” ஏய், சுஜி, பைக்குள்ள ரித்து இருக்கா ?” என்று கத்தினான் சுரேஷ்.

“கத்தாத சுரேஷ், யாருச்சும் பாத்துட போறாங்க”

சுஜி பையைத் திறந்து காட்டினாள். ஒரு ஒரமாக  சுருண்டு ஓரு சிறிய பூனைக்குட்டி.

                                               …….     …….      ……..

சுஜியும், சுரேஷும் பள்ளி முடிந்து, அவர்கள் வேனுக்காக காத்திருந்த போது அங்கிருந்த மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

“மியாவ்” என்ற மெல்லிய குரல்.

மர வேர்கள் இடையில் இருந்து தான் சத்தம் வந்தது.

சுஜி சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, இலைகளையும் சருகுகளையும் விலக்கிப் பார்த்தாள்.

pillaigalum kuttiyum
படம்: அப்புசிவா

சிறிய பூனைக்குட்டி.

தூக்கிய போது, குட்டி எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை.

தாய்ப்பூனை எதுவும் அருகிலும் இல்லை.

கொஞ்சி விளையாடினார்கள்.

தூக்கி கைகளிலும், மடியிலும் வைத்துக் கொண்டார்கள்.

பெயர் வைக்க வேண்டும்.

பெயர் என்ன வைப்பது என்பது பற்றி பயங்கர வாக்குவாதம்.

“செந்தில்”

“குஷி”

“நித்யா”

“அனிஷ்”

”கிட்டி”

கடைசியாக முதல் நாள் பார்த்த தொலைக்காட்சி கதையில் வந்த “ரித்து” என்ற பெயர் தேர்வாயிற்று.

அதற்குள் வேன் வந்துவிட்டது.

சுஜி தன் பையை எடுத்துக் கொண்டு ஒடினாள்.

சுரேஷ் அடுத்து வந்தான். அவன் கையில் ரித்து.

”அய்யய்யோ ! வேன் அண்ணா திட்டுவாரே ! ஏண்டா எடுத்துகிட்டு வந்த?”

” சுஜி, பாவம் ரித்து, அதுக்கு யாருமே இல்ல. அதான் எடுத்துகிட்டு வந்துட்டேன்”

லாவகமாக வாங்கி சட்டென தன் பையில் வைத்து கொண்டாள் சுஜி.

……..   ……. ……..

சுரேஷுக்கு அடிக்கடி கவலை. ரித்து பையில் இருக்கா என்று.

ஒருவழியாக அவர்கள் தங்கியிருந்த அடுக்கு மாடி குடியிருப்பு வந்துவிட்டது.

மீண்டும் கவலை.

ரித்துவை எப்படி வீட்டுக்குள் வைத்துக் கொள்ளுவது ?

சுஜிக்கும், சுரேஷுக்கும் ஒரு பெட் அனிமல் வளர்க்க வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை.

ஆனால், அம்மா கண்டிப்பாக முடியாது என்று சொல்லி விட்டாள்.

“பெட் அனிமல் வளர்த்தா, வெறும் பேரு வச்சு, விளையாடலாம்ன்னு நினைக்கீறீங்க, யாரு அதைப் பராமரிக்கறது. என்னால முடியாது, உங்க ரெண்டு பேரைப் பாத்துக்கறதே பெரும்பாடா இருக்கு.”

“சுரேஷ், அம்மா ஆறு மணிக்குத்தானே வருவாங்க. அதுக்குள்ள நாம ரித்துவுக்கு ஒரு ப்ளேஸ் அரேன்ஞ் பண்ணிடலாம்.”

குடியிருப்பு வாசலில் யாருமே அவர்களைக்  கவனிக்கவில்லை என்றாலும், ஏதோ ஒரு ரகசியமான செயலைச் செய்வது போல இருவரும், அடி மேல் அடி வைத்து, கதவைத் திறந்து உள்ளே போனார்கள்.

இருவரும் தங்களுக்கு கொடுக்கபட்டுள்ள இடத்தில், கீழ் வரிசையில் சில பழைய பொருட்களைப் போட்டு வைத்திருப்பார்கள்.

“சுஜி, இந்த கார்டன் பாக்ஸை எடுத்திட்டு அங்க வச்சிடுவோம்.”

“சரிடா”

“ஹேய் ஐடியா ! அந்த பாக்ஸில இருக்கற புக்ஸை எடுத்து வேற இடத்தில வச்சிடுவோம். அப்ப அந்த பாக்ஸிலயே வச்சிடலாம்”

புக்ஸ் இடம் மாறின.

சின்ன குட்டிக்கு அணைப்பாக சில பழைய டிரஸ்களைப் போட முடிவு செய்தார்கள்.

“என்னோட சட்டையைப் போடு.”

“இல்ல. என் குர்தி தான் பெட்டர் சாய்ஸ்”

ஒரு வழியாய், ஒரு நல்ல கதகதப்பான இடம் ரித்துவுக்கு ஏற்பாடு செய்தாயிற்று.

ரித்துவும் செல்லமாக முனகியது.

அடுத்து ரித்துவுக்கான உணவு !

அம்மா  அவர்களுக்கு ஒரு டப்பாவில் ஸ்னாக்ஸ் வைத்திருப்பாள்.

இன்று க்ரிம் பிஸ்கெட்.

ரித்து அதை சாப்பிடவில்லை.

பிஸ்கெட்டை உடைத்து சிறிது தண்ணீரில் கலந்து வைத்த உடன் சாப்பிட்டது.

சுரேஷ் கிச்சனில் இருந்த பாலை ஒரு டம்ளரில் எடுத்து வந்தான்.

”ஏய், ரித்துவுக்கு ஒரு கப் வைக்கலாம்” சுஜி.

எந்த கப்பை எடுத்தாலும் அம்மாவுக்குத் தெரிந்து விடுமே !

அவர்களுடைய கலர் பாக்ஸ் மூடி ஒன்று சற்று பெரிதாக இருக்கும்.

அதை எடுத்துக் கொண்டார்கள்.

ஆனால், ரித்து அதில் ஊற்றிய பாலைக் குடிக்கவில்லை.

பாலில் சிறு துளிகளை தன் கையில் ஊற்றி, ரித்துவிடம் காண்பித்தாள் சுஜி.

ரித்து, மெதுவாக நக்கியது.

மெல்ல மெல்ல, அவர்கள் கொடுத்த பாலை டப்பா மூடியில் இருந்தே குடிக்க ஆரம்பித்தது.

ஆறு மணி.

அம்மா வந்தாச்சு.

”டேய் பசங்களா !”

என்ன ஆச்சரியம் ! தினம் வருவதற்கு முன் கதவருகில் வந்து நிற்பார்களே !

சுஜியும் சுரேஷும் அதற்குள்ளாக, ரித்துவை பாதுகாப்பாக கார்டன் பாக்ஸில் வைத்து விட்டு ஓடி வந்தனர்.

”பிஸ்கெட் சாப்பிட்டீங்களா” என்ற அம்மாவின் கேள்விக்கு, “சாப்பிட்டோம்மா” என்று சுஜியும், “இல்லம்மா” என்று சுரேஷும் பதில் சொன்னார்கள்.

இருவரின் புத்தகப் பையும், தண்ணீர் பாட்டில், லன்ச் பை எல்லாம் அப்படி அப்படியே இருந்தது.

ஹோம்வொர்க் முடிக்கவில்லை.

என்ன எல்லாம் வித்தாயசமாக இருக்கிறதே ! என்று நினைத்துக் கொண்டாள் அவர்கள் அம்மா ரேணு.

பால் கொடுத்து, ஹோம்வோர்க் செய்ய வைத்து, பிறகு இரவு சாப்பாடு என பிள்ளைகள் ஒரு வழியாக படுக்கச் சென்றனர்.

இதற்கிடையில், சுஜி மட்டும் சென்று ரித்துவைப் பார்த்து விட்டு வருவாள். இல்லை, சுரேஷ் மட்டும் போய் பார்த்து விட்டு வருவான்.

அம்மாவுக்குத் தெரிந்தால், ரித்து வீட்டை விட்டு போய் விடுமே!

போர்வையை போர்த்திக் கொண்டு கிசு கிசு என்று,

“நாளைக்கு எப்படிடா ?”

“ஸ்கூலுக்குக் போகும் போது, பையில வச்சு தூக்கி கிட்டு போயிடுவோம்”

“சார் பாத்துட்டா ?”

“ஆயாட்ட ஒரு நாள் பாத்துக்கச் சொல்லலாம்”

“சரி”

                                                       …. ….. …… …..

பொழுது விடிந்தது.

அம்மா ஒரிரு முறை அழைத்தவுடனே எழுந்து விட்டார்கள் சுஜியும் சுரேஷும்.

ஒருவர் ஒருவராக ரூமுக்குள் போய் விட்டு வந்து விட்டனர்.

இருவர் முகத்திலும் கலவரம்.

ரித்துவைக் காணவில்லை என்பது தான் நிலவரம்.

என்ன செய்வது ? கப்போர்டில் தேடியாயிற்று.

சந்தேகமாயிருந்த எல்லா இடங்களிலும் பார்த்தாயிற்று.

“போய் குளிங்க” அம்மாவின் குரல்.

“டிரஸ் போடுங்க”

“புக் சரி பாருங்க”

“டிஃபன் சாப்பிட வாங்க”

அம்மாவின் எல்லா கட்டளைகளும் எந்த ஒரு ரிபீட் ஆர்டரும் இல்லாமல், சிணுசிணுப்பில்லாமல் முடிந்தது.

பிள்ளைகள் முகத்தில் கவலை.

பள்ளி கிளம்பும் நேரம் வந்தாயிற்று.

“வாங்க, வாங்க “ என அம்மா அழைக்க, பிள்ளைகள் இருவரும் சுரத்தே இல்லாமல், பையை எடுத்தார்கள்.

சுரேஷ் திரும்பவும் ஒருமுறை ரூமுக்குச் சென்று பார்த்தான்.

அம்மா, வாசலில் இருந்து கத்தினாள், “டேய், பிள்ளைங்களா, வாங்க வெளியே ! உங்க குட்டி வீட்டில இல்லை “

தட தட வென வந்தார்கள் பிள்ளைகள்.

“எங்கம்மா ரித்து ?”

“ரித்துவா?”

“ம், அதுதான் அந்த பூனைக்குட்டி பேரு”

“ஓஹோ !”

”அம்மா, உங்கிட்ட காலைலே சொல்லாம்ன்னு இருந்தோம்”

“ஓஹோ !”

“நீ எப்படிம்மா கண்டுபிடிச்ச ?”

”ராத்திரி மியாவ் மியாவ் ஒரே சத்தம்”

“ஆம்மா, ரித்துவ நாமளே வளக்கலாம் அம்மா. ப்ளிஸ் ம்ம்ச்ச்”

”பிள்ளைங்களா, நாந்தான் சொன்னேனே ! நானும் வேலைக்குப் போறேன். நம்மால பாக்க முடியாது”

“ரித்து எங்கம்மா ?”

”இந்த ப்ளாட்ல யாரும் பெட்ஸ் வச்சுக்க கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கு, ஸோ, வாட்ச்மேன் கிட்ட கொடுத்து வெளியே விடச் சொல்லிட்டேன்”

சுஜியும், சுரேஷும் நடப்பது மெதுவாகி, பின் தங்கி விட்டனர்.

“வாங்க, வாங்க” என்றாள் ரேணு.

“ஏன்மா, இந்த ப்ளாட்ல பெட்ஸ் வச்சுக்க கூடாது?”

 “செல்லப் பிரணிகளை சரியா பராமரிக்கல்லன்னா, அதுவே நியூசென்ஸ் ஆயிடும். சும்மா, பெட்ஸ் வச்சுக்கறோம் பந்தா பண்ணா பத்தாது. அதுங்களை நல்லா பாத்துக்ணும், கிருமிகள் எதுவும் அதுங்களைத் தாக்கக் கூடாது.

அதோட சில பேருக்கு, சட்ன்னு இன்ஃபெக்‌ஷன் வந்துடும் . அதனால வேண்டாம்பாங்க”

“சரி,நான் ஒரு ஐடியா சொல்றேன் செய்யிரீங்களா?”

“என்னம்மா ?”

”என் ஃப்ரெண்டு பொண்ணு ஒருத்தி பெட் ஷாப் ஒண்ணு வச்சுருக்கா.

அவளுக்கு இதில விருப்பம் இருக்கறவங்க ஹெல்ப் பண்ணினா நல்லா இருக்கும்ன்னு சொன்னா”

“நீங்க போய் ஹெல்ப் பண்ணுறீங்களா ?”

”ஷ்யூர்ம்மா, ஆனா, அங்க என்ன இருக்கும்?”

“நிறைய பெட் அனிமல்ஸ் கலக்‌ஷன்ஸ் இருக்கு. அப்புறம் அதுங்களுக்குத் தேவையான உணவு, ஏதாவது சங்கிலி, பெல்ட் போன்ற பொருட்கள் எல்லாம் இருக்கும்”

மன நிறைவுடன் பிள்ளைகள் பள்ளி வேனில் ஏறினார்கள்.

வார நாட்களில் இருமுறையும், வார இறுதியில் ஒரு நாளும் ”சன்ஷைன் பெட் ஷாப்பில்” சுஜியும் சுரேஷும் தன்னார்வலர்களாக நாய்க்குட்டிகளையும், பூனைக்குட்டிகளையும், இன்னும் கிளி, குருவி போன்ற செல்லப் பிராணிகளுடன் பொழுதைக் கழித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments