வணக்கம் பூஞ்சிட்டுகளே!!
ஒவ்வொரு மாதமும் இந்த பகுதியில, நம்ம ஊருக்கு பேரு வந்த கதையைப் பத்தி தெரிஞ்சிட்டு இருக்கோம். அது போல இன்னிக்கு ‘கதை கதையாம் காரணமாம்’ பகுதில நாம கதைக்கேக்கப் போற ஊரு, திண்டுக்கல்.
“ஆட்டுக்கல் பாறாங்கல் சரி அது என்ன திண்டுக்கல்?”ன்னு நீங்க சத்தமா யோசிக்கிறது எனக்கு நல்லாவே கேக்குது. ஒரு விதத்துல திண்டுக்கல்லுக்கும் கல்லுக்கும் பெரிய சம்பந்தம் இருக்கு. அது என்னன்னா, ஒரு காலத்துல ஊருக்கு வெளில சுவர் மாதிரி பாதுகாப்பா இருந்த மலைய தூரத்துல இருந்து பாக்கிறதுக்கு மடிச்சு வெச்ச குண்டுத் தலையணை மாதிரி திண்டு திண்டா தென்பட்டதால ஊருக்கு திண்டுக்கல்’ன்னு பேர் வந்துச்சாம்.
‘திண்டு’ன்னா பொதுவா உருண்டு திரண்டு மடிச்ச ஒரு வடிவம்ன்னு வெச்சுக்கலாம். இன்னைக்கும் சில பேர் வீட்டுல திண்ணையைக்கூட திண்டுன்னு சொல்லுவாங்க.
நம்ம சோழ பாண்டிய ஆட்சிகளின் போதும் சரி, அவங்களுக்கு ரொம்ப காலத்துக்குப் பின்னாடி வந்த வேலு நாச்சியார், ஹைதர் அலி காலத்துலயும் சரி, திண்டுக்கல்ல ஆட்சி செஞ்ச எல்லாருமே, அந்த ஊர நல்ல படைத்தளமா பயன்படுத்தினாங்களாம். அதுக்கு சாட்சியா நிக்கற மலைக்கோட்டை இன்னைக்கும் அங்க ரொம்ப பிரபலமாம். வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!!
சரி பூஞ்சிட்டுகளே, வழக்கம் போல கொறிக்கக் கொஞ்சம் கொசுறு கொசுறு..
நம்ம தாத்தா பாட்டி ஊரு பேருல சில பேரு பட்டின்னு முடிஞ்சிருக்கும்’ல..? பட்டி’ன்னா மூங்கில்’ல இருந்து பட்டையா பிரிச்சு எடுத்த குச்சி.. இந்த குச்சியை வரிசையா வெச்சுக்கட்டுகிற இடம் தான் பட்டி. பொதுவா நம்ம தொழுவம், ஆட்டுக்கிடை, பசுக்கொட்டில் எல்லாம் அந்த காலத்துல பட்டின்னு சொல்லுவாங்களாம் . இப்படி பட்டிகளை மைய்யமா வெச்சு சுத்தி உருவாகிற ஊருக்கு அதே பேராகிடுச்சாம்.
(எ. கா) ஆண்டிப்பட்டி, உசிலம்ப்பட்டி, கோவில்பட்டி, கல்லுப்பட்டின்னு சொல்லிட்டே போகலாம். அப்படியே போனா, எங்க ஊரு கரையான்பட்டி கிட்ட வந்திரும். அதனால மிச்சக் கதையை அடுத்த மாசம் சொல்ல வரேன்.. மீண்டும் சந்திக்கலாம் பூஞ்சிட்டுகளே!!