முன்னொரு காலத்தில் ஒரு சிறிய நாட்டின் அரசன், தனது நாட்டின் பல பகுதிகளைச் சுற்றிப் பார்ப்பதற்காகத் தன் குதிரையில் ஊர், ஊராக வலம் வந்து கொண்டிருந்தான்.

ஒவ்வொரு ஊராகச் சுற்றிப் பார்த்து அங்கிருந்த மக்களிடம் உரையாடி, அவர்களுக்கு ஏதாவது குறையிருக்கிறதா என்று விசாரித்து விட்டு ஒவ்வொரு ஊரின் சிறப்பான அம்சத்தையும் கேட்டுத் தெரிந்து கொண்டான்.

ஒரு சிறிய நகரத்தின் தெருக்களில் வலம் வந்துகொண்டிருந்தான். அந்த நகரத்தில் ஒரு நூற்பாலை இருந்தது. அந்த ஆலையின் சொந்தக்காரன், தற்பெருமை பேசுவதில் கெட்டிக்காரன். எந்தவொரு சின்ன விஷயத்தையும் மிகவும் பெரிதாக்கி எல்லோரையும் நம்ப வைப்பதில் திறமைசாலி.

அரசன், அந்த ஆலை இருந்த தெருவின் வழியாக வந்துகொண்டிருந்த போது, அந்த ஆலையுடைய சொந்தக்காரனின் மகள் ஆலையின் வாசலில் உட்கார்ந்து நூல் நூற்றுக் கொண்டிருந்தாள். மிகவும் அழகான அந்தப் பெண், தந்தையைப் போன்றவள் அல்ல. மிகவும் நல்ல பெண்ணும் தான். அமைதியானவளும் கூட.

parambariam5
படம்: அப்புசிவா

அவளுடைய அழகையும், அவளுடைய நூற்கும் திறனையும் அரசன் நின்று இரசிப்பதை ஆலையின் சொந்தக்காரன் கவனித்து விட்டான்.

” இந்தப் பெண் என்னுடைய மகள். நூல் நூற்பதில் பயங்கர கெட்டிக்காரி. வெறும் வைக்கோலைக் கொடுத்தால் கூடத் தங்கமாக நூற்று விடுவாள். அவள் கையில் அவ்வளவு திறமை ஒளிந்திருக்கிறது ” என்று வெட்டியாகப் பெருமை அடித்துக் கொண்டான். இந்த மாதிரி உண்மைக்குப் புறப்பாகப் பேசிக் கதையளப்பது அவனுக்கு எப்போதும் வழக்கம் தான். இதை அறியாத அரசனோ, அவன் சொன்னதை அப்படியே நம்பி விட்டான்.

‘ நம்முடைய கஜானா காலியாக இருக்கிறது. இவளைக் கூட்டிக் கொண்டு போனால் நிறையத் தங்கம் கிடைக்கும். கஜானாவை நிரப்பி விடலாம்’ என்று நினைத்து, அந்தப் பெண்ணைத் தன்னுடன் அரண்மனைக்குக் கூட்டிச் சென்றான்.

ஒரு தனியறையில் நிறைய வைக்கோலைப் போட்டு அவளையும் அங்கேயே உட்கார வைத்து, ” நாளை காலைக்குள் இந்த வைக்கோல் முழுவதையும் தங்கமாக நூற்று வைக்க வேண்டும் ” என்று உத்தரவிட்டு விட்டு கதவைப் பூட்டிக் கொண்டு சென்றான் அரசன்.

அந்தப் பெண்ணோ, அங்கே பூட்டிய அறைக்குள் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள். அப்போது அங்கே வினோதமான தோற்றமுடைய ஒரு குள்ளன் திடீரென வந்தான். ஒல்லியான உடல். தலையில் நீளமான தொப்பி. குச்சி குச்சியாகக் கைகளும், கால்களும்.

” பெண்ணே! அழுகையை நிறுத்து. நான் உனக்கு உதவி செய்கிறேன். நீ அதற்கு பதிலாக எனக்கு உன்னுடைய நகையைத் தருவாயா? ” என்று கேட்க, அந்தப் பெண் உடனேயே தனது நகையைக் கழட்டித் தந்துவிட்டாள். அந்தக் குள்ளனும் உடனேயே .

அந்த நூல் நூற்கும் இயந்திரத்தின் அருகே உட்கார்ந்து ஏதோ முணுமுணுத்துக் கொண்டே வைக்கோலை எடுத்து நூற்க ஆரம்பித்தான். என்ன ஆச்சரியம்? வைக்கோல் அப்படியே தங்கமாக மாறி வெளியே வந்தது. தொடர்ந்து வேலை செய்து மொத்த வைக்கோலையும் தங்கமாக மாற்றி வைத்துவிட்டு அங்கிருந்து மறைந்து விட்டான்.

காலையில் அறையைத் திறந்த அரசனுக்கோ மகிழ்ச்சி. அவனுடைய கஜானாவும் நிரம்பியது. தனது கஜானாவை நிரப்பிய பெண்ணை அரண்மனையில் இருந்து அனுப்ப விருப்பமில்லை அரசனுக்கு. அவளையே திருமணம் செய்து கொண்டு நாட்டின் அரசியாக்கி விட்டான்.

கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, மீண்டும் கஜானா தீர்ந்து போனது. அரசன், அரசியை நிறைய வைக்தோலுடன் அறையில் வைத்து அடைத்து விட்டான். அரசியும் அழுது கொண்டே உட்கார்ந்திருந்தாள். அதே குள்ளன் அங்கே திரும்பவும் வந்தான்.

” எப்போது  பார்த்தாலும் அழுவதே வேலை உனக்கு? ” என்று கேலி செய்தான்.

” நான் வேறு என்ன செய்ய முடியும்? எனக்கு வைக்கோலைத் தங்கமாக்கத் தெரியாதே? “

” நான் செய்து தருகிறேன். நீ என்ன தருவாய் இந்த முறை? “

” இதோ, என் நகைகளை எல்லாம் எடுத்துக் கொள்” என்று சொன்னபடி தன் நகைகளைக் கழட்டப் போனாள்.

” வேண்டாம், வேண்டாம். எனக்கு நகை எதுவும் வேண்டாம். உனக்குப் பிறக்கும் முதல் குழந்தையை என்னிடம் கொடுத்து விட வேண்டும் ” என்று அவன் சொல்ல அரசியும் வேறு வழியின்றி அவன் சொன்ன நிபந்தனையை ஏற்றுக் கொண்டாள். குள்ளனோ வைக்கோலைத் தங்கமாக மாற்றி முடித்துவிட்டு அங்கிருந்து மறைந்து போனான்.

அடுத்த நாள் காலையில் வந்த அரசன் மிக்க மகிழ்ச்சி அடைந்தான். கஜானா மீண்டும் நிரம்பி விட்டதால் நாட்கள் இனிமையாகக் கழிந்தன. அடுத்த வருடம், அரசிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குள்ளனுக்குத் தந்த வாக்குறுதியை எண்ணி அரசி பயந்து கொண்டிருந்தாள்.

குள்ளனும் ஒரு நாள் அரசியின் முன்னால் வந்து குதித்தான். ” குழந்தையைக் கொடுப்பதாக எனக்கு வாக்கு தந்திருக்கிறாய். குழந்தையைக் கொடு” என்று அதிகாரத்துடன் கேட்டான்.

அரசியின் கண்களில் நீர் வழிந்தது. ” வேறு என்ன வேண்டுமோ கேள். தருகிறேன். குழந்தையை மட்டும் தயவுசெய்து என்னிடம் இருந்து பிரிக்காதே ” என்று கெஞ்சினாள். அழுது அரற்றினாள்.

” சரி, சரி, எதற்கெடுத்தாலும் அழ ஆரம்பித்து விடாதே. உனக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன். இரண்டு நாட்களுக்குள் என்னுடைய பெயர் என்ன என்று நீ சரியாகச் சொல்லிவிட்டால் நான் போய்விடுவேன். மீண்டும் உன் வாழ்க்கையில் குறுக்கிட மாட்டேன் ” என்று சொல்லி விட்டுப் போனான்.

அடுத்த நாள் காலையில் அரசியின் முன்னே வந்து நின்றான்.

” சொல்லு பார்க்கலாம். என் பேர் என்ன? ” என்று கேட்டான்.

“சித்திரக் குள்ளன்”

” இல்லை”

” குச்சிக் காலன்”

“இல்லை”

” குச்சிக் கையன்”

” இல்லை”

” ஒட்டடைக் குச்சி”

” இல்லை” என்று தலையசைத்து விட்டு மறைந்து விட்டான். அன்று மாலையும் வந்தான். விதவிதமான பெயர்களை யோசித்துச் சொன்னாள் அரசி. அவனோ  எதுவுமே சரியான பதில் இல்லை என்று சொல்லி விட்டான்.

அடுத்த நாளும் காலையில் வந்தான்.

மனதில் தோன்றிய எத்தனையோ பேர்களைச் சொல்லிப் பார்த்தாள். ” ஜும்பலக்கடி ஜும்மா, ஜீ பூம்பா” என்று என்னென்னவோ சொல்லிப் பார்த்தாள். எதுவும் சரி வரவில்லை.

” இன்று மாலையில் திரும்ப வருவேன். நீ சரியாகச் சொல்லாவிட்டால் குழந்தையை எடுத்துக் கொண்டு போய்விடுவேன் ” என்று எச்சரிக்கை செய்து விட்டுப் போனான்.

அரசி மாலை நேரத்தில் அரண்மனை நந்தவனத்தில் கவலையுடன் நடந்து கொண்டிருந்தாள். தூரத்தில் எங்கோ பாட்டு சத்தம் கேட்டது. அங்கே போய்ப் பார்த்தாள். அவளைப் பார்க்க வரும் சித்திரக் குள்ளன் ஓரிடத்தில் பாடிக்கொண்டே ஆடிக் கொண்டிருந்தான். மரத்திற்குப் பின்னால் ஒளிந்து கொண்டு பார்த்தாள்.

” நான் யார் என்று அரசுக்குத் தெரியாது!

என் பெயர் சோளக்கொல்லை வீரன்

என்று அவளால் சொல்ல முடியாது!

எனக்கு இன்று கொண்டாட்டம்”

என்று ஆனந்தமாகப் பாடிக் குதித்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரம் கழித்து சித்திரக் குள்ளன் அரசியை சந்திக்க வந்தான்.

” சொல்லு சொல்லு, என் பெயர் என்ன?

” ” ஒல்லிக் குச்சி வீரன்”

” வைக்கோல் வீரன்”

” இல்லை”

” நீளத் தொப்பிக்காரன்”

” சோளக்கொல்லை வீரன்”

என்று அரசி சொன்னதும் அவனால் நம்பவே முடியவில்லை. அந்த அதிர்ச்சியுடன் அங்கிருந்து மறைந்து போனான். ” இனிமேல் உனக்கு எந்த உதவியும் செய்ய மாட்டேன் ” என்று கோபத்துடன் சொல்லி விட்டுத் தான் மறைந்தான் அவன்.

அரசி உடனே அரசனைச் சந்தித்து நடந்த அனைத்து விஷயங்களையும் அப்படியே மறைக்காமல் சொல்லி விட்டாள். அரசனும் கஜானாவை நிரப்புவதற்காக அவளுக்குக் கஷ்டம் தந்ததை எண்ணி வருந்தினான். ” இனி அந்த மாதிரி தங்கத்திற்கு ஆசைப்பட மாட்டேன் ” என்று அரசியிடம் சொல்லிவிட்டு, அவளுடைய தந்தையை அழைத்துப் பொய்யாகப் பெருமை பேசியதற்காகக் கடிந்து கொண்டான்.

அதன்பிறகு எல்லோரும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள்.

நிறைவு.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments