Neya Maayam

 ‘டொக் டொக்’

கதவைத் தட்டிய நேயா, சிறிது நேரம் காத்திருந்தாள்.

“உள்ளே வா!” ஓர் அழைப்புக் குரல் கேட்டது. யாரையும் காணவில்லை. அது, நிலா அத்தையின் குரல் இல்லை. வேறு யார் அழைத்திருப்பார்கள்? யோசனையில் ஆழ்ந்தாள் நேயா. கதவைத் திறந்து உள்ளே செல்லத் தயக்கம். 

நேயா, நிலா அத்தையைத்தான் தேடி வந்தாள். சென்ற விடுமுறை நாளன்று வந்து சென்ற அதே வீடுதான். வீடேதும் வேறு இடத்துக்கு மாறவில்லை. அதே இடத்தில்தான் இருக்கிறது. ஆனாலும் அவளுக்கு ஒரு சந்தேகம்.

நேயாவுக்கு நிலா அத்தையை பிடித்திருந்தது. விடுமுறை நாட்களில், அவர் வீட்டில் நிறைய சிறுவர்களைப் பார்க்கலாம். எல்லோரையும் அருகில் உட்காரவைத்து பலமணி நேரம் வரை கதைகள் சொல்வார் நிலா அத்தை.

            நேயாவின் தெருவில்தான் நிலா அத்தையின் வீடு இருந்தது. போனவாரம்தான் முதல்முறையாக, அம்மாவின் நெருங்கிய தோழி வழியே அத்தை அறிமுகமானார். அம்மா, நேயாவை அத்தை வீட்டுக்குக் கூட்டிச்சென்றிருந்தார்.

            ஒரு நீர்த் துளியின் கதை, பறவை மொழி தெரிந்த சிறுவனின் கதை, மீன் மழை பெய்த கதை, சாக்பீஸ் நரியின் கதை, வாலில்லா வெள்ளி மீனின் கதை, வானவில் சிறுமியின் கதை என, நிலா அத்தை நிறைய நிறைய கதைகள் சொன்னார்.

            நேயாவுக்கு நல்ல நல்ல கதைகள் கேட்கக் கிடைத்தன. அதுபோல அகல்யா, கனிகா, அன்வர், ப்ரீத்தி, நவன், சிற்பிகா, கமழி, பென்னி, எழிலன் என நல்ல நண்பர்களும் கிடைத்தார்கள். அதில் சிலர், தங்களுக்குத் தெரிந்த கதை சொன்னார்கள்.

            “நேயா, அடுத்த வாரம் வரும்போது நீயும் ஒரு கதை சொல்லணும்” என்றார், நிலா அத்தை. நேயா, அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அன்று முதல், மனதில் பதட்டம் தொற்றிக்கொண்டது.

            கதைகளை எப்படிச் சேகரிப்பது? எங்கிருந்து தேடி எடுப்பது? காட்டில் கிடைக்குமா? கிங் காங்க் குரங்கு வைத்திருக்குமா? ‘ஜீ பூம் பா’ மந்திரவாதி தொப்பிக்கு அடியில் கதைகளை ஒளித்து வைத்திருப்பாரா? என்றெல்லாம் கேள்வி எழுந்தது. அம்மாவிடம், அவளுக்குச் சொல்வதற்கு ஓரிரு கதைகளைத் தவிர ஒன்றுமில்லை. நிலா அத்தை மட்டும் நிறைய கதைகளை மறக்காமல் ஞாபகத்தில் வைத்திருக்கிறாரே… வியந்தாள். 

கதைகளைக் கண்டெடுப்பது பற்றிய யோசனையில் ஆழ்ந்திருந்த நேயாவை “பயப்படாதே… உள்ளே வா” என்ற குரல் மீண்டும் அழைத்தது.  

பயத்தைப் புறந்தள்ளினாள். கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள். ஆனால் அழைத்தவர் எதிரில் இல்லை. பயம் அதிகரித்தது. அடுத்த அடி எடுத்து வைக்கத் தயங்கினாள்.

“வணக்கம் நேயா”

மறுபடியும் அதே குரல்.

“யார் நீங்க? நிலா அத்தையா?”

சுற்று முற்றும் திரும்பிப் பார்த்தாள்.

சட்டென, ஓர் ஒளி அவளது முகத்தில் பட்டு மறைந்தது. நேயா திடுக்கிட்டுப் போனாள். அடுத்த சில நொடிகளில் அறை வெளிச்சமானது.

ஆ!… அறை முழுவதும் புத்தக அலமாரிகள். அதில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கைக்கெட்டாத உயரம் வரை புத்தகங்கள். நேயா உற்சாகம் அடைந்தாள்.

“ஒனக்கு என்ன மாதிரியான புத்தகங்கள் பிடிக்கும்? காமிக்ஸ்…  மாயாஜாலக் கதைகள்… படக்கதை… ஓவியப் புத்தகம்… நாடோடிக் கதைகள்… இங்க நிறையப் புத்தகங்கள் இருக்கு.” 

“மொதல்ல நீ யாருன்னு சொல்லு” அதட்டிக் கேட்டாள் நேயா.

“பயப்படாதே. வலது பக்கத்திலிருந்து ஒரு புத்தக அலமாரி பேசுறேன். அதிர்ச்சி அடையாதே. என்னோட முன்பக்கம் ‘முக அடையாளம் காணும் கருவி’ பொருத்தப்பட்டிருக்கு. (Facial Recognition) உள்ளே நுழையிறவங்க முகத்தில வெளிச்சத்தைப் பாய்ச்சினதும் அவங்களைப் பத்தின எல்லா விவரங்களையும் தெரிஞ்சிக்குவேன்.”

நேயா அலமாரியை ஏறிட்டுப் பார்த்தாள்.

“உன் பேரு, நீ படிக்கிற பள்ளிக்கூடம், உன்னோட விருப்பப்பாடம் எல்லா விவரமும் இப்போ எனக்குத் தெரியும். ஒனக்குக் கதை கேட்க ரொம்பப் பிடிக்கும். சரியா?” சரியான தகவல்களை புட்டிப்புட்டு வைத்தது புத்தக அலமாரி. 

அதற்குள், “இங்க வா நேயா… இந்த வரிசையில் இருக்கிற அதிசயத்தைப் பாரு.” என்றது ஒரு புத்தகம். அருகில் சென்றவள் புத்தகத்தை எடுத்து விரித்தாள். எழுத்துக்களே இல்லை. இடது பக்கத்தில் படங்கள் மட்டுமே இருந்தது.

“படத்தைத் தொடு” என்றது புத்தகம்.

நேயா, ஒரு காட்டு மரத்தைத் தொட்டாள். வலது பக்கத்தில் அந்த மரத்தைப் பற்றிய கதை பளிச்செனத் தெரிந்தது. மரத்தில் இருந்த பச்சைக் கிளியைத் தொட்டாள். மரத்தில் வாழும் கிளியைப் பற்றிய கதை வாசிக்கக் கிடைத்தது. அவளுக்கு ஒரே ஆச்சரியம். சிறு கதையாதலால் சீக்கிரம் வாசித்து முடித்தாள்.

“இங்க வா” என்று வேறொரு புத்தகம் அழைத்தது. புத்தகங்களுக்குள் போட்டி. சலைக்காமல் புத்தகங்களைப் புரட்டினாள். ஒரு புத்தகத்தில் குட்டிக் குட்டிக் கதைகள் இருந்தன. பழங்களைப் பற்றிய கதைகள். புத்தகத்தில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. மாம்பழக் கதை வாசித்தபோது மாம்பழ வாசம் வந்தது. அவளுக்கு அந்தப் புத்தகம் பிடித்திருந்தது. கொய்யாப்பழ வாசனை, ஆரஞ்சு வாசனை, என கதைகளுடன் சேர்ந்த வாசனை நேயாவைக் கவர்ந்தது.

கடைசி அடுக்கில், ஒரு தங்கப் புத்தகம் இருந்ததைப் பார்த்தாள். அதை எடுத்துப் புரட்டினாள். அப்பாடா! புத்தகத்திலிருந்த வார்த்தைகள் எழுந்து குதிக்க ஆரம்பித்தன. ஒன்றோடு ஒன்று கைக்கோர்த்து நடனமாடின. அவளுக்கு அடக்கமுடியாமல் சிரிப்பு வந்தது. “போதும், போதும் என்னைக் கதை வாசிக்க விடுங்கள்” என்றவுடன் எல்லா வார்த்தைகளும் இருக்கைக்குத் திரும்பின.

அடுத்த ஒரு புத்தகம். நேயா வாசித்தபோது கூடச்சேர்ந்து கதை சொன்னது. புதுமையான புத்தக உலகைக் கண்டு வியந்தாள், நேயா. உள்ளம் பூப்போல விரிந்து மலர்ந்தது. எழுத்துக்கள் மீது விரல் படும்போது மனதில் ஏதோ ஒரு நம்பிக்கை பிறந்ததுபோல உணர்ந்தாள்.

            திடீரென்று, போன விடுமுறை நாள் நிலா அத்தை சொன்ன விசயம் ஞாபகத்துக்கு வந்தது.

சற்று நேரத்தில் நண்பர்கள் வந்து விடுவார்கள். நேயா நினைத்தபடியே நடந்தது.  நிலா அத்தை, மறக்கமால் அவளைக் கதை சொல்லச் சொல்லிக் கேட்டார்.

             நேயா, நிதானமாக ஒரு முறை மூச்சு விட்டாள்.  நிலா அத்தையைப் போலவே நிறைய மாயக்கதைகள் சொல்லி கூடியிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினாள்.  


ஆசிரியர் பற்றி

திரு கொ.மா.கோ.இளங்கோ பிரபலமான சிறார் எழுத்தாளர். 50 க்கும் மேற்பட்ட சிறார் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் எனச் சிறார் இலக்கியத்துக்குத் தொடர்ந்து பங்காற்றி வருகிறார். பல விருதுகளும் பெற்றுள்ளார்.


What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments