ரயில் நிலையத்தைத் தவிர குழந்தைகளுக்கு ராபர்ட்டா, பீட்டர், ஃபிலிஸ் மூவருக்கும் பொழுது போக்குவதற்கு வேறு எந்த இடமும் இல்லை. மெல்ல மெல்ல ரயில் நிலையத்தில் உள்ள அறைகளுக்குள் எட்டிப் பார்த்தனர். பணியாளர்கள், சுமை தூக்குபவர்களின் செயல்களை ரசித்தனர். பள்ளிக்குப் போகாமல் கழிந்த நாட்கள் அவர்களுக்கு மெல்ல பழகிவிட்டன.

 அவர்களின் அம்மா எப்பொழுதும் அவரது அறையில் அமர்ந்து எதையாவது எழுதிக் கொண்டே இருந்தார். ஒரு நாள் வந்து அவர் எழுதியவற்றை குழந்தைகளுக்கு வாசித்துக் காண்பித்தார்.‌

“இவ்வளவு நாளும் நான் இந்தக் கதைகளைத் தான் எழுதினேன். நல்லா இருக்கா?” என்று கேட்டார்.

 குழந்தைகளுக்கு எல்லாக் கதைகளும் மிகவும் பிடித்திருந்தது. “நல்லா இருக்கும்மா!” என்று மூவரும் பாராட்டினார்கள்.

 அடுத்து வந்த ஜூன் மாதத்தில் நல்ல மழை பெய்தது. அதிகக் குளிரும் இருந்தது. “அடுப்புக்கரியோட விலை ரொம்பவும் அதிகம். நம்மால வாங்க முடியாது. இந்த வருஷம் கணப்பு போட்டு அது பக்கத்தில் குளிர் காய முடியாது” என்றார் அம்மா.

பீட்டருக்கு ஒரு யோசனை தோன்றியது. “பக்கத்துல ஒரு நிலக்கரிச் சுரங்கம் இருக்கு.. அங்கிருந்து நான் கொஞ்சம் கரி கொண்டு வரேன்” என்று அவன் சகோதரிகளிடம் கூறினான்.

wheelchair
படம்: அப்புசிவா

“நாங்களும் உனக்கு உதவி பண்றோம்!” என்று ராபர்ட்டாவும் ஃபிலிஸும் கூறினர்.

 இரண்டு நாட்கள் கழித்து மாலை நேரத்தில் பீட்டர், ராபர்ட்டா, ஃபிலிஸ் மூவரும் ஒரு சிறிய தள்ளுவண்டியைத் தள்ளிக்கொண்டு ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள இடத்திற்குச் சென்றார்கள். அங்கே ஏற்கனவே பீட்டர் கொஞ்சம் அடுப்புக்கரியை எடுத்து ஒரு மரத்தின் கீழ் வைத்திருந்தான்.

 மூவரும் சேர்ந்து அந்தக் கரியை வீட்டிற்குக் கொண்டு சென்றனர். உண்மையில் பீட்டர் ரயில் எஞ்சினுக்கு பயன்படுத்தும் கரியைத் தான் ரயில் நிலையத்திலிருந்து திருடியிருந்தான். தினமும் இதுவே தொடர, ஒரு நாள் ரயில் நிலைய மேலாளர் பீட்டரைப் பிடித்துக் கொண்டார்.

“மன்னிச்சுக்கோங்க! எங்க வீட்ல ரொம்பக் குளிரா இருந்துச்சு. கரி வாங்க அம்மா கிட்ட பணம் இல்ல. அதான் இதை எடுக்க வந்தேன். தினமும் கொஞ்சமா தான் எடுத்தேன்” என்று பீட்டர் கூறியதும் மேலாளர் அவனை மன்னித்து விட்டார். “சரி இனிமே இது மாதிரி செய்யாதே!” என்று எச்சரித்து அனுப்பினார்.

வெகு சீக்கிரத்தில் குழந்தைகளுக்கு ரயில் நிலையம் வழியே வந்து செல்லும் ரயில்களின் பெயரும், அவை வரும் நேரமும் நன்றாகப் பழகி விட்டது. ரயில்களுக்கு பட்டப் பெயர்கள் கூட வைத்தார்கள். பச்சை டிராகன்,

வான்ட்லியின் நீளப் புழு, பயங்கர இரவுப் பறவை என்றெல்லாம் விதவிதமாகப் பெயர் வைத்து மகிழ்ந்தார்கள்.

 பச்சை டிராகன் ரயில் கடந்து செல்லும் பொழுது மட்டும் மூவரும் அதை நோக்கி உற்சாகமாகக் கையை அசைத்து ‘டாடா’ காட்டுவார்கள். “அப்பாவும் லண்டன்ல இருக்காங்க, இந்த ட்ரெயினும் லண்டனுக்குத் தான் போகுது. அதான் டாடா காட்டுறேன்” என்பாள் ஃபிலிஸ்.

பச்சை டிராகன் ரயிலில் எப்பொழுதும் முதல் வகுப்பு பெட்டியிலேயே பயணம் செய்த ஒரு பெரிய மனிதர் இவர்கள் தினமும் கையசைப்பதைக் கண்டார். அவரும் பதிலுக்கு கையசைக்கத் துவங்கினார்.

 அம்மா வீட்டில் இருந்தபடியே தொடர்ந்து கதைகளை எழுதி வந்தார். பல பத்திரிகைகளுக்கும் அவரது கதைகளை அனுப்பினார்.‌ அவற்றில் சில கதைகள் வெளியாகின.

திடீரென ஒரு நாள் அம்மாவிற்குக் காய்ச்சல் வந்தது. குழந்தைகளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒரு மருத்துவரை அழைத்து வந்து அம்மாவை காட்டினார்கள். “இந்த உணவுகளையும் மருந்துகளையும் கொடுங்கள்” என்று பரிந்துரைச் சீட்டில் ஒரு பட்டியலை எழுதிக் கொடுத்தார் மருத்துவர்.

அந்தப் பட்டியலை படித்து பார்த்த அம்மா, “இதெல்லாம் வேண்டாம். வீட்டிலேயே சூப் போட்டு குடிச்சா சரியாயிடும்‌” என்றார்.

 அம்மாவிடம் பணம் இல்லை, அதனால் தான் இப்படிச் சொல்கிறார் என்று புரிந்து கொண்ட குழந்தைகள் மிகவும் வருந்தினர். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் யாரையும் அவர்களுக்குப் பழக்கம் இல்லை. யாரிடம் உதவி கேட்பது என்று குழம்பி நிற்க ராபர்ட்டாவுக்கு ஒரு யோசனை வந்தது!

-தொடரும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments