்டு பாரேன். ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும் .நான் உனக்காக சிரமப்பட்டு பிடிச்சிட்டு வந்திருக்கிறேன். நானும் என்னோட நண்பனும் சேர்ந்து..” என்று கொடுக்க ,சாப்பிட்டு பார்த்த பூனைக்கு அத்தனை பிடித்திருந்தது.

  “அண்ணா உண்மையிலேயே இது ரொம்ப நல்லா இருக்குது. இந்த சுவைக்கு என்ன வேணும்னாலும் தரலாம்”.

  ” அப்படியா சரி அப்படின்னா நாளைக்கும் உனக்கு இதை கொண்டு வரேன் “என்று சொல்லிவிட்டு நகர்ந்தது .

  தங்கை பூனை சற்றே விசித்திரமானது அதனுடைய மூளை எப்போதுமே தவறாக மட்டுமே யோசிக்கும் .இன்றைக்கும் அப்படித்தான் யோசிக்க ஆரம்பித்தது.

  விடிய விடிய யோகித்தபடியே அடுத்த நாள் காலை தன்னுடைய சகோதரனிடம் பேசியது .”அண்ணா எனக்கு ஒரு விஷயம் தோணுது. நீ நான் சொல்றத கேட்பாயா.. “

  “என்ன சொல்லு  கேட்கறேன் “.என்று கேட்டபடியே வேகமாக புறப்பட்டு கொண்டிருந்தது பூனை .

  “அண்ணா நேத்து கொண்டு வந்த அந்த ஈசல் அத்தனை சுவையாக இருந்தது .இது போல ஒரு சுவையை நான் சாப்பிட்டதே இல்லை”.

  ” சரி அதுக்குத்தான் நேத்தே பதில் சொன்னேனே ..உனக்கு நான் மறுபடியும் அதை எடுத்துட்டு வரேன்னு.. அதுக்காக தான் இன்னைக்கும் பையோட புறப்பட்டுக்கிட்டு இருக்கிறேன்”.

  ” அது வந்து ..நான் என்ன சொல்ல வர்றேன்னு உனக்கு புரியலையா.. அந்த ஈசல் இவ்வளவு சுவையா இருந்தா.. அந்த ஈசலை இத்தனை நாளா உணவாக சாப்பிட்டு வந்த கோழி எவ்வளவு சுவையாக இருக்கும் .எனக்கு அந்த கோழி வேணும் அதை கொண்டு வந்து கொடு “என்று தங்கை  கேட்க,கோபமாக அண்ணன் பூனை சத்தமிட ஆரம்பித்தது.

  ” உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு .. அவன் என்னோட நண்பன் ..இத்தனை நாளா நாங்க ரெண்டு பேரும் ஒற்றுமையா இருக்கிறோம் .புதுசா நீ இப்படி எல்லாம் கேட்டுக்கிட்டு இருக்குற.. இனிமே இது போல பேசாத” என்று சண்டையிட, தங்கை பூனை விடுவதாக இல்லை..

  “உனக்கு என்னை பிடிக்கும் தானே.. நான் உனக்கு உயிர் தானே..”

அழுதபடி கேட்டது.

  “நீ என்னோட உயிர் தான் .எனக்கு உன்னை பிடிக்கும் தான் ஆனால் இப்படி எல்லாம் கேட்கக்கூடாது..”

  “என்னை விடவும் உனக்கு உன்னோட நண்பன் பெரியவனா போயிட்டானா ..எனக்கு நீ இதை செஞ்சுதான் ஆகணும்.. கொஞ்சம் யோசிச்சு பாரு ..ஈசலே அத்தனை சுவையா இருந்ததுன்னா கோழியோட சுவை எப்படி இருக்கும் “அண்ணாவின் ஆசையை நன்றாகவே தூண்டியது தங்கை  பூனை.. அண்ணன்  பூனைக்கும் கூட லேசாக மனதிற்குள் ஆசை துளிர்ந்தது.

  “சரி நீ சொன்ன மாதிரியே நான் என்னோட ஃபிரண்டை கூப்பிட்டுட்டு வரேன் “என்று சொல்லிவிட்டு நகர்ந்தது .

  அன்றைக்கும் வழக்கம் போல சிறு பையோடு இரண்டு பேருமே.. நிறைய ஈசல்களைப் பிடித்து சாப்பிட்டுவிட்டு மிச்சத்தை பையில் அடைக்க ஆரம்பித்தனர்.

  அப்போது பூனை மெல்ல கோழியிடம் தன்னுடைய விருப்பத்தை கூறியது .

  “என்னோட தங்கச்சி உன்னை பாக்கணும்னு சொன்னா.. உனக்காக வீட்டில காத்துகிட்டு இருக்கிறா.. நீ இன்னைக்கு என் கூட வீட்டுக்கு வர முடியுமா”.என்று கேட்க கோழியும் முழுவதுமாக பூனையை நம்பியது.

  ” அதனால் என்ன..நீ என்னோட ஃபிரண்டு தானே.. உன்னை நம்பி எங்க வேணும்னாலும் வருவேன்..”

  ” சரி நம்ம ஈசல் சேகரித்தது போதும் புறப்படலாம் வா “என்று சொன்னபடி இரண்டு பேரும் நடக்க ஆரம்பித்தனர்.

  பாதி தூரம் வரும் வழியில் பூனை தன்னையும் அறியாமல் எதற்காக அழைத்துச் செல்கிறேன் என்பதை உளறி இருந்தது .

  “நீதான நிறைய முறை சொல்லுவ.. நம்மளோட நட்புக்காக உயிரை கூட தருவேன்னு.. என் தங்கச்சி அததான் கேட்கறா.. ஈசல சாப்பிடற கோழி எவ்வளவு டேஸ்டா இருக்கும் எனக்கு உன் ஃபிரண்டை கொண்டுவான்னு கேட்டா .. நானும் எவ்வளவோ அவகிட்ட சொன்னேன். மறுத்து பார்த்தேன். அவ கேட்கலை.. அதனாலதான் இன்றைக்கு உன்னை அழைச்சிட்டு போறேன்” என்று  சொல்ல கோழிக்கு உண்மை நிலவரம் புரிந்தது .

  கோழிக்கு சட்டென ஒரு யோசனை தோன்ற ,வேகமாக பூனையை பார்த்து..” அச்சச்சோ நான் உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன் .

  ஈசல் தினமும் சாப்பிடுவதால் இப்போ தினமுமே நான் வீட்ல முட்டை இட ஆரம்பித்து இருக்கிறேன்.

  அந்த முட்டை கூட இன்னமும் சுவையாக இருக்கும் .அதையும் எடுத்துட்டு போகலாமா “என்று கேட்க பூனையின் நாக்கில் உண்மையிலேயே  எச்சில் ஊறியது.

  “சரி வா அதையும் எடுத்துட்டு நம்ம ரெண்டு பேரும் திரும்பப் போகலாம்” என்று அழைத்துக் கொண்டு மறுபடியும் கோழியின் இருப்பிடத்தை நோக்கி வந்தனர்.

  கோழியின்  இருப்பிடம்  வந்த உடனேயே வேகமாக  தன்னுடைய இடத்திற்குள் ஓடி பாதுகாப்பாக நின்று கொண்டது.

  ” இத பாரு இதுக்கு மேல நீ இந்த பக்கம் வந்தேன்னா என்னை வளர்கிறவர்  உன்னை அடிச்சு கொன்னுடுவாரு ..இனிமே இந்த பக்கம் நீ வராத ..எப்போ நம்ம நட்புக்கு துரோகம் பண்ண முடிவு பண்ணினாயோ அதுக்கு பிறகு உன் கூட நான் பேச தயாரா இல்லை..”

  “ஆனா நீ என்கிட்ட என்ன சொன்ன.. முட்டையையும் எடுத்துட்டு என் கூட வர்றதாதானே சொன்ன..”

  “வேற உன்கிட்ட என்ன சொல்லணும்னு எதிர்பார்க்கிற.. உன் பின்னாடியே வரேன்.. நீ என்னை அடிச்சு சாப்பிட்டுக்கோன்னா சொல்ல முடியும்..

  என்னோட அம்மா எப்பவுமே சொல்லுவாங்க.. கூடா நட்பு கேடாய் முடியும்னு…நான் தான் அவங்க சொல்லறதை  காது கொடுத்து கேட்கலை.. இன்றைக்கு நேரிலேயே நான் பார்த்துட்டேன்..இனி எப்பவுமே நீ என்னை பார்க்க வராத ..உனக்கும் எனக்கும் இருந்த நட்பு இன்னையோட முடிஞ்சு போச்சு “என்று கோபமாக சொல்லிவிட்டு ஓடியது.

  பூனைக்கு இப்போது தன்னுடைய தவறு புரிந்தது.. தன் தங்கையின் பேச்சைக் கேட்டு நல்ல நட்பை இழந்து விட்டதை நினைத்து வருத்தத்தோடு திரும்பிச் சென்றது.

  என்ன குழந்தைங்களா உண்மை தானே.. கூடா நப்பு என்றைக்குமே கேடாகத்தானே முடியும் .கூடவே கோழி தன்னுடைய சமயோகித புத்தியினால் எளிதாக தப்பிவிட்டது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments