பச்சை புல்வெளி.. அதன் மேல் பெரிய ஒற்றை மலை; அதிலிருந்து விழும் ஊதா நிற அருவி; அந்த அருவி ஆறாகி வளைந்து நெளிந்து, சமதரையில் ஓட, அதன் கரையில் ஒரு வீடு; ஆறே ஓடினாலும் அதிலிருந்து தண்ணீர் எடுக்க மாட்டேன் என‌அந்த வீட்டு ஓனர் சபதம் எடுத்திருப்பார் போலும்.. வீட்டு ஓரத்தில் கிணறு ஒன்று வைத்திருந்தார். வீட்டு வாசலில் சின்ன அம்மி, ஆட்டுக்கல், அதன் பக்கத்தில் வழி தெரியாமல் வந்து முட்டிக் கொண்டிருந்த நாய்..

“முடிச்சாச்சா?”

முடிச்சாச்சு மா!” என்ற கோரஸ் குரலைக் கேட்டபடி வந்த அம்மா, பார்த்தது மேலே சொன்னதைக் தான். “என்னடா வரைஞ்சிருக்கீங்க?”

“பார்த்தா தெரியலையா. இது தான் இயற்கைக் காட்சி.” அப்பாவின்‌பதில்.

“ஆறு இத்தனை பக்கத்தில் ஓடும்போது கிணறு எதுக்கு?” என்று அம்மா லாஜிக் கேள்வி கேட்க, அப்பா முறைத்தபடி, “இயற்கை காட்சின்னா இப்படித்தான் இருக்கும். நான் ஸ்கூல் படிக்கும்போது இதைத்தான் வரைவேன். அதையே வரைஞ்சுட்டேன். தொலைஞ்சிபோன ஸ்டேஷனரி ஐட்டம் எல்லாம் கண்டுபிடிச்சி, கிடைச்சதை வச்சி, எவ்ளோ கஷ்டப்பட்டு இந்த    ப்ராஜெக்ட் செஞ்சிருக்கோம்.. நீ வந்து கேலி பண்ணுற?” என்று பொங்கி வந்தார்.

“கேலியா! நியாயமான‌ கேள்விதானே கேட்டேன்? என்ன சொல்ற‌ அனு?” அம்மா தனக்கு துணைக்கு‌ஆள் சேர்க்க, இத்தனை‌நேரம் தம்பிக்கு செய்யும் ப்ராஜெக்ட் டில் உதவியிருந்த அனு, என்ன சொல்வது என்று தெரியாமல், தம்பியைப் பார்க்க, வினு, “அது ஆத்துல வர்ற தண்ணியை எடுத்து, கிணத்துல ஊத்தி, கிணத்துல இருக்கிற‌ தண்ணியை  எடுத்து குடிப்பாங்க மா அந்த வீட்ல..” என்று விளக்க, அப்பா தலையில் அடித்துக் கொண்டார். அம்மா அவன் முதுகில் தட்டிக் கொடுத்தபடி, “ரொம்ப அறிவுமா உனக்கு.. போங்க.. போய் எல்லாத்தையும் எடுத்து வைங்க.. அனு.. நீ உன் பாடம் படிச்சுட்டியா?”

“ம்.. இந்த இங்கிலீஷ் வார்த்தைகளுக்கு தமிழ் வார்த்தை எழுதுற கேள்விதான் மனப்பாடம் பண்ண கஷ்டமா இருக்குமா.”

“சரி.. விடு.. நாளைக்குத் காலையில் எழுந்து ஒரு முறை ரிவைஸ் பண்ணிடுவோம். வாங்க..தூங்கலாம்..”

அடுத்த அரைமணி நேரத்திற்கு அங்கங்கு இருந்த பொருட்களையெல்லாம்‌ சண்டை போட்டு, விளையாடி,  கையில் கிடைத்ததை எடுத்து வைத்தவர்கள் படுக்கையில் களைத்துப் போய் விழுந்தார்கள்.

“அப்பா.. கதையை ஸ்டார்ப் பண்ணுங்கப்பா.. கதையை ஸ்டார்ட் பண்ணுங்கப்பா”.. என்று அனு ராகம்‌ பாட கிளுக்கி சிரித்த வினு அம்மாவைக் கட்டிக் கொண்டு படுத்தபடி அவனும் பாட்டில் சேர்ந்து கொண்டான், “அப்பா.. கதையை ஸ்டார்ட் பண்ணுங்கப்பா..” என்று.

“ஓகே.. ஓகே.. ஆரம்பிக்கிறேன். “

“ஹஏஏஏஏ!!”

“ஒரு ஊருல, ஒரு‌அழகான வீடு. அந்த வீட்டுல ஒரு விரிசலும் ,  , அழிப்பானும் நெருங்கின நண்பர்களா இருந்தாங்க..”

“விரிசலா? அழிப்பானா? அப்படின்னா?”

“விரிசல்னா பென்சில்; அழிப்பான்னா எரேசர்! இன்னைக்கு கதையில் இவங்க ரெண்டு பேரையும் இப்படிதான் கூப்பிடுவேன்” .

pencil eraser

“ஓ..”

“ஆமா, விரிசலும்,  அழிப்பானும் நண்பர்களா இருந்தாங்க. எங்க போனாலும்‌ ஒன்னாதான் போவாங்க.. ஒன்னாதான் வருவாங்க. இதுல அந்த எழுதுகோல் கொஞ்சம் சேட்டை பண்ணும்.. அது ஏதாவது சேட்டை செஞ்சு, அது தப்பாச்சின்னா, அழிப்பான் வந்து அதை அழிச்சிடும்.”

“ம்..‌அப்புறம்.” வினுவும் அனுவும் ஆர்வமாய் உம் கொட்டினார்கள்..

“அந்த வீட்டில் ஒரு விரிசல்  துருகி இருந்துச்சி.”

“அப்படினாபா?”

” சார்ப்னர் “

“ஓ..ஓகே..”

இவங்க ரெண்டு பேரையும் பார்த்த அந்த துருகிக்கு எப்படியாவது இவங்களோட நண்பனா மாறிடனும்னு ரொம்ப ஆசை. அந்த விரிசல் துருகி, விரிசலிடமும்   அழிப்பானிடமும்  போய் சொன்னது, என்னையும் உங்க ஃப்ரெண்டா சேர்த்துக்கோங்கன்னு.. “

“விரிசலும் அழிப்பானும் ஓகே சொல்லிட்டாங்க. அதில் இருந்து மூன்று பேருக்கும் ஒரே ஜாலி. எங்கே போனாலும் ஒன்னாவே போவாங்க.

விரிசல் தப்பா எழுதினா, அழிப்பான் வந்து அதை அழிச்சிடும். எழுதி எழுதி விரிசல் முனை மழுங்கிடுச்சின்னா, விரிசல் துருகி மறுபடியும் அதன் முனையைக் கூராக்கிடும். மூன்று பேரும் சந்தோசமா இருந்தப்போ, ஒரு நாள் விரிசல் துருகி சோகமா இருந்தது.”

“ஏன்?” அனு கேட்டாள்.

“கரெக்ட். இதே கேள்வியை விரிசலும் அழிப்பானும்

 கேட்டாங்க, ஏன்னு.. அதுக்கு அந்த விரிசல் துருக்கி சொல்லுச்சி, விரிசல் எழுதுறதை அழிச்சி அழிச்சி இந்த அழிப்பான்  கரைஞ்சி சின்னதாயிடுச்சி. விரிசல் முனையை நான் கூராக்கி, கூராக்கி‌ விடுறதுனால விரிசல் கரைஞ்சி போய், சின்னதாயிடுச்சி. இன்னும் கொஞ்ச நாள்ல நீங்க ரெண்டு பேரும் அப்படியே சின்னதாகி காணாம போயிடுவீங்க.. ஆனா நான்‌ மட்டும் அப்படியே இருக்கேன். அப்போ கொஞ்ச நாள் கழிச்சு நான் மட்டும் காணாம போகாம தனியா இருப்பேன்” அப்படின்னு சொல்லி அழுதுச்சி”

“இப்படி ஒரு பிரச்சனையா?” அம்மாவின் கேள்வி.

“ஆமா.. விரிசலுக்கும் அழிப்பானுக்கும் என்ன சொல்றதுனே தெரியலை. அழாதே விரிசல் துருகி.. அழாதே!” ன்னு சமாதானம் செஞ்சாங்க. ஆனா விரிசல் துருகி, நீங்க ரெண்டு பேரும் காணாம போயிடுவீங்க. நான் மட்டும் காணாம போகாம தனியா இருப்பேன்னு திரும்ப திரும்ப சொல்லி அழுதுச்சி.”

“இதையெல்லாம் பக்கத்திலே இருந்த எழுதுபொருள்  பெட்டி பாத்துகிட்டு இருந்தது.”

“எது?”

“நீங்க பென்சில், எரேசர், சார்பனர் லாம் போட்டு கொண்டு போவீங்களே அந்த ஸ்டேஷனரி பாக்ஸ்.”

“ஓ.. அதுவா!”

“அதே.. இந்த மூன்று பேரும் பேசிக்கிறதைக் கேட்டுகிட்டே இருந்த எழுதுபொருள் பெட்டி”என்ன பிரச்சனை இப்போ?” அப்படின்னு கேட்டுச்சு. மூன்று‌பேரும் அவங்களோட பிரச்சனையை விவரமா எடுத்து சொன்னாங்க.”

உடனே அந்த எழுதுபொருள் பெட்டி துருகியைப்  பார்த்து சொன்னது, எழுதுகோலும் கரைப்பானும் கரைந்து கரைந்து‌ காணாமல் போகும்போது நீ மட்டும் அப்படியே இருப்ப என்பதுதானே உன் பிரச்சனை?

“ஆமாம்” என்று தலையை ஆட்டியது அந்த விரிசல் துருகி.

“கவலையேபடாதே. இந்த வீட்டுல அனு வினுன்னு ரெண்டு வாலு பசங்க இருக்காங்க. உன் நண்பர்கள் காணாமப் போனதும் நீ அவங்ககிட்ட போயிடு. அவங்க உன்ன கையில் எடுத்துட்டா, நீ ஒரே நாளில் காணாமப் போயிடுவ! டொட்டோடொயிங்!!” என்று கையை விரித்து சொன்னது அந்த எழுதுபொருள் பெட்டி.

“ஹாஹாஹா!!” என பாரதி விழுந்து விழுந்து சிரிக்க, “அப்பா!!!!” என்று சத்தமிட்டபடி அவர்மீது ஏறிய அனுவிம் வினுவும், “எங்களைக் கலாய்ச்சிட்டீங்க..!!” என்று செல்லமாய் சிணுங்க, “பின்னே!! எத்தனை பென்சில், எரேசர், சார்ப்னர் வாங்கிக் கொடுத்திருக்கு. கடைசியில வேண்டும்போது ஒன்னைக்கூடக் காணலை.”

“அது.. அப்பா.. டிராயர்லதான்  வச்சோம்..”

“அங்கே வச்சது கால் முளைச்சி ஓடிடுச்சா? இனி பத்திரமா வச்சிக்கணும்.. சரி இப்போ சொல்லுங்க, பென்சிலுக்கு தமிழ் பெயர்   என்ன?”

“விரிசல்!” கோரசாய் இருவரும்.

“எரேசர்?”

“அழிப்பான்!”

“பென்சில் சார்ப்னர்?”

“ம்ம்.. விரிசல் துருகி!”

“ஸ்டேசனரி பாக்ஸ்?”

“எங்களைக் கலாய்ச்ச எழுதுபொருள் பெட்டி!”

“வெரிகுட்.. நாளைக்கு பரிட்சைல அனு நூத்துக்கு நூறு வாங்கப்போறா!”

“ஹே!!!” என்ற ஆரவாரக்குரலுடன் அன்றைய கதைநேரம் முடிந்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments