ஒரு ஊர்ல ரகுன்னு ஒரு குட்டி பையன் இருந்தான். அவனுக்கு ஸ்கூல் போகவே பிடிக்கலயாம்.
அவங்கம்மாவும் அப்பாவும் படிப்போட நல்லது எல்லாம் நிறைய முறை எடுத்து சொல்லியும் கூட அவனுக்கு படிக்கவே பிடிக்கல. அதனால ஸ்கூல் போக மாட்டேன்னு தினமும் அடம் பிடிப்பான்.
அவனை தினமும் தயார் பண்ணி ஸ்கூலுக்கு கொண்டு போய் விடறதுக்குள்ள அவங்கப்பாவுக்கும் அம்மாவுக்கும் போதும் போதும்னு ஆகிடும்.
என்னடா இது? நம்ம பையன் இப்டி இருந்தா எப்டி பெரிய பெரிய படிப்பெல்லாம் படிப்பான்? எப்டி நல்ல வேலைக்கு போவான்னு ரெண்டு பேருக்கும் ரொம்ப கவலையா இருந்தது.
அப்ப ஒருநாள் அவங்க வீட்டுக்கு பக்கத்தில ரஹீம்ன்னு இரு குட்டி பையனோட குடும்பம் குடி வந்தாங்க.
அவங்க ரொம்ப ஏழையா இருந்தாங்க. ரகு வீட்ல இருக்கற மாதிரி டீவி, ஃப்ரிட்ஜ், கட்டில், பைக் எல்லாம் அவங்க வீட்ல இல்ல.
அந்த குட்டி பையன் ரஹீம், ரகு படிக்கற ஸ்கூல்லதான் சேர்ந்தான். அதுவும் ரகு கிளாஸ்லயேதான் சேர்ந்தான்.
ரஹீம் கிளாஸ்ல படு சுட்டியா இருந்தான். டீச்சர் கேக்கற கேள்விக்கெல்லாம் டாண் டாண்னு பதில் சொன்னான். எல்லா பாடத்தையும் அவன் நல்லா கவனிச்சி டீச்சர் கிட்ட சந்தேகமெல்லாம் கேட்டான்.
ஆனா வீட்ல வந்து ரஹீம் புக் எடுத்து படிக்கறத ரகு பார்க்கவேயில்ல. ரஹீம் ஸ்கூல்ல மட்டும்தான் படிக்கறான். ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வந்ததும் அவங்கப்பாவோட வெளிய போயிடறான்னு தெரிஞ்சிகிட்டான்.
இதப் பார்த்த ரகு, ரஹீம் கிட்ட,
“நீ ஏன் எல்லா பாடத்தையும் ஸ்கூல்லயே படிக்கற? ஹோம் வொர்க் கூட ஸ்கூல்லயே செய்யறியே? ஏன்? வீட்டுக்கு போனதுமே உங்கப்பாவோட டாட்டா போயிடுவியா?” ன்னு கேட்டான்.
அதுக்கு ரஹீம்,
“நா டாட்டா போகல. வேலைக்கு போறேன்னு சொன்னான்.
“என்னது வேலைக்கா? ஏன்? உங்கப்பா எங்கயும் வேலை செய்யலையா?” ன்னு கேட்டான்.
“இல்ல! எங்கப்பாவும் அம்மாவும் படிக்காதவங்க. அதனால எனக்கு பாடத்தில எதாவது சந்தேகம்ன்னா வீட்ல எனக்கு சொல்லித் தர அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தெரியாது.. அதனாலதான் நா ஸ்கூல்லயே படிச்சி முடிச்சிடறேன். அப்பா ஒரு கறி கடையில வேலை செய்துட்டு இருந்தார். ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு சின்ன ஆக்சிடென்ட்ல அப்பா கையில அடி பட்டுடுச்சு. அதனால அப்பாவால கறி வெட்ட முடியல.. அதனால அவருக்கு வேலை போயிடுச்சி.. அதனால அம்மா தினமும் சூப் செய்து குடுப்பாங்க. சாயந்திரம் ஸ்கூல் விட்டு வந்ததும் நானும் அப்பாவும் மார்கெட் போய் அந்த சூப்பை வித்துட்டு வருவோம்.. அதனால வீட்ல எனக்கு ஹோம் வொர்க் செய்ய நேரம் இருக்கறதில்ல.. அதனாலதான் நான் ஸ்கூல்லயே ஹோம் வொர்க்கையும் முடிச்சிடறேன்..” அப்டீன்னு சொன்னான் ரஹீம்.
அவன் சொன்னத கேட்டதும் ரகுவுக்கு ரொம்ப கஷ்டமாகிடுச்சு. அவன் எவ்ளோ கஷ்டப்படறான்.. இவ்ளோ கஷ்டத்திலயும் தன் அப்பா அம்மாவுக்கு உதவி செய்யறான். நல்லா படிக்கவும் படிக்கறான்னு புரிஞ்சது.
தான் பண்ணிட்டிருக்கற தப்பும் அவனுக்கு ரொம்ப நல்லா புரிஞ்சது.
அதுக்கப்றம் அவன் ஸ்கூல் போக அடம் பிடிக்கறத நிறுத்திட்டான். அவங்கப்பா அம்மா சொல்ற பேச்சை தட்டாம கேக்க ஆரம்பிச்சான்.
ரஹீமும் ரகுவும் இப்ப நல்ல நண்பர்களா ஆகிட்டாங்க.
ரஹீமோட அப்பாவுக்கு கை சரியாகற வரைக்கும் ரகுவும் ரஹீம் கூட சூப் விக்க உதவி செய்யறதுக்கு அவங்களோட போறான்.
ரகுவோட அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இப்ப ரகுவை நெனச்சு கவலையே இல்ல. அவந்தான் இப்ப ரஹீம் மாதிரியே சமத்து பையனாகிட்டானே.
♥♥♥♥♥♥
நான் ஒரு இல்லத்தரசி. என் மனவுளைச்சலையும் இறுக்கத்தையும் விரட்டும் முயற்சியாக என் எழுத்தார்வத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் சராசரிப் பெண். இணையத்தில் சிறுகதைகளும் தொடர்கதைகளும் எழுதி வருகிறேன். இரண்டு தொடர்கதைகள் புத்தகமாக வெளி வந்துள்ளன. தினமலர் வாரமலரில் என் சிறுகதைகள் வெளி வந்துள்ளன. பல இணையதளங்கள் நடத்திய பல சிறுகதைப் போட்டி, கவிதை, கட்டுரை, செய்யுள் எழுதும் போட்டிகளில் பங்கு கொண்டு முதல் பரிசினை வென்றிருக்கிறேன்.