குழந்தைகளே! 

நம் நாட்டின் விடுதலைக்காகப் பலர், தங்கள் உயிரையும், வாழ்க்கை யையும், தியாகம் செய்திருக்கிறார்கள்.  அவர்களுடைய உழைப்பின் பயனைத் தாம், நாம் இப்போது, அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.  சுதந்திர தினத்தின் போது, அவர்களுடைய சேவைகளை நினைவு கூர்வது, அவர்களுக்கு நாம் செலுத்தும், நன்றிக்கடன் ஆகும்.

இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்ட தியாகிகளுள், அஞ்சலை அம்மாள் என்பவரும் ஒருவர். கடலூரில் பணவசதி இல்லாத, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்.

காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில்  பங்கேற்ற முதல் தென்னிந்திய பெண்மணி என்ற பெருமைக்குரியவர். 1927 ஆம் ஆண்டு, சென்னையில் அமைந்திருந்த வெள்ளையர் கர்னல் நீல் என்பவரின் சிலை அகற்றப் போராட்டத்தில் தம் ஒன்பது வயதுக் குழந்தையுடன் பங்கேற்று சிறைக்குச் சென்றார்.

காந்திஜி, ‘அம்மாக்கண்ணு,’ என்ற அந்தக் குழந்தையின் பெயரை, லீலாவதி என்று மாற்றித் தம்முடன் வார்தா ஆசிரமத்துக்கு. அழைத்துச் சென்றார்.  1932 ஆம் ஆண்டு நடந்த இன்னொரு போராட்டத்தில் பங்கேற்றதால் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அச்சமயம் இவர் குழந்தை உண்டாகியிருந்ததால், பிணையில் விடுவிக்கப்பட்டார்.  பிரசவமான இரண்டு வாரங்களில் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

ஒருமுறை காந்திஜி கடலூருக்கு வந்த போது அஞ்சலை அம்மாவைப் பார்க்க நினைத்தார். ஆனால் பிரிட்டிஷ் அரசு அதற்குத் தடை விதித்தது.

அஞ்சலை அம்மாள் என்ன செய்தார் தெரியுமா? பர்தா அணிந்து, குதிரை வண்டியில் வந்து, காந்திஜியைச் சந்தித்தார்.  துணிவு மிக்க இச்செயலுக்காகக் காந்திஜி, ‘தென்னிந்தியாவின் ஜான்சிராணி!’ என்று பட்டம் கொடுத்து அஞ்சலை அம்மாளைப் பாராட்டினார். இந்தியா விடுதலை அடைந்த பிறகு மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார்.

கடந்த நூற்றாண்டில், ‘அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பதெற்கு?’ என்று சொல்லிப் பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது; அத்துடன் பெண்கள் அரசியலில் பங்கேற்று பொதுவாழ்வில் ஈடுபடவும் பெரும் எதிர்ப்பு இருந்தது.

அத்தகைய காலக்கட்டத்தில் பணவசதியோ படிப்பறிவோ இல்லாத ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து ஒரு பெண்மணி நாட்டு நடப்புகளை அறிந்து போராட்டங்களில் துணிச்சலுடன் பங்கேற்றுக் குழந்தையுடன் சிறைக்குச் சென்று விடுதலைக்காகப் பாடுபட்டது  உண்மையிலேயே பெருமைக்குரிய விஷயம் தானே?

இந்த ஆண்டு சுதந்திரத் திருநாளில், அஞ்சலை அம்மாளின் தியாகத்தையும் வீரத்தையும் நினைவு கூர்ந்து போற்றுவோம்!

guest
2 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments