அவ்வழகிய தேசம் நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்டு இருந்தது. ஆம், அத்தேசத்தின் வளமையைப் பெருக்க சகி நதி அழகிய தேசத்தை சுற்றி சூழ்ந்து பாய்ந்து கொண்டிருந்தது. அந்நாட்டின் பெயரும் சகி தான்.
‘சகி’ என்றால் தோழி என்பது பொருள்.
சகி நாடும் நாட்டு மக்களும் மிகுந்த தோழமை உணர்வு உள்ளவர்கள்.
சகி நதியில் அழகழகான வஜ்ரா எனும் மீன்கள் காணப்பட்டன.
அந்நாட்டிற்கு வறுமை என்பதே கிடையாது யாரும் எதையும் விளைவிக்க வேண்டிய அவசியமில்லை. செடிகள் பூத்துக் குலுங்கும், மரம் செடி கொடிகளில் காய் கனிகள் தன்னால் காய்த்து தொங்கும். அங்குள்ள குழந்தைகள் எப்போதும் இளமையோடும் மகிழ்ச்சியோடும் விளையாடிக் கொண்டே இருப்பார்கள்.
அக்குழந்தைகளுக்குப் பசி என்பதே தெரியாது. விளையாடிக் களைத்தால் மரத்திலிருந்து கனிகளைப் பறித்து உண்பார்கள். நதியிலிருந்து தண்ணீர் எடுத்து குடிப்பார்கள். பின் மீண்டும் மகிழ்ச்சியாய் விளையாடுவார்கள்.
அந்நாட்டின் அருகே இருந்த இன்னொரு நாடான குசும்பு நாட்டு அரசனுக்கு, இந்நாட்டு வளத்தைப் பற்றி பொறாமையாக இருந்தது.
தன் நாட்டில் இல்லாத செல்வமும் செழிப்பும் சகி தேசத்து மக்களிடம் இருப்பதை அவனால் தாங்க முடியவில்லை
சகி தேசத்திற்கு எப்படி இவ்வளவு வளம் வந்தது என்பதை ஆராய பல ஒற்றர்களை நியமித்தான். அதன் மூலமாக அவன் அந்த ரகசியத்தை கண்டுபிடித்தான்.
சகி நதியில் துள்ளி விளையாடும் வஜ்ரா மீன்கள் அனைத்திலும் ஓர் மாணிக்கம் இருக்கிறது. நதியில் துள்ளி விளையாடும் வஜ்ரா மீன்களின் மகிழ்ச்சியே அந்நாட்டு நிலத்தில் எதிரொலித்து அங்கே வளம் பெறுகிறது என்பதை அறிந்தான் பக்கத்து நாடான குசும்பு நாட்டு அரசன்.
அவன் சகி நாட்டின் ஓர் துரோகியை கண்டுபிடித்தான். அவன் பெயர் இடும்பன் தீய எண்ணங்கள் கொண்டவன். அவனிடம் ஆற்றில் உள்ள ஒவ்வொரு வஜ்ரா மீனையும் பிடித்து தன்னிடம் கொடுத்தால் தான் அவனுக்கு நிறைய பொன்னும் பொருளும் கொடுப்பதாக ஆசை காட்டினான்
குசும்பு நாட்டு அரசனின் ஆசை வார்த்தையில் மயங்கி, இடும்பன் ஒவ்வொரு நாளும் பத்து வஜ்ரா மீன்களைப் பிடித்து இளவரசனிடம் ஒப்படைத்தான்.
இளவரசன் அனைத்து மீன்களையும் வெட்டி உள்ளே உள்ள மாணிக்கங்களை தன் கஜானாவில் பதுக்கி வைத்தான். ஒவ்வொரு மீன் குறையும் போதும் சகி நாட்டில் ஒவ்வொரு வளம் குறைந்து கொண்டே வந்தது.
அதன் விளைவாக அங்கே நிலத்தடி நீர் வற்றியது. மரங்கள் காய்ந்தன, பூக்கள் வாடின, காய்கள் கனிகள் விளையாமல் மக்கள் அனைவரும் உணவிற்குத் தவிக்கும் நிலைக்கு ஆளானார்கள்.
அப்போது சகி நாட்டு இளவரசிக்கு அவளது ஒற்றர்கள் மூலமாக வஜ்ரா மீன்கள் களவாடப்படும் செய்தி கிடைத்தது.
இன்னும் ஆற்றில் ஒரே ஒரு வஜ்ரா மீன் தான் மாணிக்கத்தோடு சுற்றிக் கொண்டிருக்கிறது. அதை இடும்பன் பிடித்து குசும்பு அரசனிடம் ஒப்படைத்துவிட்டால் சகி நாடு நதிக்குள் மூழ்கிவிடும்.
அதைத் தடுக்க தன் குதிரையின் மீது ஏறி ஆவேசமாகப் புறப்பட்டாள் இளவரசி.
இடும்பன் வலைவீசி அந்த ஒற்றை மீனைத் தேடிக் கொண்டிருந்தான். அது மாணிக்க மீன்களின் ராஜாவான மரகத மீன்!
அந்த மரகத மீன் இடும்பனின் கையில் சிக்காமல் ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தது. விரைந்து வந்த இளவரசி மீனைப் பிடிக்க முயன்று கொண்டிருந்த இடும்பனை தன் ஈட்டியால் குத்தி வீழ்த்தி விட்டாள்.
இளவரசி வருவதற்காகவே காத்திருந்த மரகதமீன் இளவரசியிடம் வந்து இவனுக்கு தண்டனையை நானே கொடுக்கிறேன் என்றது.
இளவரசி “இல்லை வேண்டாம், அவன்
நம் நாட்டு குடிமகன். ஏதோ பொருளுக்கு ஆசைப்பட்டு தவறு செய்துவிட்டான். அவன் மனம் திருந்தி வாழ அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்” என்று வஜ்ராவை கேட்டுக்கொண்டாள்.
சின்னஞ்சிறு இளவரசியின் வேண்டுகோளை ஏற்று மரகத ராஜா அதற்கு ஒப்புக்கொண்டது. இடும்பன் மனம் திருந்தி வாழ்வதற்காக அவனை நதிக்கு அடியில் இருந்த பாதாளச் சிறையில் அடைக்க உத்தரவிட்டாள் இளவரசி.
“மரகத ராஜா, மீன்கள் எல்லாம் இறந்து போய்விட்டன. மாணிக்கங்கள் திருடு போய் நாட்டின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதற்கு தீர்வு தான் என்ன?” என்று மிகவும் கவலையோடு கேட்டாள் இளவரசி.
“இளவரசி கவலை வேண்டாம். மாணிக்கங்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று நெருக்கமாக இருக்கக் கூடாது என்பதற்காகவே சகி நாட்டை உருவாக்கிய தேவதை அவற்றை ஒவ்வொரு மீனிடம் கொடுத்து தனித்தனியாக நதியில் உலாவ விட்டது. மாணிக்கங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால் அது பெரும் அழிவுக்கு வழிவகுக்கும். மீன்களைக் கொன்று மாணிக்கத்தை எடுத்த அரசன் அவற்றை ஒரே இடத்தில் தான் வைத்திருப்பான். அதனால் அவனுக்கு பெரும் ஆபத்து வரும் அபாயம் இருக்கிறது. நீ விரைந்து குசும்பு நாட்டுக்குச் சென்று அங்குள்ள மாணிக்கங்களைத் தனித்தனியாக வெவ்வேறு மண்பாண்டங்களில் இட்டு எடுத்து வந்து நதியில் போட்டு விடு” என்றது மரகத மீன்.
கஜானாவில் ஒன்றுசேர்ந்த மாணிக்கங்கள் ஒவ்வொரு நொடியும் வெளிச்சத்தை அதிகரித்துக் கொண்டே சென்றன. அந்த வெளிச்சத்தின் வெப்பம் தாங்காமல் அந்நாடு பற்றி எரியத் தொடங்கியது
அதனுடைய பிரகாசத்தில் அதன் வெளிச்சம் தாங்கமுடியாமல் குசும்பு நாடு தவித்தது. அரசனின் கண்பார்வை பறிபோனது. அவன் நாட்டின் வளம் எல்லாம் தீயில் கருகி சாம்பல் ஆகிவிட்டது. சகி நாட்டு இளவரசி அங்கு சென்று சேரும்போது அங்கே மாணிக்கங்களை தவிர வேறு எதுவுமே உருப்படியாக மிச்சமில்லை.
‘பிறருக்குத் தீமை நினைத்தவர்களுக்கு தீமையே வந்து சேரும்’ என்று நினைத்து இளவரசி அவர்களுக்காகத் தன் மனதால் வருந்திக் கண்ணீர் விட்டாள். அவள் ஒரு துளி கண்ணீர் பட்டதும் எரிந்துகொண்டிருந்த மொத்த நாடும் அப்படியே ஸ்தம்பித்து பெருமழை பெய்து நெருப்பு அணைந்து மீண்டும் குளிர்ச்சி திரும்பியது.
கண் பார்வை பறி போன பின், மனம் வருந்திய குசும்பு நாட்டு அரசன் தன் தவறை உணர்ந்து இளவரசியிடம் மன்னிப்பு வேண்டினான்.
அவனை மன்னித்து விடுவித்த இளவரசி, தன் நாட்டு மாணிக்கங்களை தனித்தனியாக ஒவ்வொரு மண்பானையில் இட்டு அனைத்தையும் எடுத்துச்சென்று நதியில் விட உத்தரவிட்டாள்.
நதியில் மாணிக்கத்துடன் விடப்பட்ட மண்பாண்டங்கள் அனைத்தும் மீண்டும் மாணிக்க மீன்களாக மாறி நதியில் துள்ளி விளையாடின. இதனால் சகி நாட்டு வளம் திரும்ப கிடைக்கப்பெற்றது.
இளவரசி ரொம்ப சந்தோஷத்தோடு தன்னுடைய குதிரையில் ஏறிப் பறக்கிறாள்.. இருங்க இருங்க அந்த இளவரசியின் முகம் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே? ஹை.. அது ஷிவானி! அவ தான்..
அவ கனவுல தான் இப்படி ஒரு சகி நாட்டின் இளவரசியா சாகசம் செஞ்சிக்கிட்டு இருக்கா.
நாம அடுத்த தடவை ஷிவானி கனவு காணும் போகும் என்ன நடக்குதுனு பாக்கலாம். இப்போதைக்கு உங்ககிட்ட இருந்து விடைபெறுகிறாள் ஷிவானி!
டாட்டா பட்டூஸ்..
பொறியியல் பட்டதாரி, தற்சமயம் இல்லத்தரசி; இரு சிறார்களின் தாய்; இரண்டு அச்சு புத்தகங்கள் வெளியாகி இருக்கின்றன. என்னைச் சுற்றி நிகழும் சமூக நிகழ்வுகள் கதைகளாக உருப்பெருகின்றன. தொடர்ந்து வாசித்து எழுதி, என்னை நானே மேம்படுத்த முயன்று கொண்டிருக்கும் புதிய எழுத்தாளர் நான்.