குழந்தைகளுக்கான அண்ணா நினைவு போட்டியில் பரிசு வென்ற கதை.

அண்ணா அரசு நடுநிலைப் பள்ளி.

மதிய உணவு இடைவேளைக்காக மணி அடிக்கப்பட்டது. மாணவர்கள் எல்லோரும் “ஹே” என்கிற இரைச்சலுடன் உற்சாகமாக வகுப்பறையை விட்டு வெளியே ஓடிவந்தனர். அனைவரது கைகளிலும் உணவுப் பெட்டி அடங்கிய சிறிய பை இருந்தது.

ஒவ்வொருவரும் அவரவர் நண்பர்களுடன் சிறுசிறு குழுவாக உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தனர். ஐந்தாம் வகுப்பு படிக்கும் நந்தனும், மாறனும் தங்களது உணவுப் பையுடன் தாமதமாகவே வெளியில் வந்தார்கள். இருவரது மனதிலும் பெரிய யோசனை இருந்தது. சற்று முன்பு முடிந்த கடைசி பாடவேளை அவர்களது வகுப்பாசிரியை நீலவேணி டீச்சருடையது. வகுப்பு முடியும் தறுவாயில் டீச்சர் ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.

அது வருடா வருடம் நடக்கும் நிகழ்வுதான். அந்த நாளுக்காக அனைத்து மாணவர்களுமே எதிர்பார்ப்புடன் காத்திருப்பர். இருக்காதா பின்ன? எத்தனை வகை சாப்பாடு சாப்பிடலாம்.. புளி, எலுமிச்சை, தக்காளி, பூரி குருமா, காய் சோறு எல்லாம் வருமே. அதுமட்டுமில்லாம வகைவகையான காய்கள், சுண்டல் கூட மாணவர்கள் கொண்டு வருவார்கள்.

இதெல்லாம் வருஷத்துல ஒரு நாளைக்கு வரும் பகிர்ந்துண்ணும் தினத்துக்காகத்தான். அன்னைக்குப் பள்ளியில இருக்கிற எல்லோரும் அவங்கவங்க வீட்ல செய்யுற சாப்பாட்டைக் கொண்டுவரணும். அவங்களுக்கு மட்டுமில்ல. வகுப்புல இருக்கிற எல்லோரும் பகிர்ந்து சாப்பிடும் அளவுக்கு வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமா இருக்கணும்.

யார் யார் எதைக் கொண்டு வரதுன்னு ஒரு வாரமாவே வகுப்புல பேச்சு அடிபட்டுச்சு.

“நான் பிரியாணி எடுத்துட்டு வருவேன்னு” ரஞ்சன் சொன்னான். அவன் கொஞ்சம் வசதியான வீட்டுப் பையன்.

“டேய் ரஞ்சா பரிமாறும்போது நான் உன்கூடவே வருவேன். முதல்ல எனக்குத்தான் நீ கொடுக்கணும்” என்றான் முரளி.

“டேய் சோத்து மூட்டை. நீயே எல்லாதையும் சாப்பிட்டா எங்களுக்கு” என்றான் ராமு.

“டேய் சண்டை போடாதீங்கடா! எல்லோருக்கும் வேணும்கிற அளவுக்கு நான் எடுத்துட்டு வரேன்னு” ரஞ்சன் சமாதானம் செய்தான்.

“இந்த முறை எங்க வீட்ல வாழை காய்ச்சிருக்கு. அதுல பஜ்ஜி போடுறேன்னு எங்கம்மா சொன்னிச்சு. அதனால நான் பஜ்ஜி எடுத்துட்டு வருவேனே” உற்சாகத்துடன் சொன்னான் சண்முகம்.

“டேய் மாறா என்னடா நீயும் நந்தனும் எதுவும் பேசாம இருக்கீங்க”

அவனுக்கு முன்னால் உட்கார்ந்திருந்த மேகலை கேட்டாள்.

அவளுக்கு அருகிலிருந்த வானதி “டேய் மாறா போன வருஷம் கொண்டு வந்தியே குலோப் ஜாமூன்… குண்டு குண்டா சர்க்கரைப் பாகு சொட்டச் சொட்ட சொல்லும்போதே நாக்கைச் சுழற்றியவளாய் இந்த வருஷமும் அதையே கொண்டு வரியா” எனக் கேட்டாள்..

அவள் ஆர்வமாகக் கேட்கவும் “ம்ம்” எனத் தலையாட்டினான் மாறன். ஆட்டும்போதே அருகிலிருந்த நந்தனைப் பார்த்தான்.

எதுவுமே புரியாதவனைப் போல கலங்கிய முகத்துடன் இருந்தான் நந்தன்.

அவனது முகவாட்டத்திற்கு என்ன காரணம்னு மாறனுக்குத் தெரியும்.

நந்தன் அவங்க தோட்டத்துல வேலை செய்யும் மருதாணி அக்காவின் பையன். அவனுக்கு அப்பா இல்லை. ஒரு குட்டி தம்பி கூட இருக்கான். எல்லாத்துக்குமே மருதாணி அக்காதான் சம்பாதிக்கணும். நந்தனைக் கூட மாறன் அப்பாதான் படிக்க வைக்கிறார்.

ஒரு வாரமா பசங்க அந்த நாளைப் பத்தி பெருமையா பேசும்போது அவங்க எதைப் பத்தி பேசுறாங்கன்னு கேட்டான் நந்தன். அவன் இந்த பள்ளிகூடத்துக்கு புதுசு. இந்த வருஷம்தான் சேர்ந்தான். விவரம் தெரியாமல் கேட்டவனுக்கு மாறனும் விளக்கிச் சொன்னான்.

“நீ சொல்ற மாதிரி என்னால எதுவும் கொண்டு வரமுடியாதுடா மாறான்னு” வருத்தமாகச் சொன்னான் நந்தன்.

எல்லோரும் ஏதாவது கொண்டு வரும்போது நந்தன் ஒன்னுமே  கொண்டு வரலன்னா, கூட படிக்கிறவங்க சிரிப்பாங்களே. மாறனும் யோசித்தான்.

“சரி விடுடா… டீச்சர் சொன்னதுக்கு அப்புறமா முடிவு செஞ்சிக்கலாம்னு” மாறன் சொன்னான். அன்னைக்கு பேச்சைத் தள்ளி போட முடிஞ்சது. இன்னிக்கு முடிவு செய்யணுமே. ரெண்டுபேரும் யோசனையுடனேயே சாப்பிட்டார்கள்.

மதியத்துக்கு மேல் கிடைத்த எல்லா இடைவேளைகளிலும் மாணவர்கள் அந்த நாளைப் பற்றியே உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். மாறனுக்கு நந்தனைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது.

வீட்டிற்கு திரும்பும் வழியில் “டேய் மாறா நாளைக்கு நான் பள்ளிக்கூடத்துக்கு லீவு போட்டுடவா” என்றான் 

“என்னடா இப்படி சொல்ற. அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நல்லா இருக்கும்டா. நீ வேற ஸ்கூலுக்குப் புதுசு. நீயும் இதையெல்லாம் பார்க்கணும்டா. எங்ககூட சேர்ந்து சந்தோஷமா இருக்கணும். இரு ஏதாவது யோசிப்போம்”

“நாம சின்ன பசங்க மாறா. நாளைக்குள்ள என்னத்தடா செய்யமுடியும்” வருத்தமாகச் சொன்னான் நந்தன். அவனது முகம் சுருங்கியிருந்தது.

அதே வருத்தம் மாறனையும் தொற்றிக்கொள்ள வீட்டிற்குச் சென்றான்.

வழக்கமாக “அம்மா பசிக்குது ஏதாவது சாப்பிடக் கொடுன்னு’ பையை தூக்கி விசிறிவிட்டு வருபவன் அமைதியாக வருவதைப் பார்த்தார் மாறனின் அம்மா.

அதிசயமாக இருந்தது அவனது அமைதி.

சிறிது நேரம்விட்டு அவனுக்கு அருகில் வந்தார்.

அவனது நெற்றியில் கையை வைத்துப் பார்த்தார்.

“எனக்கு காய்ச்சல் எல்லாம் இல்லை”

“அப்புறம்? யார்கிட்டையாவது சண்டை போட்டியா?”

“இல்லை”

“பசிக்கலையா?”

“பசிக்குது”

“அப்புறம் என்னடா?”

“நாளைக்கு பகிர்ந்துண்ணும் நாள்”

“ப்பூ… அதுக்கு ஏண்டா இப்படி உட்கார்ந்திருக்க. எடுத்துட்டுப் போறதுக்கு குலோப்ஜாமூன் வேணும். அதானே? செஞ்சித்தரேன் வாடா”

“அதுக்காக இல்லைமா…”

“வேறென்னடா”

“நம்ம நந்தனுக்கு எதுவும் கொண்டு வரமுடியாதில்லை. அவன் எதுவும் எடுத்துட்டு வரலைனா ஓசிச்சோறுன்னு எல்லோரும் கேலி செய்வாங்கம்மா”

“அப்படிப் பேசக் கூடாது மாறா. எல்லோரும் சமம்னு காட்டுறதுக்குத் தானே அந்த நாளைக் கொண்டாடுறாங்க”

“இருந்தாலும் பசங்க கேலி செய்வாங்கம்மா. யார் யார் என்னென்ன கொண்டு வந்திருக்காங்கன்னு பேசுவாங்கம்மா”

மாறனின் குரல் தழுதழுத்தது.

மாறனின் முகத்தையே பார்த்தார் அம்மா.

கொஞ்சம் யோசித்தார்.

“மாறா சாப்பாடு மட்டும்தான் எடுத்துட்டு வரணுமா?” என்றார்

அம்மா  இப்படி ஏன் கேட்கிறார் என குழம்பியவன் “அப்படியில்லைமா! எதுவேணா கொண்டு வரலாம்னு டீச்சர் சொன்னாங்கம்மா”

“எல்லோரும் சாப்பாடு கொண்டு வந்தா எதுலடா சாப்பிடுவீங்க”

கொஞ்சம் யோசித்தான் மாறன்.

டக்கென மண்டைக்குள் பல்ப் எரிந்தது. முகம் உற்சாகம் பூசிக் கொண்டது.

“அம்மா நந்தனைப் பார்த்துட்டு வரேன்னு”

அவர்களது தோட்டத்திற்கு ஓடினான்.

தோட்டத்தில் காற்றுக்கு ஆடும் செடி கொடிகளை வேடிக்கைப் பார்த்துக்கிட்டு வருத்தமா உட்கார்ந்திருந்தான் நந்தன். தம்பிப் பாப்பாவை தூங்க வைச்சிட்டு அம்மா தோப்புல வேலை செஞ்சிட்டு இருந்தாங்க. அவங்கக்கிட்டே போய் எதுவும் கேட்கத் தோணலை. அப்போதான் வேகமா ஓடிவந்தான் மாறன். அவனது முகத்தில் தெரிந்த உற்சாகம் நந்தனை அவனை நோக்கி ஓடவைத்தது.

“எதுக்குடா இப்படி மூச்சு வாங்க ஓடி வர. ஏதாவது ஐடியா கிடைச்சதாடா மாறா” ஆர்வமாகக் கேட்டான் நந்தன்.

“வா சொல்றேன்” உற்சாகமாக அவனது கையைப் பிடித்துக் கொண்டு அவனது அம்மா இருக்குமிடத்திற்கு வந்தான்.

“டேய்! அம்மாகிட்டே கேட்க வேணாம்டா. அம்மா ரொம்ப கஷ்டப்படும்டா”

“அவங்களால கொடுக்க முடியறதைத்தான் நாம கேட்போம் வா” என்றான் மாறன்.

புரியாமல் அவனது பின்னால் சென்றான் நந்தன்.

அங்கு நந்தனது அம்மா பாக்கு மட்டைகளை இயந்திரத்திற்குள் கொடுத்து தட்டுகளாக மாற்றிக் கொண்டிருந்தார்.

pakkumattai

“நாங்க சாப்பாடு கொண்டு வருவோம். நீ சாப்பிடறதுக்கு தட்டு கொண்டு வருவ. அதுவும் இப்போ எல்லாம் பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாதுன்னு டீச்சர் சொல்லிருக்காங்கதானே. இதக் கொண்டு போனா. இன்னும் சந்தோஷப்படுவாங்க. எப்புடி நம்ம ஐடியா?”

காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான் மாறன்.

நண்பனது உற்சாகம் நந்தனையும் தொற்றிக் கொண்டது.

“டேய் மாறா நன்றிடா. நாளைக்கு நானும் பள்ளிக்கூடம் வருவேனே”

அந்த  குதூகலத்தில் அவனது குரல் தோட்டம் முழுவதும் எதிரொலித்தது.

மறுநாள் மாணவர்கள் உற்சாகமாக வகுப்பறைக்குள் நுழைந்தனர். கைகளில் அவர்களால் தூக்க முடிந்த அளவு பைகளில் உணவு இருந்தது. ஒவ்வொருவரும் தாங்கள் என்னென்ன கொண்டு வந்தோம்னு பெருமை பேசிக் கொண்டார்கள்.

மாறனும், நந்தனும் கூட மகிழ்ச்சியாக எல்லோரிடமும் பேசினர்.

காலை வகுப்புகள் முடிந்தன. உணவு நேரத்திற்காகக் காத்திருந்தனர்.

வகுப்பாசிரியர் வந்தார். எல்லோரும் உணவை எடுத்து வைத்தனர்.

எல்லோரையும் ஒரு பார்வை பார்த்த ஆசிரியை “இவ்வளவு சாப்பாடு வந்திருக்கே அதை எப்படி சாப்பிடுவதாம். யாராவது யோசனை செஞ்சீங்களா?” புன்னகையுடன் கேட்டார்.

அவருக்கு அருகிலிருந்த நந்தன் “டீச்சர் நான் தட்டு கொண்டு வந்திருக்கேன்” கையிலிருந்த பையை நீட்டினான்.

ஆசிரியை வாங்கிப் பார்த்தார். பாக்கு மட்டையிலான தட்டுகள்.

“எவ்வளவு புத்திசாலித்தனமான செயல். நல்ல யோசனை. எல்லோரும் நந்தனுக்குக் கை தட்டுங்க”

கைத்தட்டல் வாங்கிய நந்தனின் கைகள் மாறனை தன்னுடன் சேர்த்து இணைத்துக் கொண்டது.

பின்ன சமயோசிதமா அந்த ஐடியாவைக் கொடுத்தது அவன்தானே.

*******

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments