குட்டிச் செல்லங்களே!
இயற்கையின் அதிசயங்கள் ஏராளம்; பறவைகளைப் பற்றி, விரிவாக நீங்கள் தெரிந்து கொள்ளும் போது, இத்தனூண்டு ஜீவனுக்கு, இவ்வளவு அறிவா என்று மூக்கின் மேல், விரல் வைப்பீர்கள்! ஆனால் இது கொரோனா சமயமாதலால், கைகளைச் சுத்தமாகக் கழுவாமல், மூக்கிலோ, வாயிலோ வைக்கக் கூடாது; ஜாக்கிரதை! ஓ.கே?
ஒவ்வொரு பறவையும் கூடு கட்டுவதிலும், குஞ்சுகளைப் பராமரிப்பதிலும், உணவு உண்பதிலும், ஒன்றிலிருந்து இன்னொன்று, முற்றிலுமாக வேறுபடுகின்றது. ஒன்று போல், இன்னொன்று இல்லை.
ஒவ்வொரு மாதமும், பறவைகளை ஒவ்வொன்றாக, உங்களுக்கு அறிமுகம் செய்ய இருக்கிறேன். நீங்கள் அடிக்கடிப் பார்த்த, நம் தமிழகத்தில் பரவலாக பரிச்சயமான பறவைகளை, முதலில் தெரிந்து கொள்ளலாம்.
அதற்கு முன், பறவைகள் மேல், அளவில்லாப் பாசம் கொண்டு, அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை, நம் நாட்டில் முதன்முதலில் ஏற்படுத்திய அற்புத மனிதருக்கு, நன்றி சொல்ல வேண்டியது, நம் கடமை அல்லவா?
அவர் யார் தெரியுமா? ‘இந்தியாவின் பறவை மனிதர்,’ என்று அழைக்கப்படும் டாக்டர் சலீம் அலி, அவர்கள் தாம்; பறவைகள் மேல் இருந்த காதலால், தம் வாழ்வு முழுவதையும், அவற்றின் ஆராய்ச்சிக்காக அர்ப்பணித்த உயர்ந்த மனிதர் அவர்!
அவரது நினைவைப் போற்றும் வகையில், இந்திய அரசின் தபால்துறை இரண்டு தபால் தலைகளை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.
பறவைகளைக் கூர்ந்து கவனித்து, விரிவாக ஆராய்ச்சி செய்து, எக்கச்சக்கமாக எழுதிக் குவித்திருக்கும் இவரை, “பறவைகளைப் பற்றிய நடமாடும் கலைக்களஞ்சியம்,” என்று போற்றுவது, பொருத்தம் தானே?
சரி குழந்தைகளே! விஷயத்துக்கு வருகின்றேன். உங்கள் சுற்றுப்புறத்திலோ, கொல்லையிலோ உள்ள பறவைகளை, நீங்கள் இதுவரைக் கவனித்துப் பார்த்ததுண்டா? அந்தப் பறவைகளின் பெயர்கள், ஒன்றிரண்டாவது, உங்களுக்குத் தெரியுமா? குருவிகள் இனிமையாகக் குரல் எழுப்பும்போது, குரலோசையை வைத்து, அவற்றை உங்களால் அடையாளம் காண முடியுமா?
இதுவரை செய்யாவிடில் பரவாயில்லை. இனிமேல் இத்தொடரை நீங்கள் வாசிப்பதன் மூலம், உங்கள் அக்கம்பக்கத்துப் பறவைகளைப் பற்றி, ஓரளவு நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
பறவை கூர்நோக்குதல், ஓர் இனிமையான பொழுதுபோக்கு. ஆங்கிலத்தில் BIRD WATCHING என்பதைத் தான், கூர்நோக்குதல் என்கின்றேன். பறவைகளை வெறுமனே பார்த்தல் என்று, இதற்குப் பொருள் அல்ல. அவைகளைக் கூர்ந்து கவனித்து, இன்னின்ன பறவைகள் என அடையாளம் கண்டு, அவற்றைப் பற்றிய விபரங்களை, பழக்க வழக்கங்களை அறிந்து கொள்ளுதல் வேண்டும். இருநோக்கி (BINOCULAR) இருந்தால், ரொம்பவே வசதி!
கைப்பேசியில் படம் எடுத்துக் கொண்டு கூட, அது பற்றிய சுவாரசியமான விபரங்களைப் பின்னர், கூகுளில் தேடியறியலாம். தொடர்ந்து செய்யும் போது, நம்மையறியாமலே, அதில் ஒரு ஈடுபாடு வந்துவிடும்.
நீங்கள் குறித்து வைக்கும் தகவல்கள், பறவை ஆய்வாளர்க்குப் பெரிதும் உதவக் கூடும். அவ்வளவு ஏன்? நீங்களே கூட, நாளைக்கு ஒரு பறவை ஆய்வாளர் ஆகலாமே!
சரி. பறவை கூர்நோக்குதலில், முதலாவதாக, உங்களுக்கு அறிமுகம் செய்யும் பறவை,
தையல் சிட்டு! (COMMON TAILOR BIRD)
இந்தக் குருவியை நீங்கள் பார்த்திருக்காவிட்டாலும், டுவீட்! டுவீட் என்ற இதன் வெண்கலக் குரலைக் கேட்டிருப்பீர்கள்!
சிட்டுக்குருவியை விட அளவில் சின்னதாய் இருந்தாலும், குரல் மட்டும் கணீர்! கணீர்! இதன் குரலுக்கும், உருவத்துக்கும் சம்பந்தமேயில்லை. உங்களைப் போலவே, சரியான துறுதுறுத்த வாலு! ஒரு நிமிடம் ஒரு இடத்தில் நிற்காமல், தத்தித் தாவிப் பறந்து கொண்டேயிருக்கும்!
பெரும்பாலான சமயங்களில், வாலைத் தூக்கியே வைத்திருக்கும். புழு,பூச்சி,தேன் ஆகியவை, இதன் முக்கிய உணவு. மரம், செடியுள்ள இடங்களில் அதிகமாகக் காணப்படும்.
இலைகளைச் சேர்த்துத் தைத்துக் கூடு கட்டிக் குஞ்சு பொரிக்கும் என்பதனால், இதற்குத் தையல் சிட்டு என்று பெயர். பஞ்சு, நூல் போன்ற இழைகளைக் கொண்டு, இரண்டு இலைகளைச் சேர்த்துப் பின்னி, கூடை போலாக்கி, முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கிறது.
இக்குருவிக்குத் தையல் கலையைச் சொல்லிக் கொடுத்தவர் யார்? எந்தப் பள்ளியில் இது படித்தது? இது இயற்கையின் அதிசயம் தானே?
உங்கள் தோட்டத்திற்கு, இக்குருவி வந்து, கூடு கட்ட வேண்டும் என்று ஆசையாயிருக்கிறதா? இட்லிப்பூ, நந்தியாவட்டை போன்ற குத்துச் செடிகளை வளருங்கள்.
சரி குழந்தைகளே! அடுத்த மாதம் சந்திப்போம்… இக்குருவியை நீங்கள் பார்த்தீர்களானால், அதன் விபரத்தை, எங்களுக்கு மறக்காமல் எழுதுங்கள்.
உங்கள் பெயர், முகவரி, படிக்கும் வகுப்பு முதலிய விபரங்களுடன், எழுத வேண்டிய மெயில் முகவரி:- keechkeech@poonchittu.com
(நன்றி – படங்கள் இணையம்)
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.