செழியனும் குந்தவியும் அன்று வகுப்பில் ஆசிரியர் தொல்காப்பியன் அவர்கள் நடத்திய இராணி வேலு நாச்சியார் பற்றிய பாடத்தைப் பற்றி பேசிக் கொண்டே வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள்.

“செழியன்! நம்ம தொல்காப்பியன் சார், வேலு நாச்சியார் பத்தி சொன்னது ரொம்ப ஆச்சர்யமா இருந்ததுல்ல..”

“ஆமா குந்தவி! ரொம்பவே ஆச்சர்யமாதான் இருந்தது.. அவங்கதான் நம் இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட முதல் பெண்ணாமே.. க்ரேட் இல்லடீ..”

“ஆமா செழியன்.. சார் க்ளாஸ்ல சொன்னது இன்னும் என் காதில ஒலிச்சிகிட்டே இருக்கு..” என்றாள் குந்தவி.

அவர்களுடைய ஆசிரியர் தொல்காப்பியன் இராணி வேலுநாச்சியார் பற்றிக் கூறியது என்னவென்று பார்ப்போமா?

இராணி வேலுநாச்சியார் பதினேழாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் இராணி மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் விடுதலைப் போராட்டத் தலைவி. இவரே இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார்.

1730ஆம் ஆண்டு, இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து விஜய ரகுநாத சேதுபதி – சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகளாக பிறந்தார் வேலுநாச்சியார். எனினும் ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். ஆயுதப் பயிற்சி பெற்றார்; பல மொழிகள் கற்றார். 1746 இல் சிவகங்கைச் சீமை மன்னர் முத்து வடுகநாத தேவருக்கு மனைவியானார்.

வேலு நாச்சி கிழக்கிந்தியக்க கம்பெனியின் ஆட்சியை முதன் முதலில் எதிர்த்த பெண் ஆவார்.

அவருடைய துணிச்சலையும் வீரத்தையும் முன்னிருத்தியே ஹைதர் அலி, மருது சகோதரர்கள் போன்ற பல அரசர்களும் சிவகங்கை மக்களும் அவருக்கு இந்த விடுதலைப் போரில் பக்க பலமாய் நின்றனர்.

ஆண் வாரிசு இல்லாத அரசாங்கத்தை தாமே எடுத்துக் கொள்ளலாம் என்ற ஆங்கிலேயே அரசின் விதியை எதிர்த்து நின்று கடைசி வரை போராடிய வீர மங்கையே வேலு நாச்சியார்.

velu nachiyar

1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர் வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். படை காளையார் கோயிலை கைப்பற்றியது. 

வேலுநாச்சியார், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார்.

பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் டிசம்பர் 25, 1796 அன்று இறந்தார். 

இதை நினைவு கூர்ந்த குந்தவி,

“ப்பா.. எப்பேர்ப்பட்ட வீராங்கனைல்ல அவங்க..” என்றாள்.

“ஆமா குந்தவி! அதனாலதான் அவங்களோட வீரத்தை பெருமைப்படுத்தும் விதமா அவங்களுக்காக, ராணி வேலு நாச்சியார் நினைவு தபால் தலை இந்திய அரசால் 31 டிசம்பர் 2008 அன்று வெளியிடப்பட்டிருக்கு!” என்றான்.

“ஆமா செழியன்! இராணி வேலு நாச்சியார் பயன்படுத்திய ஈட்டி, வாள் முதலான பல பொருட்கள் சிவகங்கையில் அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்கப்படுவது மிகச் சிறப்பான விஷயம்ல..” என்றாள் குந்தவி.

“அடுத்த முறை நாம சுற்றுலா போகும் போது அதெல்லாத்தையும் பார்த்துட்டு வரணும்..” என்றான் செழியன்.

“கண்டிப்பா செழியன்.. இது நம்ம தமிழகத்தோட பெருமை.. நானும் வேலு நாச்சியார் போல துணிச்சலோட இருந்து நம்ம நாட்டுக்கு பெருமை சேர்த்து தருவேன்..”

“சூப்பர்.. அப்ப இனிமே உன்ன குந்தவி நாச்சியார்ன்னு கூப்பிட வேண்டியதுதான்..” என்று சிரித்தான் செழியன்.

“ஹை.. குந்தவி நாச்சியார்.. சூப்பரா இருக்கே.. தேங்க்ஸ் செழியன்..” என்று சிரித்தாள் குந்தவி.

♥♥♥♥♥♥

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
1 கருத்து
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments