“யானை என்றாலே ஒரு கம்பீரம் தான். காட்டுக்கு ராஜா சிங்கம் னு சொல்லுவாங்க. ஆனா எனக்கு என்னவோ யானையைத் தான் பிடிக்கும். எனக்கு மட்டுமா பாக்கற எல்லாருக்கும் பிடிக்கும்.”
“அதோட கம்பீரம் உருவத்திலேயும் உண்டு. அதனோட நடையிலும் உண்டு. அத்தனை பெரிய உருவம். நல்ல கறுப்பு இல்லாமல் சாம்பல் பூத்த மாதிரி அப்படி அழகான நிறம். பார்த்த எல்லோருக்குமே பிடிக்கும். பாத்தா மனசில் பயம் வராது. ஒரு பிரமிப்பு தான் வரும். அதே போல சாதுவாத் தான் நம்மைப் பார்த்துத் தும்பிக்கையைத் தூக்கிப் பிளிறுமோ அதைப் பாத்தா எவ்வளவு சந்தோஷமா இருக்கும் இல்லையா? குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிச்ச விலங்கு யானையாத் தான் இருக்கணும். எல்லோரிடமும் நட்பாகப் பழகி மனசைக் கவர்வது யானை மட்டுமே.”
“யானை எனக்குப் பிடிக்கிறதுக்கு இன்னொரு காரணம் எங்கப்பா. அவரைப் பாத்தாலே யானை ஞாபகம் வரும். பெரிய உருவம். கம்பீரமா நடந்து வருவார். கண்களில் சிரிப்போடு நட்பும் சேர்ந்து தெரியும். அதிகம் பேச மாட்டார். ஆனால் மனசுக்குள் அத்தனை அன்பையும் அடக்கி வச்சுருப்பார். அவர் பேசும் சில வார்த்தைகளில் இருந்து அவருடைய அன்பு முழுமையாகத் தெரிந்துவிடும்.”
பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பவித்ரா
தன்னுடைய அப்பாவைப் பற்றி டைரியில் எழுதிக் கொண்டிருந்தாள்.
பவித்ராவின் அம்மா காவ்யா அவளருகில் வந்தாள். மகளுடைய தலையைக் கோதித்
தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டாள்.
” அம்மா,அப்பாவைப் போய் நாளைக்குப் பாத்துட்டு வரலாமா?”, என்று கேட்க,
அதைக் கேட்டு விட்டுக் காவ்யாவும் கொஞ்ச நேரம் யோசித்து விட்டுத் தலையசைத்தாள்.
” சனிக்கிழமை போலாமா? எனக்கும் ஆஃபிஸ் லீவு. உனக்கும் இந்த வாரம் லீவு தானே!” என்று காவ்யா சொல்லப் பவித்ராவும் சந்தோஷமாகத் தலையசைத்தாள்.
“ஒரே ஒரு கண்டிஷன் பவித்ரா. அப்பாவைப் பார்த்து நீ பயப்படக் கூடாது. அழக் கூடாது. சரியா?”,
என்று சொல்லப் பவித்ரா வருத்தத்துடன் தலையை அசைத்தாள்.
“பாவம் அப்பா! எப்படி இருந்த அப்பா இப்போது எப்படி இருக்கிறார்?”,
மனதில் நினைக்காமல் இருக்க முடியவில்லை. கண்களில் கண்ணீர் பெருகியது.
சனிக்கிழமையும் விடிந்தது. அப்பாவிற்குப் பிடித்த தின்பண்டங்களைச் செய்து எடுத்துக் கொண்டாள் பவித்ராவின் அம்மா.
இரண்டு பேரும் அந்த மனநலக் காப்பகத்திற்குச் சென்று பவித்ராவின் அப்பாவைப் பார்க்க அனுமதி வேண்டிக் காத்துக் கொண்டிருந்தார்கள்.
ஒருவழியாக அனுமதி கிடைத்துப் போய்ப் பார்த்தார்கள். அப்பாவின் நிலையைப் பார்த்துக் கலங்கிய மனதைப் பவித்ரா கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள்.
எப்படி இருந்த மனிதர் இப்படிச் சங்கிலிகளில் பிணைக்கப்பட்டு ஒடுங்கிப் போய் இருந்தார். கால்களை இழுத்துக் கொண்டு வந்து கதவில் இருந்த கம்பிகளின் ஊடே அவரைப் பார்ப்பது மிருகக் காட்சி சாலையில் கூண்டுகளில் அடைக்கப்பட்ட மிருகங்களைப் பார்ப்பது போலத் தான் தெரிந்தது.
அவர்கள் அருகில் வந்து பவித்ராவின் முகத்தை வில்களால் வருடினார். காவ்யாவின் கைகளைப் பிடித்து ஏதோ சொல்ல முயற்சி செய்தார். வாய் குளறியது. சரியாகப் பேச வரவில்லை.
பவித்ராவின் அப்பா போலீஸ் ஆஃபிஸராக இருந்தார். ஒரு குழந்தை கடத்தல் கேஸில் குற்றவாளிகளைப் பிடிக்கச் சென்ற போது தனியாகக் குற்றவாளிகளிடம் மாட்டிக் கொண்டு விட்டார். இரும்புக் கம்பிகளால் தலையில் அடி வாங்கியதில் மூளை பாதிக்கப்பட்டது. அத்தனை அடிகளையும் உடம்பில் தாங்கிக் கொண்டு குழந்தையை விடாமல் பிடித்துக் கொண்டு குழந்தையைக் காப்பாற்றி விட்டார். அந்த தீரச் செயலுக்காக அவருக்கு விருது ( gallantry award) கிடைத்தாலும் அவர் நிரந்தர மனநோயாளியாகி விட்டார். திடீர் திடீரென்று வன்முறையில் இறங்குவதால் அவரைச் சங்கிலிகளால் கட்டி வைத்திருக்கிறார்கள்.
அவரைப் பார்த்து விட்டு டாக்டரிடம் சென்று பேசினார்கள்.
” எப்போ எங்கப்பா சரியாவார் டாக்டர்? நாங்க அவரை எப்போ வீட்டுக்குக் கூட்டிப் போகலாம்? “,
என்று பவித்ரா கேட்டதும் அந்த டாக்டருக்கே கண்கள் கலங்கி விட்டன.
” பார்க்கலாம் மா. முயற்சி செஞ்சுட்டே இருக்கோம். ஆண்டவன் விரைவில் நல்ல வழி காட்டுவார்”,
கனத்த மனதுடன் திரும்பினார்கள்.
” அம்மா, யானைக்கு மதம் பிடிச்சாலும் பெரிய அழிவை உண்டாக்கும்னு தானே கட்டி வைப்பாங்க. என்னோட அப்பா யானை மாதிரி என்றாலும் யாருக்கும் கெடுதல் பண்ண மாட்டார். நல்லது தான் செய்வார். இல்லையாம்மா?”,
என்று பவித்ரா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டாள் காவ்யா.
விரைவில் அந்த நல்ல உள்ளங்களின் பிரார்த்தனை பலிக்கட்டும்.
வங்கி வேலை, கணித ஆசிரியை அவதாரங்களுக்குப் பிறகு இப்போது எழுத்தாளர். அதுவும் சிறுவர் கதைகள் எழுத மனதிற்குப் பிடிக்கிறது. மாயாஜாலங்கள், மந்திரவாதி கதைகள் எழுத ஆசை. பூஞ்சிட்டு இதழ் மூலமாக உங்களுடன் உரையாடத் தொடர்ந்து வரப் போகிறேன். மகிழ்ச்சியுடன் நன்றி.