பத்மினின்னு ஒரு குட்டி பொண்ணு. ரெண்டு வயசுதான் ஆகுது. ரொம்ப ரொம்ப சுட்டிப் பொண்ணு. இன்னும் ஸ்கூல் போக ஆரம்பிக்கல. அடுத்த வருசம்தான் அவள ஸ்கூல்ல சேக்கணும்னு அவங்க பாட்டி கட்டளையிட்டிருக்காங்க. அதனால அவ வீட்டுலதான் இருக்கா. அவ, வீட்ல எல்லாருக்கும் ரொம்ப செல்லம்.
காலையில தூங்கி எழுந்ததும் வாசல்ல ஓடிப் போய் பார்ப்பா. அவ பாக்கற நேரம், வீட்டு வாசல்ல கோலம் போட்டிருந்தாங்கன்னா, தான் எழுந்து வந்த நேரம் லேட்டுன்னு அவ புரிஞ்சுக்குவா. அவ பாக்கற நேரத்தில அவ பாட்டியோ அம்மாவோ கோலம் போட்டுகிட்டு இருந்தாங்கன்னா, தான் சீக்கிரம் எழுந்துட்டோம்னு தெரிஞ்சிக்குவா.
ஓடிப் போய் தானும் கோலப் பொடிய எடுத்து வாசல் முழுக்க கோலம் போடறேன்னு ரகளை செய்வா. அவ குட்டி கையால கோலமாவை எடுக்கத் தெரியாம எடுத்து தரையில கோடு கோடா போடறத பாக்கவே கொள்ளை அழகா இருக்கும்.
கோலம் போட தெரியலன்னாலும் எல்லாரையும் கூட்டிட்டு வந்து காட்டி தான் கிறுக்கினது சூப்பரா இருக்கான்னு கேப்பா. அவ செய்யறதை பாத்து அவ மழலைய கேட்டு எல்லாரும் சிரிச்சிகிட்டே சூப்பரா இருக்குடா பட்டுகுட்டின்னு சொல்லி தூக்கி வெச்சு கொஞ்சுவாங்க.
அவ எல்லாத்திலயும் ரொம்ப சுட்டிதான். எல்லாத்தையும் தானே செய்யணும்னு ஆர்வமா கத்துக்கற சமத்து குட்டிதான்.
ஆனா அவகிட்ட ஒரு சிறு குறை இருந்தது. அது என்னன்னா அவளுக்கு ஒண்ணு வேணும்னு கேட்டு அது உடனடியா கிடைக்கலன்னா அவ அழுது அடம்பிடிச்சு ஆர்பாட்டம் பண்ணிடுவா.
உதாரணதாதுக்கு பசிக்கிதுன்னு கேட்ட அடுத்த நிமிஷமே அவளுக்கு யாராவது சாதம் ஊட்ட ஆரம்பிச்சிடணும். விளையாடணும்னு கேட்ட உடனே அவ முன்னாடி யாராவது பால (Ball) எடுத்து தூக்கிப் போட்டு விளையாட ஆரம்பிச்சிடணும். வெளிய போகணும்னு சொன்ன உடனே அவள யாராவது தூக்கிகிட்டு வெளிய போய்டணும். இப்டி அவ ஒரு விஷயத்தை நினைச்ச உடனே.. ஒரு விஷயத்தை கேட்ட உடனே.. அவளுக்கு அது கிடைச்சிடணும். இல்லன்னா அவ கத்தற கத்தல்ல வீடே கதி கலங்கிப் போய்டும்.
இந்த விஷயத்தில மட்டும் யாராலயும் அவள சமாதானம் செய்யவே முடியல.
இந்த சின்ன வயசில அதுவும் ஸ்கூல் கூட போக ஆரம்பிக்காத வயசிலயே இத்தன பிடிவாதம் பிடிக்கலாமா? அது தப்புதானே? பொறுமையா இருக்க இப்பலேர்ந்தே அவ கத்துக்கணும்ல?! அவளுக்கு புரியற மாதிரி பொறுமையா இருக்க எப்டி சொல்லி தரதுன்னு அவ பாட்டியும் அம்மாவும் யோசிச்சாங்க.
அப்டி யோசிச்சு அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு சூப்பர் பிளான் போட்டாங்க. இவங்க பிளான்ல பத்மினியோட தாத்தாலையும் அப்பாவையும் கூட சேர்த்துகிட்டாங்க.
என்ன பிளான் தெரியுமா? கதைய மேலும் கேளுங்க.
மறுநாள் காலையில பத்மினி எழுந்து வரும்போதே வாசல்ல கோலம் போட்டிருந்துச்சு. அதப் பாத்து, தான் லேட்டா எழுந்துட்டோம்னு நெனச்சிகிட்ட பத்மினி சோஃபால ஏறி உக்காந்துகிட்டு அம்மா கிட்ட பால் கேட்டா.
அவங்கம்மா அவ கேட்ட மறுநிமிஷமே பால் எடுத்துட்டு வந்து அவ முன்னாடி வெச்சிட்டு,
“இதக் குடி மா.. எனக்கு முக்கியமான வேல இருக்கு..” ன்னு சொல்லிட்டு கிச்சனுக்குள்ள போய்ட்டாங்க.
பத்மினி பாலை எடுத்து தம்ளர்ல வாய் வெச்சதும் பால் அவ குடிக்கற சூட்டை விட அதிக சூடா இருந்தது.. பத்மினிக்கு உதட்டில சூடு பட்டுடுச்சு.
“ச்.. ஆ.. அம்மா.. பால் சுதுது..” அப்டீன்னு கத்தினா.
“ஐயியோ! சுட்டுடுச்சா? சாரி பத்மினி.. ஒரு ஃபைவ் மினிட்ஸ் வெய்ட் பண்ணு.. நா இந்த சட்னிய அரைச்சிட்டு வந்து ஆத்தி தரேன்..” அப்டீன்னு சொல்லிகிட்டே மிக்சிய போட்டாங்க.
பத்மினி தன் அப்பாவையும் தாத்தாவையும் எல்லா ரூம்லயும் தேடினா. அவங்க ரெண்டு பேரும் வீட்லயே இல்ல.
சரின்னு பத்மினி திரும்பியும் சோஃபாவுக்கு வந்து உக்காந்துகிட்டு மறுபடியும் பால எடுத்தா. அது இப்பவும் சூடாதான் இருந்துச்சு.
“அம்மா! பால ஆத்தி குதுங்க!” ன்னு அவ கத்தினா.
“தோ வரேண்டீ..” ன்னு குரல் குடுத்த அவங்கம்மா ரெண்டு நிமிஷம்னு சொல்லிட்டு பத்து நிமிஷம் கழிச்சிதான் வந்து பால ஆத்தி குடுத்தாங்க.
“ஏம்மா? பால சூதா குத்த?” ன்னு அவ கேக்க,
பால் சுடா இருக்கும்னு உன் கிட்ட சொன்னேன்ல.. நீதானே பொறுமையா குடிக்கணும்?” ன்னு அவங்கம்மா எதிர் கேள்வி கேட்டாங்க.
“ம்.. இன்மே கத்துக்கறேன் மா” ன்னு சொல்லி பாலை கையில வாங்கிகிட்டா.
பத்மினி பால குடிச்சிட்டிருக்கறப்ப குளிச்சிட்டு ரெடியாகி வந்த பாட்டி,
“பத்மினி! சாமிக்கு பூ பறிக்கலாமா?” ன்னு கேட்டாங்க.
“ம்.. வதேன் பாத்தி.. பால் குச்சித்து வதேன்..” ன்னு பத்மினி பாலை குடிச்சிகிட்டே பதில் சொன்னா.
ஆனா பாட்டி, அவள விட்டுட்டு தோட்டத்துக்கு போய் பூ பறிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. பத்மினி பால குடிச்சிட்டு தோட்டத்துக்கு போறதுக்குள்ள பாட்டி முக்கால்வாசி பூக்களை பறிச்சிட்டாங்க.
“ம்.. என்ன பாத்தி.. நா வத்துக்குல்ல நீயே எல்லா பூவியும் பச்சிட்ட..” ன்னு பத்மினி ஆரம்பிக்க,
“எவ்ளோ நேரமா உனக்கு நா வெய்ட் பண்வேன்.. நா கூப்ட்ட உடனே நீ டக்குன்னு வரணும்ல.. சரி! சரி! நீ மிச்ச பூவெல்லாம் பறி.. நா சாமி ரூமை ரெடி பண்றேன்..” அப்டீன்னு சொல்லிட்டு பறிச்ச பூக்கள எடுத்துகிட்டு வீட்டுக்குள்ள போய்ட்டாங்க.
பத்மினிக்கு பாட்டி இப்டி பேசிட்டு போனது பிடிக்கவேயில்ல. ஆனாலும் அவ தன் பாட்டி பறிக்காம விட்ட பூக்களை மெதுவா பறிச்சு எடுத்துகிட்டு உள்ள போனா.
அவ சாமி ரூம்க்குள்ள போறப்ப அவளோட பாட்டி சாமி ரூம்ல இருந்து சத்தமா சுலோகம் சொல்ல ஆரம்பிச்சிருந்தாங்க.
என்ன இவங்க? நா வரதுக்குள்ள சுலோகம் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்கன்னு நெனச்சு பாட்டிகிட்ட ஓடினா.
ஆனா பாட்டி அவள பாக்கவே இல்ல. கண்ண மூடிகிட்டு சத்தமா சுலோகம் சொல்லிட்டிருந்தாங்க.
இவ பாட்டியோட கன்னத்த தொட்டு மடியில உக்காந்து என்னன்னமோ பண்ணி பாக்கறா.. ஆனா பாட்டி கண் முழிச்சி இவள பாக்கவேயில்ல.. கண் மூடி சத்தமா சுலோகம் சொல்லிட்டேயிருந்தாங்க.
என்ன இந்த பாட்டி? இப்டி பண்றாங்கன்னு அவ நெனச்சிட்டிருக்கறப்ப பாட்டி சுலோகம் முடிச்சிட்டு எழுந்து வந்தாங்க.
“ஏன் பாத்தி? நா வத்துக்குல்லயே பூ பச்சித்த? நா வத்துக்குல்லயே சோகம் சொல்ல ஆமிச்ச?!” ன்னு கேட்டா.
“இப்டிதானே நீயும் செய்யற? நீ ஏதாவது ஒண்ணு கேட்டு அது கிடைக்க லேட்டானா எவ்ளோ கோவிச்சிக்கற? இது தப்புதானே?” ன்னு கேட்டாங்க.
“ம்.. போ பாத்தி.. நீங்க பேட் (Bad) பாத்தி?!” என்று கூறி வாசலுக்கு ஓடினாள்.
அப்பா அப்பாவும் தாத்தாவும் வீட்டுக்குள்ள வந்தாங்க.
இவ உடனே அவங்ககிட்ட ஓடினா.
“அப்பா! காலீலயே எங்க போன?” அப்டீன்னு அவ ஆரம்பிக்க,
“ஹாய் டா செல்லம்! நாம இன்னிக்கு வெளிய போலாமா?” ன்னு கேக்க, அவளும் ஜாலியா அவர் கூட கிளம்பினா.
அவங்க எல்லாரும் ஜாலியா மாலுக்கு போனாங்க.
அங்க எஸ்க்கலேட்டர் பாத்ததும் அவளுக்கு ஆச்சர்யமா இருந்தது.
“ஹை! அப்பா! இது என்னது?”
“இதுக்கு பேர்தான் எஸ்க்கலேட்டர்.” ன்னு சொன்ன அப்பா அதில எப்டி கவனமா ஏறணும்னு சொல்லி குடுத்தார்.
அப்ப ஒரு குட்டி பையன் அதில ஏறுறதுக்காக ஓடினான். பின்னாலயே அவங்கப்பா ஓடி வந்தார். ஆனா அவங்கப்பா அவன் கிட்ட வரதுக்குள்ள அந்த பையன் ஓடிட்டிட்டு இருக்கற எஸ்கலேட்டர்ல கால வெச்சிட்டான். ஆனா அவனுக்கு அதில எப்டி பேலன்ஸ் பண்ணி நிக்கணும்னு தெரியாததால தடுமாறி கீழ விழப் போனான்.
உடனே பத்மினியோட அப்பாவும் தாத்தாவும் அந்தப் பையனை விழாம தாங்கிப் பிடிச்சி காப்பாத்திட்டாங்க.
“என்னடா? எஸ்க்கலேட்டர்ல ஓடிப் போய் ஏறக்கூடாது.. பொறுமையா கவனிச்சி ஏறணும்னு சொல்லி குடுத்திருக்கேன்ல..” ன்னு அந்த பையனோட அப்பா தன் மகனை பாத்து கோவிச்சிகிட்டார்.
“ம்.. ம்..” ன்னு அந்த பையன் அழுதான்.
உடனே பத்மினியோட தாத்தா,
“இது மிஷின்ப்பா.. இந்த மாதிரி மிஷின்ல எல்லாம் ஏறும் போது ரொம்ப பொறுமையா கவனமா ஏறணும்.. இறங்கணும்.. இல்லன்னா நமக்குதான் அடி படும்.. சரியா? இத மாதிரிதான் சில வேலைகள் பண்றப்ப வேகமா செய்ய கூடாது. பொறுமையாதான் இருக்கணும்!” ன்னு சொல்லி குடுத்தார்.
அந்த பையனும் சின்னு தலையாட்டிகிட்டே அவங்கப்பாவோட போனான்.
அந்தப் பையன் பண்ணின தப்பு என்னங்கறது புரிஞ்சிதாலயே பத்மினிக்கு தான் செய்துட்டிருந்த தவறுகளை புரிஞ்சிகிட்டா.
இனிமே பொறுமையா இருக்கணும்னு சிறப்பான பாடமும் கத்துகிட்டா.
எஸ்க்கலேட்டர்ல ஏறுறப்ப அவ அவசரப்படல.. சமத்தா அப்பா கைய புடிச்சிட்டு நிதானமா ஏறினா.
இதப் பாத்த சில பேர்,
“சமத்து! இப்டிதான் எல்லா இடத்திலயும் பொறுமையா இருக்கணும். குட் கேர்ள்!” அப்டீன்னு அவ கன்னத்த தொட்டு முத்தம் குடுத்துட்டு போனாங்க.
மறுநாள்ள இருந்து அவ எல்லா இடத்திலயும் அடம் புடிக்காம பொறுமையா இருக்க ஆரம்பிச்சிட்டா.
என்ன சுட்டீஸ்? பொறுமையா இருந்தா எவ்ளோ நன்மைன்னு பத்மினி மாதிரி நீங்களும் புரிஞ்சிகிட்டீங்கதானே!?
♥♥♥♥♥
நான் ஒரு இல்லத்தரசி. என் மனவுளைச்சலையும் இறுக்கத்தையும் விரட்டும் முயற்சியாக என் எழுத்தார்வத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் சராசரிப் பெண். இணையத்தில் சிறுகதைகளும் தொடர்கதைகளும் எழுதி வருகிறேன். இரண்டு தொடர்கதைகள் புத்தகமாக வெளி வந்துள்ளன. தினமலர் வாரமலரில் என் சிறுகதைகள் வெளி வந்துள்ளன. பல இணையதளங்கள் நடத்திய பல சிறுகதைப் போட்டி, கவிதை, கட்டுரை, செய்யுள் எழுதும் போட்டிகளில் பங்கு கொண்டு முதல் பரிசினை வென்றிருக்கிறேன்.