வார விடுமுறையில் பாட்டி ஊருக்குப் போனாலே ஒரே விளையாட்டு தான். அன்றும் அப்படித்தான். ராமுவுக்கு விளையாட வேண்டும் போல் இருந்தது. துணைக்கு ஆட்கள் வேண்டும் அல்லவா? பக்கத்து வீட்டு அபி, ரஃபி என இருவரையும் அருகிலுள்ள மைதானத்தில் விளையாடுவதற்காக அழைத்தான். கண்ணாமூச்சி விளையாட்டு. ஒருவர் கண்களை கட்டிக்கொண்டு, பிறர் நகரும் காலடி ஓசையைக் கொண்டும் பேசும் சப்தம் வரும் திசையைக் கொண்டும் அவர்கள் இருப்பிடம் அறிந்து அருகே சென்று தொட வேண்டும். அவ்வாறு தொட்டுவிட்டால் கண்களில் கட்டி இருக்கும் துணியை அவிழ்த்துவிட்டு தான் தொட்ட நபருக்கு கண்களைக் கட்டிய பிறகு மீண்டும் விளையாட்டு தொடரும். அன்று இவ்விளையாட்டை விளையாடுவதற்குத் தான் முடிவு செய்து இருந்தார்கள்.

பசுமையான புல்வெளிகள் இயற்கையாக அமைந்தும், ஆங்காங்கே மலர்களைக் கொடுக்கும் இடுப்பு உயர செடிகள் வளர்ந்தும், செழிப்பாக உள்ள கண்ணுக்கு அழகான மைதானம் அது. யார் முதலில் என்பதை அவர்களாகவே முடிவு செய்து ஒவ்வொருவராக விளையாண்டு கொண்டிருந்தார்கள். இப்படியே மாலை 6:00 மணி ஆகிவிட்டது. ராமுவை காணோமே என்று அவனது பாட்டி தேடிக் கொண்டு மைதானத்திற்கு வந்து விட்டார். இனி..

பாட்டி: ராமு உன்னை எங்கெல்லாம் தேடுறது? நான் இப்போ கோயிலுக்கு கிளம்புறேன். நீயும் வரியா?

ராமு: கொஞ்ச நேரம் நீங்களும் எங்க கூட விளையாடுறீங்களா பாட்டி? அப்புறம் எல்லோரும் கோயிலுக்கு போகலாம்.

அபி: ஆமாம் பாட்டி! நீங்களும் வந்தா நல்லா இருக்கும். இந்த விளையாட்டை எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம்.

ரஃபி: அபி! இந்த விளையாட்டை நமக்கு சொல்லிக் கொடுத்ததே பாட்டி தான். அவங்களுக்கே சொல்லிக் கொடுக்கிறியா?

பாட்டி: ஆமாம் செல்லங்களே! ஆனா இப்போ பாட்டியால் விளையாட முடியாது. கண்ண கட்டிக்கிட்டு நான் எங்கேயாவது கீழே விழுந்துட்டா அப்புறம் உங்க அப்பா தான் வைத்தியம் பார்க்கணும். நான் இங்க ஓரமா ஒரு இடத்துல உட்கார்ந்து இருக்கேன். நீங்க விளையாடிட்டு வாங்க. உங்களை பார்க்கிறதே எனக்கு சந்தோஷம் தான்.

ராமு: சரிங்க பாட்டி. நாங்க சீக்கிரமா விளையாட்ட முடிச்சிட்டு வந்து விடுகிறோம். நீங்க இங்க இருக்கும்போது எங்களுக்கு இன்னும் ஜாலியா இருக்கு.

(அருகே அமர்ந்திருக்கும் பாட்டியின் புடவை மீது ஒரு பட்டாம்பூச்சி அமருகிறது. அதை அபி கவனித்து விட்டாள்.)

அபி: ஹைய்யா! ராமு ஒன்னு கவனிச்சியா? பாட்டி புடவை மேல ஒரு பட்டாம்பூச்சி உட்கார்ந்து இருக்கு!

பாட்டி: ஆஹா! ஆமாம். நானே இப்பதான் பார்க்கிறேன். பட்டாம்பூச்சி பறக்குறதுக்கு முன்னாடி கூட்டுப் புழு பருவத்தில உறங்கிக்கிட்டு இருந்த இழை (நூல்) அல்லவா இந்த புடவையில் இருக்கு? அதான் அது அடையாளம் கண்டுபிடிச்சிடுச்சு.

mulberry
படம்: அப்புசிவா

ரஃபி:  பாட்டி என்ன சொல்ல வரீங்க? எங்களுக்கு ஒன்னும் புரியல. பட்டாம்பூச்சி கூட்டுப் புழுவா இருந்தப்போ, உங்க புடவை மேல எப்படி தூங்கி இருக்கும்?

பாட்டி: அதுவா? எல்லாரும் இங்க பக்கத்துல வாங்க! நான் சின்ன வயசுல இருந்தப்போ பட்டுப்புழு வளர்த்த கதைய சொல்றேன்.

ராமு: கதைன்னா எங்களுக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும். நீங்க சொல்லுங்க பாட்டி.

பாட்டி:  இப்போ நம்ம ஊர்ல பெட்ரோல் பங்க் இருக்கு இல்லையா? அங்க ஒரு காலத்துல நம்மளோட மல்பெரி தோட்டம் இருந்தது. மல்பெரி இலைகளை முசுக்கொட்டை இலை அப்படின்னும் சொல்லுவாங்க. இந்த இலைகள் பட்டுப்புழுவுக்கு உணவா பயன்படுது.

பட்டுப்பூச்சியின் முட்டைகளை ஒரு அட்டையில குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஒட்டி அதற்கான பண்ணைகளில் விற்பாங்க. அதை வாங்கிக்கிட்டு வந்து சரியான வெப்பத்துல வச்சிருக்கணும். அவை இரண்டு வாரங்களுக்குப் பிறகு பொரிஞ்சு புழுக்களா வெளியில வரும்.

அவற்றை மூங்கில் இழைகளால் பின்னின அகலமான தட்டியில் போட்டு வைப்பாங்க. காலை 8 மணிக்கு ஒரு முறை தோட்டத்துக்கு போயி முசுக்கோட்டை இலைகளை பறிச்சுகிட்டு வந்து, சிறு சிறு துண்டுகளா நறுக்கி புழுக்களுக்கு சாப்பிட கொடுப்பாங்க. மீண்டும் மாலை 3 மணிக்கு ஒரு முறை புதிய இலைகளை மாற்றுவாங்க.

இதை தொடர்ந்து செய்துகிட்டு வரும் பொழுது, புழு வளர்ச்சி அடைந்து கொண்டே வரும். வெளிறிய வானத்தில் இருக்கிற லேசான ஊதா நிறத்தில் புழு இருக்கும். மூன்று அல்லது நான்கு வாரங்களில் முதிர்ச்சியான லார்வா புழுவா வளர்ந்து விடும்.

இந்தப் பருவத்தில் இளம் மஞ்சள் நிறம் அதன் உடல்ல தெரியும். இப்போ இதனை வேறு ஒரு மூங்கில் தட்டிக்கு மாற்றுவாங்க. நாம  நான்கு குண்டுகளை நடுவுல வர வைக்கிற மேஸ் விளையாட்டு விளையாடுவோம் இல்லையா? அது மாதிரி வளைவான பாதைகள் போட்ட தட்டியா அது இருக்கும்.

இப்போ புழுக்களுக்கு மல்பெரி இலைகளை கொடுக்க மாட்டாங்க. அதன் வாயிலிருந்து திரவ வடிவமா வெளியேறும் கசிவு காற்றுல பட்டு, நூலாக மாறும். அந்த நூலைக் கொண்டு நீண்ட முட்டை வடிவத்தில் கூடு அமைக்க, புழு உள்ள இருந்துகிட்டே வெளிப்பக்கமா வலை போல பின்னி தன்னைத்தானே மூடிக்கொள்ளும்.

மிக நெருக்கமா இளம் மஞ்சள் நிறத்தில் அழகாய் இருக்கும் இந்த கூடு. ஒரு வாரத்திற்குள் கூடுகட்டும் வேலை முடிந்து விடும். அதற்குள்ளாக லார்வா புழு நிம்மதியா உறங்க ஆரம்பிச்சுடும். அதுக்கு அப்போ உணவே தேவைப்படாது. நீண்ட உறக்கம் மட்டும்தான். இப்போ இந்த லார்வாவை பியூப்பா அப்படின்னு சொல்லுவாங்க.

மேலும் ஒரு சில வாரங்களில் இந்த கூட்டை கிழிச்சுகிட்டு பட்டாம்பூச்சி வெளிய வந்து அழகா பறக்க ஆரம்பிச்சுடும். ஆனா வீட்டில பட்டு நூலுக்காக வளர்க்கும் போது நாம என்ன செய்வோம் தெரியுமா?

வீடு கட்டுவதற்கு ஒரு வாரம் எடுத்துக் கொள்கிறது அல்லவா? அதன் பிறகு நீண்ட உறக்கத்தில் இருக்கும் பியூப்பா பருவத்திலேயே கொதிக்கின்ற சுடுதண்ணீரில் கொட்டி அத்தனை புழுக்களையும் சாகடித்து விடுவார்கள். இல்லாவிட்டால் வண்ணத்துப்பூச்சி முழுசா வளர்ந்து கூட்டை கிழித்துக் கொண்டு வெளியே வந்து நூல் அறுபட்டுப் போயிடும்.

அதை தவிர்ப்பதற்காக பியூப்பாவை பட்டாம்பூச்சியா பறக்க விட மாட்டாங்க. இப்படி சுடு தண்ணீரில் போட்ட பிறகு அதனை சுத்தம் பண்ணி நூல்கண்டா சுற்றி பட்டுத் துணி நெய்வதற்கு கொடுத்துடுவாங்க. அதன் முட்டை பருவத்திலிருந்து கிட்டதட்ட 50 – 60 நாட்களுக்குப் பிறகு தான் வளர்கிறவங்களுக்கு நூலை விற்று ஓரளவு பணம் கையில கிடைக்கும்.

பட்டுப்புழு வளர்ப்பு பற்றி உங்களுக்கு நிறைய சொல்லிட்டேன். ஏதாவது கேள்வி இருந்தா கேளுங்க பார்க்கலாம்.

ராமு: பாட்டி மல்பெரி இலையைத் தவிர பட்டுப்புழு வேற எதையுமே சாப்பிடாதா?

பாட்டி: ஏன் சாப்பிடாது? பட்டுப்பூச்சி வெவ்வேறு வண்ணங்களிலும் வகைகளிலும் இருக்கு இல்லையா? அதற்கு ஏற்றார் போல அதனுடைய உணவும் மாறும். பட்டுப் புழுக்கள் உண்ணும் இலைகள் சார்ந்த மரத்திற்கு ஏற்ப நூல்களின் நிறங்களும் மாறும்.

 உதாரணத்துக்கு சொன்னா, நாக மர இலைகளை உண்டு வளர்ந்த பட்டுப் புழுக்களிலிருந்து எடுக்கப்படும் பட்டானது மஞ்சள் நிறமாகவும், எலுமிச்சை மர இலைகளை உண்ட பட்டுப் புழுக்களின் பட்டு நூலானது கோதுமை நிறத்திலும், மகிழ மரத்தின் பட்டு வெண்மையாகவும், ஆல மரத்தினுடையது வெண்ணெய் போன்று சற்று பழுப்பு நிறத்திலும் இருக்கும்.

மேலும் வெவ்வேறு நாட்டுல வளர பட்டு பூச்சிகளோட நூலின் நிறமும் வேறுபட்டவையாய் இருக்கும். உதாரணத்துக்கு வங்க நாட்டுப் பட்டு வெண்மையாக மென்மையாகவும், புண்டரீக நாட்டுப் பட்டு மரகதம் போல பளபளப்பாகவும், அசாமைச் சேர்ந்த பட்டு சூரியனின் வண்ணத்திலுமிருக்கும்.

ரஃபி: பாட்டி! பட்டு நூலை நெய்யுற இடத்துக்கு எங்களை கூட்டிக்கிட்டுப் போய் காண்பிக்கிறீர்களா?

பாட்டி: பார்க்கலாம். ஒரு நாள் விடுமுறையில் முயற்சி பண்ணலாம்.

பட்டுத் துணிகளை பட்டு நூலால் மட்டுமே நெய்வது, வேறு நூல்களையும் கலந்து நெய்வது, ஒற்றை இழை கொண்டு நெய்வது, இரட்டை இழைகளைக் கொண்டு நெய்வது, மூன்று மற்றும் நான்கு இழைகளைக் கொண்டு நெய்வது என பல முறைகள் நேர பாக்கும்போது இன்னும் தெளிவா புரிஞ்சுக்குவீங்க.

ரஃபி: பாட்டி அப்போ நீங்க கட்டி இருக்க புடவையை பட்டுப்புழு கூடு அமைத்திருந்த நூலில் நெய்தார்களா?

ராமு: ரஃபி! பாட்டி சொல்றத வச்சு உனக்கு புரியலையா? பட்டாம்பூச்சி பாட்டி புடவை மேல உக்கார்ந்தப்ப அவங்க அப்படித்தானே சொன்னாங்க?

அபி: என்னோட அம்மா கிட்டேயும் இப்படி நிறைய பட்டுப் புடவை இருக்கு. அப்போ இதெல்லாம் இந்தப் புழுக்களை தண்ணீரில் போட்டு கொன்னுட்ட பிறகு நெய்ததா?

பாட்டி: ஆமாம் இதுக்கு வேற ஏதாவது மாற்று வழி இருக்கான்னு நீங்க வளரும் போது யோசிங்க. மகாத்மா காந்தி கூட சொன்னார் இந்த புழுக்களை கொல்லாம அந்த பட்டு நூலை பயன்படுத்த முடியாதா அப்படின்னு.

அப்படி செய்தால் அதனோட தரம் குறைந்து போய்விடும். அதனால இன்னும் அதே வழிமுறைகள் தான் தொடருது.

நமது கலைகளில் ஒன்று பட்டுப் புடவை நெய்வது. அந்த கலையை காத்து உயிரையும் காக்கிற முறை ஏதாவது இருந்தா நீங்க கண்டுபிடிங்க பார்க்கலாம். இப்போ வாங்க எல்லாரும் கோயிலுக்குப் போகலாம்.

_____________________________

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments