முன்னொரு காலத்தில் தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சி நடந்து கொண்டிருந்த சமயத்தில், தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் இருந்தது அந்த சிறிய நாடு.

அந்த நாட்டின் தலைநகரத்தில் கந்தன் என்ற சிறு வியாபாரி வசித்து வந்தான். அவனுடைய மூத்த மகள் சிந்தூரி என்ற அழகான இளம்பெண்.

சிந்தூரி பிறந்து சின்னக் குழந்தையாக இருந்தபோது அவளுடைய அம்மா இறந்து போனதால், வியாபாரி இன்னொரு திருமணம் செய்து கொண்டான். சிந்தூரியை அடுத்து இன்னும் இரண்டு பெண் குழந்தைகள் அந்த வீட்டில் பிறந்தார்கள்.

சிந்தூரியின் மாற்றாந்தாய் சிந்தூரியிடம் கொஞ்சம் கூடப் பாசம் காட்டவில்லை. வீட்டு வேலைகள் அனைத்தையும் அவளுடைய தலையில் கட்டிவிட்டு ஓய்வெடுப்பாள். ஒரு நிமிடம் கூட ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் சிந்தூரி, தன் மாற்றாந்தாய் ஏவும் வேலைகளைச்  செய்து கொண்டே இருப்பாள்.

 தனது வயிற்றில் பிறந்த பெண்கள் இருவரிடமும் அளவில்லாமல் அன்பு செலுத்தி வந்தாள் அந்தத் தாய். அதில் எள்ளளவு கூட சிந்தூரியிடம் அவள் காட்ட மாட்டாள். சிந்தூரியின் தங்கைகள் இருவரும், தங்கள் அன்னையைப் போலவே சிந்தூரியிடம் வெறுப்பை உமிழ்ந்து வந்தார்கள். வீட்டு வேலை எதுவும் செய்யாமல் வெட்டிப் பொழுது போக்குவார்கள். அக்காவிற்கு எந்த உதவியும் செய்ய மாட்டார்கள்.

sindhoori
படம்: அப்புசிவா

 அனைவருக்கும் உணவு தயாரிப்பது சிந்தூரி. அவள் சாப்பிட மட்டும் வயிறு நிரம்ப உணவு கிடைக்காது. அனைவரின் துணிகளைத் தோய்த்து, உலர்த்தி, மடித்து எடுத்து வைப்பது சிந்தூரி. ஆனால் அவளுக்கு உடுத்திக் கொள்ள மிகவும் பழைய ,கிழிந்த ஆடைகள் தான் கிடைக்கும்.

கந்தனின் மூன்று பெண்களும் வளர்ந்து திருமண வயதை எட்டி விட்டார்கள். அப்போது ஒருநாள் அந்த நாட்டின் இளவரசன், தனது அரசியாக்கிக் கொள்ள, தகுதிகள் வாய்ந்த ஒரு மணப்பெண்ணைத் தேர்ந்தெடுக்க விரும்பினான். தனது தாய், தந்தையரிடம் கலந்து பேசினான். அவர்களும் அவனுடைய திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்தார்கள்.

அடுத்த நாள் காலையில் நகரத்தின் முக்கிய பகுதிகளில் இளவரசரின் செய்தி, முரசறைந்து பரப்பப்பட்டது.

” பொதுமக்களிடம் ஒரு வேண்டுகோள். இன்று இரவு அரண்மனையில் இளவரசர் ஒரு பெரிய விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறார். நாட்டில் இருக்கும் அனைத்து இளம்பெண்களும் கலந்து கொள்ளலாம். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று நிகழ்ச்சி சிறப்பாக அமையும் “

இந்தச் செய்தியைக் கேட்டதில் இருந்து சிந்தூரியின் மாற்றாந்தாய் பரபரப்படைந்தாள்.

” இளவரசர், தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணைத் தேர்ந்தெடுக்கத் தான் இந்த விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறார். நீங்கள் இரண்டு பேரும் நல்ல உசத்தியான ஆடை, உடைக்கேற்ற நகைகளை அணிந்து கொண்டு விருந்தில் கலந்து கொள்ளுங்கள்.  இளவரசருடன் நடனமாடும் வாய்ப்பு வேறு கிடைக்கும். சிந்தூரி, இவர்களுக்கான உடை மற்றும் நகைகளை எடுத்துத் தயாராக வை. இவர்களுக்கு அலங்காரம் செய்து தயார் செய்” என்று சிந்தூரியிடம் உத்தரவு பிறப்பித்தாள்.

” சித்தி, நானும் போய்க் கலந்து கொள்ளட்டுமா? எனக்கும் இளவரசரைப் பார்க்க வேண்டும், அப்புறம் அவருடன் நடனமாட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது” என்று தயங்கித் தயங்கித் தன் விருப்பத்தைத் தெரிவித்தாள்.

” அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். உன்னை யாருக்குப் பிடிக்கப் போகிறது? நீயும், உன் அழுக்குப் படிந்த முகமும், அலங்கோலமான உடையும்! போய் உன் வேலையைப் பார்” என்று அவளை மட்டம் தட்டிப் பேசி அனுப்பிவிட்டாள். உண்மையில் சிந்தூரியைப் போலத் தன் வயிற்றில் பிறந்த பெண்கள் அழகாகவோ, மற்றும் அறிவாளிகளாகவோ இல்லை என்று அவளுக்கு ஆதங்கம். அதனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிந்தூரியை மட்டம் தட்டி வந்தாள்.

மாலை நேரம் நெருங்கியது. சிந்தூரியின் மாற்றாந்தாய், தனது மகள்களை நன்றாக அலங்கரித்துத் தன்னுடன் அழைத்துக் கொண்டு விிருந்துக்குக் கிளம்பிப் போனாள்.

சிந்தூரி, அவர்கள் போன பிறகு தனியாக உட்கார்ந்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தாள்.

அப்போது வானத்தில் உலவிக் கொண்டிருந்த ஒரு தேவதை, சிந்தூரியைப் பார்த்து இரக்கம் கொண்டு, அவள் எதிரே வந்து நின்றாள்.

” ஏன் இப்படி வருத்தத்துடன் இருக்கிறாய் சிந்தூரி? “

” நீங்கள் யார்? என் பெயர் உங்களுக்கு எப்படித் தெரியும்? “

” நான் ஒரு தேவதை. தேவதைகளுக்கு உலகில் நடக்கும் விஷயங்கள் எல்லாமே தெரியும். உனக்கு என்ன வேண்டும்? அதைச் சொல் முதலில் “

” இந்த நாட்டு இளவரசர் இன்று அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ள எனக்கும் ஆசையாக இருக்கிறது. ஆனால் என்னிடம் அதற்கேற்ற ஆடை, அணிகலன் எதுவுமே இல்லை”

” சரி, நீ வேகமாக உள்ளே போய் ஒரு பெரிய பரங்கிக்காய் கொண்டு வா. சமையலறையில் இருந்து ஆறு புடலங்காய்களையும், நான்கு தேங்காய்களையும் கொண்டு வா” என்று சிந்தூரிக்குக் கட்டளை பிறப்பித்தாள்.

சிந்தூரி கொண்டு வந்தாள். தன் கையில் இருந்த மந்திரக்கோலால் சிந்தூரியைத் தொட்டாள். உடனே சிந்தூரியின் உடலை மிகவும் சிறப்பான ஆடை, அணிகலன்கள் அலங்கரித்தன. இயற்கையிலேயே அழகான தோற்றம் கொண்ட சிந்தூரி, இன்னும் அழகாக மாறினாள்.

பரங்கிக்காய் அழகான தேராகியது. புடலங்காய்கள், தேரை இழுக்கும் குதிரைகளாகின. தேங்காய்கள், தேரோட்டி மற்றும் உதவியாளர்களாக மாறின.

” சிந்தூரி, நான் சொல்வதை கவனமாகக் கேட்டுக்கொள். நீ அரண்மனையில் இருந்து நள்ளிரவு பனிரெண்டு மணி ஆவதற்குள் கிளம்பி விடவேண்டும். நான் செய்துள்ள இந்த மாயாஜாலம் நள்ளிரவு வரை தான் நீடிக்கும். சரியாகப் பனிரெண்டு மணிக்கு இந்தத் தேர், குதிரைகள், தேரோட்டி எல்லோருமே மீண்டும் காய்கறிகளாக மாறி விடுவார்கள். ஞாபகம் வைத்துக் கொள். மறந்து விடாதே” என்று சொல்லி, சிந்தூரியைத் தேரில் ஏற்றி அனுப்பி வைத்தாள்.

சிந்தூரியின் தேர் அரண்மனையை அடைந்தது. தேரில் இருந்து இறங்கிய இளம்பெண்ணின் அழகை எல்லோரும் வியந்து பாராட்டினார்கள். இளவரசன், அவளைப் பார்த்ததில் இருந்து தன்னை மறந்தான். சிந்தூரியைத் தன்னுடன் நடனமாட அழைத்தான். இரண்டு பேரும் நடனமாடிய அழகை அனைவரும் கண்டு இரசித்தார்கள்.

” உன்னுடைய பெயர் என்ன?  உன்னுடைய தாய், தந்தை யார்? உன் வீடு எங்கே இருக்கிறது? ” என்று இளவரசன் அடுத்தடுத்துக் கேட்ட கேள்விகளுக்கு, சிந்தூரி பதிலே தரவில்லை. புன்சிரிப்புடன் கடந்து விட்டாள்.

நேரம் போனதே தெரியவில்லை. நள்ளிரவு பனிரெண்டு மணி, சுவர் கடிகாரத்தில் அடிக்க ஆரம்பிக்கும் போது தான் சிந்தூரி, தன் தவறை உணர்ந்தாள். அவசர அவசரமாக அங்கிருந்து ஓடித் தேரில் ஏறிக் கிளம்பி விட்டாள். நல்லவேளையாக வீடு நள்ளிரவு தொடங்குவதற்குள், வீடு வந்து சேர்ந்து விட்டாள்.

சிந்தூரி ஓடிவந்த அவசரத்தில் அவளுடைய காலணிகளில் ஒன்று காலில் இருந்து நழுவி அரண்மனையிலேயே விழுந்து விட்டது. அதை எடுத்து வைத்துக் கொண்ட இளவரசன் , அந்தக் காலணியைத் தன் காவலரிடம் கொடுத்தான்.

” நாளை காலையில் நீங்கள் இந்தக் காலணியை எடுத்துக் கொண்டு போய், வீடு வீடாக நீங்கள் தேடவேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் இளம்பெண்கள் இதை அணிய முயற்சி செய்ய வேண்டும். யார் காலுக்கு இந்தக் காலணி சேருகிறதோ, அந்தப் பெண்ணை அரண்மனைக்கு அழைத்து வாருங்கள் ” என்று ஆணை பிறப்பித்தான்.

காவலர்களும் வீடு வீடாகச் சென்று தேடினார்கள். யாருக்கும் காலணி பொருந்தவில்லை. இறுதியில் சிந்தூரியின் வீட்டையும் அடைந்தார்கள். சிந்தூரியின் தங்கைகள் இரண்டு பேரும் முயற்சி செய்தார்கள். அவர்கள் இருவருக்கும் காலணி பொருந்தவில்லை. சிந்தூரி முன்னால் வந்தாள்.

” நீயெல்லாம் முயற்சி செய்ய வேண்டாம். உள்ளே போ” என்று மாற்றாந்தாய் அவளைக் கடிந்து கொள்ள, அங்கே வந்திருந்த காவலர்கள் அவளைத் தடுத்து நிறுத்தினார்கள். சிந்தூரியையும் முயற்சி செய்யச் சொல்லி வேண்டினார்கள். என்ன ஆச்சரியம்! சிந்தூரியின் காலில் காலணி பொருந்தியதைக் கண்டு , காவலர்கள் மகிழ்ச்சி அடைந்து சிந்தூரியை சகல மரியாதைகளுடன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்கள். இளவரசன், சிந்தூரியைத் திருமணம் செய்து கொண்டான். சிந்தூரியின் மாற்றாந்தாயும், தங்கைகளும் தங்களுடைய தவறுக்கு வருந்தினார்கள்.

சிந்தூரி, இளவரசனுடன் மகிழ்ச்சியாக அரண்மனையில் வாழ்ந்தாள். தன்னிடம் கருணை காட்டிய தேவதைக்கு மனதார நன்றி சொன்னாள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments