ஒருமுறை உலகத்தில் மிகப்பெரிய பிரளயம் தோன்றுவதற்கான அறிகுறிகள் தோன்றின. உலகமே அழிந்துவிடும் போலத் தோன்றியது. சிலர் உலகம் அழியப் போகிறதென்று நம்பி அஞ்சி நடுங்கினார்கள். அவர்களுக்குத் தோன்றிய கெட்ட கனவுகளும், கெட்ட நிமித்தங்களும் அவர்களுடைய பயத்தை உறுதிப்படுத்தின. ஆனால், பெரும்பான்மையான மக்கள் இதனை நம்பவில்லை.
“உலகமெல்லாம் எங்கேயாவது அப்படி அழிந்து போக முடியுமா? இந்த மாதிரி வீண் வதந்தியை நாம் நம்பவே கூடாது. பயப்படாமல் தைரியமாக இருக்கலாம். பிரளயம் வந்தால்தான் என்ன? சில நாட்கள் வீட்டுக்குள்ளேயே இருப்போம். வெள்ளம் வடிந்த பிறகு வெளியே வந்து பழையபடி இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பிவிடலாம்.” என்று உரக்கச் சொல்லியபடி தங்களுடைய துணிச்சலை வெளிப்படுத்தினார்கள்.
உலகத்தின் ஒரு பகுதியில் ஒரு தீவு இருந்தது. அந்தத் தீவில் ஆதி, பகவன் என்ற இருவரும் வாழ்ந்து வந்தார்கள். கடலில் மீன் பிடித்து சந்தையில் விற்று ஓரளவு வசதியுடன் வாழ்ந்து வந்தார்கள். மிகவும் நல்லவர்கள். தங்களால் முடிந்த அளவு தீவில் வாழ்ந்த மற்ற மனிதர்களுக்கு உதவி செய்து வாழ்ந்து வந்தார்கள்.
அவர்களுடைய வீட்டிற்கு அன்று இரவு கடவுள் வருகை தந்தார்.
“உங்கள் இரண்டு பேரிடமும் ஒரு மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைக்கப் போகிறேன். செய்து முடிப்பீர்களா?” என்று கேட்டார்.
“கண்டிப்பாக எங்களால் முடிந்ததைச் செய்கிறோம் இறைவா! நீங்கள் கட்டளையிடுங்கள். உடனடியாக நிறைவேற்றுகிறோம்.” என்று கூறினார்கள்.
“விரைவில் உலகமே அழியப் போகிறது. மாபெரும் பிரளயம் ஏற்பட்டு அனைத்து இடங்களும் தண்ணீரில் மூழ்கப் போகின்றன. ஆனால், எல்லா உயிரினங்களிலும் ஒவ்வொன்றை சேகரித்து பத்திரமான இடத்திற்குக் கொண்டு போக வேண்டும். நீங்கள் இருவருமாகச் சேர்ந்து, உயிரினங்கள் அனைத்திலும் ஒவ்வொன்றும், மற்றும் தாவரங்களில் ஒவ்வொன்றுமாகச் சேகரிக்க ஆரம்பியுங்கள். நாளை கடற்கரையில் ஒரு கப்பல் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கும். நீங்கள் சேகரித்த அனைத்தையும் அந்தக் கப்பலில் ஏற்றி உங்கள் பயணத்தைத் தொடங்குங்கள். அந்தக் கப்பல் உங்களை ஒரு பத்திரமான இடத்திற்கு அழைத்துச் செல்லும். வெள்ளம் வடிந்த பிறகு அந்தக் கப்பல் நிற்கும் இடத்தில் நீங்கள் இறங்கி உங்கள் வாழ்க்கையைத் தொடங்கலாம்.” என்று கூறி மறைந்து விட்டார் ஆண்டவன்.
ஆதியும், பகவனும் உடனடியாக வேலையில் இறங்கினார்கள். ஆடு, மாடு, கோழி, நாய், பூனை, குதிரை, முயல், நரி போன்ற அனைத்து விலங்குகளிலும் ஒவ்வொன்றைத் தேர்ந்தெடுத்து அழைத்துச் சென்றார்கள். கடற்கரையில் காத்துக் கொண்டிருந்த கப்பலில் ஏற்றினார்கள். தாவரங்களையும் முடிந்த அளவு சேகரித்துக் கப்பலில் கொண்டு சேர்த்தார்கள். கப்பல் அங்கிருந்து கிளம்பத் தயாராக நின்றது. புசுபுசுவென்று அழகான நீண்ட வாலுடைய பூனை ஒன்று இருந்தது அந்தத் தீவில்.
பூனைக்கு மட்டும் உடனே கிளம்பி கப்பலில் சென்று உட்கார மனமேயில்லை. கிளம்பும் வரை தனக்கு இரை ஏதாவது கிடைத்தால் தேடலாமேயென்று கப்பலில் இருந்து இறங்கி ஓடிவிட்டது. கப்பல், கிளம்பும் நேரம் நெருங்கிவிட்டது. அனைத்து உயிரினங்களும் கப்பலின் கீழ்த் தளத்தில் இருந்த அறைகளுக்குள் அடைக்கப்பட்டன. கடைசி அறையை மூடுவதற்கு முன்னால் ஆதி, பூனைக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். பகவன் அங்கே வந்து கதவை மூடச் சொன்னான்.
“பூனை வருமோ என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.” என்று மேல் தளத்தில் நின்றபடி கரையையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஆதி.
“இனிமேலும் அந்தப் பூனைக்காகக் காத்திருப்பதில் அர்த்தமே இல்லை. ஒரு பூனைக்காக மற்ற உயிர்களை ஆபத்தில் சிக்க வைக்க முடியாது. கடவுள் நம்மிடம் ஒப்படைத்த பொறுப்பை சிறப்பாக நிறைவேற்ற வேண்டிய கடமை நமக்கிருக்கிறது. காற்று பலமாக வீசுகிறது. எந்த நிமிடமும் மழை கொட்ட ஆரம்பித்துவிடும். மழை பலத்துவிட்டால் கப்பலை பத்திரமான இடத்திற்குக் கொண்டு செல்வது கஷ்டமாகிவிடும். வா, கிளம்பலாம்.” என்று கூறிவிட்டான் பகவன்.
ஆதியும், கீழ்த் தளத்திற்குச் சென்று ஒவ்வொரு அறையின் கதவையும் பார்த்து இறுக்க மூட ஆரம்பித்தாள். சரியாகக் கடைசிக் கதவை மூடப் போகும் சமயத்தில் அங்கே அவசர அவசரமாக வந்து குதித்த பூனை பாதி மூடிக் கொண்டிருந்த கதவின் வழியாக உள்ளே நுழைய முயற்சி செய்தது. காற்று வேறு பலமாக அடித்துக் கப்பல் ஆடிக் கொண்டிருந்ததால், கதவு பட்டென்று மூடிக் கொண்டது. பூனையின் வால், கதவில் மாட்டிக்கொண்டு பாதிக்கு மேல் அறுந்துபோனது. பூனை வலியால் துடித்தது.
“கதவைத் திறந்து அறுந்துபோன வாலை எடுத்துச் சேர்த்து வைத்துத் தையல் போட வேண்டும். எனக்கு மருத்துவ சிகிச்சை வேண்டும்.” என்று அழுது கதறியது அந்தப் பூனை.
“இங்கே மருத்துவர் யாரும் இல்லை. இப்போது கரையில் இறங்கி மருத்துவரைப் தேடிப் போவதெல்லாம் நடக்காத காரியம். அடுத்ததாக மழையெல்லாம் ஓய்ந்து நாம் எல்லோரும் எங்கேயாவது கரையில் ஒதுங்கும்போதுதான் உனக்குச் சிகிச்சை தரமுடியும். அதுவரை பொறுமையாக இரு. நம்மிடம் வேறு வழியில்லை.” என்று ஆதி சொல்லிவிட, பூனையும் வருத்தத்துடன் வாயை மூடிக் கொண்டது.
இறைவன் சொன்னபடி மகாப் பிரளயம் ஏற்பட்டு உலகமே அழிந்தது. கப்பலில் ஏறிப் பயணித்தவர்கள் மட்டுமே உயிர் பிழைத்தார்கள். மழை ஓய்ந்து, வெள்ளமெல்லாம் வடிய ஒரு வாரம் ஆகிவிட்டது. அந்த ஒரு வாரத்தில் பூனையின் வாலில் பட்ட காயம் தானாகவே ஆறிவிட்டது. சற்றுத் தொலைவில் இருந்த மற்றொரு தீவை கப்பல் அடைந்தது. கப்பலில் இருந்தவர்கள் இறங்கிப் புதிய வாழ்க்கையை ஆரம்பித்தார்கள்.
சின்ன வாலுடன் திரிந்த பூனையின் வம்சத்தில் பிறந்த பூனைகளுக்குச் சின்ன வாலே இருந்தன. ஆனால், அந்தப் பூனைகளும், “சின்ன வால்தான் எங்களுக்கு வசதியாக இருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் திரிந்தன. வேண்டுமென்றே வாலை அறுத்துக் கொண்டதாகக் கதை பேசிப் பெருமை அடித்துக்கொண்டன.
அன்று முதல் அந்தத் தீவின் பூனைகள், குட்டை வால் கொண்ட பூனைகள் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றன.
வங்கி வேலை, கணித ஆசிரியை அவதாரங்களுக்குப் பிறகு இப்போது எழுத்தாளர். அதுவும் சிறுவர் கதைகள் எழுத மனதிற்குப் பிடிக்கிறது. மாயாஜாலங்கள், மந்திரவாதி கதைகள் எழுத ஆசை. பூஞ்சிட்டு இதழ் மூலமாக உங்களுடன் உரையாடத் தொடர்ந்து வரப் போகிறேன். மகிழ்ச்சியுடன் நன்றி.